தோள்வலியும் தோளழகும் – இராவணன்

This entry is part 10 of 12 in the series 27 டிசம்பர் 2020

                       

                         இராமகாதையில் எதிரணித் தலைவனாக விளங்குகிறான் இராவணன். மிகப்பெரிய வீரன்! முப்பத்து முக் கோடி வாழ்நாளும், முயன்றுடைய பெருந்தவமும், எக்கோடி யாராலும் வெல்லப்படானென்ற வரபலமும் உடையவன். ஈசன் உறையும் கயிலாயமலையைத் தன் தோள் வலியால் தூக்க முயற்சித்தவன்.திசை யானைகளோடு பொருது அவற்றின் கொம்பு களைத் தன் மார்பில் ஆபரணமாக அணிந்தவன்! இதை

      திசையானை விசை கலங்கச் செருச்செய்து, மருப்பு ஒசித்த

      இச்சையாலே நிறைந்த புயத்து இராவணாவோ!

         [ஆரணிய காண்டம்]  சூர்ப்பணகைப் படலம் 109] 2841

என்று சூர்ப்பணகை உதவிக்காக அழைப்பதிலிருந்து அறிகிறோம்

தசமுகனான இவன் சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றவன் வீணைக் கொடியுடையவன். வேதம் கற்றவன்

                             இவ்வளவு பெருமைகளையும்கொண்ட இராவணன் கொலு வீற்றிருக்கிறான்

அடர்த்த பொன்தோள்

                              இராவணன் திக் விஜயம் செய்த காலத்

தில் திசையானைகளோடு போர் செய்தான். இவனுடைய தோள் வலியால் யானையின் கொம்புகள் தான் முறிந்தன! அவனுடைய அடர்த்த பொன்தோள்கள் வானளவும் உயர்ந்து உதய பர்வதம் போல் விளங்கிறது.

                  வண்டு அலங்கு திசைய வயக் களிற்றின்

                        மருப்பு ஒடியாடர்த்த பொன் தோள்

                  விண் தலங்கள் உறா வீங்கி, ஓங்கு உதய

                         மால்வரையின் விளங்க

      [ஆரணிய காண்டம்] சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 4] 3070

வயிரக் குன்றத் தோள்

                          இராவணனின் வயிரக் குன்றத் தோள்கள்

எல்லாம் ஆதிசேடனின் படங்களின் வரிசை போலத் தோன்று கிறது!

            வாள் உலாம் முழுமணிகள் வயங்கு ஒளீயின்

                   தொகை வழங்க, வயிரக் குன்றத்

            தோள் எலாம் படி சுமந்த விட அரவின்

                    பட நிரையின் தோன்ற

    [ஆரண்ய காண்டம்] [சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 5] 3071

பல தோள்கள்

                        இந்நிலையில் மூக்கறுபட்டுத் தலைவிரி கோலமாக வருகிறாள் சூர்ப்பணகை. இராவணன் காலில் விழுகிறாள். உன்னை இக்கோலம் செய்தவர் யார் என்று கேட்ட தும்  மானிடர் இருவர் என்கிறாள். இதைக்கேட்ட இராவணன் வெட்கமும் சீற்றமும் அடைகிறான். தோளும் உள நானும் உளன் அன்றோ?

             இனி பழி சுமக்க, பத்துள தலைப்பகுதி;

                   தோள்கள் பல அன்றே?

                [சூர்ப்பணகை சூழ்ச்சிப்படலம் 61] 3127

என்று தன்னையே எள்ளி நகையாடுகிறான்

மாகத் தோள்

                         உன்னை இக்கோலம் செய்யக் காரணம் என்ன? என்று இராவணன் கேட்டதும், சீதையின் அழகைப் பற்றி விரிவாகச் சொல்கிறாள்.

      மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண் இடையினாளை

      மாகத்தோள் வீர! பெற்றால் எங்ஙனம் வைத்து வாழ்தி?

                        [சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 76] 3142

என்று ஆசை காட்டுகிறாள்

ஆடு எழில் மணித் தோள்

                              சூர்ப்பணகை, சீதையினழகைப் பற்றிச்

சொல்லச்சொல்ல அவளை எப்படியாவது கவர்ந்து வர வேண்டு மென்று மாரீசன் உதவியை நாடுகிறான் இராவணன். .மாரீசன் திடுக்கிட்டு எவ்வளவோ அறிவுரைகள் சொல்கிறான் ஆனால் எல்லாம் விழலுக்கிறைத்த நீரானது! சீற்றமடைந்த இராவணன்

                                       கயிலை வெற்பு

     அங்கையின் எடுத்த எனது ஆடு எழில் மணித்தோள்

     இங்கு ஓர் மனிதற்கு எளிய என்றனை” என, தன்

     வெங்கண் எரிய புருவம் மீதுற, விடைத்தான்

      [ஆரணிய காண்டம்] [மாரீசன் வதைப்படலம் 19 3255

மெலிந்த வீரத் தோள்கள்

                                      தன்னைக் கொன்று விடுவதாக இராவணன் மிரட்டியதும் மாரீசன், இராவணன் சொல்வதைக் கேட்கத் தயாராகிறான். மாயத்தால் பொன் மானாகி சீதை இருக்குமிடம் செல்கிறான்.இலக்குவன் எவ்வளவோ தடுத்தும், சீதை பிடிவாதமாக மான் கேட்டதற்காக இராமன் மாயமானைப் பின் தொடர்கிறான். பொய்க்குரலில் மாரீசன் அலறியதைக் கேட்ட சீதை இலக்குவனைப் போகும்படி வற்புறுத்தவே இலக்கு வன் சென்றதும் கபட சந்யாசி வேடத்தில் இராவணன் வருகிறான்

                                   சீதையைக் கண்டதும் இராவணன் தோள்கள்

             வீங்கின, மெலிந்தன வீரத் தோள்களே!

மருப்பினைப் பொடி செய்த தோள்

                                    கபட சந்யாசியை உண்மையானசந்யாசி என நம்பியசீதை, ‘” தாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்க வந்தவர் இலங்கை என்று சொல்லிவிட்டு, இராவணன் பெருமைகளைச் சொல்லத் தொடங்குகிறார்

            ஆசைகள் சுமந்த பேர் அளவில் யானைகள்

            பூசல் செய் மருப்பினைப் பொடிசெய் தோளினான்

            [ஆரணிய காண்டம்] இராவணன் சூழ்ச்சிப் படலம்42

                                    இராவணனின் தற்பெருமை களைப் பொறுக்க முடியாமல் சீதை, திரண்ட தோள் மட்டும் போதுமா?

அரண் தரு திரள் தோள்

                      அரண் தரு திரள் தோள்சால உள

                               எனின், ஆற்றல் உண்டோ?

                     இரண்டு தோள் ஒருவன் அன்றோ

                          மழுவினால் எறிந்தான்?

                     [இராவணன் சூழ்ச்சிப் படலம் 61] 3379

என்று மடக்குகிறாள்

திக்கில் சென்ற திரள் தோள்

                                சீதை இப்படித் தன்னை மடக்கியதும் சீற்றம் அதிகரிக்க, கண்களிலிருந்து தீப்பொறி பறக்க

      திக்கில் சென்றன திரள் தோள் வானம் தீண்டின மகுடம்,

           திண் கை ஒன்றோடு ஒன்று அடிக்க,

                  [இராவணன் சூழ்ச்சிப் படலம் 61] 3380

மாய வேடம் வெளிப்படுகிறது!

மலையினும் வலிய தோள்

.ஆனால் இது என்ன? திசையானைகளைவென்றவன், ஒரு பெண்ணின் காலில் விழுகிறான்!

               ”கணம் குழை மகளிர்க்கு எல்லாம்

                                பெரும் பதம் கைக்கொள்” என்னா,

               வணங்கினன், உலகம் தாங்கும்

                              மலையினும் வலிய தோளான்

                  [இராவணன் சூழ்ச்சிப் படலம் 70] 3388

உயர் தோள்.

               இதன்பின் சீதையும் அவனை பலவாறு ஏளனம் செய்கிறாள். இதனால் சீற்றமடைந்தவன்

                தூண்தான் எனலாம் உயர்தோள் வலியால்

               கீண்டான் நிலம்; யோசனை கீழொடு மேல்

        [ஆரணிய காண்டம்] [இராவணன் சூழ்ச்சிப் படலம் 72

வெள்ளி வெற்பெடுத்த தோள்

                                   பர்ணசாலையோடு தூக்கித் தன் விமானத்தில் வைத்துக் கொண்டு விரைகிறான். சீதை கதறு கிறாள் மலையே! மரனே! களிறே! பிடியே! என் நிலையை இராம இலக்குவரிடம் சொல்லுங்கள் என்று முறையிட, இராவணன் அவளை ஏளனம் செய்கிறான். உடனே சீதை, உங்கள் அரக்கர் கூட்டத்தை வென்று கொன்று இருவரும் பழிதீர்ப்பார்கள் என்று ஆவேசமாகச் சொல்கிறாள். இதைக்கேட்ட இராவணன்,

            இழிதரு மனிதரோடே யான் செரு ஏற்பன் என்றால்

                  வெள்ளி வெற்பு எடுத்த தோட்குப் பழிதரும்

                  [இராவணன் சூழ்ச்சிப் படலம் 83] 3401

என்று இராம இலக்குவரை ஏளனம் செய்கிறான்

பத்தோடு பத்துத் தோள்

                                 சீதையின் அபயக்குரலைக் கேட்டு விரைந்து வருகிறான் சடாயு. இராவணனை வழி மறித்து சீதை யைக் கவர்வது அடாத செயல் என்று அறிவுரை சொல்கிறான். ஆனால் இராவணன் எதிர்க்கவே சடாயுவும் போருக்குத் தயாரா கிறான்.

            உருத்தான்; அவன் தோள் பத்தோடு பத்தின்

                        நெடும் பத்தியில் தத்தி, மூக்கால் கொத்தா

            நகத்தால் குடையா, சிறையால் புடையா

       [ஆரணிய காண்டம்] [சடாயு உயிர் நீத்த படலம் 27] 3429

என்று பலவாறு தாக்குகிறான்.

மல் இட்ட தோள்

                      இராவணன் நூறு அம்புகளை விட, சடாயு                                            ஈசனோடும்

               மல் இட்ட  தோளால் எடுத்தான் சிலை

                               வாயின் வாங்கி

            [சடாயு உயிர் நீத்த படலம் 29] 3432

இராவணனைத் தடுக்கிறான்.

வீங்கு தோள்

                           நீண்ட நேர போர் செய்தபின், இராவணன் சங்கரன் தந்த வாளால் சடாயுவின் சிறகுகளை வெட்டி வீழ்த்து கிறான். இராம இலக்குவர் வருமுன் சென்றுவிட வேண்டும் என்ப தால் தேர்க்குதிரைகளையும் தேர்ப்பாகனையும் இழந்தவன்

                  தேரிடை வைத்த மண்ணொடும்

            வீங்கு தோள்மீக்கொடு, விண்ணின் ஏகினான்

                     [சடாயு உயிர் நீத்த படலம் 50] 3452

                 சீதையைத் தேடி வரும் இராம இலக்குவர்கள் அனுமன் மூலம் சுக்கிரீவனுடன் நட்புக் கொள்கிறார்கள் ஒரு நாள் சுக்கிரீவன், ராமனிடம் ஒரு முடிப்பைத் தருகிறான்.சிறிது காலம் முன்பு ஒரு விமானம் அம்மலையைக் கடந்தபோது, அதிலிருந்த ஒரு பெண் இந்த முடிப்பைக் கீழே போட, அதை தான் எடுத்து வைத்திருப்பதாவும் ஒருவேளை அப்பெண் சீதை யாக      இருக்கலாமோ? என்று தான் சந்தேகிப்பதாகவும் கூறி,        அம்முடிப்பை ராமனிடம் தருகிறான்.

புயம் இருபது

முடிப்பைத் திறந்த இராமன்அதிலிருந்த சீதையின் நகைகளைக் கண்டு மயக்கமடைகிறான். சுக்கிரீவன் தேறுதல் சொல்கிறான்.

        திருமகள் அனைய அத் தெய்வக் கற்பினாள்

        வெருவரச்செய்துள வெய்யவன் புயம் இருபதும்

                               ஈரைந்து தலையும் நிற்க; உன்

        ஒரு கணைக்கு ஆற்றுமோ, உலகம் ஏழுமே?

            [ஆரணிய காண்டம்] [கலம் காண் படலம் 12] 3913

என்று இராமனுக்கு ஊக்கமளிக்கிறான்

                           வஞ்சகமாகச் சீதையைக் கவர்ந்து வந்த இராவணன், அவளை அசோகவனத்தில் சிறை வைக்கிறான். பிராட்டியைத் தேடி வந்த அனுமன்,அரக்கியர் கூட்டத்தின் நடுவே ஓவியம் புகையுண்டது போலிருக்கும் பிராட்டியைக் காண்கிறான். இந்நிலையில் இராவணன் மிக ஆடம்பரத்தோடு அங்கு வருகிற வைபவத்தை அனுமனோடு நாமும் பார்க்கலாம்

திண் திரள் தோள்

                        பத்துத்தலைகளிலும் அணிந்த கிரீடங்களின்

ஒளியால் இரவும் பகல் போல் காட்சியளிக்கிறது!

                மகரிகை வயிர குண்டலம் அலம்பும்

                    திண் திரள் தோள் புடை வயஙக

              [சுந்தர காண்டம்] [காட்சிப்படலம் 78] 5146

 தோள் தொறும் கிம்புரிவலயம்       

                                   திரள் தோள்களிலே(20 தோள்கள்!)

ஒவ்வொரு தோளிலும் வயிரம் பதித்த  கிம்புரி என்னும் தோளணி!

            தோள்தொறும் தொடர்ந்த, மகரிகை வயிரக்

                        கிம்புரி வலய மாச்சுடர்கள்

                            காட்சிப்படலம் 82

இலங்க வருகிறான்

மல் அடு திரள் தோள்   

                                 விண்மீன்களையும் ஒளி மழுங்கச்

செய்யும் படி வருகிறவன், சீதையிடம் காதல் பிச்சை கேட்டுத் தரையில் விழுந்து வணங்குகிறான்! இதைக் கண்ட சீதை

             மல் அடு திரள் தோள் வஞ்சன் மனம் பிறிது

                                    ஆகும் வண்ணம்

             இது தெரியக்கேட்டி, துரும்பு!

                        காட்சிப்படலம்116    

எனக் கனன்று சொன்னாள். இராவணன் சென்றபின் பிராட்டி உயிர் துறக்க முடிவு செய்த நேரம் அனுமன் கீழே குதித்து பிராட்டியை வணங்கி, “ அண்டர் நாயகன் அருட்தூதன் யான்” என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான். இராமன் கொடுத்தனுப்பிய கணையாழி காட்டி அவன் சொன்ன அடை யாளங்களையும் சொல்கிறான்.

                         அனுமனை வாழ்த்திய பிராட்டி தன்னிட மிருந்த சூடமணியைக் கொடுத்து, சில அடையாளங்களையும் சொல்லி, இன்னும் ஒரு மாதமே உயிரோடு இருப்பேன் என்று கெடு வைக்கிறாள். சூடாமணி பெற்ற அனுமன் இராவணனை சந்திக்க விரும்புகிறான். அசோகவனத்தை அழிக்கிறான். தன்னை

எதிர்த்த வீரர்களையெல்ல்லாம் அழிக்கிறான். அக்ககுமாரனைத் தேய்த்தே கொன்று விடுகிறான். இதற்குப் பழிதீர்க்கவந்த இந்திர சித் அனுமனை பிரும்மாஸ்த்திரத்தால் கட்டி இராவணன் அரண் மனைக்கு இழுத்துச் செல்கிறான்.

இவர்ந்த தோள்

                  பலரையும் வென்று கொன்ற குரங்கு பிடிபட்டது. இந்திரசித் அதை பிடித்துக் கட்டிவிட்டான் என்று தூதுவர் சொல்கிறார்கள்

                  எல்லை இல் உவகையால் இவர்ந்த தோளினன்

     (குரங்கைக்)”கொல்லலை தருக” என்றான்

       [சுந்தர காண்டம்] பிணி வீட்டு படலம் 28[ 5832

வலம்கொள் தோளினன

      வலம் கொள் தோளினான் மண் நின்று வான் உற எடுத்த

      பொலம் கொள் மாமணி வெள்ளியங்குன்று எனப்பொலிய

            [சுந்தர காண்டம்] [பிணிவீட்டு படலம் 38]  5842

அரியணையில் வீற்றிருக்கிறான்.

பொன் தோள்                          

பல்வகை இரத்தினங்கள் பதிக்கப்பட்ட சரங்கள் மேலாடையில் புரள, ஒளிவீசும் அணிகலன்கள் தோள்களில் விளங்க

         குவித்த பல்மணிக் குப்பைகள் கலையொடும் கொழிப்ப

         சவிச்சுடர் கலன் அணிந்த பொன் தோளோடு தயங்க

                [பிணி வீட்டு படலம் 42] 5846

கருங்கடல் மேருமலையையே முடியாகக் கவித்துக் கொண்டு வீற்றிருக்கிறதோ என்னும்படி அமர்ந்திருக்கிறான்

                               மந்திராலோசனையில் எவ்வளவோ அறிவுரைகள் சொன்ன போதிலும் வீடணணைக் கொன்று விடு வதாகவும் தன் முகத்திலே விழிக்க வேண்டாம் என்று வெறுத்து விட்டதாலும் வீடணன் இராமனைச் சரணடைகிறான். இலங்கை பற்றியும் இராவணன் வரபலம் பற்றி யும், வீடணன் இராமனிடம் தெரிவிக்கிறான். மேலும்

            அலங்கல் அம் தோளவன் துணவர், அந்தம் இல்

            வலங்களும் வரங்களூம், தவத்தின் வாய்ந்தவர்

       யுத்த காண்டம்] [இலங்கை கேள்விப்படலம் 32] 6547

என்றும் இராவணனுக்குத் துணயாக நிற்பவர்களின் வலிமை வர

பலம் பற்றியும் விரிவாகச் சொல்கிறான்.

திரள் புயம்                                   

         ஆன்ற எண்திசை உலகு எலாம் சுமக்கின்ற யானை     

        ஊன்று கோடு இற, திரள் புயத்து அழித்திய ஒண்மை

       தோன்றும் என்னவா துணுக்கமுற்று இரிவர், அத் தொகுதி

       மூன்று கோடியின்மேல் ஒரு முப்பத்து மூவர்

                       [இலங்கை கேள்விப் படலம் 54] 6569

திசையானைகள் பட்ட பாட்டையும் அதைக் கண்டு முப்பத்து முக் கோடி தேவர்கள் நடுங்கியதையும் படம்பிடித்துக் காட்டுகிறான்

இதுமட்டுமா?

உலப்பு இலாத் தோளினான்

      என்று உலப்புறச் சொல்லுகேன், இராவணன் என்னும்

      குன்று உலப்பினும் உலப்பு இலாத் தோளினான் கொற்றம்?

      இன்று உலப்பினும், நாளையே உலப்பினும், சிலநாள்

      சென்று உலப்பினும் நினக்கு அன்றி, பிறர்க்கு என்றும்

                                                           தீரான்

              []இலங்கை கேள்விப் படலம் 59] 6574

என்று உறுதியாகச் சொல்கிறான்                  

                                  சேதுகட்டி வானரப்படையுடன் இலங்கையை அடைகிறார்கள் இராம இலக்குவர்கள் வானர வடிவில் வந்த அரக்க ஒற்றர்களை அடையாளம் கண்டு சொல் கிறான் வீடணன். ஒற்றர்களிடம் சில சேதிகளைச் சொல்லி அனுப்புகிறான் இராமன். இதைக் கேட்ட இராவணன் பாட்டனான மாலியவான் அறிவுரை சொல்கிறான். பாட்டன் பேச்சைக் கேட்ட இராவணனுக்குச் சீற்றம் பொங்கி வர அச்சிவனே குரக்கு வடி வில் வந்தாலும் என் வரத்தால் என்னை ஒன்றும் செய்ய முடி யாது அப்படியிருக்க

புயநெடும் பொருப்பு

            கொற்றவாள் இமையோர் கோமான் குரக்கினது

                                      உருவம் கொண்டால்

            பொற்றை மால் வரைகளோ, என் புய நெடும்

                                   பொருப்பும் அம்மா!”

            [யுத்தகாண்டம்] [ஒற்றுக் கேள்விப்படலம் 88] 6833

இந்திரனே குரங்கு வடிவில் வந்தால் தான் என்ன? அடித்தவுடன் வீழ, என் தோள்கள் என்ன பொத்தை மலைகளா என்று எதிர்க்

கேள்வி போடுகிறான். என் தோள்கள் மலையினும் வலியன என்கிறான்.

பொரு இல் தோள்

                        வானர சேனையைக் காண வருகிறான்

இராவணன்.

                                         காய்களிறு அன்னான்,

              சுவடுடைப் பொரு இல் தோள்கொடு, அனேகம்

              குவடுடைத் தனி ஓர் குன்று என, நின்றான்.

                  [யுத்த காண்டம்] [இராவணன் வானரத்தானை

                                 காண் படலம் 1] 6860

மெலிந்த தோள்கள்

                        சீதையைப் பற்றிக் கேள்விப் பட்டது முதல்

 பின் பார்த்தது முதல் மெலிந்த தோள்கள் இன்று போர் என்று வந்ததும் மகிழ்ச்சியால் மேலும் உயர்ந்து விளங்கின!

                             இனிது போர் எனலோடும்,

            மெலிந்த தோள்கள் வடமேருவின் மேலும்

            வலிந்து செல்ல, மிசை செல்லும் மனத்தான்

         [இராவணன் வானரத்தானை காண் படலம் 2] 6861

அரியவாய தடந்தோள்.

                              வானரசேனையைக் காணவந்த இராவணனுடைய

                  அரியவாய தடந்தோள் வாய் உரைத்த

                     கலவைக் களி வாசம்

            [இராவணன் வானரத்தானை காண் படலம் 14] 6874

இராவணன் வருகைக்குக் கட்டியம் கூறுவது போலிருக்கிறது

திரள் தோள்

                     கோபுரத்தின் மீதேறிய இராவணன், மறைகள் இன்னமும் தேடிக் கொண்டிருக்கும் காரணப் பொருளான இராம

பிரானைக் கண்ணாரக் கண்டான் அது போழ்து

             இடித்த வன் திசை; எரிந்தது நெஞ்சம்;

             துடித்த, கண்ணினொடு இடத் திரள் தோள்கள்

          [இராவணன் வானரத் தானை காண் படலம18] 6877

தாருடைய தோள்கள்

                              இராம இலக்குவர்களும் சுவேலமலை மீதிருந்து இராவணன் முதலியவர்களை காண்கிறார்கள். அப்

பொழுது வீடணன், இராவணனைச் சுட்டிக்காட்டி, “அவன் தான் புன் தொழில் இராவணன்” என்று சொன்னதும் சுக்கிரீவன் இராவணன் மேல் பாய்ந்து விடுகிறான். இருவரும் உக்கிரமாகப் போர் செய்கிறார்கள்.சுக்கிரீவன்,

                                            காய்சின அரக்கன்

             தாருடைய தோள்கள் பலவும் தழுவ நின்றான்.

             [யுத்த காண்டம்]  [மகுடபங்கப் படலம் 19]  6913

சுக்கிரீவனும் இராவணனும் கடுமையாக மோதிக் கொள்கிறார் கள்,இறுதியாக சுக்கிரீவன் இராவணனுடைய மகுடத்திலிருந்த மணிகளைப் பறித்து வந்து இராமன் காலடியில் சமர்ப்பிக்கிறான்

                               இராவண்னுக்கு ஒரு சந்தர்ப்பம் தர எண்ணிய இராமன், அங்கதனைத் தூதாக அனுப்புகிறான்.திரும்பி வந்த அங்கதன், மூர்க்கன், முடித்தலை அற்றபோதன்றி ஆசை அறான்” என்று இராவணன் நிலையைச் சொல்கிறான்

கொற்றப் பொன் தோள்

                              இராம இராவண யுத்தம் ஆரம்பமாகி

விட்டது. முதல் போரில் சுக்கிரீவனும் இராவணனும் போர் செய் கிறார்கள். பின் அனுமனும் இராவணனும் எதிர்ப்படுகிறார்கள். அனுமன் ஒரு சிகரத்தை வீசுகிறான். அது

                  உருமினும் கடுக ஓடி, கொற்றப் பொன் தோள்

         பூட்டிய வலயத்தோடும், பூழியாய்ப் போயிற்று அன்றே

           [யுத்த காண்டம்]   [முதற் போர் புரி படலம் 135] 7151

உயர் தோள் பல!

                              அனுமனுடன் போர் செய்ய வருகிறான் இராவணன். ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரையொருவர் குத்த வேண்டும். யார் வலிமை உள்ளவர் என்பதை அது தீர்மானிக்கும்.

அனுமன்    “உரக்குப்பையின் உயர் தோள் பல உடையாய்!

                                     உரன் உடையாய்

              குரக்குத் தனிக்கரத்தின் புடைப் பொறை

                              ஆற்றுவை கொல்லாம்?

                  [முதற் போர் புரி படலம் 165]   7181

என்று சவால் விடுகிறான். இருவரும் ஒருவரையொருவர் குத்திக்

கொள்வதோடு, மற்றவரைப் பாராட்டவும் செய்கிறார்கள்!

 பொருப்பை எடுத்த தோள்கள்

                                       இருவரும் போர் செய்வதை இலக்குவன் பார்க்கிறான். இலக்குவனோடு போர் செய்த இராவணன், இலக்குவன் மேல் வேலை எறிகிறான். மயங்கிய இலக்குவனைத்தூக்கிச் செல்ல இராவணன் முயல்கிறான். இது என்ன?

          எண் வகை மூர்த்தியைத் துளக்கி, வெண் பொருப்பை

 எடுத்த தோள்களுக்கு எழுந்திலன்—இராமனுக்கு இளையான்!

                  [முதற் போர் புரி படலம் 209]  7225

ஆனால் அனுமன் வந்து, தாய்க்குரங்கு தன் குட்டியை எப்படி லாவகமாகத் தூக்கிச் செல்லுமோ, அது போல் அநாயாசமாகத் தூக்கிச் செல்கிறான்!

வரையினை எடுத்த தோள்

                                இராமனும் இராவணனும் நேருக்கு நேர் கடுமையாகப் போர் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில்

இராவணன் தன் சிலை,கவசம் என ஒவ்வொன்றாக இழந்து கடைசியில் தன் மகுடத்தையும் இழக்கிறான், வெறுங்கையோடு நிற்கும் அவன் நிலை கண்டு இரங்கி, இராமன், “இன்று போய்

போர்க்கு நாளை வா” என்று அருள் செய்கிறான்

      வாரணம் பொருதமார்பும் வரையினை எடுத்த தோளூம்

      வீரமும் களத்தே போட்டு, வெறுங்கையே மீண்டு போனான்!

       [யுத்த காண்டம்] கும்பகருணன் வதைப் படலம் 1] 7272

வாடிய தோள்கள்

                        முதல்நாள் போரில் அனைத்தையும் இழந்து வெறுங்கையோடு இலங்கை சென்ற இராவணன் சீதை நகுவளே என்று நாணத்தால் சாம்புகின்றான் இராவணனின் பாட்டனான மாலியவான் வந்து ஆறுதலாக

      ”வருந்தினை, மனமும்; தோளும் வாடினை, நாளூம் வாடாப்

       பெருந்தவம் உடைய ஐயா!—-என், உற்ற பெற்றி என்றான்

                  [கும்பகருணன் வதைப்படலம் 12] 7284

திரண்ட தோள்

                               தன் தோல்வியை நினைத்து வருந்தும் இராவணனுக்கு கும்பகருணனைப் போருக்கு அனுப்பினால் என்ன என்று யோசனை சொல்கிறான் மகோதரன் உறங்கும் கும்பகரு ணனை மிகவும்  முயற்சி செய்து எழுப்பி இராவணனிடம் அனுப்பு கிறார்கள் கிங்கரர்கள்.

                  வன் துணைப் பெருந்தம்பி வணங்கலும்

                  தன் திரண்ட தோள் ஆரத் தழுவினான்

                     [கும்பகருணன் வதைப்படலம். 72]  7342

              இக்காட்சி நின்ற குன்று ஒன்று (இராவணன்) சென்ற குன்றைத்(கும்பகருணன்) தழுவியது போலிருந்ததாம்!

                  நின்ற குன்று ஒன்று, நீள் நெடுங்காலொடும்

                  சென்ற குன்றாத் தழீஇயன்ன

என்கிறான் கவிஞன்.

மாதிரம் கடந்த தோளான்

                       கும்பகருணனைப் போருக்கு அனுப்பியபின் மீண்டும் சீதையின்நினவு வர இராவணன் அவளை வசப்படுத்த என்ன செய்யலாம் என்று மகோதரனுடன் ஆலோசிக்கிறான்

            மாதிரம் கடந்த தோளான், மந்திர இருக்கை வந்த

             [யுத்தகாண்டம்] [மாயா சனகப் படலம் 2]  7633

மகோதரனிடம் தன் எண்ணத்தைத் தெரிவிக்கிறான். 

சுடர்மணித் தோள்

சீதையைக் காண்பதற்காக இப்படிஅசோகவனனம் வருகிறான்.                             சுடர் மணித் தோளில் தோன்றும் 

        பொன்னரிமாலை நீல வரையில் வீழ் அருவி பொற்ப

        நல் நெடுங் களீமால் யானை நாணுற, நடந்து வந்தான் 

                      [மாயா சனகப் படலம் 5] 7636                 

வந்தவன்

        இட்டதோர் இரண பீடத்து, அமரரை இருக்கை நின்றும்

       கட்ட தோள்–கானம் சுற்ற கழல் ஒன்று கவானின் தோன்ற,

       வட்ட வெண் கவிகை ஓங்க, சாமரை மருங்கு வீச,

       இருந்தனன்

                      [மாயா சனகப் படலம் 7]  7639

 குவவுத் தோள்    

         பின்

,                                       எழுந்து சென்று

           குன்று உரைத்தாலும் நேராக் குவவுத்தோள்

                  நிலத்தைக் கூட முடி படி நெடிதின் வைத்தான்!

                  [மாயா சனகப் படலம் 8, 15, 16]

இராவணன்காதல் மயக்கத்தில் பிதற்றியதைக் கேட்ட சீதை,

அவனைக் கடுமையாகச் சாடினாள். இதற்குள் கும்பகருணன் மாண்ட செய்தி வரவே இராவணன் அலறிக் கொண்டே செல் கிறான் கும்பகருணனுக்குப் பின் அதிகாயன் போர் செய்ய வரு கிறான் அவனை இலக்குவன் வீழ்த்துகிறான். தம்பியின் மரணத் திற்குப் பழி தீர்க்க இந்திரசித் விரைகிறான. முதலில் அனுமனு டன் போர் செய்கிறான்

மருப்பை உற்ற திரள் தோள்

               அனுமன் மலையை வீசுகிறான். என்ன நடக்கிறது?

            செருப்பயிற்றிய தடக்கை ஆளி செல

                  விட்ட குன்று, திசையானையின்

            மருப்பை உற்ற திரள் தோள் இராவணன்

                        மகன் தன் மார்பின்

                  [யுத்தகாண்டம்] [நாகபாசப் படலம் 80]  8081

மோதி பொடிப்பொடியாகச் சிதறியது இந்திரசித் நாகபாசம் ஏவி அனைவரையும் கட்ட எல்லோரும் மயங்கி விடுகிறார்கள். இந்திரசித் அரண்மனை சென்று அனைவரும் வீழ்ந்து பட்டதாக இராவணனிடம் தெரிவிக்கிறான்.இராமனும் இலக்குவன் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு துயரத்தால் அரற்றுகிறான். கருடன் வரவால் அனைவரும் மீண்டு எழுகிறார்கள்.  ஆரவாரம் செய்கிறார்கள்

,                                                           “போரில்

   மங்கினர் பகைஞர்” என்ற வார்த்தையே வலியது!” என்னா

   அங்கையோடு அங்கை கொட்டி, அலங்கல் தோள் குலுங்கச்

                       [நாகபாசப் படலம் 276]   8277

சிரிக்கிறான்

மந்தரம் அனைய தோள்

                                       இராவணன் இந்திரசித்தைக் காணச் செல்கிறான். வந்தவணை எழுந்து வணங்கக் கூட இயலாத நிலையில் இருக்கும் இந்திரசித்தைக் கண்டு திடுக்கிட்ட தந்தையிடம்,

                                                ”மனிதன் நோன்மை

மந்த்ரம் அனைய தோளாய்! வரம்பு உடைத்து அன்று மன்னோ

                         [நாகபாசப் படலம் 288]   8289

என்று இராம இலக்குவர்களளிடம் போரில் தான் பெற்ற அனுப வத்தை வியந்து பாராட்டுகிறான். மறுபடியும் போர் செய்யவந்த இந்திரசித்தை, நிகும்பலை யாகம் செய்யவிடாமல் வீடணன் உதவியோடு தடுத்து இலக்குவன் வீழ்த்துகிறான். இந்திரசித்தும் மாண்டபின் தாளமுடியாத சோகத்தால் சீதையைக் கொல்லச்செல்கிறான் இராவணன். மகோதரன் தடுத்து நிறுத்துகிறான் படைகளைத் திரண்டு வரும்படி ஆணையிடுகிறான் இராவணன்.. பல இடங்களிலிருந்தும் படைகள் திரளுகின்றன.

பெரிய திண் புயம்

                            படைத்தலைவர்கள் ஒருமுகமாய்

            “பெரிய திண் புயன் நீ உளை, தவ வரம் பெரிதால்

             அரியது என் எமக்கு?” என்றனர்

             [யுத்த காண்டம்] [படைக்காட்சிப் படலம் 34]   9280

 அடல் கடந்த தோள்

                               மூலபலப் படைகளும் அழிந்தபின், இராவணன் தானே போர் செய்யத் தயாராகிறான்

அடல் கடந்த தோள்

      கடல் கடைந்த மால் வரையினைச் சுற்றிய கயிற்றின்

      அடல் கடந்த தோள் அலங்கு போர் வலயங்கள் இலங்க

                  [இராவணன் தேர் ஏறு படலம் 10] 9651

துதையும் குங்குமத் தோள்

             துதையும் குங்குமத் தோளோடு தோளிடைத் தொடர;

             புதை இருள் பகைக் குண்டலம் அனையவை பொலிய

             சிதைவு இல் திங்களும் மீனும் போல் முத்து

                                                        இனம் திகழ;

                   [இராவணன் தேர் ஏறு படலம் 11]  9652

போர்க் கோலம் கொள்கிறான். வேதியர்களுக்கு தானம் வழங்கிய பின் அந்தத் தேரைத் தொழுது ஏற தேவர்கள் மயங்கித் திகைக்கி றார்கள். அவனோ,

          மன்றல் அம் குழல் சனகி தன் மலர்க்கையான் வயிறு

          கொன்று அலந்தலைக்கொடு, நெடுந்

                                   துயரிடைக் குளித்தல்;

          அன்று இது என்றிடின், மயன் மகள்

                                  அத் தொழில் உறுதல்

          இன்று இரண்டின் ஒன்று ஆக்குவென்

      என்று சபதம் செய்கிறான்

     அலகு அளந்தறியா பல் தோள்

      பல களம் தலை மௌலியோடு இலங்கலின், பல் தோள்

      அலகு அளந்து அறியா நெடும் படைகளோடு அலங்க,

      உலகு அளந்தவன் வளர்ந்தவன் ஆம் என உயர்ந்தான்     

                  [இராவணன் தேர் ஏறு படலம் 27]  9668

பின்,

புடைத்த தோள்                                    

                                                 பகலவன் பசும்பொன்

            தசும்பு நின்று இடைந்து இரிந்திட, மதி தகை அமிழ்தின்

            அசும்பு சிந்தி நொந்து உலைவுற, தோள் புடைத்து

                                                              ஆர்த்தான்

                        [இராவணன் தேர் ஏறு படலம் 28] 9669

            எழுந்து வந்தனன் இராவணன் இராக்கதத் தானைக்

            கொழுந்து முந்தி வந்து உற்றது; கொற்றவ!

                                                   குலுங்குற்று

            அழுந்துகின்றது நம்பலம். அமரரும் அஞ்சி

            விழுந்து சிந்தினர்” என்றனன் வீடணன்

                        [இராவணன் தேர் ஏறு படலம் 35] 9676

                               இராமனுக்காக இந்திரன் அனுப்பிய தேரை மாதலி கொண்டு வருகிறான். இராமன் தேர் ஏறியதும்

”வெல்க வேந்தர்க்கு வேந்தன் அனுமன் தோள் வாழிய என்று வானவர் வாழ்த்தினர்

இராம இராவணன் போர் ஆரம்பமாகிறது. மகோதரன் இராம னோடு எதிர்த்துப் போரிட முடியாமல் மாண்டு போகிறான், இராவணனைத் தனிமைப்படுத்தினால் தான் வெல்லமுடியும்என்பதை உணர்ந்த இராமன் வெகு வேகமாகச் சேனைகளை அழித்தான் அப்போது, இராவணனின்

          சுடர் மணி வலயம் சிந்தத் துடித்தன

                           இடத்த பொன் தோள்

                  [இராவணன் வதைப் படலம் 18]   9721

முழவு இடு தோள்

                                     இருவரும் சளைக்காமல் போர் செய்கிறார்கள். மாற்றி மாற்றி அம்பு மழை பொழிகிறார்கள். ஒரு கட்டத்தில் இராவணன் பொழிந்த அம்பு மழையால் வானர சேனை இறக்கத் தொடங்கியது. வானர சேனை குறைவதைக் கண்ட இராமன்,

                  முழவு இடி தோளொடு முடியும் பல்தலை

            விழ விடுவேன்; இனி விசும்பு சேமமோ?       

                       [இராவணன் வதைப் படலம் 60]  9763

என்று முடிவெடுக்கிறான். அப்போரில் இராவணன் தேர் எது இராமன் தேர் எது என்று கண்டுபிடிக்க முடியாதபடி அவ்வளவு விரைவாகப் போர் செய்கிறார்கள்!

மருப்புக் கல்லிய தோள்

வஞ்சனையும் மாயமும் உருவான இராவணன், மாயவனாகிய இராமன் மீது மாய அஸ்திரத்தை விடுகிறான்.

     இருப்புக் கம்மியற்கு இழை நுழை ஊசி என்று இயற்றி,

     விருப்பின் கோடியால் விலைக்கு

                  [இராவணன் வதைப் படலம் 120] 9823

கொல்லன் பட்டறையில் ஊசி விற்றது போலிருந்தது என்கிறான் கவிஞன். இருவரும் சரிக்குச்சரியாகப் போர் செய்யும் நேரம் இராவணன் கையிலிருந்த படைக்கலம் நழுவ உணர்ச்சியற்ற வனாய்த் தேர்த்தட்டில் மயங்கி வீழ்கிறான். இதைக்கண்டசாரதி, மாதலி இராவணன் மேல் அம்பு விடச் சொல்கிறான் ஆனால்

இராமன்,

                  எய்திறன் தவிர்ந்தான்—இமையோர்களை

                  உய்திறம் துணிந்தான், அறம் உன்னுவான்

என்கிறான் கவிஞன். ஏனென்றால் அவன் நடையில் நின்றுயர் நாயகன்!

செருக்கடந்த புயவலி  

மயக்கம் தெளிந்த இராவணன் முன்னிலும் உக்கிரமாகப் போர் செய்கிறான். இராமன் பிரும்மாஸ்திரத்தை விடுகிறான். அந்த அஸ்திரம் சக்கரப் படையோடு சென்று

            திக்கோடும் உலகு அனைத்தும் செருக்கடந்த

                        புயவலியும் தின்று, மார்பில்

            புக்கு ஓடி உயிர் பருகி புறம் போயிற்று!

                    [இராவணன் வதை படலம் 196]  9899

திணி தோள் காடு

                  கார் நின்ற மழை நின்றும் உரும் உதிர்வ

                        என, திணி தோள் காட்டின் நின்றும்

                  தார் நின்ற மலை நின்றும்,பணிக் குலமும்

                        மணிக் குலமும் தகர்ந்து சிந்த,

                  தேர்நின்று நெடு நிகத்துச் சிரமுகம் கீழ்ப்

                         பட விழுந்தான், சிகரம் போல்வான்

                         [ இராவணன் வதைப்படலம் 198] 9901

!குன்று அனைய நெடுந்தோள்

                                   இராவணன் வீழ்ந்து கிடக்கும்

நிலையைக் கண்டு வீடணன் அழுது புலம்புகிறான்.

            ” அன்று எரியில் விழு வேதவதி இவள் காண்;

                  உலகுக்கு ஓர் அன்னை” என்று

              குன்று அனைய தோளாய்! கூறினேன்;  

                    [இராவணன் வதைப்படலம் 219]  9923             

ஆனால் நீ அதை  ஏற்கவில்லை. ஆனால் இன்று இராகவன் தன் புயவலிமையை அறிந்து கொண்டாயோ? ஆனால் உன் குலம் முழுவதும் அடங்கி விட்டதே! என்று  அரற்றுகிறான்.

மலைமிசைத்தோள்

                        இராவணன் மனைவிமார்கள் வந்து, அவன்

                 மலைமிசைத்தோள்கள் மேல் வீழ்ந்து மாழ்கினார்

                [இராவணன் வதைப்படலம் 230]  9933

சிகரத் தோள்கள்

                          சிறிது தாமதமாக வந்தவர்கள்

            ஒருத்தர் மேல் ஒருத்தர் வீழ்ந்து உயிரின் புல்லினார்

            திருத்தமே அனையவன் சிகரத் தோள்கள் மேல்

                  [இராவணன் வதைப் படலம் 232] 9935

மணித்தோள்

                  இராவணன் வீழ்ச்சியைச் சொல்ல அனுமன்  அசோகவனம் வருகிறான்

                  “ ஏழை சோபனம்! ஏந்திழை சோபனம்!

                    வாழி சோபனம்! மங்கல சோபனம்

என்று வாழ்த்துச் சொல்லிக் கொண்டே வருகிறான்.போர்க்களக் காட்சியை

             தலை கிடந்தன, தாரணி தாங்கிய

             மலை கிடந்தனபோல்; மணித்தோள் எனும்

             அலை கிடந்தன; ஆழி கிடந்தென

             நிலை கிடந்தது, உடல் நிலத்தே” என்றான்

                 [யுத்த காண்டம்]  மீட்சிப்படலம் 17]  9969

நீலக்குன்று உரைத்தனைய தோள்

                               இராவண வதம் முடிந்து சீதையைச் சிறை மீட்டபின் அனைவரும் அயோத்தி திரும்பும் வழியில் பரத்துவாச முனிவர் இருப்பிடம் சேர்கிறார்கள். முனிவர், அவர் களுக்கு விருந்தளிக்கிறார்.

               அரக்கர் வேந்தன் இருபது என்று உரைக்கும் நீலக்

           குன்று உரைத்தனைய தோளும் குலவரைக்

                                         குவடும் ஏய்க்கும்

            என்று உரைத்தனைய மௌலித் தலை பத்தும்

                                          இறுத்த வீர!

                        [மீட்சிப்படலம் 194]  10145

என்று பாராட்டுகிறார். மேலும்,பரதன் எப்படி அல்லும் பகலும் ராம நாமம் சொல்லிக்கொண்டு நந்தியம்பதியில் தவக்கோலம்

பூண்டு வாழ்கிறான் என்பதையும் தெரிவிக்கிறார்.

                              இதைக்கேட்ட இராமன், அனுமனிடம் தன் மோதிரம் கொடுத்து விரைவாக நந்தியம்பதி சென்று பரத னிடம் தன் வருகையை அறிவிக்கச் சொல்கிறான்.  எரியில் புக இருந்த பரதனிடம் “ வந்தான் வந்தான் பரதா! வந்தான் ரகுராமன்! என்று அறிவித்து ஐயனின் மோதிரத்தைக்காட்டுகிறான் இராமன் வனம் சென்ற பின் நடந்தவற்றை யெல்லாம் விவரிக்கிறான்

மலையினை எடுத்த தோள்

    மலையினை எடுத்த தோளும், மதமலை திளைத்த மார்பும்

    தலை ஒரு பத்தும் சிந்தி, தம்பி தன் தோளும் தாளும்

    கொலை தொழில் அரக்கர் ஆயோர்

                   குலத்தொடும் தலத்து வீழ

    சிலையினை வளைவித்து, ஐயன் தேவர்கள் இடுக்கண்

                       [மீட்சிப் படலம் 277]  10228

தீர்த்ததை சுவாரசியமாகச் சொல்கிறான்.

                         இப்படியான தோள் வலிமை பெற்றிருந்த போதிலும் மாற்றான் மனையைக் கவர்ந்த காரணத்தால் தோள் வலியும் வரங்களின் வலிமையும்  அவனைக் காப்பாற்ற முடிய வில்லை. தன் அருமைத்தம்பிகளையும் ஆசை மகன்களையும் இழக்க நேரிடுகிறது. நாட்டையும் வீட்டையும் இழந்ததோடு தன் வாழ்நாளையும் இழக்கிறான் இந்த மாவீரன்!

==================================================================

Series Navigationதி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 24 – தூரப் பிரயாணம்
author

எஸ். ஜயலக்ஷ்மி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *