காட்சி 4
காட்சி 4
காலம் காலை களம் உள் வீடு.
சுவர்க் கடியாரம் அடிக்கிறது.
நாயகியின் அண்ணன் ரத்னவேலு (வயது 60) கூடத்தில் நுழைந்து நிற்கிறான். கையில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டிபன் பாக்ஸ். நாயகி உள்ளிருந்து வருகிறாள் ரத்னவேலுவைப் பார்த்து அவள் முகத்தில் அதிர்ச்சி, மகிழ்ச்சி.
நாயகி: என்ன அண்ணே, திடுதிப்புனு வந்திருக்கீங்க? அம்மா, நீங்க எலோரும் சௌக்கியம் தானே?
ரத்னவேலு: ஏதோ இருக்கோம்மா.. பாரு.. கூத்துலே கோமாளி மாதிரி திடீர்னு வந்து சிக்கறேன்.. என்னாலே முடிஞ்சது எல்லாம் தங்கச்சியைப் பார்க்க இப்படி ஆடிக்கு ஒரு நா அமாவாசைக்கு ஒரு நா வந்துட்டுப் போறதுதான்..
நாயகி: இருக்கட்டுமே… அதுனாலே மனசுலே பிரியம் இல்லேன்னு ஆயிடுமா? டிராமைப் பிடிச்சு பஸ்ஸைப் பிடிச்சு இம்மாந் தூரம் .. மூச்சு வாங்குது பாவம்.. வயசாகலியா என்ன? மார்கழி பொறந்தா அறுபத்தொண்ணு.. சரியா?
ரத்னவேலு: தங்கச்சி சொன்னா எது தப்பாப் போகப் போவுது?
நாயகி: உங்க தங்கச்சிக்குத் தலையெழுத்து மட்டும் தப்பாவே அமைஞ்சுடுத்து அண்ணே.. வெத்துக் காகிதம் மாதிரி மேலே ஒண்ணும் எழுதாமலேயே அனுப்பியிருக்கலாம் அவன்..போவுது.. உக்காருங்கண்ணே.
ரத்னவேலு ஊஞ்சலில் அமர்கிறான்.
ரத்னவேலு: ..ஆமா, மாப்பிள்ள சார் எங்கேம்மா?
நாயகி :கொத்தவால் சாவடி வரைக்கும் போயிருக்கார்..இப்பத்தான் கிளம்பினார் ..
ரத்னவேலு கையில் இருந்த பாத்திரத்தை நீட்டுகிறார்.
ரத்னவேலு: கருவாட்டு குழம்பும் சோறும்’மா. உனக்கு ரொம்ப பிடிக்குமேன்னு உங்க அண்ணி கொடுத்து விட்டிருக்கா.. மாப்பிள்ள சார் வர்றதுக்குள்ளே சாப்பிட்டு ஏனத்தைக் கொடும்மாடி
நாயகி : ஏன்ணே உங்களுக்கு சிரமம். நான் எல்லாத்தையும் .. (தயங்கி) எல்லாரையும் விட்டு வந்துட்டேனே …அண்ணியைப் பார்த்தும் வருஷம் ஆறோ ஏழோ ஆவுது .. எப்படி இருக்காக? ஜதையா ஒருநாள் வாங்கண்ணே
பாத்திரத்தை ஆசையோடு வாங்கிக் கொள்கிறாள்.
ரத்னவேல் : என்னத்தை வரறதும்மா? இந்த வாரக் கடைசிக்குள்ளாற மதுரைக்கே சவாரி விடறோம்.. உசிர் பயம். எம்டன் பயம்.. நீங்க போறதா இல்லியா?
நாயகி : இப்போதைக்கு உத்தேசம் இல்லே அண்ணே.. அம்மாவை எப்படி.. கூட்டத்திலே ரயில்லே மதுரைக்கு இட்டுப் போய் ..
ரத்னவேல் : நீ சாப்பிட்டு வாம்மா.. இருக்கேன் .. பொறவு பேசலாம்
நாயகி : முதல்லே சொல்லுங்கண்ணே
ரத்னவேல்: அம்மா உடம்பு..
நாயகி : என்ன ஆச்சு அண்ணே? ஏற்கனவே மோசம் தான். நான் வேறே ஓடுகாலியா அதுங்காலை உடச்சு படுக்க வச்சுட்டேன்
ரத்னவேல்: பழைய கதையெல்லாம் எதுக்கு?எது எப்படியோ உனக்கு நல்ல ஜோடி கிடைச்சதுலே அம்மாவுக்கு அசாத்திய பெருமை.
நாயகி: சும்மா சொல்லாதீங்க அண்ணே
ரத்னவேல் : (பையில் இருந்து எதையோ எடுத்துக் கொடுத்தபடி) இதைக் கொடுத்துச் சொல்றேன்
நாயகி : என்ன அண்ணே இது? அம்மாவோட காசு மாலை இல்லே?
ரத்னவேல்: உனக்குத்தான் தரணும்னு அடம்..அம்மா சொத்து இதுவும் நம்ம வீடும் தான்.. வீட்டை வித்தாச்சு.. ஆறாயிரம் வரும்.. உனக்கு பாதி.. எனக்கு பாதின்னு அம்மா சொல்லிடுச்சு
நாயகி: எனக்கா? எதுக்கு? அது சரி, வீட்டை வித்துட்டு?
ரத்னவேல் : நோக்காடு தீராதாம்.. ஜெனரல் ஆஸ்பிடல்லே டாக்டர் ஒருத்தருக்கு ரெண்டு பேரைக் கேட்டாச்சு.. முடக்கத்தான் கீரை அவிச்சுத் தின்னுங்கறான் நாட்டு வைத்தியன்.. சொன்னா நம்ப மாட்டே.. நம்ம வைத்தியம்..கேக்குது கொஞ்சம் போல..ஆனா என்ன..
(தலையைக் குலுக்குகிறார் – நம்பிக்கை இல்லை என்ற தோரணையில்)
நாயகி : மொடக்கத்தானா?
ரத்னவேல் : எங்க வக்கீலய்யா அத்தானுக்கு தெரிஞ்சிருக்கும் .. கொத்தவால் சாவடியிலே கிடைக்கும்..போறக்குள்ளே வாங்கிட்டுப் போகணும்..
நாயகி : எத்தினி நாள் அம்மாவுக்கு கீரை அவிச்சுக் கொடுத்திட்டு இருப்பே அண்ணே? போற இடத்திலே எல்லாம் கிடைக்குமா?
ரத்னவேல் (தயங்கி)..அம்மாவை விட்டுட்டுப் போக வேண்டி வரும்..
நாயகி : விட்டுப் போறதுன்னா?
ரத்னவேல் : உங்க வீட்டிலே கொஞ்ச நாள் வச்சுக்க முடியுமா?
நாயகி : (அதிர்ச்சி முகத்தில் படர) : எங்க வீட்டிலேயா?
ரத்னவேல் : அந்தக் காசு மாலையை வித்தா ஆயிரம் கிடைக்கும்.. வீடு வித்து வர்ற மூவாயிரத்தை பேங்குலே மாப்பிள்ள சார் கிட்டே சொல்லி போட்டு வை..வட்டி வரும்.. அம்மாவுக்கு செலவு பண்ண..
நா;யகி: அண்ணே.. அவரைக் கேக்காம எப்படி நானா முடிவு எடுக்கறது?
ரத்னவேல்: மெதுவா கேட்டுச் சொல்லு…. முதல்லே சாப்பிடு.. அட சாப்பிடுன்னா..
நாயகி டிபன் பாக்ஸோடு உள்ளே போகிறாள்.
காட்சி 5
காலம் காலை களம் வெளியே (கொத்தவால் சாவடி)
அய்யங்காரும் நாயுடுவும் மெல்ல நடந்து வருகிறார்கள். கட்டி வைத்த வண்டித் தட்டில் காய்கறிப் பையை வைத்து விட்டு அங்கவஸ்திரத்தால் நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொள்கிறார் அய்யங்கார். நாயுடு வேட்டியை மடித்துக் கட்டியபடி கூட நிற்கிறார்.
அய்யங்கார்: எத்தனை பேர் அவுட்? இங்கிலீஷ் பத்திரிகையிலே அஞ்சுங்கறான்.. கூட நாலு சைபர் சேத்துக்கலாம்னு தோண்றது..
நாயுடு: நாலஞ்சு ஆளுதான்.. இங்கிலீஷ் பத்திரிகைக்காரன் சரியாத்தான் போடுவான்.. நம்ம ஊரு கொலைச் சிந்து பாடறவனா என்ன?
அய்யங்கார்: கொலைச் சிந்தா? காவடிச் சிந்துதான் தெரியும்..
நாயுடு: எம்டன் பாட்டுப் புஸ்தகம் .. இந்நேரம் அச்சுப் போட்டு சூளை நாயக்கர் எறக்கியிருப்பாரு.. ஏழுகிணத்துப் பக்கம் ஒண்ரேணா ஓரணாவுக்குக் கெடைக்கும் .. குஜிலிக்கடை சரக்கு..
அய்யங்கார் : குஜிலிக்கடைன்னா என்ன ஓய்?
நாயுடு: டகல்பாஜின்னா என்ன? டங்குவார்னா என்ன? குஜிலிக்கடைன்னா என்ன? இதுக்கெல்லாம் அர்த்தம் கேக்கக் கூடாது..கொக்கோகம் மாதிரி குஷி சமாசாரம்
அய்யங்கார் நாசமாப் போசு..எம்டனுக்கும் எல்லோரா, கஜுராஹோவுக்கும் என்ன சம்பந்தம்?
நாயுடு : வீள்ளந்த்தாம் எவுரு (இவங்கள்ளாம் யாரு) அய்யரே? டம்பாச்சாரிங்களா?
அய்யங்கார்: விட்டுடும் ஓய்.. இதை ஆரம்பிச்சா இன்னிக்கு முடியாது.. ஆமா, உங்க போலீஸ்லே என்ன ஹேஷ்யம் நிலவரத்துலே இருக்கு?
நாயுடு: ஆர்பர் கப்பல்லே அஞ்சுதானே டெத்.. பின்னாடியே ஜெர்மன் பிளேன் வருதாம்.. ஊர் முழுக்க ஆகாசத்திலே இருந்து பாம் போட்டு பீஸ் பீஸாக்கப் போறானுங்களாம்.. போலீசுக்குத்தான் ரோதனை.
அய்யங்கார்: நீர் காக்கி நிஜார் மாட்டிண்டு லாட்டிக் கம்பை சுழட்டிண்டு கெத்தா நின்னா ஜெர்மன் காரன் பிளேன் சிட்டாப் பறந்துடுமா என்ன?
நாயுடு: இந்த கித்தாப்பு தானே வேணாங்கறது… சாமிகளே.. ஏதோ வெள்ளைக்காரன் தீர்மானிக்கறான்.. கம்பு சுத்தறேன். பாத்துக்கும்.. தோ டிசம்பர்லே ரிடையர்.. ஆட்டம் கலாஸ்.. தெல்சா?
அய்யங்கார்: அதுக்கு நான் என்னய்யா பண்ணனும்?
நாயுடு: தர்ப்பணம் பண்ணணும். பொறந்தா உம்ம மாதிரி மைலாப்பூர் வக்கீலய்யராப் பொறக்கணும்..ஒரு மயித்தைப் பத்தியும் கவலைப்பட வேணாம். ரிட்டயர்… ஸ்பெல்லிங் தெரியுமாய்யா உமக்கு?
அய்யங்கார் உம்மை மாதிரி இங்கிலீஷ்லே கரை கண்டவனா என்ன நான்? ஆர்டினரி க்ரிமினல் லாயர் பிராக்டிஸிங் இன் தி ஹைகோர்ட் ஒஃப் மெட்றாஸ்..அதுவும் இனிமே சந்தேகம். எவாகுவேஷன் இல்லேன்னா எக்ஸ்டிங்க்ஷன்
நாயுடு: அவாஷன் இவாஷன் .. எது வந்தாலும் கருப்புக் கோட்டை விசிறிட்டு ஓடிடலாம்.. நம்ம மாதிரி லீவு சொல்றது, தலையைச் சொறியறது சாங்க்ஷன்.. சள்ளை ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது..
அய்யங்கார்: சொல்ல மாட்டீர்?… என்னை மாதிரி மைலாப்பூர்லே பொறந்து, ஆடுற வீட்டுலே பொண்ணு எடுத்து கல்யாணம் பண்ணி..
நாயுடு: பிருஷ்டம் பண்ணிட்டானுவ அய்யமாரு அதானே
அய்யங்கார் பிருஷ்டம் பிரம்மனே பண்ணித்தான்யா ஒட்ட வச்சு அனுப்பியிருக்கான்.. பிரஷ்டம் இது
நாயுடு: என்ன கண்றாவியோ.. சரி இன்னிக்கு கத்தரிக்கா வாங்கப் போறீரா, வீட்டுக்காரிக்கு மீன் வாங்கப் போறீரா.. சாவறோம்னா மனசுக்குப் பிடிச்சதை துண்ணுட்டு சாவோமே.. என்ன நான் சொல்றது?
அய்யங்கார்: நாராயணா எப்படிய்யா இப்படி எல்லாம் யோஜிக்கறீர்? அவ மீன் மட்டனை நிப்பாட்டி மூணு மாமாங்கம் ஆறது.. சுத்த பிராமணத்தி.. மடிசார் தான் கிடையாது.. பெரியவா நோன்னு சொல்லிட்டா
நாயுடு சின்னவா யாரையாச்சும் பிடிச்சு எஸ்ஸுனு சொல்ல வைக்க வேண்டியதுதானே
அய்யங்கார்: மடிசார்லாம் உமக்குப் புரியாது.. விட்டுடும் நாயுடு
நாயுடு: என்ன சாறோ.. சரி, நாளையிலே இருந்து கோர்ட் ரஜா ஆச்சே.. என்ன பண்ணப் போறீர்? அதுக்குள்ளே உலகம் அழிஞ்சுடுமாம்..
அய்யங்கார்: எண்ணைக் கத்தரிக்கா கறி.. வெங்காய சாம்பார்.. பகல் தூக்கம்.. சாயந்திரம் ஜார்ஜ் டவுண் நவராத்ரி உற்சவத்துலே கச்சேரி…
நாயுடு யோவ் கர்ப்யூ நேரம்.. கச்சேரி காவல்னா நீக்கு? (கேக்குதா உனக்கு?) பாடற கட்டை, ஆடற கட்டை எல்லாம் தஞ்சாவூர் பக்கம் ஒதுங்கியாச்சு..மாமாப் பசங்க தான் காப்பிக்குக் காசு கேட்டுக்கினு சுத்திச் சுத்தி வாரானுக..
அய்யங்கார் நமக்கு உம்ம மாதிரி நல்ல மனுஷா தான் சிநேகிதம்.. (கடைகளைப் பார்த்தபடி) எல்லாம் வாடிப்போன முட்டைக்கோசும் பூச்சிக் கத்தரியுமா இருக்கே.. காய் வரத்து நின்னு போச்சா?
நாயுடு: கத்தரிக்கா கூட பயப்படுது பட்டணம் வர.. இந்தாண்ட வாரும்.. வெண்டிக்கா கிடக்கு.. எம்டன் பய சிலோனுக்குப் போய் டீ குடிச்சுட்டு வரதுக்குள்ளாற வாங்கிட்டு வூட்டைப் பாக்க போய்ச் சேரும்
காட்சி 6
காலம் காலை களம் வெளியே
கொத்தவால் சாவடி. முறுக்கிய மீசையும் முகத்தில் எழுதிவைத்த சிரிப்புமாக கடை பரத்தி வைத்து வைத்து ஒருவன் (வயது 28 -30) உட்கார்ந்திருக்கிறான். இரண்டு கையிலும் ஆறு விரல். அந்த ஆறாவது விரல் தனியாக ரெண்டு பக்கமும் ஆடுகிறது. வலது கையில் துணிக்கட்டு போட்டிருக்கிறான். மேல் துண்டால் அதை அவ்வப்போது மறைத்துக் கொள்கிறான். பக்கத்தில் இளம் பெண். கழுத்தில் மஞ்சள் கயிறு தெரிகிறது. சுங்குடி சேலை கட்டி இருக்கிறாள். காதில் கிராமத்து நகை. ரெண்டு பேரும் காரணமே இல்லாமல் ஒருத்தரை ஒருத்தர் அடிக்கொரு தடவை பார்த்து சிரிக்கிறார்கள்
நாயுடு: (மெல்லிய தொனியில், அய்யங்காரிடம்) நேடு வீள்ளு வ்யாப்பாரம் சேஸினட்லே (இன்னிக்கு இவங்க யாபாரம் செஞ்ச மாதிரிதான்)
.(உட்கார்ந்திருந்தவனிடம்) என்னய்யா வெண்டிக்கா என்ன விலை?
பெண்: வீசை ரெண்டணா தானுங்க சாமி
நாயுடு: ஏன் சார் பதில் சொல்ல மாட்டாரோ? சீமைக்கார மிடுக்கா?
பெண்: ஐயோ அதெல்லாம் இல்லே அவருக்குப் பேச வராதுங்க
நாயுடு: அட பாவமே முன்னாடியே சொல்லி இருக்கக் கூடாது.
அய்யங்கார்: ஏன்யா நாம் இப்பத்தானே வந்தோம்..
நாயுடு: சேம் சைட் கோல் போடுறீரா வக்கீலே..
அய்யங்கார் : புதுசா கால்கட்டு போட்ட ஜோடி போல இருக்கு ஓய்
நாயுடு :(ஊமையன் வலது கையில் போட்டிருந்த துணிக் கட்டைக் காட்டி) கால்கட்டோட கைக்கட்டும் போட்டுக்கினியா? பொண்டாட்டி கடிச்சுட்டாளா? கைதானே.. போனாப் போவுது போ..
பெண் முகத்தை மூடிக் கொண்டு சிரிக்கிறாள். ஊமையன் அவளையும் வந்தவர்களையும் மாறி மாறிப் பார்த்து விட்டு வெண்டைக்காய் குவியலில் இடது கையால் அளைந்து குவித்து வைக்கிறான்.
நாயுடு: ஏம்மா.. அதென்ன வெறும் வெண்டிக்கா விக்க ஒரு கடையா? கட்டி வருமா? (ஊமையனைப் பார்த்து) அதான் நீ கட்டி வச்சிருக்கியோ..
பெண்: (கூச்சத்தோடு சிரித்தபடி) மத்த வண்டி எல்லாம் சொல்லி வச்சது.. இன்னிக்கு யாருக்கும் வர முடியலியாம்..எம்ட்டன் எம்ட்டன்னு எதுக்கெடுத்தாலும் சாக்கு..நாளைக்கு வந்துடுவாங்க
நாயுடு: ஆனாலும் உனக்கு தைரியம் ஜாஸ்தி..
பெண்: தெகிரியத்தை வச்சிக்கினு என்ன பண்ண ஐயா, அதிர்ஷ்டமும் கொஞ்சம் இருந்துச்சுன்னா
நாயுடு: அதிர்ஷ்டத்துக்கு என்னம்மா கொறச்சல்? உன் வீட்டுக்காரனுக்கு ஆறு ஆறு விரல்.. ஒரு கையிலே ஆறுன்னாலே அதிர்ஷ்டம் கூரையைப் பிச்சுட்டு கொட்டும்பாங்க.. உனக்கு ரெட்டையா லாபம் தான் போ.. அதென்ன காதிலே நீளமா நகைநட்டு.. தெலுங்கு பிரதேசமா?
பெண்: தண்டட்டிங்க..
ஊமையன் அவளை முறைக்கிறதை நாயுடு கவனிக்கிறார்.
நாயுடு: அட சும்மாத்தான் கேட்டேன்.. எனக்கு எதுக்கு? வக்கீலா கடுக்கன் போட்டுக்க?
.
அய்யங்கார்: லேடீஸ் பிங்கர் எங்கே கல்டிவேட் பண்ணினது?
நாயுடு: உம்ம நாக்குலே குப்பையைப் போட்டுப் பொசுக்க
அய்யங்கார்: குப்பை இல்லேய்யா தர்ப்பை. உமக்கு இந்த ஜன்மத்திலே பிராமண ஆசிர்வாதமும் கிடைக்காது.. பிராமண சாபமும் லபிக்காது.
.நாயுடு: இல்லேன்னு யாரு அழறாங்க.. கறிகாய் விக்கற பொம்பளை கிட்டே என்ன இங்கிலிபீசு? மைலாப்பூர்லே இங்கிலீஸ்லே தான் ஒண்ணுக்கு ரெண்டுக்கு போவீங்களோ.
அந்தப் பெண் தலையைக் குனிந்து சிரிக்க, அவளுடைய கணவன் பரப்பிரம்மமாக முகத்தில் சிரிப்பே இல்லாமல் மன அழுத்தத்தோடு இருப்பவன் போல் உட்கார்ந்திருக்கிறான்.
நாயுடு: (பெண்ணிடம்) ஏம்மா எந்த ஊர்ப் பிள்ளைன்னு சொல்லவே மாட்டேங்கறியே
பெண்: செங்கல்..வந்து செங்கலா.. செங்காலம்மா சந்து, காஞ்சிபுரம்
நாயுடு: ஓ காஞ்சிபுரமா?
அய்யங்கார்: கஞ்சீவரத்திலே செங்கல் எதுக்கு வருது?
நாயுடு: தா பாரும் சொன்னா கேட்டுக்கணும். கோர்ட்டா இது..கிராஸ் கேள்வி எல்லாம் ஒத்து
அய்யங்கார்: வெண்டைக்காய்க் குவியலில் ஒரு காயை எடுத்து காம்பை ஒடித்து முகர்கிறார்.
பெண்: சாமி சாமி ஒடிச்சுப் போட்டுடாதீங்க.. அப்புறம் யாரும் வாங்க வரமாட்டாங்க..நான் வேணா எடுத்துத் தரேன்
அய்யங்கார்: லேடீஸ் பிங்கரை லேடிஸ் தான் செலக்ட் பண்ணணுமா?
நாயுடு: வாங்கறவனைப் பார்க்க விட்டா சட்டு புட்டுனு யாபாரமாயிடுமில்லே
பெண்: நல்லா பாருங்க சாமி ஆனா ஒடிக்கறது மோந்து பாக்கறது..
அய்யங்கார்: திஸ் இஸ் ஆன் ஓவர் ரைப் லேடீஸ் பிங்கர்
(எடுத்த முற்றல் வெண்டைக்காயைக் குவியலில் போட்டு விட்டு இன்னொன்றை உள்ளே இருந்து உருவுகிறார்)
ஓகே.. (மூன்றாவது) டூ ஸ்மால் ரிஜெக்டட் (நாலாவது) குட் ஒன்.. (ஐந்தாவதை எடுத்து) அண்ட் திஸ் இஸ் .. திஸ் இஸ்..அ ரியல் லேடீஸ் பிங்கர் ..ஐயய்யோ.. நாயுடு பாருமய்யா.. பொம்பளை விரல்..நிசமாத்தான்’யா
மீசைக்காரன் கையை விரித்து தனக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல் ஏதோ சொல்ல முற்பட்டு வார்த்தை இல்லாமல் பேபே என்று வேறு வேறு வேகத்தில் சொல்கிறான். நாயுடு காலைத் தொடுகிறான். அந்தப் பெண் திகைத்துப் போய் நிற்கிறாள்.
நாயுடு: கறிகாய்க்கடை போட விட்டா கசாப்புக்கடை போட்டிருக்கீங்களே..போலீஸ்லே ரிப்போர்ட் பண்ணணும்மா. ..
பெண்: ஐயோ போலீசு எல்லாம் எதுக்கு சாமி? வண்டி வாடகைக்கு எடுத்தது. யாருகிட்டேன்னு காட்டித் தரேன்.. தயவு பண்ணி..
நாயுடு: வக்கீலே இங்கேயே இரு.. நான் பக்கத்து ஸ்டேஷனுக்குப் போய்ட்டு வந்துடறேன்
(நாயுடு நடையை எட்டிப் போடுகிறார்)
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்-திண்டுக்கல் மாவட்ட மாநாட்டு வரவேற்புக்குழு
- Interstellar திரைப்படம் – விமர்சனம்
- சாவடி – காட்சிகள் 4-6
- பன்னாட்டு இதழியல் கருத்தரங்கம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில்
- ஆனந்த பவன் நாடகம் காட்சி-14
- ராமலெக்ஷ்மியின் இலைகள் பழுக்காத உலகம் ஒரு பார்வை.
- கொங்கு வாழ்க்கையின் வார்ப்பு :“ மொய் “ : சுப்ரபாரதிமணியன் சிறுகதை
- சிறந்த நாவல்கள் நூற்று ஐம்பது
- உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்(உத்தமம்) 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு – மாநாட்டில் பங்குபெற ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு
- ஆத்ம கீதங்கள் – 6 ஓயட்டும் சக்கரங்கள் .. !
- அழிவின் விளிம்பில் மண்பாண்டத்தொழில்
- ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 2 இந்திய தேசீயத் திரைப்பட ஆவணக் காப்பகமும் நல்ல திரைப்படக் கலாச்சாரத்தை வளர்ப்பதில் அதன் பங்கும்
- பூமிக்கு போர்வையென
- காந்தி கிருஷ்ணா
- 2014 நவம்பரில் பூதச் செர்ன் அணு உடைப்பு யந்திரத்தில் புதிய இரண்டு பரமாணுக்கள் கண்டுபிடிப்பு
- பாண்டித்துரை கவிதைகள்
- “அவர் அப்படித்தான்”……….( ருத்ரய்யா!)
- யாமினி கிரிஷ்ணமூர்த்தி
- கடவுளும் கம்பியூட்டர்ஜியும்
- ஒரு சொட்டு கண்ணீர்
- தொடுவானம் 43. ஊர் வலம்