தமிழ்நாட்டில் சில நல்ல விஷயங்களும்

This entry is part [part not set] of 11 in the series 26 ஜனவரி 2020

தமிழ்நாட்டில் சில நல்ல விஷயங்களும் நடந்திருக்கின்றன. அதில் முக்கியமானது சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்திக் கொண்டிருந்த ப்ளாஸ்ட்டிக்கின் உபயோகத்தை தடைசெய்திருப்பது. நான் பார்த்தவரைக்கும் ஏறக்குறைய 80 சதவீதம் அது வெற்றியடைந்திருக்கிறது என்றே சொல்வேன். இன்னும் சில இடங்களில் தடைசெய்யப்பட்ட ப்ளாஸ்ட்டிக் பைகளை கொடுப்பதனைப் பார்த்தேன் என்றாலும் பொதுமக்கள் மத்தியில் ஓரளவு விழிப்புணர்வு வந்திருக்கிறது. அது அப்படியே தொடர்ந்தால் நல்லதுதான்.

இரண்டாவது முக்கிய விஷயம் ப்ளக்ஸ் போர்டுகளை ஒழித்திருப்பது. ப்ள்க்ஸ் போர்டுகள் போனவுடன் ஊரே திறந்து போட்டது மாதிரியானதொரு உணர்வு தோன்றியது எனக்கு மட்டும்தானோ என்னவோ?

ரியல் எஸ்டேட் பிஸினசை நிறுத்தி வைதிருக்கிறார்கள். நன்றாக விளையும் வயல்களையும், தோட்டங்களையும் காங்கிரீட் காடுகளாக மாற்றிக் கொண்டிருந்தது ரியல் எஸ்டேட் பிஸினஸ்தான். பெரும்பாலும் கறுப்புப் பணம் மட்டுமே அதில் புழங்கிக் கொண்டிருந்தது. ஆனால் எத்தனை நாட்களுக்கு இந்தத் தடை நீடிக்கும் என்று தெரியவில்லை. திருட்டு முட்டாள் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் அதையெல்லாம் திறந்துவிட்டுவிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அப்படி நடக்காமலிக்க ஆண்டவனைப் பிரார்த்தனை செய்வோமாக..

பெண்ணையாற்றில் மண் அள்ளுவது நின்று போயிருப்பது ஒரு நல்ல விஷயம்தான். ஆனால் இப்போதெல்லாம் காவிரியில் மண்ணள்ளுகிறார்கள் என்று அந்த சந்தோஷத்தில் மண்ணள்ளிப் போட்டார் நண்பர் ஒருவர்.

பிச்சைக்காரர்கள் அனேகமாக கண்ணில் படவேயில்லை. கண்ணில் பட்ட பிச்சைக்காரர்களில் பெரும்பாலோர் வயதானவர்கள். எல்லோரிடமும் பணம் நிறையப் புழங்குகிறது. நன்றாகச் சாப்பிட்டு, நல்ல உடைகளை அணிந்து ஊர்சுற்றக் கிளம்பிவிடுகிறார்கள். அதுவும் ஒரு மகிழ்ச்சியான விஷயம்தான். பொருளாதார முன்னேற்றம் ஒவ்வொருவருக்கும் மிக அவசியம். எண்பதுகளில் தென்பட்ட கண்களை உறுத்தும் வறுமை இன்று ஒழிந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் சினிமாப்பட போஸ்டர்கள், ரசிகர் மன்ற கட்-அவுட்டுகள், திராவிடப் புண்ணாக்கர்களின் சுவர் சித்திரங்கள் போன்றவை இம்முறை என் கண்ணில் தென்படவேயில்லை. புது சினிமாப்படம் ரீலீசாகுகிற சமயங்களில் மட்டுமே அவை வெளிவரும் என்று சொல்லப்பட்டது. அதுவும் நல்லதுதான்.

குடித்துவிட்டுத் தெருவை அளந்து கொண்டு போகும் தமிழனை இந்தமுறை பார்க்க இயலவில்லை. எல்லோரும் வீட்டுக்கு வாங்கிக் கொண்டுபோய்க் குடிக்கிறார்கள் என்பதாக அறிந்தேன். நாட்டில் நாகரிகம் திரும்பிவிட்டது என்பதற்கான அறிகுறி அது.

இன்னொரு ஆச்சரியப்படவைத்த விஷயம் குறைவாகக் கண்ணில் தென்பட்ட பிரியாணிக் கடைகள். சென்றமுறை பார்க்குமிடமெல்லாம் பிரியாணிக்கடைகள் தென்பட்டன. ஒரு இடத்தில் அடுத்தடுத்து ஏழிலிருந்து எட்டு பிரியாணிக்கடைகள் இருந்தன. இவர்களுக்கெல்லாம் எப்படி வியாபாரம் ஆகும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு கடைக்கும் தனித்தனி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்றார்கள். இந்தமுறை அவையெல்லாம் காணவில்லை.

தெரு நாய்கள் குறைந்துவிட்டன (அதற்கும் பிரியாணிக்கும் சம்பந்தம் இருக்கிறது என நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல). முன்பெல்லாம் இரவுக்காட்சி பார்த்துவிட்டு வீடு திரும்புவதற்குள் உயிர் போய் உயிர் வந்துவிடும். அந்த அளவிற்கு நாய்கள் நம்மைச் சூழ்ந்து கொண்டு குரைக்கும். இப்போதோ மயான அமைதி நிலவுகிறது. அது நல்லதா கெட்டதா என்பதை உங்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

முன்பெல்லாம் தவிட்டுக் குருவிகள் (சிட்டுக் குருவிகள்) தென்படாத இடமே இருக்காது. இன்றைக்கு அவற்றில் ஒன்றைக் கூட நான் பார்க்கவில்லை. காகங்களும் மிகவும் குறைந்துவிட்டன. மற்ற பறவைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். மார்கழிக் குளிரில் காலையில் எழுகையில் இசைக்கும் புல்லினங்களின் குரலைக் கேட்டு வளர்ந்தவர்கள் அவை அற்றுப் போய்விட்டன என்பதினைக் குறித்து வருத்தமே கொள்வார்கள்.. ஆனால் அதனை எவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. உணர்ந்தாலும் அவர்களால் செய்ய இயல்வது ஒன்றுமில்லை. கிராமங்களிலேயே இப்படியென்றால் நகர்புறங்களைச் சொல்லவே வேண்டாம். இதனால் ஏற்படப்போகும் சுற்றுச் சூழல் பிரச்சினை என்னவோ தெரியவில்லை.

எல்லோருக்கும் தெரிந்தபடி ஊருக்குள் இருந்த ஏரி, குளங்களைக் காணவில்லை. அவையெல்லாம் பெரும்பாலும் வீடுகளாகவும், பஸ் ஸ்டாண்டுகளாகவும் மாறி வெகு காலமாகிறது. அது நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை. அதனைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் தமிழ்நாட்டவர்கள்தான்.

எங்கள் ஊர்ப்பக்கம் ஓடிய பல நல்ல நீர்க் கால்வாய்கள் இன்றைக்கு சாக்கடையாக மாறிவிட்டன. தமிழகத்தின் நன்னீர் மீண்களான கெண்டை, கெழுத்தி, உழுவை, அயிரை போன்ற மீன்கள் போன இடம் தெரியவில்லை. இத்தனைக்கும் கெண்டை மீன் பாண்டியர்களில் அரச இலச்சனையில் இடம்பெற்ற மீன். எங்கள் ஊர்க் கால்வாய்களில் துள்ளிக் குதித்து விளையாடிய மேற்படி மீன்களைப் பார்த்து ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கும் மேலாகிறது.

அதற்குப் பதிலாக வெளிநாட்டு மீன் வகைகளை வளர்த்து விற்பனை செய்கிறார்கள். அந்த மீன்கள் நமது பாரம்பரிய மீன்களைத் தின்று அழித்துவிட்டன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருந்த மீன்வகைகள் இன்றைக்கு இல்லை. ஆனால் அதனைக் குறித்துக் கவலைப்படுவாரில்லை. அதனை மீண்டும் செயற்கை முறையிலாவது வளர்க்க முயலவேண்டும். அதையெல்லாம் சொன்னால் நான் கெட்டவனாகிவிடுவதால் சொல்ல முயல்வதில்லை. இன்னொரு நண்பர் காவிரியில் வாழ்ந்த இன்னொரு மீன்வகை ஏறக்குறைய அழிந்துவிட்டதாக சில நாட்களுக்கு முன்னர் எழுதியிருந்தார். சோகம்தான்.

இப்படியெல்லாம் நான் எழுதினால் உங்களுக்குக் கோபம் வந்தால் என்னை மன்னிக்கும்படி உங்களின் பாதங்களை வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன். நானொரு கிறுக்கன். ஆகவே அப்படித்தான் எழுதுவேன். நீங்களாகவே தமிழ்நாடு ஒளிர்கிறது என்று நினைத்துக் கொண்டால்கூட எனக்கு அதில் முழு சம்மதம்தான் எனக் கூறிக் கொண்டு……

Series Navigationபாகிஸ்தானில் விலைவாசி
narendran

பி எஸ் நரேந்திரன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *