குணா (எ) குணசேகரன்
“உன் மகள் ஒருவனுடன் வாழ்கிறாள்” − என்று சொன்னால் பெற்ற மனம் எவ்வளவு பதை பதைக்கும். எனக்கு அப்படி தோன்றவில்லை. கேட்டதும் உள்ளுக்குள் மகிழ்ச்சி. பட்டவர்க்குத் தெரியும் இது எத்தனை சந்தோஷம் என்று. பாலை நிலத்தில் விழுந்த மழை போல…
வளரும் காலத்தில் சொல்லி வளர்த்தது… “உன் வாழ்ககை உன் கையில்” என்று. செவ்வனே பிடித்து வளர்ந்து விட்டார்கள். படிப்பில் கெட்டியாய்… அவையத்து முந்தித்து… சந்தோஷமே எல்லாமாய் சஞ்சல மனமின்றி எண்ணிய எண்ணியாங்கு… இனி வேண்டியது ஒரு நல்ல வாழ்க்கை. அமைத்து கொடுத்தோ… அமைத்துக் கொண்டோ…
நல்ல வாழ்க்கை எது?
கோட்பாடு மாறுகின்றது. மண்ணில் பிறந்ததன் மாண்பு… சந்ததியை விட்டுச்செல்லல்… மகிழ்ந்த வாழ்க்கை… தொண்டு செய்தல்… இயன்ற வரை ஈட்டு… முடிந்த வரை உதவி செய்… − ஒன்றை பெற அடுத்ததை விட்டு கொடுக்க வேண்டும். இல்லை சமன் செய்ய வேண்டும். ஒன்றை மட்டும் அனேகமாக்கினால் அடுத்ததை இழக்க நேரிடும். அது தான் தாத்பர்யம். நமக்கு சொல்லித் தெரிந்தது. பார்த்து புரிந்தது. படித்து அறிந்தது.
ஒவ்வொன்றிற்கும் பல அர்த்தங்கள். சந்ததிக்கு பல வண்ணம் பூசப்பட்டு விட்டது. மகிழ்ச்சி பலவாறாய் சித்தரிக்கப்பட்டுள்ளது. தொண்டு செய்யவும் பல கோணங்கள். எது சரியென்று கண்டு பிடிக்க வேண்டிய அளவுக்கு வழிகள். ஈட்ட வேண்டுமென்று நினைத்தால் வழிகள் ஏராளம். எல்லாம் நம்மைப்பொறுத்து. நமக்கு சொல்லிக்கொடுத்ததில் இல்லை நல்ல வாழ்க்கை. நாம் பகுத்தறிவதில் தான் உள்ளது நல்ல வாழ்க்கை.
நம் வயது காலத்தில் இவன் தான் உன் மணாளன் என்ற போது சந்தோஷமாய் கை பிடித்து, அதற்குள் நம்மை புகுத்தி வாழ்ந்து விட்டோம். படித்துவிட்டுத்தான் மற்றது என்று மறுத்து சொன்னதில்லை. இந்த காலத்தில் அவர்கள் புகுத்திக் கொள்ள தயாரில்லை… நாம் முன்னிறுத்தும் பரிவர்த்தனை ஒத்துப்போகவில்லை. கொண்டு நிறுத்தும் நமக்கே பிடிக்கவில்லை. நாமும் பார்த்து விட்டோம் நல்லது எதுவென்று. பின் அவர்களுக்கு எப்படி ஒத்து போகும்? நம் இனம் நம் குலம் என்று எத்தனை… எத்தனை… ஒன்றேனும்…? விட்டு போச்சு… உனக்கே நீயாய் சொல் என்று விட்டு போச்சு… காத்திருக்கிறேன்… காலம் கனியும் என்று…
அமெரிக்கா போக வேண்டி, எத்தனித்த அத்தனைக்கும் ஒத்துழைத்தோம், உறுதுணைத்தோம். இப்படித்தான் வாழ்க்கை இருக்கும் என்றுணர்ந்தும் முந்த விட்டோம். தன் காலில் நின்றது கண்டு சந்தோஷித்தோம்.
“பத்தாண்டுகள் வாழ்ந்தாரில்லை, பத்தாண்டுகள் கெட்டாரில்லை” − அப்பொழுதெல்லாம் தோன்றவில்லை… இப்படியும் நடக்குமென்று… நமக்காய் வாழ்ந்தது முடிந்து அவர்களின் தேடலுக்கு காத்து நிற்க வேண்டுமென்று…
ஒரு பொருட்டல்ல அவர்களுக்கு… இது ஓர் அங்கம்… இருந்தால் சரி. இல்லையென்றால் தத்தெடுப்போம்… அது தான் வாழ்க்கையென்றால்… தாத்பர்யம் அதுவென்று பட்டால் … − வாழ்க்கையின் கோணம் மாறுபட்டுவிட்டது அவர்களுக்கு. வாழும் வரை சந்தோஷித்து… கடன் படா நெஞ்சமாய்… வெறுமை என்று நமக்குத் தோன்றுவது அவர்களுக்கு இல்லை போலும்… இருந்தும் சமாளிக்கிறார்களோ…
ஈட்டல் மட்டுமே வாழ்க்கை இல்லையென்று உணரும் பட்சத்தில்… வெகு தூரம் கடந்து விட்டிருப்போம். அடுத்ததை நாட தோன்றுவதும் இல்லை. அவசியமும் மரத்து போயிருக்கும்.
படிப்பை முடிக்கும் தருணம்… வாழ்க்கை துணையை தேடிக்கொள்ளச் சொன்னது ஞாபகம் வருகிறது.
“லவ் பண்ற வயசில்லைம்மா இது. இப்பொ அது மட்டும் பத்தாது. இன்னமும் நிறைய யோசிக்கணும். இன்னொருத்தருக்கு வாழ்க்கை கொடுக்க நான் இந்த அளவு கடந்து வரவில்லை. சேர்ந்து வாழத்தான் துணை வேண்டும்” − அவள் சொன்னதும் சம்மட்டியால் அடித்த வலி. இதைப்பற்றி நாம் யோசித்ததில்லையே… நமக்கு காட்டிய வழியில் கடந்து வந்துவிட்டோம். சந்தோஷமாய்..? என்றால் சொல்லத் தெரியவில்லை… தந்நிலைக்கு வளர்ந்து விட்டால் அவசியங்கள் மாறுமோ? அடிப்படை மாறாது தானே?. உணர்த்த தரம் தாழ்ந்து விட்டோமா நாம்… இல்லை அவர்கள் உணர்ந்து உயர்ந்து விட்டார்களா?
முழு சுதந்திரம் கொண்ட பின்னும் ஏனிந்த தயக்கம். பகுத்தறிய நேரமில்லையா… பகுத்தறிய தெரியவில்லையா? வாழத்தெரிந்தவர்க்கு தெரியாதா… தெரியாமலும் இருக்குமோ?
எண்ணித்துணிய மறுக்கிறார்களோ? பார்ப்பதும் கேட்பதும் தீர்மானிக்க மறுக்கிறதோ… நீ நினைக்கும் அளவுக்கு கஷ்டம் இல்லை என்று சொல்லிப் புரிய வைக்கும் நிலையில் நாமும் இல்லை…கேட்கும் மனநிலையில் அவர்களும் இல்லை. ஒரு வேளை சொன்னாலும், ”சமாதானப் படுத்தறியா? கஷ்டத்தை பார்த்து தானே வந்தோம்ணு திருப்பி சொன்னா…” புரிபடலை…
நிச்சயம் பகுத்தறிய தெரிந்திருக்கும். தீர்மானிக்கத் தெரிந்திருக்கும். நினைத்தபடி கிடைக்காமல்… எதிர்பார்த்து… காத்திருந்து… காலம் கரைந்திருக்கும். இதில் யார் குற்றம்? விட்டுக்கொடுத்தல் வேண்டுமோ? விட்டுக்கொடுக்க நாம் கற்று கொடுக்க மறந்தோமோ…?
ஒன்று புரிகிறது… வேண்டியதில் பகுத்தறிந்து.. விட்டுக்கொடுத்து தான் பெற முடியும். இல்லை வேண்டியது கிடைக்கலாம்… கிடைக்காமலும் போகலாம். சிலருக்கு சட்டென கிடைப்பதெப்படி?. விட்டுக்கொடுத்தும் இருக்கலாம்… கிடைத்தும் இருக்கலாம்… இதை சொல்லக்கூடிய காலகட்டத்தில்… சொல்வதை கேட்கும் காலகட்டத்தில் சொல்லி புரிய வைக்க வேண்டும் போலும். கூட்டுக்குடும்பங்களில் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் யாரேனும் சொல்லித்தெரியவரும். இல்லை அவசியமென்று வரும் காலத்தில் தயக்கமின்றி சொல்லி விடுவார்கள். இல்லை இப்பொழுது இது அவசியம் என்று உணர்த்தி விடுவார்கள். இதை சொல்ல நாம் தயங்குவதேன்?
எதை நோக்கி நகர்கிறோம் நாம்?. நம் கடமை தான் என்ன? வழிவகுத்தல் கடமையாய் உணர்த்தப்பட்டோம். வழிவகுத்து தந்தார்கள். அவர்தம் உணர்வை திணித்தார்கள். ஏற்றோம். அடுத்த தலைமுறைக்கும் செயல் படுத்த ஒரு தயக்கம். அவர்தம் சுதந்திரத்தில் முழு உரிமை தந்தோம். இதுதான் தவறோ?
உணர்வும் உணர்ச்சியும் ஒருங்கிணைந்தது தான் நல்ல தருணமோ? கடந்து போகும் முன் கருதி சொல்லியிருக்க வேண்டும். வாழ்க்கையின் தாத்பர்யம் புரிய வைத்திருக்க வேண்டும். சமன் செய்து நகர்த்த சொல்லி தந்திருக்க வேண்டும். காதல் ஓர் அங்கம் என்று… அதுவும் காலத்தின் கட்டாயம் என்று… பருவத்து பயிர் செய்ய மறந்தால்…இல்லை தவிர்த்தால்… நாம் கொள்ள வேண்டிய சங்கடங்கள் என்று… உணர்த்தப்பட வேண்டும்.
இதையெல்லாம் சேர்த்துத்தான் எதெதை எப்பொழுது செய்யணுமோ அததை அப்பொழுது செய்யணும்னு சொல்லி வைத்தார்கள் போலும்.
அலைகழியும் என் மனது என்ன நினைத்தென்ன…
என்ன இருந்தும் சந்தோஷம் தான். சேர்ந்து வாழ்ந்தாலும்… சேர வாழ்ந்தாலும்…
இதற்குத்தான் வேண்டாமென்றாளோ… − நான் வந்து கொஞ்ச நாள் இருக்கிறேனென்று சொன்ன போது? இல்லை அவள் வாழும் வாழ்வை நாம் ஏற்க மாட்டோம் என்றா?
ஒரு காலகட்டத்திற்கு பின்னர் நாம் சங்கடங்கள் தான்… சகித்து வாழ்ந்த கூட்டுக் குடும்பங்கள் மறைந்த பின்னர்… திரை கடலோடி திரவியம் தேடலில்… நாமாக மறந்து… நமக்காக வாழ்ந்ததிலிருந்து… என்னவென்று சொல்வதிதை… தவறு என்றா… சரியென்று பட்டால் வாழ்ந்தது தவறா…?
இன்னது தான் என்று தெரியாது. கை பிடிப்பவன் சொல்லும் வரை. அவன் உன்னை ஏற்பதாய் சொல்லும் வரை… அதுதான் அங்கு வழக்கமாமே… சொல்லவேண்டிய அவசியமும் இல்லை வாழ்ந்து விட்டு போவதும் யதார்த்தம்.
இந்த காலகட்டத்திற்கு வராது தவிர்த்திருக்கலாமோ? சற்றும் முன் உணர்த்தி புரிய வைத்திருக்கலாமோ.. நாம் சொல்வதை கேட்டு வளர்ந்த காலத்தில்… வாழ்க்கை சற்று கடினமாய் இருந்திருக்கும். நம்மைப்போல… சந்தோஷமா என்றால் சொல்லத்தெரியாமல்…
உனக்கு என்ன சங்கடமோ… உன்னை உறுத்த நானில்லை. முடிந்த வரை ஒத்துழைப்பேன். இல்லையென்றால் ஒதுங்கி கொள்வேன். இவை உன் வளரும் காலத்தில் நாம் பேசி பழகியவை. மூத்தோர் படுத்திய பாடு கண்டு பேசி தீர்மானித்தவை.
இருந்தும் … ஒரு செய்தி சொல்…
என் தொட்டு… விட்டு சென்றவளே… நான் தொட்டெடுத்து வளர்த்தவளே… என்னவர் சென்ற பின்னர் எதற்காக என்பதற்கு விடை தந்தவளே… நான் சொல்லித்தர வேண்டிய நிலையில் நீயில்லையென உணர்ந்து பட்டேன். உனக்கென நீ வகுத்ததில் நான் புகுந்து கொள்வேன். உன் எண்ணம்… என் எண்ணம்… உன் வழி… என் வழி… உனக்கு வழி காட்டும் நிலையில் நானில்லை…
யதார்த்தம் என்பதன் பொருளுணர்வேன்.
என்னை தயார் படுத்திக்கொண்டு காத்திருக்கிறேன் உன் கூக்குரலுக்காக… உனக்கு சேவகம் செய்ய… உன் சந்ததி காண… இல்லையில்லை என் சந்ததி நோக்கி… எதற்காக வாழ்கிறோம் என்பதின் விடை தேடி… வேண்டாமென்பாயோ… நான் உன்னைப் பெற்றெடுத்து வளர்த்த போது நான் உணர்ந்த உணர்வுகளை நீயும் பெறவேண்டுமென்று… நிச்சயம் நான் பறித்துக்கொள்ள மாட்டேன். அந்த உணர்வுகள் உனக்கானது. நான் என்றும் உறுதுணை தான்.
பரிதவிக்கும் என் மனதில் பாசமுண்டு… பாட்டுவித்த காலத்தில் சொல்லித்தந்த நேசமுண்டு… தனித்து நான் வாழ்ந்தாலும் பற்றற்று வாழும் துறவியில்லை…
இருந்தும் காத்திருக்கிறேன் உன் கூக்குரலுக்காய்…
- குணா (எ) குணசேகரன்
- அகலிகைக் கல்
- அமெரிக்க எண்கணிதம் – ஆங்கில மூலம் : நதாலி டயஸ்
- அப்பொழுது அவன்
- திருக்குறள் காட்டும் மேலாண்மை
- இளிக்கின்ற பித்தளைகள்
- கூக்குரலுக்காய்…
- இவன் இப்படித்தான்
- எஸ்ஸார்சியின் கட்டுரைத் தொகுப்பு – மணக்கும் பூந்தோட்டம்
- கவிதையும் ரசனையும் – 6
- காலமும் கணங்களும் – பேராசிரியர் கைலாசபதி – இன்று டிசம்பர் 06 நினைவு தினம்