வலைய வாளார மீதுதுயில விடாததான் மான
மதியமூர் சடாமோலி மகணர் தாமும் மீதோடி
அலையும் மேகலா பாரகடி தடாகமா நாக
அமளி ஏறினாராக அழகு கூர நேர்வாளே. [111]
[வாளரா=பாம்பு; மதியம்=பிறைநிலவு; சடாமோலி=சடமுடி; மேலை=இடையணி; அமளி=படுக்கை]
வளைந்து சுருண்டிருக்கும் அரவுப் படுக்கையில் அரிதுயில் கொண்டிருக்கும் திருமாலின் வைஷ்ணவியாகவும், பிறைச்சந்திரனைச் சூடிய சடாமுடி உடைய சிவபெருமானின் இடை மடியில் இனிதாக உறங்கும் திகழ்கிறார் காளிதேவி.
=====================================================================================
போர்பன தீம்புகையோ புராதனர் ஓமப்புகையோ!
ஆர்ப்பன பல்லியமோ! அந்தர துந்துமியுமே. [112]
[போர்த்தல்=கவிந்திருத்தல்; புராதனர்=பழமையோர்; ஆர்ப்பு=முழக்கம்; பல்லியம்=பல இசைக்கருவிகள்; துந்துபி=ஒரு வாத்தியம்]
காளிதேவியின் திருக்கோயிலைச் சூழ்ந்து கவிந்திருப்பது வழிபட வந்த பக்தர்கள் இட்ட நறுமணப் பொருள்களின் பகையோ? வழிவழியாய்ப் பழமையோர் செய்யும் வேள்வியின் புகையோ? திருக்கோயிலில் முழங்குவது பலவகை வாத்தியங்களின் ஒலிகள் மட்டுமன்று; தேவர் உலகத்துத் துந்துபி என்னும் பேரிகையின் முழக்கமாகும்.
=====================================================================================
பரவுவன யாமளமோ! பதினெட்டுப் புராணமே!
விரவுவன பூதமோ! விண்முதல் ஐம்பூதமே. [113]
[பரவுவன=பணிவன; யாமளம்=உமை வழிபாட்டு நூல்கள்; விரவுவன=பொருந்தி உள்ளன; பதினெட்டுப் புராணங்கள்=பிரமம்; பதுமம்; வைணவம்; சைவம்; பாகவதம்; நாரதீயம்; மார்க்கண்டேயம்; ஆக்கினேயம்; பவிடியம்; பிரம கைவர்த்தம்; இலிங்கம்; வராகம்; காந்தம்; வாமனம்; கூர்மம்; மச்சம்; காருடம்; வாயவியம்;]
உமாதேவியைப் போற்றிப் பாடுவன, துதிப்பன, பரவிப் பணிவன அவரைப் பற்றிய வழிபாட்டு நூல்கள் மட்டுமன்று; பதினெட்டுப் புராணங்களுமாகும். தேவியின் திருக்கோயிலைப் பொருந்தி நிற்பன பூத கணங்கள் மட்டுமன்று; பஞ்சபூதங்களும் ஆகும்.
=====================================================================================
ஆடுவன தோகையோ! அயன்ஊர்தி அன்னமுமே;
பாடுவன பூவையோ! கின்னரங்கள் பலவுமே. [114]
[தோகை=மயில்; அயன்=பிரமன்; ஊர்தி=வாகனம்; பூவை=நாகணவாய்ப்புள்; கின்னரம்=இசைக்கும் தேவர் உலகு சார்ந்த பறவை]
தேவியின் திருக்கோயிலில் ஆடுவது முருகப்பெருமானின் வாகனமான மயில் மட்டுமன்று; பிரமனின் வாகனமான அன்னமும்தான்; அங்கே இசைத்துக் கொண்டிருப்பன நாகணவாய்ப்பறவைகள் மட்டுமல்ல; தேவருலகப் பறவையான கின்னரங்களும்தாம்;
=====================================================================================
வனமலரே பூமாரி! வானக் கற்பகமலரே;
கனசலமோ அபிடேகம்; கடவுள் கங்காசலமே. [115]
[கனம்=மேகம்; சலம்=மழைநீர்; அபிடேகம்=திருமுழுக்கு]
தேவியின் மீது பூமழையாகப் பெய்ய்யும் மலர்கள் இங்கு நந்தவனத் தோட்டத்தில் பூத்த மலர்களா? இல்லை; வானுலக்த்தில் இருக்கும் கற்பகமலர்கள். தேவியை திருமுழுக்கு நீராட்டச் செய்வது மழைமேகம் சொரியும் நீரா? இல்லை; சிவபெருமானின் தலைமுடியிலிருந்து வரும் கங்கை நீராகும்.
=====================================================================================
வயங்கு குழை மதியமோ! வாள் இரவிமண்டலமே
தயங்கு கவுத்துவமோபூண்! தனிச்சோதிக்கரமே. [116]
[வயங்கு=விளங்கும்; குழை=காதணி; மதி=சந்திரன்; இரவி=சூரியன்; கவுத்துவமணி=விரும்பியதைத்தரும் சிந்தாமணி; சோதிச்சக்கரம்=துருவ மண்டலம்]
தேவியின் காதில் அணிகலனாக விளங்குவது சந்திரமண்டலம் மட்டுமா? இல்லை; சூரிய மண்டலமும்தான். அவர் மார்பில் அணிந்திருப்பது கவுத்துவமணி எனப்படும் சிந்தாமணி மட்டுமா? இல்லை துருவமண்டலமும்தான்.
====================================================================================
சார்த்துவன கோசிகமோ! தனிபேழைத் தமனியமே!
ஆர்த்துவன அறுசுவையோ! அந்தமிலா அமுதமே. [117]
[சார்த்துதல்=சூட்டுதல்; கோசிகம்=உயர்ந்தவகைப் பட்டு; தமனியம்=பொன்; ஆர்தல்=அருந்துதல்; அந்தமிலா=முடிவில்லாத]
தேவிக்கு சூட்டப்படுவது உயர்ந்த பட்டாடைகள் மட்டுமல்ல; தனிப் பெட்டியில் வைத்துப் பாதுகாக்கப்பட்ட பொன்னாலான புத்தாடைகளும் தாம். தேவி அருந்த நிவேதனமாகப் படைக்கப்படுவது அறுசுவை உணவு மட்டுமன்று. என்றும் முடிவே இல்லாத, சாகாமல் நிலையான வாழ்வளிக்கும் அமுதமே,
=====================================================================================
[தக்கயாகப் பரணி தொடர்ச்சி]
கொடும் புரிசை நேமியோ! கொற்றப் போர் நேமியே!
இடும் திலகம் மான்மதமோ! எண்திசைய மான்மதமே. [118]
[திசை=மதில்; நேமி=சக்கரம்; கொற்றம்=அரசு; மான்மதம்=மானிலிருந்து எடுக்கப்படும் கஸ்தூரி; மான்=யானை]
தேவியின் திருக்கோயிலைச்சுற்றி உள்ள மதிலைச் சக்கரவாளகிரி என்று சொல்லலாமா? இல்லை; அது அவளின் ஆணைச்சக்கரம். தேவியின் நெற்றித் திலகம் கஸ்தூரியோ? இல்லை எட்டுத்திசைகளிலும் உள்ள யானைகளின் மதமாகும்.
===================================================================================== அடிச்சூட்டு நூபுரமோ! அரணங்கள் அனைத்துமே.
முடிச்சூட்டு முல்லையோ! முதற்கற்பு முல்லையோ. [119]
[நூபுரம்=சிலம்பு; அரணம்=வேதம்; முல்லைக்குக் கற்பு என்னும் பொருளும் உண்டு]
காளி தேவியின் திருவடிகளை அணிசெய்வது சிலம்புகள் மட்டும்தானா? இல்லை; வேதஙக்ள் எல்லாமே. அவர் திருமுடி சூடுவது கொடிமுல்லைப் பூ மட்டுமா? இல்லை. உயர்குணமாகிய கற்பாகும்.
====================================நிறைவு=========================================
பேய்களைப் பாடியது
காளி தேவியைப் போற்றித் துதித்த தேவர் உலகத்துப் பெண்கள் அத்தேவிக்கு ஏவலர்களாக உள்ள பேய்களைப் பாடியதைச் சொல்லும் பகுதி அது.
============================================================================
எல்லைநான் மறைபரவும் இறைமகளைச் சிறிதுரைத்தாம்
தொல்லை நாயகியுடைய பேய்க்கணங்கள் சொல்லுவாம். [120]
இதுவரை ருக், யஜுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களும் போற்றும் தேவியின் புகழை நம்மால் முடிந்தவரை விரிவாக உரைத்தோம். இனி மிகப்பழமையான தேவியின் படைக்கலங்களான பேய்களைப் பற்றிச் சொல்லுவோம்.