பூமராங்

பூமராங்
This entry is part 26 of 38 in the series 10 ஜூலை 2011

கறுப்பென்றால் கறுப்பு அந்தப் பெண் அப்படியொரு கறுப்பு. தொட்டால் விரல்களில் ஒட்டிக் கொள்ளக் கூடுமோ என்ற நினைப்பினைத் தோற்றுவிக்கும்படியான அட்டைக் கறுப்பு. அட்டை, கறுப்பு நிறமா என்றெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது. அது எனக்குத் தெரியாது. அவள் கறுப்பு நிறம். அவ்வளவுதான். அணுவளவேனும் வெளிச்சமற்ற ஓர் அமாவாசை இரவில் அவளைத் தனியே நிற்கவைத்து, ஊசித் தும்பிகளின் சிறகடிப்பினைப் போல அடிக்கடி அடித்துக் கொள்ளும் இமைகளை மூடிக் கொள்ளும்படியும், சிரிப்பில் மின்னும் வெள்ளைப் பற்களைக் காட்டக் கூடாதெனவும் கட்டளையிட்டால், அவளை யாராலுமே கண்டுபிடிக்க முடியாதென அடித்துச் சொல்வேன். நீங்கள் ஏற்க மறுத்தால் மறுத்துவிட்டுப் போங்கள். ஆனால் அவள் நிறம் அப்படியொரு கறுப்பு. இருட்டோடு இருட்டாகக் கரைந்துவிடும் கறுப்பு.

நான் அவனைக் கொன்றதற்கு அடுத்தநாளிலிருந்து அவள் என்னைத் தினமும் பின்தொடர்கிறாள் என்பதனை நான் இந்த ஒரு வாரகாலத்துக்குள் உறுதிப்படுத்தியாயிற்று. அவளது விசித்திரமான பெரிய கண்களுக்கு மேலே புருவங்களிரண்டும் வானில் தூரத்தே பறக்கும் பறவையொன்று நம் பார்வைக்கு இரு பூமராங்குகளை ஒன்றாக இணைத்தது போல இருக்குமே. அப்படி நடுவில் இணைந்து மிக மெல்லிய கோடுகளாக இருபுறமும் சமச்சீராகப் பரவியிருந்தது. நான் பார்த்த போதெல்லாம் அவளது அகன்ற கண்களை மேலும் விரித்து அவள் என்னை உற்றுப் பார்ப்பதாகத்தான் தோன்றிற்று.

அவள் என்னைப் பின்தொடர்வதாகக் கண்ட முதல்நாள் தற்செயலாகத்தான் அதனை உணர்ந்தேன். முந்தைய நாள் இரவில் ஒரு கொலையைச் செய்தவனுக்கு, அடுத்தநாள் யாரைப்பார்த்தாலும் அவர்களெல்லோரும் தன்னைத்தான் உற்றுநோக்குவதாகத் தோன்றுமே. கொலை கூட வேண்டாம். ஏதாவது ஒரு தவறை, கொள்ளையை, வழிப்பறியை, வல்லுறவை இது போல ஏதேனுமொரு சமூகக் குற்றத்தைச் செய்துவிட்டால் அடுத்த கணத்திலிருந்து தன்னைத் துரத்தும் அந்த யாரோ குறித்து அச்சப்பட வேண்டியிருக்குமே. அதுபோலத்தான் முதலில் அவள் என் பின்னாலேயே வருவதைக் கண்டும் அதிர்ந்தேன்.

அவள் என்னைப் பின் தொடரும் தூரம் மிக அதிகமாக ஏதுமில்லை. ஒரு இருநூறு மீற்றர் தூரம் தான். ஆமாம். எனது அலுவலகக் கார் நிறுத்தும் இடத்திலிருந்து அலுவலகத்துக்கு நான் நடக்கும் தூரம் இருநூறு மீற்றர்தான் இருக்கும். அதைவிடவும் குறைவாக இருந்தாலும் கூடுதலாக இருக்காது. நான் காரை நிறுத்தி இறங்கும்போது சரியாக அவள் என் பின்னால் நின்று கொண்டிருப்பாள். நான் நடக்கத்தொடங்கும்போது அவளும் தயாராகுவாள். பின்னர் என் பின்னாலேயே அலுவலகம் வரை வந்து எனக்குக் கதவு திறந்து வழிவிட்ட காவலாளியின் காலைவணக்கத்துக்குப் பதிலுரைத்துவிட்டு உள்நுழைந்து கண்ணாடிக் கதவு வழியே வந்த வழியை நான் பார்ப்பதற்குள் அவள் காணாமல் போயிருப்பாள். எங்கிருந்து வருகிறாள். எங்கு போகிறாள். எதுவும் தெரியவில்லை எனக்கு.

இந்த ஒருவார காலத்துக்குள் தினந்தோறும் இதே கதைதான். மூன்றாம் நாள் நான் தைரியமாக அவளை எதிர்கொள்ளக் காத்திருந்தேன். அவளது விழிகளை உற்றுப்பார்த்து ‘என்ன வேண்டும் உனக்கு?’ எனக் கேட்கவேண்டுமென தூக்கமின்றி உருண்ட முந்தைய நாள் இரவே யோசித்து வைத்திருந்தேன். ஆனால் அவளைப் பார்த்ததும் அக் கேள்வி எனது உணர்வுகளிலிருந்தும் நழுவி, கயிறறுந்து பறக்கும் பட்டமொன்றைப் போல எங்கோ நான் அறியாத் திசைகளில் பறந்துபோயிற்று. குதியுயர்ந்த அவளது பாதணிகளின் ஓசை அன்றும் பின்னாலேயே வந்தது.

ஒரு மெய்ப்பாதுகாவலாளி போல மிகுந்த அக்கறையோடு தினமும் என் பின்னாலேயே வந்தாள். ஒருவேளை எனது அலுவலகத்திலேதேனும் வேலையை எதிர்பார்க்கிறாளோ? அவளது நோயோ, கடனோ பாதித்த குடும்பத்துக்கு ஏதேனும் நிதி உதவிகளை எதிர்பார்க்கிறாளோ? இல்லாவிட்டால் காவல்துறை என்னைக் கண்காணிக்க அவளை அனுப்பி வைத்திருக்கிறதோ ? ஒருவேளை என்னைக் காதலிக்கிறாளோ ? இந்த ஐம்பது வயதுகளில் முதல் இரண்டு மனைவிகளைக் கொன்றுவிட்டு மூன்றாவது ஒரு அழகியோடு குடும்பம் நடத்தும் நான் எப்படி இப்படியான கறுத்து, கன்னங்கள் ஒடுங்கிய ஒரு அசிங்கமான பெண்ணைக் காதலிப்பேனென அவள் எதிர்பார்த்துப் பின்தொடரலாம்? இல்லை. இல்லை. ஒருவேளை, நான் கொன்றவனது காதலியோ? இருக்காது. அவனுக்கு வயது இருபதுக்குள் தானே. இவளுக்கு எப்படியும் முப்பது கடந்திருக்கும். அதுவுமில்லாமல் என் மகனுக்கு இப்படியொரு காதலி இருந்திருந்தால் எனக்கு இதுவரை தெரியாமலா போயிருந்திருக்கும்?

‘இன்றும் போகுமிடமெல்லாம் என்னைத்தானே அதிகமாக நினைத்துக்கொண்டிருந்தீர்கள் அன்பே?’ எனக் கேட்ட என் இருபது வயதுகளே நிரம்பிய அழகிய காதலிக்கு இந்த ஒரு வாரமாகப் பொய்யைத்தான் பதிலாகச் சொல்லவேண்டியிருந்தது. அந்த கறுப்புப் பெண்ணைக் கண்ட நாளிலிருந்து அவள் குறித்த வினாக்கள் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. அவளது உடல் கறுப்புப் போதாததற்கு அவள் உடுக்கும் ஆடை கூட முழுக்கறுப்பாகவே இருந்தது. தலையை மூடிய ஆடை ஒரு பெங்குவின் பறவையின் உடலைப்போல அப்படியே கீழிறங்கி கணுக்கால்வரை மூடியது. பெங்குவின் பறவைகூடப் பரவாயில்லை. சிலதின் வயிற்றுப்பகுதியில் வெள்ளை கலந்திருக்கும். ஆனால் அவளது அப்படியல்ல. வெள்ளை சார்ந்த உள்ளங்கால்களை மறைக்கவும் கறுப்புக் காலுறையையே அணிந்திருந்தாள். சரி விடுங்கள். ஒரு பெண்ணின் நிறம் குறித்து நான் விரிவாகப் பேசப் போனால் நீங்கள் என்னோடு சண்டைக்கு வரக் கூடும்.

இப்படித்தான் என் முதல் மனைவியும் எனக்கொரு காதலி இருப்பதைக் கண்டபொழுதில் என்னுடன் சண்டை பிடித்தாள். அப்பொழுது எமது ஒரே மகனுக்கு பதினெட்டு வயது. வெளிநாட்டுக்குப் படிக்க அனுப்பியிருந்தேன். வீட்டினை நிறைத்திருந்த பெறுமதியான பொருட்கள், நகைகளையெல்லாம் கூட வெறி பிடித்தவள் போல எனது முகத்துக்கு நேரே தரையில் போட்டுச் சிதறடித்தாள் அவனது தாய். ஆற்றாமையில் கத்தினாள். அவளிடம் நான் என்ன குறையினைக் கண்டேனெனக் கேட்டுக் கதறியழுதாள். அவளுக்குத் துரோகம் செய்யவேண்டாமெனச் சொல்லிக்கொண்டு என் கால்களில் விழுந்தாள். இருந்த பலமெல்லாவற்றையும் சேர்த்து எட்டி உதைத்தேன். தூரப்போய் விழுந்தாள். ஒருவேளை அவள் மன்றாடாமல் என்னை ஏதேனும் வழியில் மிரளும்படி செய்திருந்தால் நான் அடங்கிப்போயிருக்கக் கூடும். எங்கும் எதிராளிகளிருவரைத் தராசொன்றின் இருபுறமும் வைத்தால் சமநிலையின்றி ஒரு பக்கம் தாழ்ந்தும் மறுபக்கம் உயர்ந்துமிருக்குமே. அதுபோலத்தான்.

அவளுக்குச் சொல்லிப் புரியவைக்க முடியாதெனக் கண்டுகொண்டேன். இல்லை. அது பொய். நான் அவளுக்குச் சொல்லிப் புரியவைக்கவும் முயற்சிக்கவில்லை. நான் வீணாக எதுவும் எப்பொழுதும் பேசுவதில்லை. யாருடனும் எதையும் வீணாகக் கதைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் என்னால் பல கோடிகள் சம்பாதித்து விட முடியும். இல்லாவிடில் சில காதலிகளைக் கண்டடைய முடியும். அதுபற்றி விரிவாக உங்களிடம் விபரிக்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. கோபித்துக் கொண்டால் கோபித்துக் கொள்ளுங்கள். என் பணம். என் காதலிகள். நான் சம்பாதிக்கிறேன். அவ்வளவுதான். அதுபற்றி மேலும் கேட்டால் உங்களையும் நான் என் முதல் மனைவியைக் கொன்றது போலக் கொல்லவேண்டி வரும்.

அவள் தொடர்ந்தும் அழுதுகொண்டே இருந்தாள். எப்படியும் ஆளை அழித்துவிடவேண்டுமென்று நான் தீர்மானித்துவிட்டதால் வீணாக அழுதழுது அவளது சக்தியை அவள் வீணாக்கியிருக்கவே தேவையில்லை. அவளது அழுகைக்குக் காரணமான காதலியிடம் இதைச்சொன்னபோது அவள் வாய்விட்டுச் சிரித்தாள். இந்தப் பிரச்சினை வருமென அவளுக்கு முன்பே தெரியுமென்றாள். பெண்கள் எப்பொழுதும் காலத்துக்கு முன்கூட்டியே பயணித்து, பின்வரப்போகும் ஒவ்வொரு கணப்பொழுதுக்குமான வழிகளை முன்பே கண்டுகொள்கிறார்களென அன்று நான் அறிந்தேன். அவளையும் நான் குடியிருந்த வீட்டுக்கு அழைத்து வந்தேன்.

என் மனைவி அவளைக் கண்டதும் ஓடி வந்து அவளது கைகளைப் பிடித்துக் கொண்டு தனது கணவனை விட்டுப் போகும்படி கெஞ்சினாள். அவள் என் மனைவியின் கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள். நான் என் மனைவியின் பின்னாலிருந்து அவளது கழுத்துக்கு கயிற்றினை மாட்டி இறுக்கினேன். கால்கள் மடங்கிக் கீழே விழுந்து திமிறியவளின் மேலேறி என் காதலி அமர்ந்துகொள்ள நான் மேலும் மேலும் இறுக்கினேன். அவள் இறுதியாக விட்ட மூச்சுக் காற்றில் எனதும் காதலியினதும் சுவாசங்களும் கூடக் கலந்திருக்கும். பாவிப்பெண் கண்களைத் திறந்தபடியே உயிர்விட்டிருந்தாள். பிணங்களின், முக்கியமாக நீங்கள் கொன்ற பிணங்களின் கண்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவை பரிதாபமூட்டும். பல கேள்விகளை, பல விடைகளை அவற்றுக்குள் புதைத்து வைத்திருக்கும். அக் கருமணிகளில் ஏதோவொரு துடிப்பிருப்பதைக் கொன்றவன் மட்டும் காண்பான். அவை அச்சமூட்டும். என் மனைவியின் நிலைத்த பார்வை நாங்கள் திரும்பிய திசைகளெல்லாம் எங்களை நோக்கியே இருந்ததாகப் பட்டது. அக் கண்களைப் பார்த்தபடி எங்களால் இருக்கமுடியவில்லை. உடனே அவளைப் பொதி செய்து காரில் அடைத்தோம். சிறிது தூரம் பயணித்து, பொதி செய்யப்பட்டிருந்த அவ்வுடலுக்கு மிகவும் பாரமான கல்லொன்றினைக் கட்டி அந் நள்ளிரவில் மிகவும் உயர்ந்த பாலமொன்றிலிருந்து இரண்டையும் கடலுக்குள் தூக்கியெறிந்தோம்.

அன்றிலிருந்து காதலி இரண்டாவது மனைவியாகப் பொறுப்பேற்றுக் கொண்டு அவ் வீட்டில் முதல் மனைவியின் நடமாட்டத்தை நிரப்பினாள். அவளைக் கொன்ற பின்னரான நாட்களில் இது போல எந்தக் கறுப்புப்பெண்ணும் என்னைப் பின் தொடரவில்லை. மிகவும் நிம்மதியாக இருந்தேன். மிகவும் விலையுயர்ந்த பிளாட்டின, வைர நகைகளோடும் அதிகக் காமத்தோடும் வீட்டுக்கு விரைவாகப் போகத் தொடங்கினேன். திகட்டத் திகட்ட வாழ்க்கையை அனுபவித்துச் சில மாதங்களில் அதுவும் சலித்துப் போகத் தொடங்கியது.

அவ்வேளைதான் எனது புதிய காதலி வேலை நேர்முகத்துக்கென என் அலுவலகத்துக்கு வந்தாள். சுருண்ட, அவிழ்த்து விடப்பட்ட நீண்ட கூந்தல், மை பூசப்பட்ட, நீள் இமைகள் சூழ, முத்தினைப் பாதி காட்டும் சிப்பியொன்றைப் போலக் கண்களைக் கொண்டவள். மிகவும் அழகாகவும், இளமையாகவும், வாசனையாகவும் ஒரு பூவைப் போல இருந்தாள். அவளைக் கண்டது முதல் காதலிக்கத் தொடங்கினேன். நான் உடனே அவளுக்கு அவ் வேலையைக் கொடுத்திருப்பேனென நீங்கள் எண்ணினால் அது தவறு. நூற்றுக்கு நூறு முற்றாகத் தவறு. தேர்வு அறையிலிருந்த எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டு அவளிடம் தனியாக எனது காதலைச் சொன்னேன். அவளுக்கு ஏற்கெனவே ஒரு காதலன் இருப்பதாகச் சொன்னாள். நான் எனது அந்தஸ்து, வசதிகளைப் பட்டியலிட்டேன். அவளது கருவிழிகள் விரிந்தன. பின்னர் எனக்குச் சிரமமாக எதுவும் இருக்கவில்லை இரண்டாவது மனைவியைத் தவிர. எனது சட்டையிலிருந்த காதலியின் வாய்ப்பூச்சுக் கறைகளைக் கண்ட அவளும் விதவிதமாகக் கேள்விகள் கேட்கத் தொடங்கினாள்.

உங்கள் ஊகம் சரிதான். மூன்றாவது காதலியோடு சேர்ந்து இரண்டாவது மனைவியைக் கொன்றேன். முதல் மனைவியைப் போல இரண்டாமவளைக் கொல்வது இலகுவாக இருக்கவில்லை. நான் காதலியை வீட்டுக்கு அழைத்து வந்ததுமே அவள் புரிந்துகொண்டு விட்டாள். கூடொன்றுக்குள் புதிதாக அடைக்கப்பட்ட பட்சியொன்றைப் போல எல்லாக் கதவுகளும் பூட்டப்பட்ட வீட்டுக்குள் தப்பித்து ஓடிவிட முயன்றாள். பருத்த உடம்பையும் கனத்த தொப்பையையும் தூக்கிக் கொண்டு நானும் அவளுடன் பின்னால் ஓடவேண்டியிருந்தது. இவ் வேளை அழகி உதவிக்கு வந்தாள். மானொன்றைப் போல ஓடியும், முயலொன்றைப் போலத் தாவியும் அவளும் பின்னால் ஓடி இரண்டாமவளை சமையலறை நிலத்தில் வீழ்த்திக் கன்னத்தில் அறைந்தாள். அவள் சுதாகரிக்குமுன் அருகிலிருந்த முனை கூரிய கத்தியெடுத்து ஒரு தேர்ந்த கொலைகாரியைப் போல வயிற்றிலும் கழுத்திலும் மாறிமாறிக் குத்தினாள். நான் அருகிலிருந்த கதிரையிலமர்ந்து இதையெல்லாம் பார்த்தபடி இளைப்பாறிக் கொண்டிருந்தேன். பின்னர் முன்பு போலவன்றி வியர்த்த, இரத்தம் தெறித்த உடலைக் கழுவவென என் காதலி குளியலறைக்கு அகன்ற பின்னர் நான் மட்டும் தனியாக பிணத்தினைப் பொதி செய்தேன். பின்னர் முன்பு போல இருவருமாகக் காரில் கொண்டு சென்று பாலத்தில் நின்று கல்லைக் கட்டித் தூக்கியெறிந்தோம். ஒரு பெரிய தாகத்தோடு கடலும் முன்புபோலவே இப் பிணத்தினையும் விழுங்கிக் கொண்டது.

மூன்றாவது மனைவியாக அவ்வீட்டில் நடமாட என் காதலி மறுத்துவிட்டாள். மனித இரத்த வாடை பரவிய வீட்டில் பேய்கள் மிகக் குரூரமான எண்ணங்களோடு அலையுமென அவள் பயந்தாள். அவை அவள் தூங்கும் போது கழுத்தை நெரித்து விடுமெனவும் பகலில் தனியாக இருக்கும்போது சீண்டி வதைகள் செய்யுமெனவும் அச்சப்பட்டாள். அவளுக்கு மிகவும் பயந்த சுபாவம். எனது மகன் விடுமுறைக்கென வந்து தன் தாயைத் தேடிப் பார்த்து எப்படியோ விபரம் தெரிந்து புதிய காதலியை அம்மாவாக ஏற்றுக்கொள்ள மறுத்து அவளுக்கென நான் வாங்கிக் கொடுத்திருந்த பங்களாவுக்கே தேடிவந்து அவளது அழகிய முகத்துக்கு நேரே விரல் நீட்டி அப்பாவை விட்டுப் போய்விடும்படி எச்சரித்த பொழுது அவள் மிகவும் பயந்துபோனதாக என் காதுக்குள் பின்னர் சொன்னாள். அன்றுதான் மகனைக் கொன்றுவிடுவது குறித்து நாம் திட்டமிட்டோம்.

மகனைக் கொல்வது எனக்கு மிகவும் இலகுவாக இருந்தது. அதுவரை நான் செய்த கொலைகளிலேயே இறுதியானதும் மிகவும் இலகுவானதும் இதுதான். அவனது அம்மா வாழ்ந்த மற்றும் இறந்த அதாவது எனது பழைய வீட்டில் அதற்காக அவனுடன் ஒருநாள் நான் தங்கவேண்டியிருந்ததுவும் அவன் உறங்கப் போகும்போது அருந்தும் பாலில் மூன்று துளி விஷம் கலந்ததுவும் மட்டும்தான் நான் செய்த காரியம். இதற்கு முன்னைய எனது கொலைகளிலெல்லாம் உயிர் பிரிவதை என் இரண்டு கண்களாலும் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். மகன் விடயத்தில் மட்டும் விதிவிலக்காக உறக்கத்திலேயே அவன் உயிர் பிரிந்திருந்தது. அடுத்தநாள் காலையில் அவ்வீடு முழுதும் பற்றியெரியும்படியாக எல்லா வேலைகளையும் செய்துவிட்டு நான் மெதுவாக அகன்றேன். அதில் எனக்கு இரண்டு இலாபங்கள். முதலாவது பிணத்தினை, தனியாகப் பொதி செய்து கடலில் தூக்கியெறிய அவசியமற்றும், மரணத்துக்கான காரணங்கள் சொல்லத் தேவையற்றும் முற்றாகப் பொசுங்கிப் போகச் செய்தது. அடுத்தது அவனது அம்மாவின் அவ் வீட்டுக்கான காப்புறுதிப் பணம் முழுதாக எனக்குக் கிடைக்கும். இதைத்தான் ஒரே கல்லில் இரு மாங்காய்களெனவும் இன்னும் சில பழமொழிகளிலும் நீங்கள் சொல்லக் கூடும்.

அந்தக் காலையிலிருந்துதான் இந்தக் கறுப்புப்பெண் என்னைத் தொடர்கிறாள். அந்த வீட்டின், மகனின் பிணத்தின் மொத்தமான கரும்புகைதான் எலும்பாகிச் சதையாகி மனித உருவெடுத்துப் பெண்ணுருவில் கறுப்பாக என் பின்னால் நடமாடுகிறதோ ? அல்லது நான் கொன்றொழித்த மனிதர்கள் எல்லோருமாக ஒன்று சேர்ந்து ஓருருவாகி என்னைப் பழிவாங்கப் பின்னால் அலைகின்றனரோ ? ஒருவேளை நான் எப்பொழுதும் ஒதுக்கித் தள்ளும் என் மனசாட்சியோ? இல்லை எப்பொழுதும் அழகிய பெண்களில் மிதந்து வழியும் என் காமமோ ?

எப்படியோ என் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தேவையற்று அடுத்த நாளிலிருந்து அவள் என் பின்னால் வரவில்லை. நானும் அலுவலகம் செல்லவில்லை. அந் நாள் இரவு என் அழகிய காதலி, மூன்றாவது மனைவியாகப் போனவள் நான் அவளுக்கு வாங்கிப் பரிசளித்திருந்த பங்களாவில் வைத்து அவளது இன்னுமொரு காதலனோடு சேர்ந்து நான் உறங்கும்போது என் கழுத்துக்குக் கயிறிட்டு நெருக்கினாள். காதலன், விழித்துத் திமிறிய என் கன்னத்திலறைந்து வயிற்றிலும் கழுத்திலும் நீண்ட கத்தியால் குத்திக் கிழித்தான். பின் அவ்விருவருமாகச் சேர்ந்து பிணமாகிக் கனத்த என்னைப் பொதி செய்து பாலத்து மேற்புறச் சுவரில் வைத்துப் பெற்றோல் ஊற்றி எரியவிட்டு அப்படியே கீழே தள்ளிவிட்டார்கள். எப்பொழுதும் பசியுடனிருந்த கடல், எரிந்தபடி விழுந்துகொண்டிருந்த என்னையும் சூட்டோடே விழுங்கிக் கொண்டது. இப்படியாக, கறுத்துக் கன்னங்கள் ஒடுங்கி, பெங்குவின் போல நீண்ட கறுத்த ஆடை அணிந்த பெண் இருநூறு மீற்றர் தூரங்கள் என்னைப் பின் தொடரமுடியாவண்ணம், நான் என் அலுவலகத்துக்குப் போகமுடியாவண்ணம் என் அழகிய இளம் காதலி என்னைக் கொன்றொழித்திருந்தாள்.

– எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

mrishanshareef@gmail.com

Series Navigationஜென் – ஒரு புரிதல் பகுதி (1)ராணி., பெண்ணாதிக்கம் இரு கவிதைகள்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *