திருப்பாவை உணர்த்தும்வழிபாட்டுநெறி

author
1
0 minutes, 10 seconds Read
This entry is part 1 of 26 in the series 29 டிசம்பர் 2013

baskaran

முனைவர் ந.பாஸ்கரன்,
உதவிப்பேராசிரியர,;
பெரியார் கலைக் கல்லூரி,
கடலூர்-1.

இறைவனை வணங்கும் தமிழர் வழிபாட்டு நிலை பல படிநிலைகளைக் கடந்து வந்துள்ளது.வழிபாட்டுத்தன்மை சமயம்தோறும் பல வகைகளில் பின்பற்றப்படுகிறது. காலந்தோறும் தமிழர் சமய வழிபாடுகளில் சிறசில மாற்றங்களும் புதுமைகளும் நிகழ்ந்து வருகின்றன.கடவுளர்கள் மற்றும் கடவுளர்களுக்கான அமைப்பிட வரையறைகளில் வகுக்கப்பட்டுள்ள ஆகம சட்டங்களின் இறுக்கம் வழிபாட்டளவில் சற்று நெகிழ்ச்சிகொண்டதாகக் காணப்படுகிறது. இருப்பினும் சில அடிப்படை விதிமுறைகள் உறுதியாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.வைணவ ஆழ்வார்களுள் ஒருவராக விளங்கும் ஆண்டாள் தமது திருப்பாவை பாடல்களின் வழி எல்லாக்காலத்துக்கும் பொருந்தும் வழிபாட்டு நெறிமுறைகளை உணர்த்தியுள்ளார்.

ஆலய வழிபாடும் ஆண்டாள்-சில குறிப்புகளும்….
இறைபாட்டைக்குறித்து தமிழ்ச்சமயம் பல நெறிகளை வலியுறுத்தினாலும் வழிபடுகின்றவர்களின் மன இயல்புகளே பெரும்பாலும் இவற்றைத்தீர்மானிக்கின்றன. இது அவரவரின் வாழ்க்கைச் சூழலுக்கேற்ப அமைந்துவிடுகின்றன.
“இறைவனை வழிபடுவோர் தத்தம் மனத்திற்கிசைந்த யாதாவதொரு வடிவில் தம்முடைய அறிவுக்கேற்ப முறையில் மெய்யன்போடு வழிபாட்டால் அவ்வடிவில நின்று இறைவன் அருள்புரிகின்றார் என்பது தக்க சமயக்கருத்தாகும்”. (ப.97)
என்ற கா.சு.பிள்ளை கருத்து ஈண்டு எண்ணத்தக்கதாகும்.வழிபாட்டின்போது கவனிக்கப்பட வேண்டியது ‘மெய்யன்பு’ என்பது மட்டுமேயாகும்.
“யவர்க்குமாம் ஒரு கைப்பிடி பச்சிலை”
என்னும் சித்தர் வாக்கிற்கேற்ப இயலுவதை இயன்றளவு மெய்யன்புடன் படைப்பதே வழிபாடு என்பதைத்தெளிவிக்கிறது.
“புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வுhய்மையான் காணப்படும்”
ஏன்ற வள்ளுவ வாக்கிற்கேற்ப உள்ளும் புறமும் தூய்மையே இறைமை என்பதை ஆண்டாள் திருப்பாவையும் சுட்டுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் மகளாகப்பிறந்து வளர்ந்த ஆண்டாள் மலர்பறித்து மாலைத்தொடுத்து இறை ஊழியம் செய்து அணிவிக்கும் பெரியாழ்வாரின் மகளாக அவரின் வழிபாட்டின் வழிநின்றவரே கோதையார்.கண்ணனின் கோகுலவாழ்வை காதுவழி காதலித்து,
“மானிடவர்க்கென்று பேச்சுப்படின் வாழகில்லேன் கண்டாய்”
(நாச்சியார்திருமொழி-1:5)
என்ற மெய்யன்பு பக்தியின் முதிர்ந்த நிலையில் காதலாயும் காமமாயும் இறையுணர்வில் கலந்து போனவர்.பெரியாழ்வாரால் தொடுக்கப்பட்ட இறைவன் பூசைக்கான மாலையை ஆண்டாள் இறைவனுக்கு சூட்டியப்பிறகு தான் சூட்டிக்கொள்ள வேண்டும் என்ற நியம முறையைக் காதல் மிகு பக்தி மேம்பாட்டால் மெய்மறந்து கடந்தார்.தூய்மைநிலைக் கெடும் என்பதற்கும் தந்தைக்கும் அஞ்சாது இறைவனுக்குச் சூட்டப்போவதை தான் சூடி மகிழ்ந்தும் அம்மகிழ்ச்சியில் தான் சூடிக்கொண்டதை இறைவன் சூடிக்கொள்ளட்டும் என்ற அவாவின் உச்சத்திற்கு செல்கிறார.;மேலும் ஆண்டாள் அணிந்து கழட்டியபோது மாலையில் சிக்கிக்கொண்ட ஆண்டாளின் தலைமுடியைக் கண்ட அளவில் பெரியாழ்வார் கொண்ட அச்சத்தை விலக்கி அப்படியே ஆண்டவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாக மிளிர்வு அடைந்தது அவரின் மெய்யுணர்வை வெளிப்படுத்துகிறது எனலாம்.ஆண்டாள் நாச்சியார் ஆண்டவருக்கு சூடிக்கொடுத்த மாலையில் உள்ள அன்பும்,அவாவும் அவர் பாடிக்கொடுத்த பாவையிலும் உள்ளதை உணரமுடிகிறது.பாவைப்பாடல் மழைவேண்டலை பெயருக்காக முன்வைத்தாலும் தங்களின் காதலுக்கு ஏற்றத் தலைவனை அடைவதற்கான அருளை வேண்டிய வழிபாடாகவே உள்ளது. இறைவனை நோக்கிய வழிபாட்டு நெறியை எக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் திருப்பாவை வெளிப்படுத்துகிறது.
கோஷ்டி வழிபாடு:
இறைவனை வழிபடச்செல்பவர் தனித்து செல்லாமல் உணர்வினால் ஒன்றியவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு செல்லவேண்டும். கூடியும் பாடியும் வழிபடவேண்டும். கூட்டாகச்சென்று வழிபடுவதை சுகானுபவமாக கருதுவர்.வைஷ்ணவத்தலமான திருக்கோஷ்டியூர் இத்தத்துவத்தின் பெயரையேப்பெற்றுள்ளது எனலாம்.இவ்வூரைச்சேர்ந்த திருக்கோட்டியூர்நம்பியிடம் ஸ்ரீராமானுஜர் அடியேன் என்ற நிலையில் திருவெட்டெழுத்தை உணர்ந்தார்.எவருக்கும் கூறக்கூடாது என்று கூறியும் தான் நரகம் புகினும் கேட்போர் சொர்க்கம் ஏகட்டுமென்று திருக்கோட்டியூர் திருக்கோபுரத்து மீதேறி அம்மந்திரத்தை அனைவரும் கேட்க உபதேசித்தார்.அதனால்;;;;;தேவரும்,முனிவரும் கோஷ்டியாக வந்து வழிபட்டதால் திருக்கோஷ்டியூர் என இத்தலம் பெயர்பெற்றது என்பர்.கோஷ்டியாக இணைந்து வழிபடுவதை,
“சென்று நாம் சேவித்தால்”(திருப்பாவை-பாடல் எண்:8)
“எல்லோரும் போந்தார”; ;”(திருப்பாவை-பாடல் எண்:15)
“நின் கட்டிலின் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்” (திருப்பாவை-பாடல் எண்:8)
என்ற பாவைப்பாடலடிகளைச் சான்றாகக் கொள்ளலாம்.
இறைவனை வழிபடச்சொல்லும் பெண்கள் மற்றப்பெண்களை அவர்களின் வீட்டிற்குச்சென்று அவர்களையும் எழுப்பிக்கொண்டு அழைத்துச்செல்வது திருப்பாவையின் நூலமைப்பு.இவ்வமைப்பே கோஷ்டி தத்துவமானக் கூட்டுவழிபாடு செய்வது சிறப்பு என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.வழிபாட்டுக்குத் தன்னுடன் வரவேண்டியவர் வராமல் தூங்கிக்கொண்டிருந்தாலும் அவர்கள் வீட்டிற்கு சென்று அவர்களுக்குக் கூடிவழிபடக்கூடியதன் மேன்மைநிலையை எடுத்தும் இடித்தும் கூறி அடைத்து செல்வதை வழிபாட்டின் முக்கியச்செயலாகக்கொண்டனர்.இதனை,
“ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ”  (திருப்பாவை-பாடல் எண்:9)
இது எழுப்பியும் எழும்பாமல் படுத்துக்கிடந்தப் பெண்ணை இடித்துரைத்து எழுப்புவதாக அமைந்துள்ளது.தூக்கம் என்கின்ற பேய்ப்பிடித்துக்கொண்டாலும் இறைவழிபாட்டில் ஈடுபடமுடியாது என்பதை “பேய்ப்பெண்ணே”(திருப்பாவை-பாடல் எண்:7)என்று கடிந்துரைப்பதன் மூலம் வெளிப்படுத்துகிறாது.
அதிகாலைப்பொழுது வழிபாடு:
இறைவனை வழிபாடு செய்வதற்கு அதிகாலைப்பொழுதே சிறந்தது. காலைப்பொழுதின் இயற்கைச்சூழலும் மனஅமைதியும் இறைவழிபாட்டிற்கு உகந்தது.இதனை,”ஒவ்வொரு தமிழனும் காலையில் எழுந்தவுடன் இயன்ற சுத்திசெய்து கொண்டு முழுமுதற் கடவுளை மனதில் நினைத்து வாயினால் வாழ்த்தி மெய்யினால் தொழவேண்டும்”என்கின்ற கா.சு.பிள்ளை (தமிழர் சமயம்-ப.15)கருத்து உறுதிபடுத்துகிறது. இதனை,
“நாட்காலை நீராடி”(திருப்பாவை-பாடல் எண்:2)
“சிற்றஞ்சிறு காலே வந்துன்னை சேவித்து” (திருப்பாவை-பாடல் எண்:29)
“பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி ” (திருப்பாவை-பாடல் எண்:12)
என்கின்ற பாடலடிகள் உணர்த்தும் பொருள்களால் அறியமுடிகிறது.
மனம் -மொழி –மெய்:தூய்மை வழிபாடு
இறைவழிபாட்டில் தூய்மைத்தன்மை மிகவும் இன்றியமையாததாகிறது.இது புறம்,அகம் என்னும் இருநிலைகளுடன் வாய்மையும் அவசியமாகின்றது.இதில் அகம் முதல்நிலைப்பெறுகிறது.
“அகவாய்மையும்,தூய்மையும்இல்லாதுஇறைவனைவழிபடுவதால்   பெரும்பயன்விளையாது.”(தமிழர் சமயம்-16)
என்ற கா.சு.பிள்ளை     கருத்தும் ஈண்டு எண்ணத்தக்கது.
இதனை,
“அகந்தூய்மை வாய்மை..”(குறள்-
“மனத்துக்கண் மாசு இலன்…(குறள்-
போன்ற வள்ளுவ வாக்குகளும் தெளிவிக்கின்றன.
மெய்:நீராடல் மூலம் உடலைத்தூய்மைத் தன்மையுடையதாக வைத்துக்கொள்வதும் .நீராடியவுடன் இறைவழிபாட்டில் ஈடுபடுவதும் நல்லதென பாவைநூல் கூறுகிறது.இதனை,
“நாட்காலே நீராடி”  (திருப்பாவை-பாடல் எண்:2)
“தூயோமாய் வந்து” (திருப்பாவை-பாடல் எண்:5)
“குள்ளக்குளிரக் குடைந்து நீராடல்”  (திருப்பாவை-பாடல் எண்:13)
ஏன்கின்ற வரிகளால் பாவைநூல் கூறுகிறது.இறையுறையும் தலங்களில் உள்ள நீர்நிலைகளில் நீராடச்செல்வது சிறப்பென்பதை உணர்த்துகிறது.
மனம்: மனிதவாழ்க்க்கையை வழிபாடு தீர்மானிக்கிறது. மனம் என்பது அவனின் நல்ல சிந்தனைப்பாற்பட்டது. “மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம்.”என்பர்.மனதினை நோய் செய்யக்கூடியவைகளாக உள்ள அளவுக்குமீறிய ஆசை,கோபம்,பொறாமை,இன்னாதசொற்கள் என்பவையே ஆகும்.இத்தகைய மனமாசுகளைத்தவிர்த்த “கள்ளம் தவிர்த்த”   (திருப்பாவை-பாடல் எண்:13) உள்ளமே இறைவன் வாழும் இல்லம்.இதனை,
“செய்யாதன செய்யோம்” (திருப்பாவை-பாடல் எண்:2)
“தீக்குறளை சென்றோதோம” (திருப்பாவை-பாடல் எண்:2)
என்பனவற்றை வழிபடுபவர் எடுத்துக்கொள்ளவேண்டிய உறுதிமொழியாகக் கூறுகிறது.மேலும்,உடம்பை பக்தி நெறியிலிருந்து ஆசையின் பக்கம் திசைதிருப்பும் வல்லமைக்கொண்டநெய்,பால் போன்ற உணவுகளையும்;;கண்ணுக்குமைதீட்டுதல்,கூந்தலுக்கு பூச்சூட்டுதல் போன்ற மனரீதியாக சிதைவு ஏற்படுத்தக்கூடியவற்றையும் தவிர்க்க வேண்டுமென்கிறது பாவை நூல். (திருப்பாவை-பாடல் எண்:2) “ஆடை அணிகளும் ஆடம்பரங்களும் ஆண்டவன் விரும்புவதில்லை”என்ற கண்ணதாசன் வரிகள் ஈண்டு எண்ணத்தக்கதாக உள்ளது.
மொழி:உயிரினங்களில் பேசத்தெரிந்த விலங்காக மனிதன் உள்ளான் என்பார் அரிஸ்டாட்டில் இந்த பேச்சின் உண்மைத்துவத்திலேயே இறைமைக்குடி கொள்கிறது.இறைவனின் திருப்பெயரையும் திருப்புகழையும் போற்றிப்பாடுவதே நாக்குப்பெற்ற பயன். இதன் வெளிப்பதாடாகவே பக்தி இலக்கியங்களின் தொகுப்பு உள்ளது.கம்பர்”,நாராயணனைப்பாடாத நாவென்ன நாவோ”என்று பாடுகிறார்.பாவை நூலுள்ளும்,
“பரனடிப்பாடி..”(பா.எ-2) ,”பேர்பாடி..”(பா.எ-3),”வாயினால் பாடி மனதினால் சிந்திக்க..”(பா.எ-5),”நாமம் பலவும் நவின்று..”(பா.எ-9),”கீர்த்திமை பாடல்..(பா.எ-13),”பங்கயம் கண்ணனைப் பாடல்..(பா.எ-14) ,’பொற்றாமரை அடியே போற்றும் பொருள்..”(பா.எ-29) என்கின்ற பாடல் வரிகளின் மூலம் பாவைநூல் காட்டுகிறது.இறைவனின் திருவடியைப்பற்றிப் போற்றுதல் குழந்தைத் தன் தாயின்மார்பகத்தைப்பற்றிக்கொள்வது போன்றது என்பர் உரையாசிரியர்.திருநாமங்களைப்பாராயாணம் செய்வதை “நாமாவளி”எனப் போற்றுகின்றனர்.திரௌபதி,கஜேந்திரன்,பிரகலாதன் போன்றோர் திருவருள் பெற நாமாவளியேக் காரணமாக இருந்தது என புராணசித்திரிப்புகள் கூறுகின்றன.திருவாய்மொழி,
“ஆடி ஆடி அகம் குழைந்து-இசை
புhடி பாடி கண்ணீர் மல்கி”      -என்று இறைப்பெருமைப் போற்றி வழிபடும் சிறப்பைக் கூறுகிறது.இறைவழிபாட்டில் ஈடுபட்டும் இறைபாடலைப் பாடியும்,கேட்டும் இன்பம் அடையாதவர்கள் ஊமையென்றும்(பா.எ-9),மரச்செவி(பா.எ-7) உடையவர்கள் என்றும் பாவைநூல் சுட்டுகிறது.
ஏல்லா மதங்களும் பொதுநிலையில் வலியுறுத்துகின்ற சில நியதிகள் உள்ளன.தீங்கு பயவாத வகையில் உண்மையாகவும் இனிமையாகவும் பேசுவது,நல் நினைப்பு,பேசும்படி செயலாற்றல்,அன்பு,தீங்குசெய்யாமை,தீமையான காமம்,கோபம்,உலோபம்,அகங்காரம் போன்றவற்றை களைவது, பொய்.களவு,கள் தவிர்ப்பது இவற்றின்படி வாழ்தலே இறைவழிபாடுதான் என்னும் வைத்தியநாதன் கருத்து இக்கட்டுரைக்கு முடிவாக அமைகிறது.மேலும்,எல்லாவற்றிற்கும் உயர்பொருள் ஒன்று உள்ளது.வல்லமை மிக்கது.அப்பொருளைப் போற்றி வழிபட அன்புநெறியும் அறநெறியும் துணை நிற்கிறது. இதுவே பாவைநூல் வலியுறுத்தும் வழிபாட்டுநெறி என்பதை உணரமுடிகிறது.

Series Navigationமருமகளின் மர்மம் 9சீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 13கண்ணீர் விட்டோம் வளர்த்தோம்பெண்மனதின் அரூப யுத்தம் ‘அம்மாவின் ரகசியம்’இடையனின் கால்நடை
author

Similar Posts

Comments

  1. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ இறைவனை வழிபடச்செல்பவர் தனித்து செல்லாமல் உணர்வினால் ஒன்றியவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு செல்லவேண்டும். கூடியும் பாடியும் வழிபடவேண்டும். \

    ஸ்ரீமான் பாஸ்கரன் அவர்களுக்கு வந்தனம்.

    மார்கழி மாதத்தில் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியை தங்கள் வ்யாசம் நினைவுறுத்தியுள்ளது அருமை.

    அடியாருடன் ஆடிப்பாடி வழிபடுவதான இந்தக் கருத்துடன் பெரும்பாலும் ஒத்த கருத்தை — தமிழ்த்ரய வினோதப்பெருமானான மால்மருகனைப் பற்றிய — அமுதினுமினிய திருப்புகழில் — எங்கள் வள்ளல் அருணகிரிப்பெருமான் பகர்வதும் நினைவில் வருகிறது.

    உருகியுமாடிப் பாடியுமிருகழல் நாடிச் சூடியு
    முணர்வினோ டூடிக்கூடியும் …… வழிபாடுற்று

    உலகினொராசைப்பாடற நிலைபெறு ஞானத்தாலினி
    உனதடி யாரைச் சேர்வது …… மொருநாளே

    அடியவர் திருத்தூளி எம் சென்னியதே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *