இந்தத் தொடர் தொடங்கும்போது விஸ்வரூபம் விமர்சனங்களை முன்வைத்து தமிழில் எழுதப் படும் சினிமா விமர்சனங்களின் ஒரு தொகுப்புப் பார்வையாய் முன்வைக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். யமுனா ராஜேந்திரனின் விமர்சனம் அந்த விதத்தில் ஒரு சரியான உதாரணம் என்று எண்ணுகிறேன்.
யமுனா ராஜேந்திரனின் “அமெரிக்கப் பைத்திய நிலை தரும் சந்தோஷம்” (உயிர்மை)
யமுனா ராஜேந்திரன் நிறையப் படிக்கிறார் நிறைய படங்களைப் பார்க்கிறார். நிறைய எழுதுகிறார் அவர் எழுத்துக்கும் அவர் தொட்டிருக்கும் விஷயங்களுக்கும் விமர்சனத்திற்கும் ஏதும் பொருத்தம் இருக்கிறதா என்பது விவாதத்திற்கு உரியது.
அவருடைய இந்த விமர்சனத்திலும் ஏராளமான தகவல்களை அடுக்கிச் செல்கிறார் அதனால் அவர் இறுதியாகச் சொல்ல வரும் விமர்சனத்திற்கு ஆதாரமும், அடிப்படையும் சேர்க்கிறதா என்று சரிபார்க்காமல் கூட முன்னுக்குப் பின் முரணாக அடுக்கி வைக்கும் வாதங்களைத் தொகுத்து பார்க்கலாம்.
1. கமல் ஹாசன் ஒரு தாலிபான். (யமுனா ராஜேந்திரனின் முதல் வரியே இது தான். )
இது பாராட்டா வசையா என்று புரிந்து கொள்வது கடினம். யமுனா ராஜேந்திரனின் ஒப்புதலுக்கும், நிராகரிப்புக்கும் ஒரு எளிமையான சூத்திரம் இருக்கிறது. பழைய சோவியத் யூனியனுக்கு ஒருவர் எதிரியா இல்லையா என்பதைப் பொறுத்து ஒரு பார்வை. அமெரிக்காவிற்கு ஒருவர் எதிரியா அல்லது நண்பனா என்பதைப் பொறுத்து ஒரு பார்வை. இந்தப் பார்வையை வைத்துப் பார்த்தால், அமெரிக்காவிற்கு முன்னாள் நண்பன் இன்னாள் நண்பன் எதிரி தாலிபான். அப்படிப் பார்க்கப் போனால் கமல்ஹாசன் யமுனா ராஜேந்திரனுக்கு இன்றைய தேதியில் நண்பனாய் இருக்க வேண்டும். ஆனால் அதுவும் பிரசினை. தாலிபான் இன்னமும் சோவியத் யுனியனை எதிரியாய்த் தான் பார்க்கிறது. சொல்லப் போனால் தாலிபான் தன் பாணி இஸ்லாம் தவிர்த்த எல்லோரையும் எதிரியாகத் தான் பாவிக்கிறது. அதனால் தாலிபான் எதிராகவும் ஆகிவிடுகிறது. யமுனா ராஜேந்திரனின் சட்டகத்திற்குள், சூத்திரத்திற்குள் தாலிபான் அடங்க மறுக்கும் போது, அதற்கு இன்னொரு அளவுகோலை எடுத்துக் கொண்டு விடுகிறார். தாலிபான் இஸ்லாமின் பாதுகாவலனாகவும் அமெரிக்க எதிர்ப்பாளராகவும் ஆக்கிவிட்டால், அதனை யமுனா ராஜேந்திரன் ஆதரிக்கலாம். குழப்பம் தான்.
யமுனா ராஜேந்திரன் போன்றவர்களின் பிரசினையே இது தான். ஒரு கோட்பாடை அளவுகோலாய்க் கொண்டால் அதிலிருந்து நழுவும் யதார்த்தங்களை பார்க்க முடியாது. செருப்புக்குத் தக்க காலை வெட்டுவது போல். கோட்பாடிற்குத்தக்க யதார்த்தத்தை வளைத்து, நெளித்து, மறைத்து, சிதைத்து முன் வைத்து கோட்பாட்டின் வெற்றியைக் கொண்டாடியாக வேண்டும். சோவியத் யூனியன் சிதறிப் போனாலும், சீனா பெரும் பாய்ச்சல் ன்ற பெயரில் பெரும் பஞ்சத்தைத் தோற்றுவித்தாலும், இன்று காகிதப் புலியுடன் (அமெரிக்கா தான்.) நட்புப் பூண்டிருந்தாலும், ஸ்டாலின் சைபீரியாவிற்கு லட்சக் கணக்கில் மக்களை நாடு அக்டத்தியிருந்தாலும், கம்யுனிஸ்ட் கமர் ரூஜ் கம்போடியாவில் படுகொலை மைதானங்களை நிகழ்த்தியிருந்தாலும், வாழ்க சோவியத் யூனியன், ஒழிக அமெரிக்கா என்று கோஷம் போட்டே ஆக வேண்டும்.
இந்த வரியின் தாத்பர்யம் இன்னமும் புரியவில்லை. கமல் ஹாசன் தாலிபான் என்னும்போது தாலிபன் ஆதரவுப் படம் எடுத்திருக்கிறார் என்று யமுனா கருத்துத் தெரிவிக்கிறாரா? முதல் பகுதியைப் பார்த்துவிட்டு யமுனா ராஜேந்திரன் சினிமா தியேட்டரை விட்டு வெளியே வந்து விட்டாரா? யமுனா ராஜேந்திரனுக்குத் தான் வெளிச்சம்.
2. கதைக் களத் தேர்விலும் தொழில் நுட்ப நேர்த்தியிலும் சந்தேகமில்லாமல் விஸ்வரூபம் ஹாலிவுட் திரைப் படம் தான்.
இங்கு யமுனா ராஜேந்திரன் பாராட்டியே ஆக வேண்டிய தொழில் நுட்பச் சிறப்பை பதிவு செய்வதற்கு முன்னால் எள்ளல் தொனியில் விஸ்வரூபம் கதையைச் சுருக்கமாக அவர பார்வையில் முன்வைக்கிறார். ஆனால் அவருக்கு முக்கியமாகப் பட்டிருக்கிற “கோழிக் கறி சாப்பிடும் பாப்பாத்தி”யைக் குறிப்பிட மறக்கவில்லை. இந்த எள்ளலுக்குள்ளாவோ , அல்லது வெளியே வைத்து “கமல் ஹாசன் தாலிபான் தான் ” என்ற தொடக்க வாசகத்தைப் பார்க்க முடியுமா என்று புரியவில்லை.
“இந்திய தமிழக ரசிகர்களின் தேசபக்திப் பிரவாகத்தை”யும் மறக்க வில்லை. தேசபக்தி ஒரு பெரும் பாவம் இல்லையா? ரஷ்யர்கள் இரண்டாம் உலகப் போரில் யுத்தத்தில் ஈடுபட்டபோது தேசபக்தி முன்னிலைப் படுத்தப் பட்டது. மார்க்சியம் முன்வைக்கப் படவில்லை என்பது யமுனா ராஜேந்திரனுக்குத தெரியாமல் இருக்கும் என்று நான் நம்பவில்லை. இந்திய தேசபக்தி தான் பிரசினை. ரஷ்ய தேசபக்தி அல்ல. மீண்டும் அதே எளிய சூத்திரம்.
3. ஹாலிவுட்டில் இரண்டு விதமான இயக்குனர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவின் பிம்பத்தை ஊதிப் பெருக்கி அமெரிக்கப் பிரசாரம் செய்பவர்கள். காதரின் பிகலொவ், சில்வெஸ்ற்ற ஸ்டலோன் போன்றவர்கள். இன்னொரு புறம் அமெரிக்காவின் தவறுகளைச் சுட்டிக் காட்டி படம் எடுக்கும் கொப்போலா, ராபர்ட் ரெட்போர்ட் போன்றவர்கள். கமல் ஹாசன் முன்வரிசையைச் சேர்ந்தவர். இதுதான் யமுனா ராஜேந்திரனின் கணிப்பு.
ஹாலிவுட் பற்றிய சரியான புரிதல் இல்லாத மனநிலையில் யமுனா ராஜேந்திரன் எழுதுகிறார். ஹாலிவுட் என்பது சோவியத் யூனியன் கட்டி எழுப்பிய சினிமா உலகம் போன்றதல்ல.அரசாங்கத்தின் கடுமையான அடக்குமுறையில், தணிக்கையில், வாய் பொத்தி சோஷலிச யதார்த்தம் ஹாலிவுட்டில் படைக்கப் படுவதில்லை. ஹாலிவுட் ஒரு சுதந்திர உலகம். அங்கு ராபர்ட் ரெட்போர்டிற்கும் இடம் உண்டு. காதரின் பிகலொவிற்கும் இடம் உண்டு. இயல்பாகவே எந்த சுதந்திர நாட்டின் சினிமாவும் ஜனரஞ்சக தளத்தில் அந்தந்த நாட்டின் பொதுக் கருத்தின் அடிப்படையினைகே கருத்தில் கொண்டு படங்கள் எடுக்கப் படுவது தான். ஆனால் மாற்றுக் கருத்துக்கும், வெளிப்பாட்டிற்கும் இடம் உண்டா என்பது தான் கேள்வியாய் இருக்க முடியும். எல்லா நாட்டுக் கலைஞர்களுகும் இடம் அளிக்கிற ஒரு சுதந்திர தளம் ஹாலிவுட். ரோமன் போலன்ஸ்கி முதல் அல்மொடாவர் வரையில் அங்கு இடம் பெறலாம்.
“வரலாற்றை முற்றிலும் மறுத்த இந்திய ஜனரஞ்சக அபத்தக் களஞ்சியத் தரைப் படங்களின் தொடர்ச்சியாகவே உருவாகியிருக்கிறது” என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார் யமுனா ராஜேந்திரன் . அவர் போற்றும் படங்களில் ஒன்று “காபுல் எக்ஸ்ப்ரஸ்”. இரண்டு இந்திய ஊடகவியலாளர்களின் பார்வையில் ஆப்கானிய அரசியலை அலசும் கடுமையான அமெரிக்க எதிர்ப்பு எள்ளல் திரைப் படம் காபுல் எக்ஸ்ப்ரஸ் . இந்திய இஸ்லாமிய ஆவணப்பட இயக்குனரான கபீர் கானிடம் இருந்த அரசியல் விமர்சனத்தில் இருந்த அரசியல் விமர்சனத்தின் கடுகளவினைக் கூட கமல் ஹாசனின் விஸ்வரூபத்தில் காண முடியாது.” என்கிறார். காபுல் எக்ஸ்ப்ரஸ் ஒரு நகைச்சுவைப் படம் என்ற போர்வையில் எல்லோரையும் கிண்டல் செய்கிறது. தலிபான், தலிபானுக்கு எதிரானவர்கள், அமெரிக்கா, இந்தியா, பத்திரிகையாளர்கள், ராணுவத்தினர் என்று எவரையும் விட்டு வைக்கவில்லை. அதை அமெரிக்காவை மட்டும் “கடுமையாக” விமர்சிக்கும் படம் என்று யமுனா ராஜேந்திரன் எப்படிப் புரிந்து கொண்டார் என்று புரியவில்லை.
4. ஈரானிய இயக்குனர்கள், ஆப்கானிஸ்தான் இயக்குனர்கள் தாலிபான் பற்றிய படங்களையும் எடுத்து விமர்சிக்கிறார். அதிலும் இதே மனச்சாய்வு தான் அவருக்கு. கண்டகார் என்ற நல்ல படத்தைக் கூட அவருடைய கறுப்புக் கண்ணாடி தப்ப விடவில்லை.
அவர் இந்தப் படத்தைப் பற்றி எழுதும் ஒரு வரி இவருடைய உளவியலைப் பிரதிபலிக்கிறது. ” சோவியத் படைகளுக்கும் முஜாஹிதீன்களுக்கும் இடையிலான போரின் போது நாட்டிலிரூந்து அகன்று கனடாவில் அடைக்கலம் கோரிய” என்று தொடங்கும் வாக்கியத்தில் அவர் சொல்ல வருவது தெளிவு. சோவியத் ஆக்கிரமிப்புப் படைகளினை எதிர்த்துப் போராடிய ஆப்கானிஸ்தான் மக்களாக அவர் தாலிபானை இனங்காணவில்லை. இந்தக் கட்டுரையில் எங்குமே சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்புப் பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை. சோவியத் படைகளுக்கும் முஜாஹிதீன்களுக்கும் இடையிலான போர் என்று அவர் விடுதலைப் போராட்டத்தினை இனங்காணுகிறார். சோவியத் தேச பக்தி!
ஒஸாமா, கண்டகார் போன்ற படங்களினைப் பற்றியும் அவர் பார்வை இது தான் : “இஸ்லாமியக் கலைஞர்களால் எடுக்கப் பட்ட இந்தப் படங்கள் அணித்துமே தலிபான்களைப் பற்றியும் தலிபான்களின் காலத்தில் பெண்களின் மீது நிலவிய ஒடுக்குமுறையையும் முன்வைக்கிறது. தலிபான்களின் தோற்றம், அவர்களது நிலைப் பாடுகள் போன்றவற்றை அவர்ளை ப் பாத்திரப் படைப்புகள் ஆக்கியதன் மூலம் முன்வைக்க வில்லை.தலிபான்களின் வழியில் அவர்களது நிலைபாடுகளுக்கான அரசியல் நியாயங்கள், எந்தத் திரைப் படத்திலுமே சொல்லப் படவில்லை. ..தலிபான்களை உருவாக்கியவர்கள் அமெரிக்க ஜனாதிபதிகள் என்பதனை இதில் எந்தப் படமும் சொல்லவில்லை. தலிபான்களுக்கு ஆயுதங்கள் அளித்ததும், நிதியளித்ததும் அமெரிக்காவே என எந்தத்திரைப்படமும் சொல்லவில்லை. குரூரமான இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் பெண்களின் மீது மட்டுமீறிய அடக்குமுறையையும் வன்முறையையும் ஏவியவர்கள் என்பதற்கு அப்பால் இந்தத் திரைப் படங்கள் அரசியல் ரீதியில் ஆப்கானிஸ்தான் பற்றி நமக்கு எதனையும் தெரிவிக்கவில்லை. அமெரிக்கர்கர்களின் மீதான பயமோ அல்லது சுய தணிக்கையோ தான் இந்தப் படைப்பாளிகளை இவ்வாறு ஆட்டுவிக்கிறது என இதனை நாம் காணவியலும்.” என்பது யமுனா ராஜேந்திரனின் கூற்று.
அமேரிக்கா தாலிபன்களுக்கு உதவியது என்பது ரகசியம் அல்ல. ஒரு படி பின்னால் போய் அமெரிக்க ஆயுத உதவி பண்ண என்ன காரணம் என்பதை மிக சாமர்த்தியமாக யமுனா ராஜேந்திரன் குறிப்பிடுவதில்லை. ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தோன்றியது தாலிபான் இயக்கம் என்பது யமுனா ராஜேந்திரன் பிரக்ஞை பூர்வமாக தவிர்க்கும் விஷயம். அமெரிக்கா ஆயுதமும் பணமும் அளித்தது உண்மை. ஆனால் கருத்துருவமும், கோட்பாடும் அமெரிக்கா அளித்ததல்ல. அமெரிக்க தலிபான்களை குரூரமான் இஸ்லாமிய நடைமுறைகளைப் பின்பற்றச் சொல்லி கட்டாயப் படுத்தியதாக எங்கும் ஆவணம் இல்லை. பெண்களை அடக்குமுறைக்கு ஆளாக்கிச் சீர் குலைக்க வேண்டும் என்று அமேரிக்கா ஆணையிடவில்லை. அமெரிக்க பத்தாண்டுகளுக்கு மேலாக ஆப்கானிஸ்தா விட்டு வெளியேறிய சமயத்தில் தாலிபான் தன் மனித முகங்களைக் காட்ட ஏராளமான சந்தர்ப்பங்கள் உண்டே அது ஏன் வெளிப்படவில்லை என்று யமுனா ராஜேந்திரன் போன்றவர்கள் விளக்கினால் நல்லது. யமுனா ராஜேந்திரனின் உள்ளக் கிடக்கை என்னவென்றால் ஹங்கேரி, ரோமேனியா போல சோஷலிசப் “புரட்சி” நடந்திருக்க வேண்டிய ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இடையீடு செய்து கெடுத்துப் போட்டது என்ற ஆதங்கம் இன்னமும் யமுனா ராஜேந்திரனுக்கு இருக்கிறது போலும். வரலாறு தெரிந்தவர் ஆயிற்றே.
- போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 18
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -22 என்னைப் பற்றிய பாடல் – 16 (Song of Myself) விலங்குகள் நேர்மையானவை .. !
- சங்கல்பம்
- தாகூரின் கீதப் பாமாலை – 63 உன் இதயத்தில் போட்ட என் முடிச்சு .. !
- நவீன தோட்டிகள்
- மருத்துவக் கட்டுரை – இரத்த ஓட்டம்
- அப்பாவின் ரேடியோ – சுஜாதா தேசிகன்
- தில்லி மாணவிக்கு நடந்த கொடூரமான பாலியல் வன்கொடுமையும் அது தொடர்பாய் பெறப்பட்ட சில எதிர்வினைகளும்
- புகழ் பெற்ற ஏழைகள் 5. உலகத்திலேயே அதிக நூல்களை எழுதிய ஏழை!
- “ 13 ”
- அரிசிபருப்பு சோறு: சுப்ரபாரதிமணியன்
- நிழல்
- செல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு (9)
- தெளிதல்
- ஆனந்தயாழ் – தங்கமீன்கள்
- டௌரி தராத கௌரி கல்யாணம்….! 4
- துறவியின் இசைக்குறிப்புகள் சண்முகம் சரவணனின் கவிதைத் தொகுப்பு
- இன்னொரு எலி
- கவிதைகள்
- ஒரு தாதியின் கதை
- என். ஸ்ரீராமின் “அத்திமரச் சாலை” (நாவல் வாசிப்பனுபவம்)
- கரையைத் தாண்டும் அலைகள்
- பசுமையின் நிறம் சிவப்பு
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 9
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -8 [இரண்டாம் அங்கம் முடிவு]
- மத நந்தன பாபா
- விஸ்வரூபம் – யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியலின் கோர முகம்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோளின் வடதுருவத்தில் சுழலும் பூதச் சூறாவளி கண்டுபிடிப்பு !