கதையல்ல வரலாறு -2-2: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்

This entry is part 13 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

புதிய பொறுப்பினை ஏற்ற நைநியப்பிள்ளைக்குத் தரகர் வேலையின் சாமர்த்தியமென்பது வாங்குபவர் விற்பவர் ஆகிய இருதரப்பினரினரின் நம்பிக்கையைபெறுவதென்ற பால பாடத்தை நன்கறிந்தவர். தரகர் நமக்காக பேசுகிறார் என்ற எண்ணத்தை அவர்களிடத்தில் ஏற்படுத்திதருதல் கட்டாயமென்பதில் தெளிவாக இருந்தார். மறுநாள் உள்ளூர் தரகர்களின் கோபத்தை குறைக்க நினைத்து அழைத்திருந்தார். அவர்களும் வந்திருந்தார்கள்.

– முத்தியப்ப முதலியார் கேட்டுக்கொண்டதன்பேரில் நீங்கள் 110 வராகனுக்கு சம்மதித்திருந்தீர்கள். பிறகு என்ன நடந்தது. ஒரு விலைக்கு இணங்கிய பிறகு அதை ஏற்றுக்கொள்வதுதானே முறை. எதற்காக கவர்னர் மாளிகையில் தேவையின்றி கூச்சலிடவேண்டும். உங்களுக்கு மனகுறை இருப்பின் தரகரிடமே அதைத் தெரிவித்திருக்கலாமே, என்றார்.

அப்போது தரகர் கூட்டத்தில் ஓரளவு துணிச்சலுடன் பேசக்கூடிய ஆசாமி கொஞ்சம் முன்னால் வந்து தரகரை வணங்கிவிட்டு நிலமையை எடுத்துக்கூறினார்:

– உன்மையைச் சொல்லுகிறோம். முத்தியப்ப முதலியார் மணங்குக்கு 110 வராகன் என்று எடுத்த முடிவு தன்னிச்சையானது. மணங்குக்கு 110 வராகனைக் கொட்டிக்கொடுத்துவிட்டு நாங்களென்ன வயிற்றில் ஈரத்துணியைப் போட்டுக்கொண்டு போவதா? நாங்கள் கேட்டதொகைக்கு குவர்னரை சம்மதி பண்ணால் எங்களுக்கு லகுவாயிருக்கும், அதுவன்றி இத்தொழிலில் தொடர்ந்து எங்களால் ஜீவிதம் செய்யமுடியாது. தாங்கள் கிருபை பண்ண வேணும்.

அடுத்து ஆளாளுக்கு கூச்சலிட்டார்கள். முத்தியாலு முதலியாருக்கேற்பட்ட அனுபவம் நைநியப்பிள்ளைக்கும் ஏற்பட்டது. அவருக்கு நிலமை தெள்ளத் தெளிவாக விளங்கிற்று. நடந்து முடிந்த வியாபாரத்தில் உள்ளூர் தரகர்களுக்கு உண்டான இழப்பை புரிந்துகொண்டார். ஆனால் பணி நீக்கம் செய்யபட்ட முத்தியப்ப முதலியார் மணங்குக்கு 110 வராகனுக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் இப்போது நான்கு வராகனை மணங்குக்குக் குறைத்தால் கவர்னர் எப்படி எடுத்துக்கொள்வானோவென்ற சந்தேகம். எனினும் உள்ளூர் வியாபாரிகளின் மனதை வருத்தி வியாபாரத்தை நடத்தமுடியாதென்று புரிந்துகொண்ட நைநியப்பிள்ளை குவர்னரை மீண்டும் சந்தித்து, தமது கருத்தைப் பக்குவமாக எடுத்துக்கூறி மணங்குக்கு இருதரப்பிற்கும் பொதுவாக 108 வராகனென்று முடித்தார்.

முத்தியப்ப முதலியார் தரகு வேலையிலிருந்து நீக்கப்பட்ட தகவல் பாரீஸ¤க்குத் தாமதமாகப் போய்சேர்ந்தது. அக்காலங்களில் தகவல் தொடர்புதுறை எவ்வாறு இருந்திருக்கக்கூடும் என்பதை ஓரளவு நம்மால் ஊகிக்க முடியும். கிழக்கிந்தியா பிரெஞ்சு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகிகளுக்குக் கோபம் வந்தது. கியோம் எபெர் கும்பெனியின் நலனைக்காட்டிலும் தமது சொந்த நலனில் அக்கறை காட்டுகிறாரோ என சந்தேகித்தவர்கள் அரசரின் முக்கிய ஆலோசகர்களிடம் இப்பிரச்சினையை கொண்டு செல்கிறார்கள். மன்னரும், மூத்த ஆலோசகர்களும், கிழக்கிந்தியா பிரெஞ்சு கூட்டுறவு சங்க நிர்வாகிகளும் கூடி விவாதித்தார்கள். விவாதத்தின் முடிவில் புதுச்சேரி கவர்னர் குற்றவாளியென ஏகமனதாகத் தீர்மானிக்கிறார்கள். எபேர் செய்தக்குற்றம் மணங்குக்கு நான்கு வராகன் ஆசைப்பட்டதோ, மேலிடத்தின் அனுமதியின்றி தன்னிச்சையாக முத்தியப்ப முதலியார் பதவியைப் பறித்து வேறொருவரை தரகராக நியமித்ததோ அல்ல மாறாக அவர் தரகராக நியமித்திருந்தது ஒர் இந்து. முத்தியப்ப முதலியார் என்ற கிறிஸ்துவர் இடத்தில் ஓர் இந்துவை நியமனம் செய்தது மன்னரின் ஆலோசர்கள் அவையில் இடம் பெற்றிருந்த சேசுசபையினருக்குக் குற்றமாகப் படுகிறது. அதன் விளைவாக 1711ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ந்தேதி புதுச்சேரியின் கவர்னருக்குக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்கள், அதன்படி:

கியோம் ஆந்தரே எபேர் உடனடியாக தாய்நாட்டிற்குத் திரும்பவேண்டியதாயிற்று. அவருக்குப்பதில் பியேர் துய்லிவியே(Pierre Dulivier) கவர்னர் பொறுப்பேற்கிறார். புதிய கவர்னர் உடனடியாக நைநியப்பிள்ளை பதவிலிருந்து நீக்கிவிட்டு மீண்டும் முத்தியப்ப முதலியாரையோ அல்லது ஒரு கிறிஸ்துவரையோ இடைத்தரகராக நியமனம் செய்யவும் அந்த அரசானையில் கண்டிருந்தது.

புதுச்சேரியில் வந்திறங்கிய பியேர் துய்லிவியே அரச கட்டளையை எப்படி நிறைவேற்றுவதென்று யோசித்திருக்கவேண்டும். மேல் ஆலோசனைச் சபையை உடனடியாகக் கூடும்படி கேட்டுக்கொள்ளபட்டது அரசாணையை நிறைவேற்றுவதிலுள்ள சாத பாதகங்கள் குறித்து சமை அங்கத்தினர்கள் தீவிரமாக ஆலோசித்தார்கள். கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு இருந்தது:

“நைநியப்பிள்ளை தரகராய் நியமிக்கப்பட்ட காலமுதல், பிராஞ்சுகாரருடைய தரணி என்கிற மேரையில், மொகாலியரிடத்திலும் (மொகலாயரிடத்திலும்) இந்தியா மற்றப் பிரஜைகளிடத்திலும் செல்வாக்கு பெற்றுவிட்டார். இந்த உண்மையை அநேக சந்தர்ப்பங்களிலும், சில நாட்களுக்கு முன் நடந்த சம்பவத்தாலும் அறிந்துகொண்டோம். நபாப் புதுச்சேரி மேல் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் பிராஞ்சுகாரருக்குச் சுதேசமன்னர்களால், இந்தியாவில் கொடுக்கப்பட்ட சகல இடங்களையும், கிராமங்களையும் திருப்பிக்கொடுத்துவிடவேண்டுமென்றும், அவற்றின் வரும்படிக்காக 8000 ஷக்கார் கொடுக்கவேண்டுமென்று தாகீது அனுப்பினார். கிராமங்களை வசப்படுத்திக்கொள்ளவும், பணத்தை வசூலிக்கவும் குதிரைவீரர்களை அனுப்பிவைத்தார். சமாதானம் செய்யும்படி அனுப்பப்பட்ட நைநியப்பிள்ளை, ஒரு காசுகூட செலவில்லாமல் குதிரை வீரர்களைத் திருப்பிப்போகும்படி செய்தார். அவர் தரகராய் அமர்ந்தது முதல், மொகாலியர் களால் ஏற்பட்ட சகல சங்கடங்களிலிருந்து புதுச்சேரியை நிவர்த்தி செய்திருக்கிறார்.”

“பிராஞ்சு சங்கத்தின், உள் விஷயங்களையும் வெளிவிஷயங்களையும் நன்கறிந்தவரானபடியால், அவர் வேலையைப் பிடுங்கிவிட்டால், உடனே மொகாலியர் ஆளுவ் பிராந்தியத்தில் குடியேறி, தலைமறைவாய் உள்ளுக்குள் பழிவாங்கும் சிந்தனையுடன், மொகாலியர்களைத் தூண்டிவிட்டு புதுச்சேரியின் நாசத்தைத் தேடிவிடுவார்.

“இதுவுமன்னியில், கிராமங்களின் குத்தகைகாரர்களுக்கும், புகையிலை வெற்றிலை காசுக்கடை குத்தகைகாரர்களுக்கும், அவரே புனையானபடியால் மொகாலியர் செய்யப்போகும் முதல் அசைவுக்கே குத்தகைகாரர்களும் பெரிய சுதேசி வியாபாரிகளும் ஓடிவிடுவார்கள். கூட்டுறவு சங்கத்திற்குப் பெருத்த நஷ்டம் உண்டாகும். சோழமண்டலகரையில் அவரை ஒத்த சாமர்த்தியசாலி வேறு ஒருவருமில்லையென்கிற கியாதியையும் பெற்றிருக்கிறார்.”

“ஐரோப்பிய ஜனங்களுக்குச் சுதேசமன்னர்களால் கொடுக்கப்பட்டிருக்கும், சகல இடங்களையும், கிராமங்களையும் பிடுங்கிவிடவேண்டும் என்கிற கெட்ட எண்ணத்தைக் கொண்டிருக்கும் மொகாலியர்களிடத்தில் சமாதானஞ்செய்ய கிரிஸ்துவர்களில் தற்சமயம் ஒருவருமில்லை. சவரிமுதலியார் ஒருவரே, கிரிஸ்துவர்களுக்குள் ஐரோப்பியரிடத்தில் உண்மையான விசுவாசி, அன்புள்ளவர். அவருடைய நேர்மையில் தடையின்றி நாம் நம்பிக்கை வைக்கலாம். நைநியப்பிள்ளையோடு அவர் வேலைசெய்தால் கொஞ்சத்துக்குள் சகல விஷயங்களையும் அறிந்துகொண்டு, பிரஜைகளின் நம்பிக்கைக்குப் பாத்திரவானாகலாம். அப்போது தனியாய் தரகுவேலையைத் திறமையாய்ச் செய்வார். கிருஸ்துவர்களுக்கு ஆதரவு அளித்து, அவர்களை வியாபாரத் துரையில் ஈடுபடுத்துவார்.”

“ஆனதை முன்னிட்டு, நைநியப்பிள்ளையும் சவரிமுதலியாரையும் சங்கத் தரகர்களாக நியமிக்கிறோம். தங்களுக்குள் முதலவர், இரண்டாமவர் என்கிற வித்தியாசமில்லாமல் அந்நியோன்னியமாய் சகல சுதந்திரத்துடனும் அதிகாரத்துடனும் அவர்கள் தரகு வேலையைக் கவனிக்க வேண்டியது.”(1)

பியேர் துய்லிவியே தலமையின்கீழ் வந்த கிழக்கிந்திய பிரெஞ்சு கம்பெனி அரசாங்கம் நைநியப்பிள்ளையை தரகர் பொறுப்பில் மேலும் சிறிதுகாலம் வைத்திருக்கவேண்டிய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்ததை மேற்கண்ட மேல் ஆலோசனை சபை முடிவு விளக்குகிறது. அதே நேரத்தில் பிரெஞ்சு முடியாட்சியின் கட்டளையையும் குறிப்பாக சேசுசபையினரின் அவாவையும் பூர்த்திசெய்யவேண்டும், எனவே கிருஸ்துவரான சவரி முதலியாரை நைநியப்பிள்ளைக்குத் துணையாக நியமித்தார்கள். மேல் சபையின் தீர்மானத்தினை திரும்பவும் ஒருமுறை வாசித்தால் நைநியப்பிள்ளையின் பதவிக்காலம் சவரிமுதலியார் தரகர் பணியின் நெளிவுசுளிவுகளை அறிகின்ற வரையில் என்பதை புரிந்துகொள்ளலாம். இங்கே எபேர் கவர்னராக இருந்தபோது பணிபுரிந்த முத்தியப்ப முதலியாரின் மருகர் சவுரி முதலியார் என்ற கொசுறுச் செய்தியையும் சொல்லிவிடவேண்டும்.

நைநியப்பிள்ளையின் விதி வேறாக எழுதப்பட்டிருந்தது. அவ்விதி சவரி முதலியார் என்ற பெயரில் அவருடைய இடைத் தரகர் பிழைப்பைக் கெடுத்ததுடன், அவர் உயிர் வாழ்க்கையையும் மாற்றி அமைத்தது.

(தொடரும்)

—————

1.1714ம் ஆண்டு மார்ச் 9ந்தேதி மேல் ஆலோசனைசபை விவாதத்திற்குப்பின் எடுத்துக்கொண்ட முடிவுகளின் தொகுதி 1வது புத்தகம் பக்கம் 139 cd.ஆனந்தரங்கபிள்ளை நாட்குறிப்பு தொகுதி ஒன்று பக்கம் 8

நாகரத்தினம் கிருஷ்ணா

Series Navigationஎதிர்பதம்உங்கள் மகிழ்ச்சி, என் பாக்கியம்!
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *