ஹார்ட் பீ டிரஸ்டிற்கு உதவ முன்வந்துள்ள பண்புடன் குழும நண்பர்கள் ஆசிஃப் மீரான், புவனா கணேசன், மற்றும் கோகுல் குமரன் (கூகுள் ஜி) ஆகிய அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். பண்புடன் குழுமத்தில் நானும் ஒருத்தி ஆகையால் ஆர். வேணுகோபாலன் அவர்களின் வாழ்த்துக்களை மனமுவந்து ஏற்கிறேன்.
ஹார்ட் பீட் டிரஸ்டு உருவாகக் காரணமாக இருந்த என் வாழ்க்கைப் பின் புலங்களைக் குழும / இணைய நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நான் ஒரு மாற்றுத்திறனாளி என்பது எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரிய வில்லை. ஆனால் நானே என்னை ஊனமானவள் என்று ஏற்றுக் கொள்ள அநேக வருடங்கள் தேவையாய் இருந்தது. குழந்தையாய் இருக்கும் போது நானும் நோய் தீர்ந்து நன்றாக நடந்து விடுவேன் என்ற எதிர்பார்ப்பும், மற்ற குழந்தைகளைப் போல் நானும் விளையாட வேண்டும் என்ற ஆசையும் இருந்தது.
இந்த பகிர்ந்தல் உங்கள் அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்துவதற்காக அல்ல. ஒரு மாற்றுதிறன் படைத்த குழந்தையின் மனநிலை எப்படி இருந்தது என்பதை அறிந்தவளாய்ப் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவே!
ஒரு பக்கம் சமூகம் ஊனமுற்றவள் அல்லள் என்று மார்தட்டிச் சொன்னாலும், மறுபக்க சமூகம் என் உடல் குறைப்பாட்டைப் பெரிது படுத்தி என்னை ஏளனம் செய்து வருத்தியதை என்னால் மறக்க முடிய வில்லை.
என்னிடத்தில் இருந்த திறமைகளைப் பார்த்தவர் எண்ணிக்கை குறைவாகவும், என்னிடத்தில் உள்ள குறைபாடுகளைப் பார்த்தவர் அதிகமாகவும் ஆன போது, (அலுவலக வட்டங்களில்) ஆம் நான் ஊனமுற்றவள் தான், என்னால் இதைத்தான் செய்ய முடியும். இந்த வேலையை மட்டும் வாங்கிக்கொள்ளுங்கள் என்று எதிர்த்துப் பேசத் துவங்கியது இந்த இரண்டு வருடங்களாகத்தான்.
எனக்குக் குழந்தைப் பருவம் அத்தனை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. எட்டு மாதத்திலேயே போலியோ வந்துவிட மருத்துவமனை வாசம் தான் அதிகம்.
ஒன்றாம் வகுப்பு சேர்ந்த போது எனக்கும் அந்த வகுப்பு ஆசிரியருக்கும் ஒத்து வரவில்லை. அவர் வகுப்பறை விட்டு அடிக்கடி மாணவர்களை மரத்தடிக்கு அழைத்துச் சென்றுவிடுவார். நானோ நகரக்கூட முடியாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டிய நிலை அப்போது! அதனால் படிப்பு என்பது அந்த ஒரு வருடம் எட்டாக்கனி தான்.
பொழுதுகள் வகுப்பறை உள்ளிருந்தபடி விளையாடும் அணிலை வேடிக்கைப் பார்ப்பதும், மரக்கிளைக் கிளிகளின் அழகைப் பார்ப்பதும், ஓடும் மேகங்களைப் பார்ப்பதுமாகக் கழிந்தன நாட்கள்.
அதன் பிறகு என்னைப் பள்ளிக்கு தூக்கிச் செல்லும் தேவேந்திரன் அண்ணாவிடம் சொல்லிவிடுவேன். நோ ஸ்கூல், நீ ஸ்கூலுக்கு போ! நான் மரத்தடிப் பிள்ளை யாரோடு விளையாடிட்டு இருக்கேன். அப்படி நகர்ந்த நாட்களின் இனிமை மட்டுமே இன்னும் நெஞ்சில் நீங்காமல் உள்ளது.
பிள்ளையார் எனக்கு நண்பனாய் விளையாட்டுத் தோழனாய், இருந்த நாட்கள்.
அதையும் கண்டுபிடித்து அம்மா அடித்தாளே! நான் சொன்ன எந்த கருத்தும் அவளுக்குப் புரியவில்லை. நான் படிக்கவில்லை என்பதே நான் தண்டனை அனுபவிப்பதற்கானக் காரணியாக இருந்து.
அதன் பிறகு ஜாஸ்மினின் தந்தையாரின் சிபாரிசில் “ஒர்த் டிரஸ்ட்” காட்பாடியில் சேர்க்கப்பட்டேன். அங்கு மருத்துவத்திற்கே முக்கியத்துவம் படிப்பிற்கு அவ்வளவு கெடுபிடி இல்லை. எழுத படிக்க கற்றுக்கொண்டது அங்கு தான். 3 வருடங்கள். நகர முடியாத தமிழ்ச் செல்வி முட்டி போட்டது. ஊன்று கோல் வைத்து நடக்க முயன்றது. விளையாடியது எல்லாம் அங்கு தான். ஊனத்தைக் கடந்து வாழ்க்கையை அடையாளமாக்க கற்றதும் அங்குதான்.
அம்புலி மாமாவில் இருந்து வேதாகமம் வரை பரிச்சயமானதும், புத்தகங்கள் நண்பர்களானதும் அங்கு தான். அங்கு இருந்தவர்கள் அனைவரும் மாற்றுத் திறனாளிகள் ஆனபடியால் ஆண் பெண் பாகுபாடென்பது இல்லை.
தனித்தனி அறைகள் இருந்த போதும் சிறுவர்கள் கலந்து பழக எந்தத் தடையும் இல்லை. நட்பு பரிட்சயமானதும், ஒவ்வொருவரின் கனவுகள் கலந்தாலோசிக்கப் பட்டதும் அந்த இடத்தில் தான்.
பெற்றோர் இல்லாத தனிமை அனுபவித்ததும் அங்கு தான். நட்பின் தோழமை, நண்பர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்ததும் அங்குதான்.
நடப்பதற்காகக் கால் அறுவை சிகிச்சை செய்து மாவுக்கட்டு போட்டுவிட ஒரு தாய் செய்யக் கூடிய அத்தனை உதவிகளையும் செய்தது ஆண் பெண் இனப்பாகு பாடற்று நட்பு வட்டத்தில் பழகிய மழலைச் சிறுவர்கள் தான்.
(இது பெரிய கதையாய் இருப்பதால் மீண்டும் வருகிறேன் உங்களோடு பேசப் பிறகு)
விடுதி வாழ்க்கைக்கும் வெளி உலக வாழ்க்கைக்கும் அநேக வித்தியாசம் இருந்தது. விடுதியில் எங்களால் செய்ய முடிந்த செயல்களை எடுத்துக் காட்டினார்கள். செய்ய எங்களை உற்சாகப்படுத்தினார்கள்.
வெளி உலகம் எங்களால் முடியாததைக் கேலி செய்து பெரிது படுத்தியது. நான் தொழிற் கல்வியில் இயந்திரப் பட வரைவாளர் [Draftsman Course] பிரிவில் சேர்ந்து தேர்ச்சிப் பெற்றிருந்தும் அதற்கான வேலைக்கு முயற்சி செய்ய வில்லை. அதற்குக் காரணங்கள் இருந்தன.
- நான் ஒரு பெண்ணாக இருந்த மாற்றுத்திறனாளி
- பஸ் போக்குவரத்தில் ஏறி இறங்குவதில் உண்டான சிரமம்
- ஒத்தாசைக்கு அருகில் ஆளின்றி என்னால் எங்கும் நடமாட முடியவில்லை.
- குடும்பத்தில் என்னைத் தனித்து விடப் பயந்தார்கள்.
உள்ளூர்க் கடைகளில் கணக்கெழுதும் வேலை கூட கிடைக்கவில்லை எனக்கு. இதென்ன சுய புராணம் என்கிறீர்களா? அது தான் இல்லை; நான் இதுவரையில் சந்தித்த ஒவ்வொரு மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கும் இதை ஒத்த ஒரு கதைதான் இருந்தது. போக்கு வரத்தில் சிரமம் இருந்தது. வேலை செய்யும் இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்குக் கழிப்பறை வசதியற்ற சூழல் இருந்தது. இது சாராசரி மனிதர்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சனை என்ற போதும். மாற்றுத்திறனாளிகள் தனிக் கவனத்துடன் இதை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
1999 ஆண்டில் வேலை கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற போது 400 ரூபாய் சம்பளத்தில் மாற்றுத்திறனாளிகள் தகுதிக்குச் சிபாரிசு செய்யப்பட்டேன். அப்போதிருந்த கோபத்தில் அந்த தொகை எனக்கு தேவை இல்லை என்று நான் வெளியே வந்த போது, அங்கிருந்த ஒரு அதிகாரி கூறினார். இது உனக்கு கொஞ்சம் பயன் படும்; இதை அடிப்படையாகக் கொண்டு நீ மேலும் வேறு வேலைக்கு முயற்சி செய் என்று அறிவுரை கூறினார்.
ஒரு கோணத்தில் அது அப்போது எனக்கு கௌரவக் குறைச்சலாகப் பட்டது. உழைத்துச் சம்பாதிக்க திராணி இருக்கும் போது நான் ஏன் குறைந்த ஊதியம் வாங்க வேண்டும் என்ற திமிர். ஒரு சராசரி மனிதன் செய்யும் வேலையை நானும் செய்வேன் என்றேன்; அப்போது. அதிகாரி முன்பு பைலை தூக்கிக் கொண்டு நீ நடக்க முடியாது என்று நிராகரிக்கப்பட்ட வலி இன்னும் அடி நெஞ்சில் துடிக்கிறது.
அதே ஆண்டில் நான் சுயமாக என் உழைப்பால் ஆயிரம் ரூபாய் சம்பாதித்தேன். அதற்கு நரிக்குறவர்கள் உதவினார்கள். மணிக்கட்டும் தொழில். 1999 இல் இருந்து 2008 டிசம்பர் வரையிலும் மணிக்கட்டும் தொழில் செய்து தான் என் மகளையும் நான் படிக்க வைத்தேன். கணவர் இறந்த பிறகு அவரவர் குடும்ப பாரமே அவரவருக்குப் பெரியதாக இருந்த போது, யாரையும் நான் சாராது இருக்க இந்த மணிக்கட்டும் தொழில் எனக்கு உதவியது.
இந்த காலக் கட்டத்தில் 2006 -லிருந்து 2008 வரை பகுதி நேரமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் செக்ஷன் ரைட்டராகப் பணியாற்றினேன். அப்போது எனக்கு கொடுக்கப்பட்ட ஊதியம் 500 ரூபாய் இதில் 200 ரூபாய் ஆட்டோவிற்குப் போய் விடும்; அதிலும் பயணிகள் பின்புறம் இருக்க ஓட்டுநர் அருகில் அமர்ந்து வர வேண்டும். அதிக சிரமம் தான்; வேறு மாற்று ஏதும் அப்போது இருக்கவில்லை.
2008 ஆகஸ்டில் பாலாஜி ஸாருக்குப் பிறகு வந்தவர், எனக்கு ஊதியம் தர முடியாது நின்று விடு என்று கூறினார். அதன் பிறகு அந்த சொற்ப வருமானத் திற்கு வந்த தடங்கலை அதிக நேரம் மணிகட்டுதலினால் ஈடு செய்தேன்.
2008 டிசம்பரில் ஊனமுற்றோர் தினத்தன்று மூன்று சக்கர சைக்கில் வாங்கப் போய், அப்போதிருந்த வருவாய் கோட்டாட்சியர் வாக்காளர் அடையாள அட்டை தயாரிப்பவராக என்னை நியமித்தார். 3000 ரூபாயில் துவங்கிய என் ஊதியம் 2014 -இல் 5000ரூபாய் மாத வருமானத்தில் நிற்கிறது. இந்த ஊரில் இது பெரிய தொகை என்ற போதிலும். சராசரி வாழ்க்கைக்கும் இது பற்றாக்குறை தான்.
இந்த வேலை அதிக மக்களை நான் சந்திக்கும்படி வைத்தது. அதில் மாற்றுத் திறனாளிகளும் அடங்கினார்கள். ஒவ்வொருவரின் கதையைக் கேட்ட போதும் ஏதோ ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று மனதில் ஆணித்தர மான ஓர் எண்ணம் எழுந்தது. மாற்றுத் திறனாளி தோழி, நிர்மலாவைச் சந்தித்த பிறகு அது இன்னும் அதிகமாக வலுப்பட்டது. 2009 மார்ச்சில் ஹார்ட்பீட்டிரஸ்டு தொண்டு நிறுவனத்தைப் பற்றி திட்டமிட்டு. 2009 செப்டம்பர் 24 அன்று தான் அதை எங்களால் பதிவு செய்ய முடிந்தது.
அதன் பிறகு, சக்தி, கல்பனா, பிரதா, ஜோதி, தமிழரசி, என்று எங்கள் நட்பு வட்டம் நீண்டது. நாங்கள் அங்கும் இங்குமாகச் சிதறிக்கிடந்த போதிலும், அடிக்கடி ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்திக் கொள்ளத் தவறியதில்லை.
ஒவ்வொரு முறை மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் சென்ற போதும் ஒரு புதிய அறிமுகம் கிடைக்கப் பெற்றோம், அவர்களின் பின்னணியில் ஒரு வலி நிறைந்த கதையோடு.
2011-இல் வாக்காளர் படங்களை ஸ்கேன் செய்து தரக் கணினி அறிவில்லாத தோழி நிர்மலாவைப் பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தேன். இதற்குக் கொடுக்கப்படும் தொகை கொஞ்சமாக இருந்தாலும் அவளின் வாழ்வாதாரத்திற்கு ஓரளவு பயன்படும் என்பது எனது எண்ணம்.
ஆனால் அப்போதிருந்த தேர்தல் துணை வட்டாட்சியர் இது வேண்டாத வேலை நேரத்தை இழந்து கொண்டிருக்கிறாய் என்ற போதிலும் உன்பாடு என்று ஒதுங்கிக் கொண்டார். என் முயற்சியில் 5 ஆவது வரையே படித்திருந்த நிர்மலாவை 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத வைத்து, கம்யூட்டர் வகுப்பிற்கும் அனுப்பி இப்போது அவள்தான் எனக்குப் படங்களை ஸ்கேன் செய்து தருகிறாள். இந்த நிகழ்வு மாற்றுத் திறனாளிகளை வேலைக்காக உருவாக்குவது சாத்தியம் தான் என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தது.
அதன் பிறகு சக்தி, கலைச் செல்வி, என்று மாற்றுத்திறனாளி அல்லாத மற்ற பெண்களும் எங்களோடு இணைந்தார்கள். இதில் தாரிணி பதிப்பக அதிபர், திரு.வையவன் அவர்கள் ஒரு லேப்டாப்பைத் [மடிக் கணனி] தந்து, தட்டச்சு செய்யப் புத்தகங்களையும் தந்து எங்களுக்கான ஒரு நிரந்தர வருவாய் கிடைக்கும் படி செய்தார்.
ஓரளவு நடக்க முடிந்த மாற்றுத்திறனாளிகளே அடிக்கடி சந்தித்துக் கொண்டோம். ஆனால் வெளியூரில் இருப்பவர்களோ, 80 சதவீத ஊனத்தை உடையவர்களோ எங்களோடு இணைய முடியவில்லை.
ஒரு சிநேகிதியைச் சந்திக்கச் சென்ற போது அவளுடைய தந்ததையாரிடம் ஏன் படிக்க வைக்கவில்லை என்று கேட்டோம். வயசுக்கு வந்துட்டா! வயசுப்புள்ள முட்டி போடுறது அசிங்கம்மா இருந்ததும்மா. அதுனால ஸ்கூலுக்கு அனுப்புல என்றார்.
இருக்குற வரைக்கும் நாங்களே சோறு போடுறோம்; இதுக்கு மேல என்ன வேணும்ன்னு கேள்வி எழுப்பும் பெற்றோர்களைத் தாண்டி அவர்களின் கண்களில் தெரிந்த ஏக்கம் தான் இந்த இதயத் துடிப்பு நிறுவத்தைத் துவக்க எங்களுக்கு உந்து சக்தியாய் இருந்தது.
எங்களுக்கு என்று அலுவலகத்திற்காக தனி இடம் அரசாங்கத்திடம் கேட்க, அதிகாரிகள், இடமில்லை என்று கை விரித்த பிறகு. கிராமத்தில் எனக்கிருந்த வீட்டையே அலுவலகமாக மாற்றினேன்.
தற்போதுள்ள இடப்பற்றாக் குறையைப் போக்க என் சகோதரர். அன்பு ராஜ் அவர்கள் வீட்டைக் குறைந்த வாடகையில் தந்தார்கள். அப்படி இருந்தும் அடிப்படை வசதிகள் இன்றி அங்கே தங்குவதென்பது சாத்தியமில்லை என்று தோன்றியது.
சில நாட்கள் தங்கி, மீண்டும் அடிப்படை வசதிகளோடு அங்கே கூடுவது என்று முடிவெடுத்தோம்.
தற்போது இடையில் நின்ற மாற்றுத்திறனாளிகள் வயது ஆதாரம் மட்டுமே வைத்து 8 ஆம் வகுப்புத் தேர்வுக்கு எழுதலாம்.
அதைக் கருத்தில் கொண்டு கல்வி கற்க, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ வேண்டும் என்பது எங்களுடைய கனவு.
அதிகம் படித்து நல்ல நிலையில் இருப்பவர்களைப் பற்றி எங்களுக்கு மகிழ்ச்சியே!
எங்கள் கவனம் முழுவதும் கல்வி அறிவின்றி படிக்கவில்லையே என்று ஏக்கங்களோடு சுற்றுபவர்களைப் பற்றியே இருக்கிறது.
இதை ஏன் நீ செய்கிறாய். உன்னையே உன்னால் தாங்கி நடந்து கொள்ள முடிய வில்லை. என்று அநேகர் கேட்க என்னுடைய பதில் இதுவே : நான் வலிகளை அனுபவித்தேன். அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அதே வலி அவர்களுக்கும் இருக்கிறது என்பதை உணர்கிறேன். நான் மீன் பிடித்து சமைத்துக் கொடுக்கப் போவதில்லை. மீன் பிடிக்க கற்றுத்தரப் போகிறேன் . பிறகு அவர்கள் வழியில் அவர்கள் போகப் போகிறார்கள்.
அடிப்படையில் ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் தேவைப்படுவது ஊக்கமும் அன்பும், நட்புப் பாராட்டலுமே! இதை என் ஒருத்தியால் மட்டும் செய்துவிட முடியாது. உங்கள் ஊக்கப்படுத்தலுக்காகவும் நட்பிற்காகவும் அன்பிற்காகவும் கூட யாரோ ஒரு மாற்றுத்திறனாளி காத்திருக்கக் கூடும். ஊக்கப்படுத்துங்கள். நட்பாய் சிநேகியுங்கள் அவரை. இருப்பவர் இல்லாதவருக்கு உதவுங்கள். இருப்பவர் ஒருவர் இல்லாத ஒருவருக்கு உதவி செய்ய முன்வந்தால், தமிழ் நாட்டில் வறுமைத் துயரே தலைதூக்காது.
இன்னும் எழுத எத்தனையோ விடயங்கள் இருந்தும், நேரம் இன்மையும், மீண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கத் தயாராகும் நிலையாலும் தற்காலிகமாக விடை பெறுகிறேன்.
நட்புடன்
ஜி.ஜே.தமிழ்ச்செல்வி
[தொடரும்]
- சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்களின் தர்கா தொடர்புப் பாரம்பரியம்
- முரண்களால் நிறைந்த வாழ்க்கை
- இந்தியாவின் முதல் பௌதிக விஞ்ஞான மேதை ஸர் ஜகதிஷ் சந்திர போஸ்
- திறவுகோல்
- கோணங்கிக்கு வாழ்த்துகள்
- கனவுகள் அடர்ந்த காடு – விட்டல்ராவின் ‘தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்
- தொடுவானம் 36. எங்கள் வீட்டு நல்ல பாம்பு
- தந்தையானவள் அத்தியாயம்-3
- தினம் என் பயணங்கள் -36 இதயத் துடிப்பு அறக்கட்டளை நிறுவகம்
- பேசாமொழி 23வது இதழ் வெளியாகிவிட்டது…
- தேவதாசியும் மகானும் (2)
- அறம் வெல்லும் அஞ்சற்க – அகரமுதல்வனின் கவிதைத் தொகுப்பு. ஒரு வாசிப்பு அனுபவம்
- குளத்தங்கரை வாகைமரம்
- முத்தொள்ளாயிரத்தில் மறம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 95
- பாவண்ணன் கவிதைகள்
- சுத்த ஜாதகங்கள்
- அழியாச் சித்திரங்கள்
- வள்ளுவரின் வளர்ப்புகள்
- வெண்சங்கு ..!
- பாரதியின் காதலி ?
- காந்தியடிகள் – ஓர் ஓவிய அஞ்சலி
- வாழ்க்கை ஒரு வானவில் – 23
- பொன்வண்டுகள்
- ஆங்கில மகாபாரதம்