அண்டவெளியில்
ஒரு உயிர் கோளமாய்
சுழலும் பந்தில்
சூரிய விழிகளின் சிமிட்டலாய்
கருப்பு வெள்ளை ஒளி ஜாலம்
ஒரே தாளத்துடன்
ஒரே வேகத்துடன்
காலச் சக்கரமாய்
உருண்டு கொண்டு இருக்கிறது.
வருடங்கள் வந்தும் போயும்
இருக்கின்றன
பூக்கடை முன்பு
பறக்கிற அழுக்கு தூசிகள் போல
வாழ்த்துக்களோடும் ஏச்சு பேச்சுக்களோடும்.
வருடங்கள் பிறந்து கொண்டே இருக்கின்றன
வேறு வேறு வடிவங்களில்
கொரோனா போல.
பலரும் முகமூடிகளோடே
திரிகிறார்கள்.
பலர் தற்காப்புக்காக
முக மூடி போட்டுக் கொள்கிறார்கள்.
முகமூடிக்குள் பலருக்குள்ளும்
ஒரு சதி உலகம் இருக்கிறது.
சிலர் அந்த
முகமூடிக்குள் மூச்சு
விடமுடியாமலும்
முகமூடியை அவிழ்க்க
இயலாமலும்
சித்திரவதைப் பட்டுக்
கொண்டிருக்கிறார்கள்.
உண்மை முகமூடிக்கு
உள்ளேயா வெளியேயா
தெரியவில்லை.
சிலர் எல்லாவற்றையும்
கைகழுவிச்
செல்கிறார்கள்.
சிலர் எல்லோரையுமே
கைகழுவிச் செல்கிறார்கள்.
ஆண்டுகளில் இலக்குவைத்தும்
நம்மால் இலட்சியங்களை
எட்ட இயலவில்லை.
பலர் கட்சிகளைத்
தொடங்கியும் முடக்கியும்
ஆகி விட்டது.
வருடங்கள் வந்து போய்
இருக்கின்றன.
வருபவையெல்லாம்
வேறு வேறு வடிவங்களில்
இருக்கின்றன
கொரோனா போல.
குறைந்தது
நாம் எல்லோரும் இனி
ஒரே மாதிரியாகவாவது
சிரிக்க முயற்சிப்போம்
குமரி எஸ். நீலகண்டன்