நடேசன்
அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றருகில் மகாத்மா காந்தியின் ஆசிரமத்தில் உள்ள அவர் வழக்கமாக அமரும் அந்த வீட்டின் திண்ணையில் பல ஐரோப்பியர்கள் இருந்தார்கள். அவர்களின் குழந்தைகள் அங்குள்ள கைராட்டையில் நூல் சுற்றிப்பார்த்தார்கள். அவர்கள் எல்லோரும் விலகியபின்னர், அந்த இடத்தில் நானும் மனைவியுடன் இருக்க விரும்பி காத்திருந்தேன். தொடர்ந்தும் ஆட்கள் வந்துகொண்டிருந்தார்கள் . சிறிது இடைவெளி வந்ததும் நானும் எனது மனைவியும் சில நிமிடங்கள் அங்கிருந்து ஏற்கனவே பார்த்த ஆசிரமத்திலுள்ள கடிதங்கள், படங்கள் ,மற்றும் பத்திரிகை செய்திகளை அசை போட்டேன் .
காந்தியின் கடிதங்களைப் பார்த்தபோது பெரும்பாலானவை இந்தியிலோ ஆங்கிலத்திலோ அல்லாது குஜராத் மொழியிலோ எழுதப்பட்டிருந்தது. இதுவரையும் இந்தியத் தலைவர்களில் காந்தி தேசியத்தலைவராக நடந்துகொண்டிருந்தாரென்ற எனது நினைவு அங்கு ஃபியூசாகிய மின்குமிழாகியது.
காந்தி என்ற மனிதர் இந்தியாவில் வாழ்ந்து சுதந்திரத்திற்குப் போராடினார். இறுதியில் அவரை இந்தியர்களே கொன்றார்கள். ஆனால், நான் அவரை ஒரு அவதாரமாகக் கேட்டறிந்துதான் சிறுவயதில் வளர்ந்தேன். இப்பொழுது மாதிரி அக்காலத்தில் எதிர்க்கருத்துகள், விமர்சனங்கள் எதுவும் பத்திரிகைகளில் நம் கண்களுக்குத் தெரிவதில்லை.
வீரகேசரி தினப்பத்திரிகையும் கல்கி வாரப்பத்திரிகையும் கடல் சூழ்ந்த எங்கள் தீவில் எங்களை வெளியுலகோடு தொடர்புபடுத்தும் சாதனங்கள். இவற்றை நான் வாசிக்கும்போது பரிமேலழகராக அவற்றிலிருந்து பொழிப்புரையைத் தாத்தா சொல்லுவார். காந்தி இறந்து ஏழு வருடங்களுக்குப் பிறகு நான் பிறந்தபோதிலும், பின்பு நான் வளர்ந்து பத்து வருடங்களானதன் பின்புதான் தாத்தாவினால் அவர் பற்றிய விடயங்கள் அச்சொட்டாகத் தெரிய வந்தது. காந்தியின் வாரிசாக இருக்கவேண்டியவர் ராஜாஜி ராஜகோபாலாச்சாரியர் என்றும், நேரு தவறாகக் காங்கிரசைக் கொண்டு செல்கிறார் என்ற கருத்தையும் தாத்தா வைத்திருந்தார்.
பிற்காலத்தில் தாத்தா என்மீது செலுத்திய கருத்து திணிப்பு மாறி திராவிடம்- கம்யூனிசம் என்ற பல தளங்களுமாக கடந்து வந்தபோதிலும், காந்தியில் ஏற்பட்ட பிடிப்பு மாறவில்லை. பலவீனமான மனிதனாக இருந்தபோதிலும் அவனால் சாத்வீகமாக எதிரியை எதிர்த்து நிற்க முடியும் என்ற விடயத்தை கருத்தாலும்,செயல்முறையாலும் உலகுக்குக் காட்டியவர் அவர் என்பது என் மனதிலிருந்தது. அதன் பிறகு தென்னாபிரிக்காவில் அவரது நடவடிக்கைகளை அறிந்தபோது மேலும் என்னைக் கவர்ந்தது. சொந்த நாட்டிற்காகப் போராடுவது இயல்பானது. பிழைப்புக்காகச் சென்ற இடத்தில் பிரச்சினைகள் வரும்போது எல்லோரும் அங்கிருந்து வெளியேறவே முற்படுவார்கள். ஆனால் மாறாக காந்தி போராடுகிறார்.
அவரது சத்திய சோதனையே நான் முதலாவதாக வாசித்த தன் வரலாறு. அதன் பின்பு மேற்கு நாட்டவர்கள் அவரை பற்றி எழுதிய புத்தகங்களைப் படித்தேன். அதிலொன்றில் “ இந்தியப் பிரிவினையின்போது பஞ்சாபில் வன்முறை ஏற்படாது தனது 50000 பிரித்தானிய வீரர்களும் இலட்சக்கணக்கான இந்திய வீரர்களும் பார்த்துக்கொள்வார்கள். நீங்கள் வங்காளத்திற்குச் சென்று அங்கு எதுவித வன்முறையும் வரவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் “ என்ற கருத்துப்படி அப்போதைய இந்திய ஆங்கில வைஸ்ராய் மவுண்ட் பேட்டன் சொல்லி காந்தியை அனுப்புவார்.
எவ்வளவு வன்செயல் பஞ்சாபில் நடந்தது. பிரிவினையின் போது வங்கம் அமைதியாக இருந்தது என்ற வரலாற்று உண்மைக்கப்பால் தனிமனிதனது சக்தியை எப்படி ஆங்கிலேயர் புரிந்திருந்தார்கள் என்பதற்கு இந்த உதாரணம் என் மனதில் எப்போதும் நிழலாடும்.
இலங்கைப்போரின் வன்முறைகளை பத்திரிகை நடத்துவதற்காக கூர்ந்து பார்த்தபோது, மேற்கூறிய விடயத்தை அடிக்கடி நினைப்பேன். அதே நேரத்தில் காந்தியைக் கொன்ற கோட்சேயை விட அவரை அவமதித்தவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்பதும் உண்மையானது. சத்தியாக்கிரகம் என்ற போர்வையில் தமிழரசுக்குக் கட்சியினரும், திலீபனின் உண்ணாவிரதம் எனப்புலிகளும் சேறடித்தார்கள்.
மெல்பனில் காந்தியின் நூற்றாண்டு நினைவாக நடந்த நிகழ்விற்கு காந்தியின் பேத்தியான எலா காந்தி வந்தபோது அவரை செவ்வி கண்டு மேலும் சில விடயங்களைப் புரிந்து கொண்டேன்
அதிகாரத்தில் பற்றற்று அதேவேளையில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராகப் போராடும் மன நிலை இலகுவில் வரக்கூடியதல்ல. ஆங்கிலோ- போயர்களின் போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகவும் பின்பு ஆங்கிலேயர்களை எதிர்த்தும் போராட நேர்ந்தது. அதாவது எதிரி என்பது ஆங்கிலேயரல்ல அவர்களது செயல் அல்லது அவர்களது அடக்குமுறையே எனப் பிரித்தறிந்து போராடுவதற்கு ஒரு களமாக தென்னாபிரிக்கா அவருக்கு இருந்துள்ளது. ஒரு சாதாரணமான சமவெளியில் பந்தயத்தில் ஓட விரும்பும் ஒருவன், மலைப்பிரதேசத்தில் ஓடிப் பயில்கிறான் என்பது போன்று தென்னாபிரிக்கா காந்திக்கு இருந்தது..
இவைகளுக்கு அப்பால் அவர் தனது உறவினர்களை, தனது வாரிசுகளாக உருவாக்க விரும்பாத மனோபாவத்தைக் கொண்ட உள்ள தனித்துவத் தலைவராகவும் அவரை தெரிந்து கொள்ள முடிந்தது..
அவரது அரசியல் , மத , பொருளாதார கொள்கைகள் காலத்தில் நிலைக்காமலோ அல்லது ஏற்கமுடியாதோ போனாலும் கூட வன்முறையற்றுப் போராடும் சித்தாந்தத்தை உருவாக்கி உலகுக்களித்த அவர் பிறந்து, நடந்த இடங்களைப் பார்க்க விரும்பியதால் நான் சென்ற முதல் இடம் அவர் பல காலமிருந்த சபர்மதி ஆச்சிரமம் ஆகும்.
சபர்மதி ஆற்றோரத்தில் உள்ள அமைதியான இடம். இங்கிருந்தே அவர் தண்டி யாத்திரை சென்றார். அவரது வாழ்க்கையின் முக்கியமான பல விடயங்கள் இங்கிருந்தபோதே நடந்தன. எத்தனையே முக்கியமானவர்களை இங்கிருந்தபடி இயக்கியிருக்கிறார் என்பதும் தெரியவந்தது. அந்த தண்டி யாத்திரையின் பின் பிரித்தானியர் இந்த ஆச்சிரமத்தை நடத்த அனுமதிக்கவில்லை.
காந்தியின் குஜராத்திய மொழிக் கடிதங்களைப் பார்த்தபோது தற்கால இந்தியாவைச் சிந்திக்காமல் என்னால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை .
இந்தியா எந்தக்காலத்திலும் சீனா போன்றோ அமெரிக்கா போன்றோ ஒரு மொழி பேசுபவர்களால் இணைக்கப்படாது .
இந்தியாவில் தற்போதைய ஆட்சியாளர்களால் இந்தியைத் தேசிய மொழியாக்கும் விடயம் எக் காலத்திலும் நடக்கப்போவதில்லை.
அப்படியென்றால் அங்கிருக்கும் இந்த 130 கோடி மக்களைத் தொடர்ந்து இணைப்பது எது?
காங்கிரஸ் காலத்திலிருந்து சொல்லிவந்த மதச்சார்பின்பை தோற்றுவிட்டது.
இந்து மதத்தை தற்போதைய அரசு கையில் எடுத்திருக்கிறது. அது தற்போதைய இஸ்லாமிய அடிப்படைவாதம் இருக்கும் காலத்தில் எதிர்வாதமாக இருக்க அது உதவும். ஆனால், தொடர்ச்சியாக இந்தியாவை இணைப்பதற்கு உதவாது. ஜாதி , மதம், பொருளாதார சமத்துவத்தைக் கண்ணிகளாகக்கொண்டு உருவாகிய புதிய ஒரு சங்கிலிதான் தேவைப்படுகிறது என்ற நினைவுடன் அங்கிருந்து வெளியேவந்தேன்.
—0—
- முத்தொள்ளாயிரத்தில் யானைகள்
- அரங்கனுக்கு ஆட்பட்ட அரசர்
- இன்றைய அரசியல்
- வாழத் தலைப்பட்டேன்
- முள்
- மும்பையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மர்ம மரணமும் மக்களாட்சி மாண்பின் மிகப் பட்டவர்த்தனமான படுகொலையும்
- அதோ பூமி
- வாரம் ஒரு மின்நூல் அறிமுகம்/ வெளியீடு – 10
- பத்திரிக்கைச்செய்தி: நூல் வெளியீடு
- ஜானகிராமனின் மரப்பசு என்ற நாவல்….
- செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – 3 – தோள்
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 12
- குஜராத்- காந்தியின் நிலம் – 1
- நேர்மையின் எல்லை
- ஆங்கிலத்தை அழிப்போம் வாரீர்
- காந்தியின் சபர்மதி ஆச்சிரமம் – 2