மொட்டைத் தெங்கு

This entry is part 3 of 23 in the series 23 மார்ச் 2014

thennaiDSC01638 (1)DSC01640

முன் குறிப்பு :  காட்டை அழித்து நாட்டை விரிவு படுத்தும் கூட்டம் ஒரு புறமும், வாய்க்கால் வரப்பு தகராறு என்ற பெயரால் தோட்டத்தையே அழிக்கத் துணியும் கூட்டம் இன்னொரு புறமும், இவையெல்லாம் போக மரத்தை வெட்டி பணம் சம்பாதிக்கும் கூட்டம் ஒரு புறமும் இப்படி ஆளாளுக்குப் பங்கு போட்டுக்கொண்டு நம் வாழ்வாதாரமான இயற்கை வளங்களை அழித்துக்கொண்டிருப்பது வேதனைக்குரியது. எத்தனை வேளான் விஞ்ஞானிகளும், நம்மாழ்வார்களும் உயிரைக் கொடுத்துப் புலம்பினாலும் கேட்பார் இல்லை. நாட்டில் நீர்வளம் மிக மோசமாகக் குறைந்து கொண்டு வருகிறது. இந்த ஆதங்கத்தில், அந்த இயற்கையே நம்மை எதிர்த்து நிற்கத் துணிந்தால் என்ன ஆகும் என்ற ஒரு சிறு கற்பனைதான்.  செய்தித்தாள் செய்திகளுக்கும், படங்களுக்கும் நன்றி.

 

பரட்டையாய்ப் படர்ந்துக் கிடந்த, காயும் பிஞ்சுமாக செழுமையாகக் குலை தள்ளிக் கொண்டு உயர்ந்து நின்றவைகளை, ஈவு இரக்கமில்லாமல்  குரல் வளையுடன் மொத்தமாய் வெட்டப்பட்டு முண்டமாய், வெதும்பி வேதனையில் துடித்துக்கொண்டிருப்பது இன்று நேற்று அல்ல. கடந்த சில மாதங்களாகவே இப்படித்தான்.  ஒரு குடும்பமாக ஒன்றாகக் கூடிக் குலவிக் கொண்டிருந்த அந்தத் தென்னை மரங்கள் இன்று அழுது அரற்றிக்கொண்டிருக்கின்றன.

 

ஏன் இப்படி ஒரு நிலை இவைகளுக்கு? பெரிய சர்வதேச பிரச்சனை இல்லை என்றாலும் அதை அந்த அளவிற்கு உயர்த்திவிட்ட மன விகாரங்கள்! காக்கப்பட வேண்டிய பெரிய அரச இரகசியமோ என்றால் அதுவும் இல்லை.  ஏதோ நாட்டையும், தம் இனத்தையும் காக்க வேண்டிப் போராட்டமா என்றால் அதுவும் இல்லை. எல்லாம் வழக்கமாக நடக்கும் பங்காளிச் சண்டை, வரப்புத் தகராறுதான் என்றாலும் இது ஒரு வம்சத்தையே வேரறுத்துவிட்டதே.  நம் வாழ்வாதாரத்தை முடித்துக்கட்டி விட்டு  இன்னும் நம் மூலம் கிடைக்கும் பலாபலன்களை அன்றாடம் சாப்பாட்டு மேசையில் அனுபவித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள் வெட்கங்கெட்டவர்கள்.

 

சென்னிமலைக்குப் போறவங்க, வழியில இந்த மொட்டைத் தென்னை மரங்கள் பரிதாபமாகக் காட்சியளிக்கும் நிலத்தைத் திரும்பிப் பார்த்து சபித்துவிட்டுச் செல்லாதவர்கள் இல்லை. இத்தனை அழிச்சாட்டியத்திலும் எப்படியோ தப்பிப் பிழைத்த தென்னங்கன்று ஒன்று அனைவர் கண்களிலும் ஆச்சரியமூட்டியது.  எப்படித்தான் எதிரியின் கண்ணில் மண்ணைத் தூவி தப்பித்ததோ இந்த இளங்குருத்து என்று புன்னகை பூக்காதவரும் இல்லை. ஆனாலும் பாவம் அந்தக் கன்று சோகத்தில் வாடித்தான் போய் உள்ளது. வஞ்சம் நிறைந்த மானுடனை மனதார நிந்தனை செய்துகொண்டுதான் இருந்தது. துக்கம் தாங்காமல், அருகில் இருந்த அந்த மொட்டைத் தென்னையிடம்  சமாதானமாக மெல்ல பேச்சுக் கொடுத்தது. தியாகத்தின் சின்னமாக அந்த ஊருக்கே உணவளித்துக் கொண்டிருந்த அந்தத் தோப்புக்குள்ளிருந்த  பசுமைச் சின்னங்கள் இன்று ஆணவத்தின் பிடியில் சிக்கியவனின் வாளுக்கு இறையாகிவிட்டது.

 

”ஏனுங்ண்ணா, இப்புடி நொந்து துவண்டு போயிட்டீங்களே. என்னமோ நடந்தது நடந்து போச்சுது. அழுது புலம்புறதால ஆவப்போறது ஒன்னுமில்லீங்களே. இதை நான் சொல்லித் தான் தெரியோணுமிங்களா? கொஞ்சம் மனசை தேத்திக்கிடத்தான் வேணும்”

 

 

மெல்லத் திரும்பிப் பார்த்த அந்த மொட்டைத் தெங்கு , அந்தக் கன்றின் முகத்தில் கபடம் ஏதும் இல்லாததைப் புரிந்துகொண்டு,

 

”தன் சொந்தப் பிள்ளைகள் வாழ வேண்டும் என்று தென்னம்பிள்ளைகளைச் சாய்த்துவிட்டாணுங்களே பாவிங்க. கொஞ்சமும் எங்க உசிரையும் எண்ணிப்பாக்கலையே.  ஊரையும் சட்டை பண்ணலையே வெக்கங்கெட்டவனுக….

 

நாம இருக்குறது சாமான்ய இடமா என்ன.. வெள்ளோடு….  எப்பேர்ப்பட்ட பறவைகள் சரணாலயம் இது. நம்ம தமிழ் நாட்டில ஈரோடு மாவட்டத்தில் இருக்குற இந்த ஊர் ஏரியில மஞ்சள் மூக்கு நாரை, கரண்டி வாயன், கூழைக்கடா, நத்தைக் குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் இப்படி விதம் விதமா பறவைகள் வந்து போகிற சரணாலயம். ஈரோட்டில இருந்து  12 கிலோ மீட்டர் தூரத்துல, 77.85 ஹெக்டேர் நிலப்பரப்புல அமைந்திருக்கிற சரணாலயம் இது! இன்னோரு விசேசம் ஆஸ்திரேலியாவில இருந்து வருகிற பெலிகன் பறவைங்க இங்கு வந்து நான்கு மாதங்கள் விருந்தாளிகளா தங்கியிருந்து குடும்பம் நடத்தி குலவியிருந்து,  முட்டையிட்டு, குஞ்சு பொரிச்சு குழந்தை குட்டிகளோட சந்தோசமா ஊர் திரும்பிப் போகும். வெளிநாடுகளிலிருந்து 100 க்கும் மேலான வகைப் பறவைகள் வந்து போகுதுங்க..  இப்பேர்ப்பட்ட ஊரிலத்தான் இந்தக் கொடுமையும் நடந்து போச்சு.  எங்கனப் பார்த்தாலும் பசேல்னு வயலும், வரப்பும் இருக்குற இந்த கிராமத்துல,  இப்படி ஈன புத்தி உள்ள பிறவிகளும் இருக்கத்தானே செய்யுதுங்க.. இன்னைக்கும் வெளிநாட்டுக்காரவுங்க கூட அவங்க நாட்டுப் பறவையை இங்க வந்து பார்த்து சந்தோசமாப் போறாங்க.  ஆனா இப்புடியே இவுனுங்க பசுமையை சிதைச்சுக்கிட்டு கிடந்தானுங்கன்னு வையி, இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாமே கொலை நாசமாத்தான் போவும். ஏரி வற்றிப்போனா, பறவைகளும் வராது.. ஊரும் நாறிப்போகும்.  காடு வயல் வெளியெல்லாம் வறண்டு  போவும்.  என்னத்தச் சொல்றது..”

 

”அண்ணாச்சி நீங்க என்ன சொல்லுங்க நாம தியாகம் பண்ணத்தான் பொறந்திருக்கோமேத் தவிர இவனுகளை எதிர்த்து நிற்கும் வல்லமையை வளர்த்துக்கலையே. இப்புடியே போனா நம்ம இனத்தையே இவனுக ஏதோ காரணத்தைச் சொல்லி அழிச்சிப் போடுவானுங்களே.  நாம இப்படியே அடிமையாத்தான் வாழோணுமா கால முச்சூடும்?”

 

இளங்கன்றுதான் என்றாலும் சுர்ரென்று ரோசம் வரும்படித்தான் கேள்வி கேட்டது. ஆனாலும் தங்கள் கையாலாகாத குணத்தை எண்ணி வெதும்பித் தவித்தது. இதை வளர விடக்கூடாதுன்னு ஆவேசமும் வந்தது அதற்கு!

 

“இவனுகளுக்கு தேவைங்கறப்ப நம்மளை எப்படீல்லாம் பொத்திப் பொத்திக் காப்பாத்துறாங்க. பாவிங்க வேண்டாம்னு நினைச்சுப்பிட்டா  கொஞ்சமும் கவலைப் படாம வெட்டி சாய்ச்சுப்புடறானுங்க.  நேத்து ஒருத்தன் பாரு இங்கன வந்து எங்கள வேடிக்கைப் பார்த்துப்போட்டு,  அவனோட  தோப்பை எப்படிக் காக்குறதுன்னு திட்டம் போடறான். அப்ப அவன் சொன்னதைக் கேளு,

 

’கன்னு நட்ட பிறகு, ரெண்டு அடி நீளமுள்ள குச்சியை தென்னங்கன்னுக்குப் பக்கத்துல நட்டு, அதோட சேர்த்து கட்டிப்புடுங்க. இப்படிச் செஞ்சாத்தான், இலைங்க காத்துல ஆடாம இருக்கும். அப்பதான்  சீக்கிரமா வேர் புடிக்கும். காத்து அடிச்சா கன்னு அதிர்ந்து வேர் புடிக்காமப் போயிடும். கூடவே கத்தாழைச் செடி ஒண்ணை நட்டுவெச்சோம்னா, நைப்பைக் (ஈரப்பசை) காப்பாத்தறதோட, நோய் நொடித்  தாக்காமலும் பாத்துக்கும்’  இப்படி உணத்தியா பேசறவன் தான் ஒருநாள் ஏதோ ஒரு காரணம் காட்டி அழிச்சுப்புடறானுங்க…”

 

”இதுக்கு என்னதான் வழிங்க அண்ணாச்சி. நாம என்னிக்குத்தான் துணிஞ்சி இவனுகளை எதிர்க்கப் போறோம்? “

 

“ஆமா, அதுக்கெல்லாம் இன்னும் காலம் இருக்கு. ஆனா அதுக்கான அச்சாரம் போட்டாச்சு அப்புனு!”

 

“ஆ, என்ன சொல்லுறீங்க அண்ணாச்சி, நிசமாவா சொல்லுறீங்க? கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க”

 

ஏதோ அவசரப்பட்டு உளறிட்டோமான்னு ஒரு நிமிடம் தயங்கி நின்ற மொட்டைத் தெங்கு, அந்தக் குருத்தின் கண்களில் தெரிந்த வெகுளித் தனமும், ஆர்வமும், தன் குலம் வாழ அதுபடும் வேதனையும் புரிந்துபோக, மெல்ல பேச ஆரம்பித்தது.

 

“ஆமாப்பா இப்பவே அச்சாரம் போட்டாச்சுன்னு சொன்னது நிசம்தான். நம்ம குருநாதர் அதற்கான பூசையும் ஆரம்பிச்சுட்டாரு. இன்னும் கொஞ்ச நாள் ஆனா பாரு என்னென்ன அதிசயம் நடக்கப் போகுதுன்னு.  அப்பறம் தெரியும் நாம யாருன்னு”

 

“அப்படீங்களா… அது என்னன்னு சொல்லுங்கண்ணே.. என் மண்டையே வெடிச்சுடும் போல இருக்கு”

 

” ம்ம்…. சொல்றேன் கேளு. தென்னை வச்சா இளநீர் கிடைக்கும். தேங்காய் கிடைக்கும். ஆனால் தென்னை மரத்துலயே தென்னங் கன்று முளைக்க வச்சுட்டாங்க நம்ம குருதேவர் தெரியுமா? ஆமா,  தேங்காய்க்குப் பெயர் பெற்ற பேராவூரணி அருகில் உள்ள நாடாகாடு அப்படீங்கற  கிராமத்தில ஒரு விவசாயியோட தோட்டத்தில் உள்ள தென்னந்தோப்பில்  ஒரு   தென்னை மரத்தில் மட்டும் தேங்காய்க்குப் பதில் தென்னங் கன்றுகள் காய்க்கிறது. தேங்காய் காய்க்கும் முன்பு தென்னம்பாலை வெளியே வரும். அதன் பிறகு பிஞ்சு வரும் அதிலும் பல பிஞ்சுகள் உதிர்ந்து போய் மிஞ்சிய பிஞ்சுகள்தான் இளநீராகி, அதற்குப் பிறகு தேங்காயாகும்.  முற்றிய நிலையில் இருக்கும் அந்தத் தேங்காயை மண்ணில் புதைத்தால் மட்டும்தான் தென்னங்கன்று வரும். ஆனால் இந்த தென்னை மரத்தில் மட்டும் தென்னம்பாலை வெளிவருகிறது. அதிலிருந்து பிஞ்சுகளுக்குப் பதிலாக தென்னங்கன்றுகள் வெளிவருகிறது. இப்போதைக்கு வெளிவரும் கன்றுகள் சில மாதங்கள் மட்டும் இருந்து பிறகு பட்டுப்போய் விடுகிறது. இந்த விசித்திரங்கள் இனி தொடரத்தான் செய்யும். இது மட்டுமல்லப்பா, வாத்துபோன்ற அமைப்பில் தென்னங்கன்று ஒன்றும் முளைத்துள்ளது”

 

”என்னது வாத்து போலவா” என்று வாயைப் பிளந்தது அந்தக் கன்று. ஏற்கனவே சொன்ன தென்னங்கன்று விசயத்தைக் கேட்டு ஆச்சரியத்தில் கிடந்ததற்கு இந்த செய்தி மேலும் அதிசயமாக இருந்தது!

 

”ஆமாப்பா..  மன்னார், எழுத்தூர் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில்  இப்படியொரு தென்னங்கன்று வாத்துபோன்ற அமைப்பில் முளைத்துள்ளது. இதனை ஒரு அதிசயமா, பெருந்திரளானோர் வந்து பார்வையிட்டுக்கிட்டு  வர்றாங்க. இதெல்லாம் ஒரு அறிகுறிதான். இப்பவாச்சும் இந்த மனுசங்க திருந்தலைன்னா அப்பறம் அவிங்களை ஆண்டவனே வந்தாலும் நம்மகிட்டயிருந்து காப்பாத்த முடியாது. போகப்போக இன்னும் இப்படி ஏதேதோ நடக்க ஆரம்பிக்கும். அது மட்டுமில்ல இத்தனை அழிவுலேயும், நீ மட்டும் எப்படி அவிங்க கண்ணுல தப்பிப் பிழைச்சேன்னு நினைக்கிறே. உனக்கும் ஒரு பொறுப்பு இருக்கு இதில. கூடிய சீக்கிரம் அது உனக்கு தெரிய வரும். இந்த ஊருக்கும் அப்ப புரியும், நாம யாருன்னு!”

 

 

”நம்மிடமிருக்கும் மனோபலம் அற்புதமானது. அதைவிட நம்மிடமிருக்கும்  தியாகபலம்., மிகவும் சக்தி வாய்ந்தது. அதேயளவிற்கு நம்மிடம் மக்கள் பலமும், அரசியல் பலமும் போதுமானதாக இல்லை. இதுதான் இப்ப நம்ம பலவீனம்.”  தென்னங்கன்று விளக்கமாகச் சொன்னது.

 

”ஏன் பொதுமக்கள் எப்போதும் நம்மைப் பாராட்டிக்கொண்டுதானே இருந்தார்கள்” என்று மொட்டைத் தெங்கு கேட்டது.

 

”பொதுமக்களின் பாராட்டுதல் என்ற வெற்று  சல சலப்பை  நீங்கள் பரிவு என்று தவறாக நம்பிவிட்டீர்கள்….’

 

”பொதுமக்கள் பெயரளவில் பார்வையாளர்களாக நின்று நம்மை பாராட்டுவதோடு சரி. ஆனால் நம்மை என்றும்  அவர்கள் தங்கள் உறவுகளாக்கிக் கொள்ளவில்லை. உங்களை வெட்டிச் சாய்த்த அந்த  இறுதி நேரத்தில் வேடிக்கைப் பார்த்த அந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெரிதாக ஆயுதங்களைத் தூக்க வேண்டாம்.. அத்தனை பேரும் சாதாரணமாக ஒவ்வொரு விறகுக்கட்டையைத் தூக்கியிருந்தால்கூட நம்மைக் காப்பாற்றியிருக்க முடிந்திருக்கும்.  ஆனால் எல்லோரும் நமக்கென்ன என்றுதானே வேடிக்கைப் பார்த்தார்கள்? ” தென்னங்கன்று இப்படிக் கேட்டுவிட்டு மொட்டைத் தெங்கை அர்த்தத்துடன் பார்த்தது.

 

மொட்டைத் தெங்கு  தனது அழுகையை சுத்தமாக நிறுத்திவிட்டு  அந்த சின்னக் கன்றை ஆச்சரியமாகவும், நம்பிக்கையாகவும் பார்த்தது. அந்தக் கன்றும் எல்லாம் புரிந்தது போன்று நமட்டுச் சிரிப்பு சிரித்தது.

—————————————————————————————————

Series Navigationஉறைந்த சித்திரங்கள் – கேரள சர்வதேசத் திரைப்பட விழாசீதாயணம் நாடகப் படக்கதை – ​2 ​5​
author

பவள சங்கரி

Similar Posts

2 Comments

  1. Avatar
    ஒரு அரிசோனன் says:

    சில ஆண்டுகளுக்குமுன் நான் தமிழ்நாடு வந்தபோது, என் தங்கை சொன்ன நிகழ்ச்சியை இந்தக் கதை நினைவு படுத்துகிறது. எதோ ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், தங்கள் போராட்டத்திற்காக, சாலையோர நிழல் மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்த்து விட்டார்களாம். பொது மக்களோ, போலீசோ, நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிவிட்டர்களாம். இப்படி நடந்தால், நாட்டில் எப்படி மழை பெய்யும்?
    கதை உருக்கமாக இருக்கிறது.

  2. Avatar
    பவள சங்கரி says:

    கதையை ஆழ்ந்து வாசித்து வாயில்லாத அந்த ஜீவன்களின் வேதனையையும், வருங்காலத்தில் இதே நிலை நீடித்தால் வாயுள்ள பிள்ளைகள் படப்போகும் சோதனைகளையும் மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டு பதில் அளித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

    அன்புடன்
    பவள சங்கரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *