”இயற்கையில் தோயும் வானம் பாடி” [கவிஞர் மீனாட்சி சுந்தரமூர்த்தியின் “வனம் உலாவும் வானம்பாடி தொகுப்பை முன்வைத்து]

author
0 minutes, 0 seconds Read
This entry is part 6 of 11 in the series 15 அக்டோபர் 2017

கவி வெற்றிச்செல்வி சண்முகம்

[கவிஞர் மீனாட்சி சுந்தரமூர்த்தியின் “வனம் உலாவும் வானம்பாடி தொகுப்பை முன்வைத்து]

கவிதைகள் எழுதுவதும், அவற்றை நூலாக்கிப் பார்த்துப் பரவசப்படுவதும் கவிஞர்களுக்கு மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தரும். “வனம் உலாவும் வானம்பாடி” எனும் தலைப்பில் தம் கவிதைகளை நூலாகித் தந்திருப்பவர் கவிஞர் மீனாட்சி சுந்தரமூர்த்தி அவர்கள். அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்விற்குப் பிறகும் கவிதைகளைத் தொய்வின்றி எழுதி வருபவர். இத்தொகுப்பு இவரின் முதல் தொகுப்பாகும். தலைப்பிற்கு ஏற்ப வனம் முழுதும் உலாவி மகிழ்ந்து திளைக்கும் வானம்பாடியாக உலா வருகிறார்.
இயற்கையை ரசித்து ரசித்து அதன் அழகில் மனத்தைப் பறிகொடுத்த நிலையில் தான் பார்க்கும் கதிரவன், பறவைகள், பச்சைப் புல்வெளிகள், மரங்கள், மலர்கள், நீரோடைகள், நிலவு, மலை, கடல் என இயற்கையின் எல்லாக் கூறுகளையும் தொட்டு எழுதிய கவிதைகள் இவை. நனவில் மட்டுமன்று; கனவிலும் இயற்கையோடு பேசி ஆனந்தப்படும் மனம் இவருடையது. அமர்ந்த இடத்திலிருந்தே நாடுகள் பலபோய் இயற்கையை ரசிக்கும் சூத்திரம் செய்கிறர் கவிஞர்.
முத்துக்கள்/முல்லைமலராகலாம்/மாணிக்கங்கள்/தீபங்கள்ஆகலாம்/இலைகள்மரகதமாகலாம்/வெள்ளிமலைத்தகடுவீட்டின்கூரையாகலாம்/தங்கப்பாளங்கள்/தரைஆகலாம்/நாம்/கடவுச்சீட்டுஇல்லாமல்/நாடுகள்பலபோகலாம்/விழிக்கதவைமூடி/மனக்கதவைத்/திறந்து வைத்தால்/ஆழ்மனது/ பேசும் கனவுகளாய்…
என்று மனக்கதவு திறந்து ஆழ்மனது பேசும் கவிதைகள் எழுதுகிறார்.
”கவிதை உங்களை ஏதாவது செய்ய வேண்டும் அல்லது காயப்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் வாழ்வைப் பற்றி யோசிக்க வைக்கவாவது வேண்டும்” என்பார் கவிஞர் விக்ரமாதித்யன் அவர்கள். கவிஞரின் கவிதைகள் பெரும்பாலும் சந்தோசப்படுத்துகின்றன. பல கவிதைகள் வாழ்வைப் பற்றி யோசிக்க வைக்கின்றன.
”நீலமலைச்/சாரலுக்கு/கதிர்தந்தபரிசு/பச்சைப்/பள்ளத்தாக்கு/முகம்பார்க்க/பளிங்கு நீரோடை/பன்னீர் வாசத்திற்கு/வண்ணமலர்கள்/நம் எண்னம்/ உயர்வு பெற/ இயற்கை தந்த/புதையல் அல்லவோ இது/”
என்கிறார் கவிஞர் மீனாட்சி.
இந்த இயற்கையின் புதையல்கள் நினைக்க நினக்க இன்பம் தருவன. முதல் பகுதியில் நீலமலைச் சாரல், பச்சைப் பள்ளத்தாக்கு, பளிங்கு நீரோடை, என் இயற்கை கண்டு இன்புற வைக்கிறர். பின்பாதியில் இந்த வண்ண மலர்கள் எல்லாம் நம்முடைய எண்ணம் உயர்வு பெற இயற்கை தந்த புதையல் அல்லவா என்று கேட்டு வியக்கிறார்.
வண்ண மலர்கள் பார்த்தால் எப்படி எண்ணம் உயர்வு பெறும்? என்று சிந்திக்கையில்…..காலையில் பூத்து மாலையில் உதிரும் அல்லது ஓரிரு நாள்கள் மட்டுமே வாழும் மலர்கள் தங்கள் வாழ்நாள் குறுகியது என்றாலும் அதற்காகக் கவலைப் படாமல் மலர்ச்சியோடு இதழ்களில் புன்னகை பூத்தபடி நிற்கும் நிலை நம் மனத்தில் கவலைகளைத் துரத்தி அடிக்கும் நிலையைத் தந்து நம்மை நம்பிக்கையோடும் மகிழ்வோடும் நாள்களை நகர்த்தச் செய்யும்.
சூரியனைச் சற்று அதிகமாகவே கவிஞரின் மனம் சுற்றிச் சுற்றி வருகிறது. கதிரவனை “நம்பிக்கைக் கதிர் கொண்டு வரும் நாயகன்” என்கிறார். ”வறியவர் வாழ்வில் வாட்டம் விலக புண்ணிய நீராடி எழுகிறான் கதிரவன்” என்றும் பேசுகிறர். ”கதிரென்னும் தூரிகையால்” என்று பேசுகின்ற இடத்தில் கதிரவனின் ஒளியைத் தூரிகைக்கு ஒப்பிடும் கற்பனை அலாதியானது.
மணல் கொள்ளை, காவிரித்தாயின் கலக்கம் ஆறு குளங்களின் இன்றைய நிலை, தண்ணீர் சேமித்தல், குதிரையின் ஆற்றல், ஆழ்கடலின் விந்தை உலகம், நிலவின் வருகை என்று விரிந்து கொண்டே போகிறது கவிஞரின் பார்வை.
”மலைப்பாறைகள்/சுற்றி மறைத்தாலும்/அடையாளம் தெரியாமல்/அமிழ்ந்து போவதில்லை மரங்கள்”
என்று மரங்கள் குறித்துப் பேசுவது தடைகள் தாண்டி நடை போடச் செய்கிறது.
”அரைஞாண் கயிறும்/சொந்தமில்லை/அன்பால் உலகை/ஆளலாம்/அறிவால் நாமும் உதவலாம்”
என்று நிலையற்ற வாழ்வில் நிலையான அன்பினையும் தன் கவிதைகளில் பதிவு செய்கிறார். நம் மனத்திலும் அந்த வரிகளோடு வந்து ஒட்டிக்கொள்கிறார்.
ஒவ்வொரு கவிதைக்கும் அழகான படங்கள் தொகுப்பிற்கு மேலும் மெருகு சேர்க்கின்றன.
வனத்தில் உலாவி இயற்கையை மொத்தமாய் ரசித்துப் பறக்கும் இந்த வானம்பாடி எதிர்காலத்தில் சமூகம் சார்ந்து நிறைய கவிதைகளை எழுத வேண்டும். இன்னும் பல சிறந்த தொகுப்புகளைத் தர வேண்டும்.

[வனம் உலாவும் வானம்பாடி—கவிதைத் தொகுப்பு—மீனாட்சி சுந்தர மூர்த்தி—அனிச்சம் வெளியீடு—பக்: 96—விலை: ரூ100]

Series Navigationஉன்னைக் காதலிப்பது சிரமம் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்புரியாத கவிதை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *