படித்தோம் சொல்கின்றோம் குரலின் வலிமையை பேசும் மற்றும் ஒரு குரல் அ.முத்துக்கிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில் ஃபிடல் காஸ்ரோவின் மறுபக்கம்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 13 of 20 in the series 11 பெப்ருவரி 2018

முருகபூபதி – அவுஸ்திரேலியா
” ஒருமுறை அவர் தன் விருப்பத்தைச்சொன்னார்,” என் அடுத்த பிறவியில் நான் எழுத்தாளராகவேண்டும்” என்று. அது உண்மையும்கூட. அவர் எழுதுவார். எழுதுவதை கொண்டாட்டமாக உணர்பவர் ஃபிடல். வாகனத்தில் பயணிக்கும்பொழுதுகூட அவருடைய கை எழுதுவதில் முனைப்போடு இருக்கும். மனதுக்குள் ஊறும் சில நுட்பமான உணர்வுகளையோ, சில அந்தரங்க கடிதங்களையோ எழுதிக்கொண்டிருப்பார்.” இவ்வாறு உலகினால் பெரிதும் ஆகர்சிக்கப்பட்ட பேராளுமை ஃபிடல் காஸ்ட்ரோ பற்றி அவரது நெருங்கிய தோழர் கேபிரியேல் கார்ஸியா மார்க்வஸ் சொல்லியிருக்கும் தகவலை அ.முத்துக்கிருஷ்ணனின் அழகிய மொழிபெயர்ப்பில் படிக்கின்றோம்.
குரலின் வலிமை என்ற இந்தச்சிறிய நூல் 32 பக்கங்களை கொண்டிருந்தாலும் வாசகர்களை பெரிதும் ஈர்க்கத்தக்க பல தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது.
“கடுகு சிறிதானாலும் காரம் பெரிது” எனச்சொல்வார்களே! அத்தகைய கருத்துச்செறிவு மிக்கது முத்துக்கிருஷ்ணன் மொழிபெயர்த்திருக்கும் குரலின் வலிமை.
ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சிகர எண்ணங்கள் பற்றியோ, கியூபாவை கைப்பற்ற ஏர்ணஸ்ட் சேகுவேராவுடன் அவர் நடத்திய போராட்டங்கள் பற்றியோ, அரசியல் வாழ்வுபற்றியோ, வாழ்க்கைச்சரிதம் பற்றியோ இந்த நூல் பேசவில்லை.
நாம் அறியாத பல பக்கங்களை அவருக்கு நெருக்கமாக இருந்த கேபிரியேல் கார்ஸியா மார்க்வஸ் சொல்லும்போது சுவாரஸ்யமான தகவல் குறிப்புகளினால் எம்மையும் நெருங்கவைக்கிறது இந்த நூல்.
மாயாவாத இயற்பண்பியல் எழுத்துக்களினால் வாசகர்களை பெரிதும் கவர்ந்த இலக்கிய மேதை கேபிரியேல் கார்ஸியா மார்க்வஸ் எழுதிய ‘ ஒரு நூற்றாண்டு காலத் தனிமை’ நாவலை வாசித்த பின்னர்தான் ஃபிடல் காஸ்ட்ரோ, இவருக்கு நெருங்கிய நண்பராகியிருக்கிறார்.
அந்த நெருக்கத்தினால் இவரது வீட்டுக்கு நள்ளிரவிலும் வரும் ஃபிடல், அந்த நாளின் கடைசிப்பொழுதையும் கழிக்கத்தான் வருகிறார். குளிர்சாதனப்பெட்டியிலிருந்து பாலாடைக்கட்டிகளை எடுத்து உண்ணுகிறார். மெக்ஸிக்கோவிலிருக்கும் நண்பரை அழைத்து முன்பு ஒரு நாள் விரும்பிச்சாப்பிட்ட உணவைப்பற்றிய சமையல் குறிப்புகளைக் கேட்டுப்பெறுவார். சிறிய கரண்டிகளில் வெனிலா ஐஸ்கிரீமை உண்ணத்தொடங்குவார்.
அத்தகைய ஒரு இனிமையான நள்ளிரவுப்பொழுதில் கேபிரியேல் கார்ஸியா மார்க்வஸ் கேட்கிறார்: ” இந்த உலகில் எதைச்செய்ய உங்களுக்கு மிகுந்த விருப்பம்?”
அதற்கு ஃபிடலின் உடனடியான பதில்: ” ஏதேனும் ஒரு தெருமுனையில் வேலை அவசரங்கள் ஏதுமின்றி காலாற நடக்கவேண்டும்.”
இந்த வரிகளுடன் குரலின் வலிமை என்னும் இச்சிறிய நூலின் இறுதிப்பக்கம் நிறைவுபெறுகிறது.
முத்துக்கிருஷ்ணனின் எழுத்துக்களையும் அவர்மேற்கொள்ளும் கள ஆய்வுப்பணிகளையும் இதழ்களிலும் ஊடகங்களிலும் படித்திருப்பதனாலும் மெல்பனில் ஒரு சில சந்திப்புகளில் அவருடன் உரையாடியிருப்பதனாலும் அவருடைய சிந்தனைகள் காலத்தின் தேவையாகியிருப்பதனாலும் சமகாலத்தில் எனக்கு மிகவும் பிடித்தமானவராகியிருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்னர் அவரிடமிருந்தே அவர் மொழிபெயர்த்திருக்கும் குரலின் வலிமை நூலை பெற்றுக்கொண்டேன்.
இந்த நூலை படிப்பதற்கு அதிகம் நேரம் ஒதுக்கவேண்டியதில்லை. 32 பக்கங்கங்கள்தான்! ஆனால், இந்த நூல்பற்றி எழுதுவதற்கு அதிகநேரத்தை தேடுதல் சார்ந்து செலவிட நேர்ந்தது.
நான் பணியாற்றிய வீரகேசரியில் 26-05-1985 ஆம் திகதி அதன் வாரவெளியீட்டில் ” இலக்கிய ஆர்வத்தினால் நண்பர்களான ஜனாதிபதி காஸ்ட்ரோ – எழுத்தாளர் கப்ரியல்” என்ற தலைப்பில் தமிழகத்திலிருந்து வெளியான அன்னம் விடு தூது என்ற இலக்கியச்சிற்றேட்டில் வெளியான கட்டுரையை மீள்பதிப்புச்செய்தேன்.
முத்துக்கிருஷ்ணனின் மொழிபெயர்ப்பை படித்ததும் 33 வருடங்களுக்கு முன்னர் பதிவிட்ட அந்தக்கட்டுரை நினைவுக்கு வந்தது. அந்தப்பத்திரிகை நறுக்கு இன்றும் என்னிடமிருப்பதனால் மீண்டும் முத்துக்கிருஷ்ணன் அவர்களால் ஃபிடல் காஸ்ட்ரோ – கேபிரியேல் கார்ஸியா மார்க்வஸ் எனக்கு நெருக்கமாகின்றார்கள்.
முன்னைய தகவல் குறிப்பில் ஃபிடல் , ‘டிரகுலா’ கதைகளும் படித்திருக்கும் செய்தி வருகிறது.
“ஃபிடலின் குழந்தைப்பிராயத்து கிராம வாழ்வு, வாலிப பருவத்து நிறைவேறா காதல், அவரை விட்டுப்பிரிந்தவள் என உடனே தன்னுடைய நினைவலைகளில் மிதப்பார். எல்லா மாற்றங்களும் தனது வாழ்வை வெற்றிநோக்கி இட்டுச்செல்லவே நிகழ்ந்ததாக நம்புகிறார்.” என்னும் கேபிரியேலின் கூற்று, பாப்லோ நெரூடாவின் ” புயலையும் மழையையும் எதிர்த்து நீன்றது அவன் முகவெட்டு” என்னும் கவிதை வரிகளுடன் ஒப்பிடத்தக்கது.
பேச்சாற்றலும் மிக்க ஃபிடல் பற்றிய குறிப்புகளுடன் இந்த நூல் தொடங்குகிறது.
” புரட்சி நடந்தேறிய காலகட்டத்தில், ஹவானாவுக்குள் நுழைந்து ஒரு வார காலமிருக்கும். காஸ்ட்ரோ தொலைக்காட்சியில் தோன்றி ஏழு மணிநேரம் மக்களுக்கு உரையாற்றினார். இந்த நிகழ்வு உலகசாதனையாகக்கூட இருக்கலாம். காதுமடல்கள் சிலிர்க்கக் கேட்டுக்கொண்டிருந்த க்யூபா மக்கள் மணிக்கணக்காக தங்கள் அன்றாட வேலைகளை மறந்து இந்தக்குரலின் வலிமையில் லயித்துப்போனார்கள்”
இவ்வாறு ஃபிடலின் குரலின் வலிமையையும் அதனை மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டார்கள் என்பதையும் கேபிரியேல், மேலும் விளக்குகிறார்: ” முதல் முறையாக அவருடைய பேச்சைக்கேட்கும் எங்களுக்கு இரண்டு விஷயங்கள் புலப்பட்டன. பார்வையாளர்களை தன்வசப்படுத்தும் அந்தக்குரல் வலிமை. மற்றொன்று அதன் பளிங்குத்தன்மை.”
ஃபிடலிடம் காணப்பட்ட தனித்தன்மைகள் பற்றியும் இந்த நூல் பேசுகிறது.
சாதாரண உரையாடலுக்கும் மூன்று மணிநேரம் எடுத்துக்கொள்ளும் அவர், தன் விருந்தாளிகளை விடியும்வரை கூட தன் உரையாடல் வழியாக விழிக்கச்செய்யும் இயல்புகொண்டிருந்தவர் என்பதையும் அறிந்துகொள்கின்றோம்!!!
அவரது பரந்த வாசிப்பை பிரதிபலிக்கும் புத்தக அலுமாரி. நவீன அறிவியலில் துவங்கி காதல் புதினங்கள் வரை அதில் அங்கம்!!!
தினமும் அரைப்பக்கெட் கியூபா சுருட்டு புகைத்துக்கொண்டிருந்த ஃபிடல், புகையிலை ஒழிப்பு பிரசாரத்தை தொடங்கியதும் சுருட்டுப்புகைப்பதை கைவிடுகிறார். கொலம்பஸ் கியூபாவில்தான் இந்த உலகிலேயே முதல் முறையாக புகையிலையை கண்டுபிடித்தவர். இந்த நாட்டுக்கு மிகப்பெரிய வருவாயை ஈட்டித்தந்திருக்கும் புகையிலை ஒழிப்பு பிரசாரத்திற்கும் ஃபிடல் கட்டுப்பட்டிருக்கிறார்!!!
ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான உணவுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு 18 கரண்டி ஐஸ்கிரீம்களோடு நிறுத்திக்கொள்வார்!!!
ஒரு நாளின் பொழுது போதாமையால் தினமும் உறங்குவதற்காக எடுத்துக்கொண்ட நேரம் 6 மணித்தியாலங்கள்தான்!!!
இவ்வாறு பல வியக்கத்தக்க இயல்புகளுடன் எமது காலத்தில் வாழ்ந்திருக்கும் ஃபிடல் காஸ்ட்ரோ பற்றிய பல உண்மைகளை பேசுகிறது இந்தச்சிறிய நூல்.
இந்த நூல் ஃபிடலின் அன்றாட வாழ்வின் சுவாரஸ்யங்களையும் நயமுடன் பேசுகின்றது.
” சில சமயம் படுக்கைக்குச்செல்வதற்கு முன்பு, திடீரென முன் அறிவிப்பின்றி செல்ல உரிமை படைத்த நண்பரின் வீட்டுக்கதவைத்தட்டுவார். ஐந்து நிமிடங்கள் மட்டுமே தான் அங்கு செலவிடப்போவதாக சொல்லுவார். அதை மிக நேர்மையாக கடைப்பிடிப்பதற்காகவே நின்றுகொண்டே உரையாடுவார். மெல்ல மெல்ல புதிய விசயங்கள் பற்றிய உரையாடல் நீரோடையைப்போல வளைந்துசெல்ல, மெதுவாக தன்னை சாய்வு நாற்காலி ஒன்றில் கிடத்துவார். தன் கால்களை நீட்டிக்கொண்டு சோம்பல் முறித்தவண்ணம் கூறுவார்: ” என்னை புதிய மனிதனாக உணர்கிறேன்”. பேச்சின் அலுப்பை பேசித்தீர்ப்பவர் ஃபிடல் ” எனச்சொல்கிறார் கேபிரியேல் கார்ஸியா மார்க்வஸ்.
இந்த நூலைப்படித்துக்கொண்டிருக்கையில் நம்தேசத்து அரசியல் தலைவர்கள் தினமும் என்ன செய்கிறார்கள்? என்றும் யோசிக்கத்தூண்டியது.
“வாசிப்பு மனிதர்களை முழுமைப்படுத்தும்” எனச்சொன்னர் மகாத்மா காந்தி. ஃபிடலும் தன் வாழ்நாளில் நிறைய வாசித்தவர். தன்னிடம் வாசிப்பிற்காக வரும் நூல்களில் விடுபட்டிருக்கும் தகவல்களையும் துல்லியமாகத்தெரிந்து குறிப்பெடுத்து மறுபதிப்பில் அவற்றையும் சேர்த்துக்கொள்ளச்சொல்லும் நினைவாற்றல் மிக்கவராகவும் திகழ்ந்திருக்கிறார்.
அதேசமயம் மற்றவர்களினால் ஆகர்சிக்கப்பட்ட உரையாடலுக்குரியவரான ஃபிடலுக்கும் மேடைக்கூச்சம் இருந்திருக்கிறது என்ற அந்தரங்கத்தையும் நெருங்கிய நண்பர் கேபிரியேலிடம் சொல்லி, ஒரு பொதுநிகழ்வுக்கு அழைத்து பேசவைத்து அவருக்குமிருந்த மேடைப்பயத்தை போக்குவதற்கு முயன்றிருக்கிறார்.
இவ்வாறு நாம் அறியாத பல பக்கங்களை ஃபிடலின் வாழ்விலிருந்து அறிந்த நோபல் விருது பெற்ற கேபிரியேலிடமிருந்து எமக்கு தந்திருக்கிறார் முத்துக்கிருஷ்ணன்.
சிறிய நூலாயினும் அரியதொரு நூலை தமிழுக்குத்தந்திருக்கும் முத்துக்கிருஷ்ணனும் விசாலமான மனம்படைத்தவர்.
” நாம் தினசரி வாழக்கூடிய வாழ்க்கை நமக்கு அலுப்பாக இருக்கிறது. எல்லோருக்கும் அந்த வாழ்க்கையின் மீது ஏராளமான குறைகள் இருக்கிறது. அது பிடிக்காமல்தான் வாழ்கிறோம். அதைவிட்டு வெளியே வந்தால் எல்லோர் முகத்திலும் சிரிப்பு வருகிறது. என் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட விசயம் என்னவென்றால், எவ்வளவுக்கெவ்வளவு பயணம் செய்கிறோமோ அந்தளவிற்கு எல்லாவிதமான கசடுகளிலிருந்தும் நாம் விடுதலையாவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.” என்று சொல்லிவரும் முத்துக்கிருஷ்ணன், தொடர்ந்து பயணங்கள் மேற்கொள்கிறார். தான் படித்து, தன்னைக்கவர்ந்த படைப்புகளை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். மொழிபெயர்ப்புகளில் ஈடுபடுகிறார். தொல்லியல் தொடர்பான கள ஆய்வுகளை மேற்கொள்கிறார்.
அவரைச்சுற்றி யாராவது இருக்கிறார்கள். அவர்களும் பேசுகிறார்கள். இவரும் பேசுகிறார். அந்த உரையாடல்கள் பயனுள்ளவையாகவும் இருக்கின்றன. அவரது உரைகள் வரலாற்றை நோக்கி பயணிப்பவையாகவும் அமைந்துள்ளன.
—-0—

Series Navigationதொடுவானம் 208. நான் செயலர்.மொழிபெயர்ப்பும் கவிதையும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *