அவன், அவள். அது…! -6

This entry is part 14 of 18 in the series 18 அக்டோபர் 2015

      இதுநாள் வரைக்கும் இத்தனை சீரியஸா நீ எதையும் டிஸ்கஸ் பண்ணினதில்லையே? என்னாச்சு உனக்கு? என்றான் கண்ணன். கூடவே ஏதேது, போகிற போக்கைப் பார்த்தா நீ என்னையே கூடத் தப்பா நினைக்க ஆரம்பிச்சிடுவ போலிருக்கே…என்றான்.

அதற்கு அவள் ஒன்றும் சொல்லவில்லை. பதில் எதுவும் சொல்லாத ஒப்புதலா இது?

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் இவனும் யோசிக்க ஆரம்பித்தான். மனைவி என்ற வித்தியாசமில்லாமல் எல்லாவற்றையும் அவளிடம், ஆண் சார்ந்த, பெண் சார்ந்த என்று கூடப் பார்க்காமல் அவ்வப்போது விவாதித்தது தவறோ என்று தோன்றியது. அறிவும், தெளிவும் உள்ள இருவர் மத்தியில் விவாதிக்கப்படும் பொருளானாலும், அதற்கும் கட்டுப்பாடு என்பது இருந்திருக்க வேண்டும்தான். சரளமாய்ச் சதா பேசிக்கொண்டிருப்பவன் ஓட்டை வாயாய் மதிக்கப்படாமல் போவது மாதிரி, அவளை மதித்துப் பேசப் போக, தான் அவளிடமே மதிப்பிழந்து போனோமோ என்பதாக இவன் நினைப்பு பரவ ஆரம்பித்தது. மனது வெகுவாக உறுத்த ஆரம்பித்திருந்தது.

ஃப்கோர்ஸ்….” – இவன் வாய் தானாகவே முனகியது.

என்னடா, நீயே பேசிக்கிறே…? – சேதுராமன் சித்தப்பா எதிர்க் கேள்வி போட்டதும்தான் தன் நிலைக்கே வந்தான் கண்ணன். சிந்தனைகள் இப்பொழுதெல்லாம் அடிக்கடி வெவ்வேறு திசைகளில் பயணித்து விடுகின்றன. திடீர் திடீரென்று தான் தன் இடத்தில் இருப்பதேயில்லை. எல்லாம் சுமதியால் வந்த வினை. நினைத்துக் கொண்டான்.

ஒண்ணுமில்லே…என்றான் ஒற்றை வார்த்தையில்

சரி, புறப்படு, போகலாம்…. – இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.

என்ன சித்தப்பா..வந்ததுலேர்ந்து ஒண்ணுமே பேசலியே….ஊர்ல எல்லாரும் சௌக்கியமா?

எல்லார் சௌக்கியத்துக்கும் என்ன குறைச்சல்? இல்லேன்னா நான் இப்டி பிரச்னையை தலைல சுமந்திட்டு இங்கே வர முடியுமா?

உங்களுக்கு என்ன பிரச்னை சித்தப்பா?

பார்த்தியா, தெரியாத மாதிரிக் கேட்கிறியே…? பெரிய கில்லாடிடா நீ…! உன் பிரச்னைதான் என் பிரச்னை….

எனக்கென்ன பிரச்னை…? நான் நல்லாத்தான் இருக்கேன்…

பொய் சொல்றே…..

இல்லை….எதுக்காகப் பொய் சொல்லணும்…நான் நல்லா, சந்தோஷமாத்தான் இருக்கேன்….

சந்தோஷமா இருந்தா அது இருப்புல தெரியும்…வாய் விட்டுச் சொல்ல மாட்டான் எவனும்…நீ அப்டியில்லைங்கிறது உன் முகத்தைப் பார்த்தாலே தெரியுது…கலகலன்னு பேசுற நீ…பிடிச்சு வச்ச புளி மாதிரி வர்றே….ஊர்லர்ந்து வந்திருக்கிற சித்தப்பாகிட்டக் கூட வெளிப்படையாப் பேச மாட்டேங்கிற….எங்கிட்ட எப்பயாவது நீ இப்படி இருந்திருக்கியா? கல்யாணத்துக்கு முன்னாடி நீ இருந்ததையெல்லாம் நினைச்சுப் பாரு…இப்போ நீ அப்டி ஆளாவா இருக்கே…? சரி, கல்யாணம் பண்ணிட்டான். பொறுப்பு வந்திடுச்சுன்னு வச்சாலும், அதுக்காக இப்டியா ஆள் மாறுவான்…

என்ன சித்தப்பா. என்னென்னமோ சொல்றீங்க…?

மனசுக்கு துரோகம் பண்றேங்கிறேன்…சரிதானா? உன்னையே நீ கேட்டுக்கோ…நீ நல்லாத்தான் இருக்கியா? யோசிச்சு சொல்லு…மனசு பலதையும் நினைக்கும், உடல் உணர்ச்சியின்பாற்பட்டது. அது சாக்கடை மாதிரின்னு வச்சிக்கயேன்..அதை பூஜையறையா மாத்தணும்…எப்படி? அதுக்குத்தான் ஆண்டவன் மனுஷனுக்கு அறிவைக் கொடுத்திருக்கான். உணர்வு பூர்வமா முடிவு எடுக்கிறதுக்கும், அறிவுபூர்வமா முடிவு எடுக்கிறதுக்கும் வித்தியாசமுண்டு. இது உனக்குத் தெரியாதா என்ன?

மனிதர் எதற்கோ அடி போடுகிறார். பலமான அஸ்திவாரத்தோடுதான் ஆரம்பிக்கிறார். எடுத்த எடுப்பிலேயே மடக்கப் பார்க்கிறார். ஒரே அடியாய் அடித்து வீழ்த்த நினைக்கிறார். கண்ணனின் மனசு ஓலமிட்டது. கவனமாய் இருக்க வேண்டும் என்று சொல்லியது.

எதுக்கு சித்தப்பா இதெல்லாம்…? என்னென்னவோ சொல்றீங்களே…எனக்கு ஒண்ணும் புரியலை….

காரணமாத்தான் சொல்றேன்…கொஞ்சம் பொறுமையாக் கேளு…உணர்வுபூர்வமான முடிவு பெரும்பாலும் தவறாகத்தான் இருக்கும். ஆகையினாலதான் அதிலே நம்ம அறிவைச் செலுத்தி நல்லது கெட்டதை ஆராயணும். தற்காலிகமா லாபம் தரலாம். அப்போதைக்கு நம்முடைய ஸ்டேட்டசைக் கூட உயர்த்தலாம். காப்பாத்தலாம். அதே போல அறிவு பூர்வமான முடிவு எடுக்கும்போது நமக்கு சில நஷ்டங்கள் கூட ஏற்படலாம். ஆனால் இதுதான் சரின்னு நம்மளொட எக்ஸ்பீரியன்சை வச்சு யோசிச்சு நல்ல முடிவுக்கு வர்றோம் பாரு…அதுதான் சத்தியம்…உண்மை. அந்த உண்மைக்கு முன்னாடி எதுவுமே நிற்க முடியாது. ஏன்னா, அதோட ஒளி அப்படி. என்ன, நான் சொல்றது புரியுதா? ஆகையினால உன்னை நல்லா அறிஞ்சு உங்க சித்தப்பாகிட்டே உண்மையே பேசு. உன் பிரச்னையைத் தீர்க்கிறதுக்கத்தான் நான் இப்போ இங்கே வந்திருக்கேன்..நீ சந்தோஷமா இருந்தாத்தான் அங்கே உன் தாய் தகப்பனார் நிம்மதியா இருக்க முடியும். – சொல்லிவிட்டுச் சற்று நிறுத்தி அவன் முகத்தையே பார்த்தார் சேதுராமன்.

கண்ணன் அமையாய் இருந்தான். தான் ஏன் இப்படி ஒடுங்கிப் போய் விட்டோம் என்று தோன்றியது அவனுக்கு. தனக்குள்ளேயே நம்பிக்கையை இழந்து நிற்கிறோமோ என்று சந்தேகம் வந்தது. தன்னிடமிருந்த வீரியமெல்லாம் வடிந்துவிட்டதோ என்ற சுய பச்சாதாபம் எழுந்தது. கண்கள் கூட லேசாகக் கலங்கிப் போனது.

இந்த பார், சத்தியமாச் சொல்றேன்…நீ இப்படித் தனியாளா இருக்கிறது நேற்றுவரைக்கும் எனக்குத் தெரியாது. போய் என்னன்னு பார்த்திட்டுவான்னு உங்கப்பாதான் அனுப்பிச்சார். வந்திருக்கேன். அவ்வளவுதான். உன்னை விசாரிச்சா போதும். எனக்கு வேலை சுலபமாயிடும்…நீ எங்கிட்ட வெளிப்படையாப் பேசினாப் போதும்…அதுதான் இப்ப நடக்க மாட்டேங்குது….நீ என்னடான்னா எங்கிட்டயே எதையோ மறைக்கப் பார்க்கிறே…வெளிப்படையா எதுவும் பேச மாட்டேங்கிறே…அப்போ தவறு உன்கிட்டயும் இருக்குன்னு அர்த்தமாகுது….சரிதானா? – கொக்கியை மிகச் சரியாகப் போட்டு நிறுத்தினார் சேதுராமன்.

அதிர்ந்து போனான் கண்ணன். மூன்றாம் மனிதனா, நிறுத்துய்யா என்று ஓங்கிச் சொல்ல…சொந்தச் சித்தப்பா…அப்பாவின் உடன் பிறந்த தம்பி. தனது சிறிய தகப்பனார். அப்பாவுக்கு என்ன மரியாதையோ அது இவருக்கும் உண்டு.

என்ன சித்தப்பா…என்னென்னவோ பேசுறீங்க…ஒண்ணும் இல்லாத விஷயத்தைப் பெரிசு பண்றீங்களே…?

என்னது, ஒண்ணுமில்லாத விஷயமா? இப்படிச் சொல்றதுக்கு உனக்கு வெட்கமாயில்லே…வாய் கூசலியா உனக்கு? பெண்டாட்டிய பிறந்த வீட்டுக்கு அனுப்பறது சின்ன விஷயமா? அது சாதாரணமாத் தெரியுதா உனக்கு?

அப்டியெல்லாம் இல்லே…

என்ன இல்லே? அப்டீன்னா நீ கெட்டுப் போயிட்டேன்னு அர்த்தம். ஒத்துக்கிறியா? நீ பேசறது சரியில்லே. அதை முதல்லே புரிஞ்சிக்கோ…

சர்வாங்கமும் உதறலெடுத்தது இவனுக்கு. சரியாக மாட்டிக் கொண்டோம் என்று நினைத்தான். காண்டீபத்தைக் கையில் எடுத்து விட்டார். அம்பினை எய்தாமல் கீழே வைக்க மாட்டார். ஆனால் அந்த அம்பு எப்படியெல்லாம் பாயுமோ…? எந்தத் திசையெல்லாம் திரும்புமோ? யார் யாரைச் சிதைக்குமோ? – உடம்பு வியர்க்க ஆரம்பித்தது கண்ணனுக்கு.

Series Navigationஓவியம் தரித்த உயிர்திருமால் பெருமை
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *