கால வெளி என்ற தலைப்பில் விட்டல் ராவிடமிருந்து ஒரு நாவல். நாவல் அல்ல, ஒரு சொல்லாடல். புனைவு அல்ல. ஒரு உண்மை நிகழ்வின் மீது சற்று புனைவும் பூசிய பதிவு.
விட்டல் ராவ் நமக்குத் தெரிந்த ஒரு நாவலாசிரியர், சிறு கதை எழுத்தாளர். அவர் தாய் மொழி கன்னடமேயானாலும், அவரது எழுத்து வாழ்க்கை தமிழில் தான் , அவர் எழுத்துக்கள் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் சுயசரிதமாக விரியும். குணத்தவை. நிறைந்த ஆழ்ந்த படிப்பாளி. மிகவும் பரந்த படிப்பாளியும் கூட.. அவரது ஈடுபாடுகள் நாடகம், சினிமா, சரித்திரம், ஒவியம் என பல தளங்களில் விரிந்தவை. கன்னட நாடக ஆரம்ப சரித்திரம் என்றே சொல்லத் தக்க விரிவில், ஒரு நாவல் எனவும் தந்துள்ளார். இதற்கான அவரது தூண்டுதல் அவரது சகோதரி கன்னட நாடகங்களில் பக்கு பெற்றது தான். அது ஆரம்ப கட்டங்களில். அந்த ஈடுபாடு அவரைத் தமிழ் சினிமாவிலும் பரந்த ஆழ்ந்த தொடர்பு கொள்ளச் செய்துள்ளது. அது பரவலாக, தென்னிந்திய, இந்திய, உலக சினிமா என்றும் விரிவதைச் சாத்தியமாக்கியிருக்கின்றது. தமிழ் சினிமா பற்றியும் கன்னட சினிமா பற்றியும், கனமான புத்தகங்கள் எழுதியுள்ளார். நமது பெயரும் புகழும் பெற்ற சினிமா தலைகளை விட உயர்ந்த தளத்தில் எழுதப்பட்டவை அவை. இவையெல்லாம் தகவல் சேகரிப்பு என்ற புள்ளியில் நிற்பதல்ல. ஆழ்ந்த அழகியல் உணர்வு என்றும், ஓரளவு, ஒரு சீரிய பார்வையாளன் கிரஹிக்கும் அளவு தொழில் நுட்ப அறிவும் கூடியது என்றும் விரிந்து நீண்டுள்ளது. அவரது புகைப்பட பயிற்சியும் இதற்கு அடித்தளத்தில் இருந்து உதவியிருக்கக் கூடும். அவரது கலை உணர்வு எல்லாவற்றுக்கு அடி நாதமாக இருந்திருக்கிறது என்றும் சொல்ல வேண்டும். தான் சென்ற இடங்கள், படித்தறிந்த வரலாறு இவற்றிலிருந்து அவர் தனதாக்கிக் கொண்டுள்ள சிற்ப ஓவிய, கட்டிட வரலாறு எல்லாம், இவை அத்தனையும் அவரை, இன்றைய தமிழ் எழுத்துலகில் தனிப்பட்ட ஒரு வியக்தியாக, கலை உலகின் எல்லா பரிமாணங்களிலும் தன் அனுபவத்தைப் பதிபவராக நமக்குத் தந்துள்ளது.
நம் தற்கால தமிழ் எழுத்தின் சந்தர்ப்பத்தில் இதைச் சொல்லியே ஆகவேண்டும். கற்பனை, கலை என்ற பதங்களுக்கெல்லாம் நாம் தந்து புரிந்து கொள்ளும் அர்த்தங்கள் விபரீதமானவை. கால வெளியின் முன்னுரையில் விட்டல் ராவே இம்மாதிரியான விபரீத அர்த்தம் கொண்டு விளைந்த ஒரு எழுத்து, வெகு ஜன ஆதரவு மட்டுமல்ல, நமக்கே உரிய அறிவார்த்த உலகின் ஒப்புதலையும் பாராட்டையும் பெற்ற, அகில இந்திய கௌரவமும் விருதும் பெற்ற ஒரு தரமற்ற படைப்பு, ஒரு ஓவியனைப் பற்றிய காதல் கதை. அந்த காதல் நாயகனை ஒவியனாக்கிப் பார்க்க அந்த எழுத்தாளருக்கு ஆசை இருந்தகாரணத்தால் தான் அவன் ஓவியன். இல்லாவிட்டால் அவன் ஒரு பலசரக்குக் கடைக்காரனாக இருந்தால், நம்பகமான சித்திரம் வந்திருக்குமோ என்னவோ. என் நினைவில் அவன் இரவு பகலாக, சிற்பம் ஒன்றை சுத்தியல் கொண்டு உருவாக்கிக் கொண்டிருக்கிறான். இவ்வளவுக்கும் அந்த படைப்பாளி பல ஓவியர்கள், சிற்பிகளோடு பேசிப் பெற்ற ஞானத்தோடு தான் இந்த கதாநாயகனைப் படைத்த தாக சொல்லிக் கொண்டதையும் படித்த நினைவு எனக்கு இருக்கிறது.
விட்டல் ராவ் ஒரு கால கட்டம் வரை சென்னையில் உள்ள ஓவியக் கல்லூரியில் பயின்றவர். அக்கால கட்டத்திய ஆசிரியர்களோடும், மாணவர்களோடும் பழகியவர். ஆனால் அவர் ஓவியராகவோ சிற்பியாகவோ தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவரில்லை. கலைக் கல்லூரி ஆசிரியராகக்கூட த் தொடங்கியவரில்லை.
அக்கால கட்ட அனுபவங்களின், நண்பர்களோடான உறவாடல்களின், சூழலின் பதிவுதான் காலவெளி. இது ஏதும் கதை சொல்லும் எழுத்தல்ல. கதை என்று சொல்ல ஏதும் இதில் இல்லை. ஒரு சிறிய கால நீட்சியில் ஒவியம் சார்ந்த உலகில் மாணவராக பங்கேற்றதன் விளைவாக பெற்ற நண்பர்கள் கூட்டம், அதிலும் நெருங்கிய ஒரு சிலரே, அக்காலத்திய அவர்கள் அக்கறைகள், பார்வைகள், செயல் பாடுகள், அக்கால கட்டத்திய இலக்கிய பத்திரிகை உலகச் சித்திரம் அவர்களது ஆசைகள், கனவுகள், எல்லாமாக ஒரு கோட்டுச் சித்திரம் நமக்குக் கிடைக்கிறது கால வெளியில். ஒரு செய்திச் சுருளில் அவ்வப்போது தோன்றி மறையும் துண்டுக்காட்சிகளின் தொகுப்பு என்றும் சொல்லாம். எவரைப் பற்றியுமான முழுச் சித்திரமோ வரலாறோ இல்லை. சில நண்பர்களின் சித்திரம் மற்றவர்களை விட சற்று அதிகம் பதிவாகியிருப்பது, பழகிய நெருக்கத்தின், காரணமாக இருக்கும்
அக்கால கட்டம், ஒவியக் க்ல்லூரி நிகழ்வுகள் கற்பனையல்ல. சிலர் அவ்வப்போது வந்து போகிறவர்களும் கற்பனை அல்ல. நாம் அறிந்த நிஜ மனிதர்கள். இப்புத்தகத்திற்கு அணிந்துரை ஒன்று வழங்கியிருக்கும் ஆதிமூலம் அக்காலகட்டத்தில் ஓவியக் கல்லூரி மாணவர், பின் அது சார்ந்த ஒரு அமைப்பில் வேலையில் இருந்தவர். இன்னும் எத்தனையோ மற்ற மாணவர்கள் போல. ஓவியக் கல்லூரி ஆசிரியராகவும் பின் சோழமண்டலத்தில் உருவாக்கத்தில் மூலவராகவும் இருந்த ஓவியர் கே சி எஸ் பணிக்கர். அறுபது எழுபதுகளில் சென்னையில் வாழ்ந்த கோவிந்தன் இன்னொருவர். அவர் அன்றைய இளம் மலையாள கலைஞர்களுக்கு குருவாக இருந்தவர். ஆனால் குருபீடமற்ற குரு. அவர் ஓவியர், சிற்பிகள், எழுத்தாளர்களிடையே ஒரு இணைப்புப் பாலமாகவும் இருந்தவர். மலையாள இளம் தலைமுறையினர் மட்டுமல்ல, தமிழ் எழுத்துலகிலும் சிறுபத்திரிகைகளின் வட்டத்துக்குள் இருந்த 1960-70 தமிழ் எழுத்தாளர்களுக்கும் அவர் குரு ஸ்தானத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். அக்கால கட்டத்தில் தில்லியிலிருந்த என்னையும் அவர் செல்வாக்கு கொண்டிருந்த வட்டத்தில் அவர் கவர்ந்து இழுத்துக்கொண்டார் என்றால் அவரது ஆளுமையின் அதிகார பூச்சு எதுவுமற்ற செல்வாக்கு எத்தகையது என்று யூகித்துக் கொள்ளலாம். அவரைச் சுற்றியிருந்த இளம் எழுத்தாளர் ஓவியர்களுக்கான ஒரு மேடையாக Sameeksha என்று ஒரு காலாண்டு இதழை, அவ்வப்போது மலையாளத்திலோ, ஆங்கிலத்திலோ தன் ஆசிரியத்வத்தில் கொண்டு வந்தவர். அதன் மூன்றோ நான்கோ இதழ்களில் நானும் எழுதியிருக்கிறேன். அவர் தான் முதலில் என்னை மௌனியைப் பற்றியும் ( Mowni and his world of articulated silcnce) அவர் கதை ஒன்றின் மொழிபெயர்ப்பையும் (பிரக்ஞைவெளியில் – In the Expanse of Consciousness) எழுதச் சொல்லி, 1971 – ல் வெளிவந்த Sameeksha, Special Number on ”Accent on the Young” இதழில் வெளியிட்டார். சமீக்ஷா இதழ் ஒவ்வொன்றும் இளம் தமிழ், மலையாள, இன்னும் மற்ற இந்திய மொழி எழுத்தாளர், ஓவியர்கள், சிற்பிகளின் படைப்புகள் எழுத்து/ புகைப்பட பதிவுகள் நிறைந்ததாக இருக்கும். அவர் அடிக்கடி சொல்லும் ஒரு தாரக மந்திரம் என்று க.நா.சு என்னிடம் சொன்னது,
“இரண்டு வருஷங்களுக்கு மேல் ஒரு பத்திரிகையை நடத்தக் கூடாது. அதற்கு மேல் இருக்கும் ஒரு பத்திரிகை அதன் அர்த்தமும் புதுமையும் இழந்து நிற்கும் ஒன்று தான்.”
இதே வார்த்தைகளில் அல்ல. அவர் சொல்ல விரும்புவது அதற்கு மேல் வேறு ஒரு பத்திரிகை புதிய ;பாதையைத் தேர்ந்து கொள்ள வேண்டும்” என்பது.. சொன்ன படியே அவர் நடத்திய எந்த பத்திரிகையும் இரண்டு வருடங்களுக்கு மேல் இருந்ததில்லை. இந்த தாரக மந்திரம் க.நா.சு.வுக்கு பிடித்தமாகப் போனதில் ஆச்சரியமேதும் இல்லை. இரண்டு பேரும் இந்த ஒரே கொள்கையைப் பின் பற்றியவர்கள்.
அவரும் காலவெளியில் வந்து போகும் ஒரு பெரிய ஆளுமை. அவ்வப்போது தன் அபிப்ராயத்தை சுருக்கமாக சில சமயம் கிண்டலாகவும் சொல்லிப் போகிறவர். இன்னொரு விருந்தினர் இந்த ஓவியர் கூட்டத்துக்கு அவ்வப்போது அறிவிப்பின்றி சிறப்பு வருகை தருபவராக வந்து சல்லாபித்து இத் தனித்த மாணவர் கூட்டத்தினரை வியப்பில் ஆழ்த்தி கவர்ச்சியும் ஆதரவும் தந்து செல்பவர் நிரஞ்சன் என்ற பெயரில் வரும் சந்திரலேகா புகழ் நடிகர் ரஞ்சன். அவர் இங்கு சகல கலா வல்லவராக, ஓவிய முயற்சிகளில் அக்கறை கொண்டவராக ஆதரவாளராக வந்து பம்பாய்க்கு குடி பெயர்ந்து மறைந்தவராக காட்சி தருகிறார். வியந்து சூழும் மாணவர்களுக்கு தன் வாள் வித்தைத் தேர்ச்சியையும் காட்டிச் செல்கிறார். இதையெல்லாம் மீறி நான் என் மாணவப் பருவத்தில் நடிகர் என்பதையும் மீறி அவரைப் பற்றி அறிந்தது அவரது நடனக்கலை ஈடுபாடு பற்றித் தான். நாட்டியம் என்றோ, நடனம் என்றோ பெயரில் ஒரு பத்திரிகையும் சில காலம் நடத்தியதையும் பற்றிப் படித்த ஞாபகம். 1947-48 களில் கும்ப கோணத்தில் காந்தி பார்க் எதிரில் இருந்த பத்திரிகைக்கடைகளில் ரஞ்சனது பத்திரிகை நாட்டியமோ நடனமோ தொங்கியிருக்கப் பார்த்திருக்கிறேன்.
இன்னுமொரு நிஜ மனிதர் புனை பெயரில் என்ற சாத்தியக் கூறு, கொண்ட இந்த நாவலில் மையமாக இருக்கும் நால்வரோடு ஐந்தாவதாக நெருங்கிப் பழகும் பிரசன்னன் என்னும் சிறுபத்திரிகை எழுத்தாளன், ஓவிய பரிச்சயமும் ஞானமும் கொண்டவன். இது விட்டல் ராவேயோ அல்லது கதை சொல்பவனுக்கு நெருக்கமானவன் என்றோ வைத்துக் கொள்ளலாம்.
அந்த நால்வரைத் தான் மையமாகக்கொண்டுள்ளது காலவெளி. அந்த நால்வரும், உன்னி கிருஷ்ணன், சக்கரவர்த்தி, முருகேசன் பின் தர்மன். இந்த நால்வர் தான் அனேகமாக புத்தகம் முழுதும் நிரவியிருப்பவர்கள். இந்நால்வர் தான் தம் ஸ்டுடியோக்களில், அல்லது நண்பர்களுடன், அல்லது ஒருவர் பற்றி மற்றவர்களுடன் தம் அபிப்ராயங்களைப் பரிமாறிக்கொண்டோ புத்தகம் முழுதும் பிரசன்னமாயிருப்பார்கள். இவர்களில், படிப்பவர்களுக்குத் தெளிவாகத் தெரியும்படி, முருகேசனும், தர்மனும் தான் முன்னுரையில் ஆதிமூலம் சொல்லும் Art Club ரக அமெச்சூர் ஓவிய குழுவினர். எப்போதும் தம் ஒவியங்கள் உடனே விற்றுப் போவது பற்றி, எது விற்கும் என்றும், அதே சிந்தனையாக இருப்பவர்கள். வாரத்தின் எல்லா நாட்களும் ஓவியம் தீற்றும் Sunday Painters. இதில் தீவிர சிந்தனையாளர்களாக, ஓவியர்களாக மிகுந்தவர் சக்கரவர்த்தியும் உன்னி கிருஷ்ணனும் தான் ஆசிரியர் சித்தரிப்பில் தெரிபவர்கள். ஆனால் இவர்களின் ஒரிஜினல்களை அறிந்தவராகத் தெரியும் ஆதிமூலம் இவரகளையும் சீரிய ஓவியர்களாக ஒப்புக்கொள்ளவில்லை. ஆனாலும் இம்மாதிரியான சன்ன வித்தியாசங்கள் ஏதும் விட்டல் ராவின் சொல்லாடலைப் பொருத்த வரை முக்கியமில்லை. இந்நால்வரும் அவரவர் ஈடுபட்டில் இருக்கும் போதும், ஒருவரை ஒருவர் அபிப்ராயங்களைப் பரிமாறிக்கொள்ளும் போதும், ஒரு ஓவியர்களின் ஸ்டுடியோ சூழலை எழுப்புவதிலும் அது வாசகர்களுக்கு ஒரு சூழலாகச் சித்தரித்துக் காட்டுவதிலும் வெற்றி பெறுகிறார் என்றே சொல்ல வேண்டும். இதில் சக்கரவர்த்தியும் உன்னி கிருஷ்ணனும் ஒருவர் ஓவியத்தைப் பற்றி மற்றவர் கருத்துப் பரிமாறலும், சில சமயங்களில் அடக்கிக் கொள்ளும் சந்தேகங்களும், உன்னி கிருஷ்ணனுக்கு மலையாளி என்ற அடையாளம் காட்டும் பாராட்டுக்களும் சொல்லாடலில் மறைக்கப் படுவதில்லை. அத்தோடு உடன் இருக்கும் ஆதரவாளர்கள் கருத்து பரிமாறலின் அறியாத்தனமும் மறைக்கப் படுவதில்லை. இவர்களோடான சூழல் சித்தரிப்பில் அடிக்கடி இடை புகும் விமரிசகரகள், வராக மூர்த்தியின் ( எத்தகைய விமரிசனமும் இல்லாத விவரிப்பு, தகவல் பட்டியல், ருடால்ஃபின் பாரபட்சமான ஒதுக்கல், அல்லது இல்லாததையெல்லாம் கற்பித்து திட்டமிட்ட பாராட்டுக்கள், அதுவும் மற்றோருக்குத் தெரியாதபடி பாராட்டும் சாமர்த்தியம், “இதில் அரசமரம் நமக்குத்தெரிந்த அரச மரம் தான், ஆனால் இங்கு தீட்டியிருக்கும் பிள்ளையாரை அந்த அரசமரத்தடியில் பார்க்கவில்லையே?” என்று அப்பாவியாக காமெண்ட் அடிக்கும் அம்பா பாய் கோபிநாத் அவரகளுக்கு ஆதரவாக இருக்கும் மாது, அவரது அறியாமையக் கண்டு ஒரு உள்ள்டங்கிய ஏளனம், அந்த அரசமரத்தையே அதன் வளைந்து தழுவி முறுகிக் முறுகிக் கிடக்கும் கிளைகளையே ஆண் பெண் பாலியல் இணைவின் தோற்றமாகக் குறிப்புணர்த்தும் ஒவியமாகத் தீட்டி, இது ஆணும் பெண்ணும் நிர்வாணமாக இணைந்திருக்கும் காட்சி அல்ல, முறுகிக் கிடக்கும் அரச மரக் கிளைகள் என்று சொல்லாமல் சொல்லும் சாமர்த்தியம், வர்ணத் தேர்விலும் (சிகப்பு, மஞ்சள், ஆரஞ்ச் ……) கத்தியால் அடை அடையாகப் பட்டையாகத் தீட்டும் வகையிலும் அவன் சீற்றமும், இளம் வயது ஆவேசமும், தர்மனின் புகைப்படமெடுக்கும் நிபுணத்தவமும், தன் ஓவியங்களை வெறும் பட்டங்களாக, தீட்டுபவன். இவன் தன் நண்பர்களோடு சேர்ந்து பங்கு கொள்ளும் நால்வர் ஓவியக் கண்காட்சிக்கு வரும் (ஆங்கில பத்திரிகையாளர் அல்லது ஓவியங்களை வாங்கும் தோற்றம் தருபவரகளை) கண்காட்சிக்கு வந்த உடனேயே அவரக்ளை வரவேற்கும் பாவனையில் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு பேசிக்கொண்டே தன் ஓவியங்கள் இருக்குமிடத்துக்கு இழுத்துச் செல்வான். எது விற்கும், எது மார்க்கெட்டுக்கு ஏற்கும் என்று யூகித்துச் செயல்படுபவர்கள் தாம் முருகேசனும், தர்மனும். அனேகமாக இவர்களது ஐந்தில் இரண்டு விற்றுவிடும் எல்லாமே அல்ல என்றாலும். இதுவே ஒரு வெற்றியாகத் தான் சென்னையில் கருதப்படும். இல்லையெனில் விற்காத ஓவியங்களை தன்னிடம் கொடுத்து வைத்திருந்தால் தன் (கடையில்/showroom-ல்) சேர்த்தால் விற்றுக் கொடுப்பதாகச் சொல்லும் சோனி இருக்கவே இருக்கான். ஆனால் அவன் விற்றுக் கொடுத்ததாக உன்னி கிருஷ்ணனுக்கோ சக்கரவர்த்திக்கோ நினைவு இருக்கவில்லை. ஒரு சமயம் உன்னி கிருஷ்ணனின், சக்கரவர்த்தியின் ஓவியங்களை கடையில் அல்ல, கடைக் காரரின் வீட்டில் பார்த்ததாக தர்மன் ஒரு முறை சொல்லியிருக்கிறான். ஆனால் ஓவியங்களை விற்பதில், அதற்கேற்ப திட்டமிட்டு வரைவதில் இருவரும் சமர்த்தர்கள்.
இந்த நால்வர் குழுவுக்கு ஒரு ஸ்டுடியோவும் உண்டு. பல்லாவரம் பக்கத்தில் வாடகைக்கு எடுத்த இடத்தில். உன்னி கிருஷ்ணனுக்கு தன் வீட்டிலேயே தான் ஸ்டுடியோ.
இவர்களுக்கு உதவியாக இருக்கும் ஒரு ஆங்கிலோ இந்திய குடும்பமும் உண்டு. புரசை வாக்கத்தில். நம் ஓவியர்கள் அடிக்கடி அவர்கள் வீட்டுக்கும் செல்வதுண்டு. அந்த இடத்தின் வர்ணனை, ஐம்பது அறுபதுகளில் சென்னையில் இருந்த ஆங்கிலோ இந்திய சமூகத்தின் வாழ்க்கையின் ஒரு சித்திரத்தைத் தான் பதிவு செய்திருக்கிறாரோ விட்டல் ராவ் என்று தோன்றுகிறது. அங்கு இன்றியமையாது இருக்கும் ஒரு ஆயா. ஒரு ஆயாவை வைத்துக்கொள்வதே இந்த சமூகத்துக்கு ஒரு கௌரவம் என்ற் நினைப்பு. அந்த ஆயாவுக்கும் ஒரு மிதப்பு “துரைங்க வீட்டு.. என்று அடிக்கடி சொல்லி பெருமிதப்பட்டுக்கொள்ளும் மிதப்பு. அத்தோடு இவர்கள் பேச்சில் வரும் ஆங்கில கலப்பு. இவர்களில் சக்கரவர்த்தியுடன் நெருங்கி பழகி பின்னர் மார்க்விஸ் என்பவனுடன் வெளிநாடு சென்று, அங்கிருந்து கொஞ்சகாலத்தில் மார்க்விஸுக்கு இவள் கசந்து போக, இப்போது ஒரு பெண் குழந்தையோடு இருக்கிறாள். நிர்வாணமாகப் போஸ் கொடுக்க தயாராக விருக்கும் பெண்ணும் உண்டு. அதிலும் ஒரு பெண் இவர்களிடம் போஸ் கொடுக்க வரத் தயாராக இருப்பதாகச் சொல்வாள். ஏதோ, எனக்கும் தையல் வேலை தெரியும், உங்களுக்கு நானே செய்து தருவேன்” என்று சொல்கிற மாதிரித்தான் இருக்கும் அவள் போஸ் கொடுக்க வாய்ப்பு கேட்பது. இது சென்னைக்கு புதிய சமாசாரம். சாதாரணமாக கொஞ்ச வரும்படிக்கு வரும் ஏழை வேலையாட்கள், ரிக்ஷாக் காரர்கள் இப்படித்தான் அகப்படுவார்கள். அதில் உன்னி கிருஷ்ணனுக்கு வருத்தம். இந்த கிழடுகளை நரைத்த தாடியும் மீசையுமா வரைந்தே பழக்கப்பட்டு விட்டதால் இளம் வயசுக் காரர்கள் வந்தாலும் தாடியும் மீசையும் தானாகவே வந்துவிடுகிறது என்று சொல்கிறான்.
உன்னி கிருஷ்ணனின் ஓவியங்களுக்கு பத்திரிகையிலும் நல்ல பாராட்டுகள்வந்து விடுகின்றன. அதை ஆங்கிலத்தில் மேற்கோளாகக் கொடுக்கப்பட்டிருக்கும் விதத்தில் உன்னிக்கிருஷ்ணனும் அந்த பாராட்டு மேற்கோள்களும் புனைவு இல்லை நிஜத்திலேயே ஆங்கில பத்திரிகையில் எழுதப்பட்ட விமர்சனம் தான் உன்னி கிருஷ்ணனும் ஒரு நிஜ ஓவியனின் புனைபெயர் தானோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதோ ருடால்ஃப் உன்னி கிருஷ்ணனைப் பற்றி எழுதிய விமர்சன வரிகளில் சில:. Angry outburst which one assumes attack the human situation with sensuous nudes in blazing red, orange and yellow portray the human passion. இப்படி உன்னி கிருஷ்ணன் பற்றியும் சக்கரவர்த்தி பற்றியும் பல இடங்களில், பல வேறுபட்ட கண்காட்சிகள் பற்றி.
நால்வரும் கூட்டாக கண்காட்சி வைப்பது அவரவர் தனித்தன்மையை காட்ட வாய்ப்பில்லாமல் போகிறது. கூட்டாகவும் தனி நபர் காட்சியாகவும் செய்து பார்க்கலாமே என்ற் பேச்சும் எழுகிறது. பின் ஒவ்வொருவரும் ஏதாகிலும் டிசைன் செண்டரில், கேட்பவர்களின் தேவைக்கு ஏற்ற மாதிரி பாடிக் (batik) கலம் காரி செய்து கொடுப்பது என்றும் தீர்மானிக்கிறார்கள். அதுவும் அவ்வப்போது அவர்கள் செய்து வந்தது தான். ஆனால் இப்போது ஒரு முனைப்போது செய்யலாம் என்று. இதில் எல்லாம் கவலைப் படாமல் இருப்பது உன்னிகிருஷ்ணனும் சக்கரவர்த்தியும் தான். நால்வர் என்ற கூட்டு அழிந்து போய்விடுமோ என்ற எண்ணமும் தலைகாட்டுகிறது.
இதற்கிடையில் சக்கரவர்த்தியின் வீட்டுக்கு கனடாவில் இருக்கும் மாமா ஒருத்தர் வருகிறார். அவரும் ஒவிய சிற்ப வணிகத்தில் இருப்பவர் தான். அவருக்கு சக்கரவர்த்தியுடன் தொடர்ந்து தனித்து பேசிய பிறகும் அவனது ஒவியங்களைப் பார்த்த பிறகும் “நீ என்னுடன் கனடா வந்துவிடு, உனக்கு அங்கு நல்ல வரவேற்பு இருக்கும். நானும் உனக்கு விற்பனையில் உதவி செய்கிறேன். இங்கு இருந்து எவ்வளவு நாட்களுக்கு இப்படியே இருப்பாய், கனடியர்களுக்கு வித்தியாசமான மரபு சார்ந்த இந்திய ஓவியங்கள், சிறபங்கள் என்றால் ரொம்ப பிடிக்குமாக்கும்” என்றெல்லாம் சொல்ல, சக்கரவர்த்தியும் கனடா போகிறான். சந்தோஷமாகத் தான் இருக்கிறது. அங்கு ஒரு போர்ச்சுகீஸ் பெண்ணுடன் ஈர்ப்பு ஏற்பட்டு கல்யாணம் செய்து கொள்கிறான். இருவரும் பேசிக்கொள்வது ஃப்ரெஞ்சில். குழந்தை ஒன்று. இப்போது. பின் ஓரிரண்டு வருஷங்களுக்கு மேல் அந்த ஈர்ப்பு நீடிப்பதில்லை. விவாக ரத்து செய்துகொள்வது, குழந்தை மாத்திரம் சக்கரவர்த்தியிடம் இருக்கும் என்றும் முடிவாகிறது. சக்கரவர்த்திக்கு இது தவிர, ஒரு ஓவியனாகவும் எப்போதும் அவனையும் உன்னி கிருஷ்ணனையும் வருத்திக்கொண்டிருந்த பிரசினை இப்போது அன்னிய மண்ணில் தீவிரமாக சூடு பிடித்துக் கொள்கிறது. தன் மண்ணின் தன் கலாசாரத்தின் தன் பிறப்பின் அடையாளங்களை, இவை எல்லாவற்றுக்கும் மேலாக தன் வேரையே இழந்து கொண்டிருப்பதான எண்ணம் பிடுங்கத் தொடங்குகிறது. அந்த இழப்பு தனக்கும் தன் ஓவிய வாழ்க்கைக்குமே பெரிய இழப்பு என்று உணரத் தொடங்கியதும் தமிழ் நாடு திரும்புகிறான் தன் பழைய நண்பர்களைத் தேடி.
எப்போதோ ஐம்பதுகளில் முளை கொண்டு, அறுபதுகளில் வளர்ந்து, கடைசியில் எழுபதுகளின் கடை வருடங்களில் தேய்ந்து மறைந்து விட்ட ஒன்று எழுத்தாளர்கள், ஓவியர்கள், சிந்தனையாளர்கள், விமரிசகர்கள், நாடகாசிரியர்கள், சினிமாவில் ஒரு புதிய தோற்றத்துக்கான கனவு கண்டவர்கள் என்ற ஒரு கூட்டு எல்லோருமே ஒரு அடித்தளத்திலும் சிந்தனையிலும் ஒன்றை ஒன்று சார்ந்தவர்கள், என்ற கூட்டுணர்வும் உரையாடலும் பகிர்தலும் முதலில் வங்காளத்திலும் பின்னர் மலையாளத்திலும் பின்னர் அதன் எளிய ஆரம்பங்களாக சென்னையிலும் தோன்றியது. அதன் வெளி அடையாளங்கள் தான் கோவிந்தனும் சமீக்ஷாவும். கசடதபற வினரின் அறையில், கோவிந்தனின் ஹாரிஸ் ரோடு வீட்டில் இந்த மலையாள தமிழ் கலைஞர், எழுத்தாளர்களின் சகஜமான உறவாடலைக் காண் முடிந்தது. அதன் சுவடுகளை கசடதபற, நடை, சமீக்ஷா ஆங்கில, மலையாள இதழ்களிலும் காணலாம். அத்தோடு ஆதிமூலம், பாஸ்கரன், தக்ஷிணாமுர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, தாமோதரன், இன்னும் எத்தனையோ பேரின் பங்கு கொள்ளலில், காணலாம். ஆனால் இந்த பயிர் வங்க மண்ணிலும் மலையாள மண்ணிலும் செழித்து வளர்ந்த அளவு தமிழ் மண் அதற்கு ஏற்றதாக இல்லாததால் முளை விட்டதுமே மடிந்தும் விட்டது.
இந்த சூழல் இங்கும் இருந்தது ஒரு குறுகிய காலத்திற்கு என்பதன் ஆவணப் பதிவு என்று காலவெளியைக் கொள்ளவேண்டும். இது போன்ற ஒரு பதிவு, ஒரு சொல்லாடல், தமிழில் வேறு இல்லை என்பதும் அதற்கு ஒரு சாட்சியம்.
வெங்கட் சாமிநாதன்/20.6.2015
கால வெளி: (நாவல்) விட்டல் ராவ்: பாதரசம் வெளியீடு, 2152 முல்லை நகர், 9-வது தெரு,அன்ணா நகர் மேற்கு, சென்னை-40 விலை ரூ 150
- மிதிலாவிலாஸ்-26
- தொடுவானம் 77. செயின்ட் ஜார்ஜ் கோட்டை
- தோற்றுப் போகக் கற்றுக் கொள்வோம்
- மு. நித்தியானந்தனின் கூலித்தமிழ் விமர்சனமும் வெண்கட்டி பத்திரிகை வெளியீடும்
- ‘ரிஷி’யின் கவிதைகள்
- ஞானம் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் – சிறப்பிதழ்’ அறிமுகம்
- காலவெளி: விட்டல் ராவிடமிருந்து ஒரு சொல்லாடல்
- வீடெனும் பெருங்கனவு
- அடையாறு கலை இலக்கியச் சங்கமும் இந்திய நட்புறவுக் கழகமும் இணைந்து நிகழ்த்தும் இஸ்கப் விழா
- மொழிவது சுகம் ஜூலை 18 -2015 அ. இலக்கிய சொல்லாடல்கள் -4
- காரைக்குடி கம்பன் கழகம் 58ஆம் வருட விழா
- கெளட் நோய் ( Gout )
- பரிதி மண்டலத்தின் புறக்கோள் புளுடோவை முதன்முதல் நெருங்கிப் படமெடுத்த நாசாவின் புதுத்தொடுவான் விண்ணூர்தி
- மணல்வீடு இலக்கிய வட்டம்-தக்கை- கொம்பு- சார்பில் நிகழவிருக்குமோர் நூல்-வெளியீட்டு & விமர்சன அமர்வு
- ஆறாண்டு காலத் தவிப்பு –
- வாழ்வின் வண்ணமுகங்கள் – பாரதி கிருஷ்ணகுமாரின் சிறுகதைகள்
- கள்ளா, வா, புலியைக்குத்து
- சிவப்பு முக்கோணம்
- ‘தாய்’ காவியத்தில் பாடுபொருள்
- சொல்லின் ஆட்சி
- எங்கே செல்கிறது தமிழ்மொழியின் நிலை?
- தறிநாடா நாவலில் பாத்திரப்படைப்பு
- அஞ்சலி: திருமதி கமலா இந்திரஜித் மறைவு
- சினிமா பக்கம் – பாகுபலி
- நேர்த்திக் கடன்
- நெசம்
- வழி தவறிய பறவை
- ஜெயகாந்தன் கவிதைகள் —- ஒரு பார்வை
- கே.எஸ். சுதாகரின் இரண்டாவது கதைத்தொகுதி சென்றிடுவீர் எட்டுத்திக்கும்