வெங்கட் சாமிநாதனின் நினைவாக…ஒரு நல்ல எழுத்துதான் அவருக்கு முக்கியம்

This entry is part 22 of 24 in the series 1 நவம்பர் 2015

venkat swaminathan

 

வெங்கட் சாமிநாதன் (1933-2015) எப்போதும் ஒற்றை ஆள் போர்ப் படையாகத்தான் இருந்து வந்திருக்கிறார். அவரைப்  பெயர், புகழ்,

பணம், சமூக அந்தஸ்து ,கூட்டம்  இத்தியாதிகளால் நெருங்க முடியவில்லை. இதற்குக் காரணம் அவரது இயல்புதான். ஐம்பது வருஷங்களுக்கும் மேலாகப் பேனா பிடித்த கை சஞ்சலத்துக்கு ஒரு பொழுது கூட ஆளானதில்லை. விமரிசனம் என்றால் விமரிசனம்தான் என்ற கறார்த்தனம் மேலோங்கிக் காணப்படும் எழுத்து அவரது. இதனால் நட்புக்கள் நொறுங்கிப் போயின. அப்படிச்  சொல்வது கூட சரியில்லை. நட்புக்கள் என்று நினைக்கப் பட்டவை நொறுங்கிப் போயின .  ஆனால் அதற்குக் காரணம் அவரல்ல என்கிற தெளிவு இலக்கியத் தேடலில் ஈடுபட்டவர்களுக்கு நன்கு த் தெரியும்.

 

ஒரு நல்ல எழுத்துதான் , அவருக்கு முக்கியமாக இருந்தது . எழுத்தாளர் அல்ல. அதை சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் புரிந்து கொள்ளாததுதான் தமிழின் துரதிர்ஷ்டம். மிக நன்றாக எழுதப்பட்ட ஒரு ஆரம்ப கால எழுத்தை அவர் பாராட்டியதற்காக, அதற்குப் பின் வந்த சாதாரணங்களையும் அவர் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்து ஏமாந்தவர்கள் அவர் மீது நிராசை அடைந்தது சாமிநாதனின் குற்றமல்ல.   மோக முள்ளையும் , மலர்மஞ்சத்தையும் எழுதியதை மதித்துப் போற்றிய சாமிநாதன் , அன்பே ஆரமுதேவைக் கண்டு கொள்ளவில்லை. தந்திர பூமியை சிறந்த நாவலாகக் கண்ட கை, இயேசுவின் தோழர்களைத் தூக்கியெறியத் தயங்கவில்லை. தலைமுறைகளின் சிறப்பை ( நல்ல இலக்கியம், கூச்சல் கோஷம் இவற்றையெல்லாம் தாண்டி வெகு தூரத்தில் எழுகிறது ) உலகத்துக்கு அறிமுகப் படுத்திய தனிக் குரல் , அதற்குப் பின் வந்த சாதாரணமானவைகளை நிராகரித்தது .

 

அவரது விமரிசன அளவுகோல்களைத் திட்டவட்டமாக  வாசகர்கள் முன் வைத்தார். விமரிசனங்கள் அதிரடி போலத் தோ ற்றமளித்தாலும், அவை நிறுவிய வாதங்களை , அவ்வாதங்களில் நிறுத்தப்பட்ட உண்மைகளை தீவிரமான ஒரு இலக்கிய வாசகர் ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது. ‘ தமிழ் என் உயிர் மூச்சு ‘ ‘ இலக்கியமே என் வாழ்க்கை ‘ போன்ற வாசகங்களில் சௌகரியமாக இளைப்பாறிக் கொண்டிருந்த தலைகள் ஒரு நாள் நிமிர்ந்து  உட்கார்ந்து,  யாரிது ? , இது என்ன புதுக் குரல் ? என்று கேட்டன. இது நாள் வரைக் கட்டிக் காத்த தத்தம் பிம்பங்கள் தம் கண்முன்னாலேயே உடைந்து சிதறிக் கீழே விழுவதைக் காணப் பொறாத, ‘சித்தாந்தக்காரர் ‘ களும் , ‘ சுத்த இலக்கியவாதி ‘ களும்  , கண்ணீரைப் பேனாவில் ஊற்றி எழுதிய ‘ மனிதாபிமானி ‘ களும், வியர்க்க ஆரம்பித்து, சாமிநாதனைக் கலகக்காரர் என்று தூக்கிலிட விரும்பினார்கள். அமெரிக்காவின் ஏஜென்ட் என்று ரஷ்ய ஏஜண்டுகள்  கூக்குரலிட்டார்கள் . சாமிநாதனின் ஜாதியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு அவரைத்  தெருவில் நின்று திட்டினார்கள் .

 

சிறப்பாக் எழுதத் தொடங்கிய சோ. தர்மன் , இமையம் , சிவகாமி , அம்பை , ஆசை , மாதவன் இளங்கோ , ஜெயந்தி ஷங்கர் , வேலு மித்திரன் ஆகியோரை வெங்கட்

சாமிநாதனால்தான்  அடையாளம் கண்டு வெளி உலகுக்கு அறிமுகப்படுத்த முடிந்தது . இந்திரா பார்த்த சாரதியின் மழை நாடகத்தைப் பாராட்டி, அவரை வெளியுலகுக்கு சிறந்த நாடக ஆசிரியராக  அடையாளம் காட்டியதும் வெங்கட் சாமிநாதன்தான்.அவரது ஆளுமை, இலக்கியத்தோடு நிற்காமல் , சினிமா, நாடகம் , இசை , ஓவியம், நாட்டாரியல் என்று பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த கவனத்தையும் , பரிச்சயத்தையும் கொண்டிருந்தது . ஜான் ஆபிரகாம் இயக்கத்தில் வெளியாகித் தேசிய விருது  பெற்ற ” அக்கிரகாரத்தில் கழுதை ” என்கிற திரைப் படத்துக்கு, சாமிநாதன்  திரைக் கதை வசனம் எழுதினர்.

 

கலைஞன், எழுத்தையும், தன்  வாழ்க்கையையும் வெவ்வேறாகப் பார்ப்பது அவருக்கு உடன்பாடாக இருக்கவில்லை. எழுத்தை தொழிலாகப் பாவித்துத் தங்களை  இலக்கிய ஆசிரியர்கள் எனக்  கற்பிதம் செய்து கொண்டிருந்தவர்கள் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும் என்று திரும்பத் திரும்ப எழுதினார். சாமிநாதனின் தீவிர இலக்கியப் பங்களிப்பை, பாராட்டி டொராண்டோ தமிழ் இலக்கியத் தோட்டம் 2003க்கான இயல் பரிசை அவருக்கு வழங்கித் தன்னை கௌரவித்துக் கொண்டது .

 

வெங்கட் சாமிநாதனின் சமரசமற்ற , விருப்பு வெறுப்பு இல்லாத , நேர்மையான விமரிசன எழுத்தைப் பற்றிச் சொல்கையில், அவரது முன்னோடியான க. நா . சு . ” எனது மற்ற நண்பர்களுக்கு எரிச்சலூட்டும் அளவுக்கு , நான் வெங்கட் சாமிநாதனின் எழுத்துக்களை மதிக்கிறேன் ” என்றார்.

 

 

T R Natarajan ( ஸிந்துஜா )

Series Navigationவெ.சா. – எப்போதும் மேன்மைகளை விரும்பிய ஆளுமை
author

ஸிந்துஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *