இணைபிரியாமல், ஒற்றுமையாக இருக்கும் அண்ணன் தம்பியரை இராம இலக்குவர் என்று அடை மொழி கொடுத்து அழைப்பார்கள். அதே போல் எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டயிருக்கும் சகோதரர்களை, வாலி சுக்கிரீவன் என்றும் சொல்வதுண்டு.
இராவணனால் தேவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களைப் போக்கத் திருமால், “தயரதன் மதலையாக
வரப் போகிறேன். நீங்கள் அனைவரும் பூவுலகம் சென்று வானரர் களாக அவதாரம் செய்யுங்கள்” என்று அருள, கதிரவன் அம்சமாக சுக்கிரீவனும் இந்திரன் அம்சமாக வாலியும் தோன்றினார்கள்
இராவணனால் வஞ்சகமாகக் கவர்ந்து செல்லப்பட்ட சீதையைத் தேடி வரும் வழியில் சபரியும், கவந்தனும் சொன்ன சுக்கிரீவனைக் காண விழைகிறார்கள் மாணி வடிவம் தாங்கி வந்த அனுமனைச் சந்திக்கிறார்கள். அனு மன் சொல்ல இராம இலக்குவர்களைப் பற்றித் தெரிந்து கொண்ட சுக்கிரீவன்,
சரண் உனைப் புகுந்தேன், என்னைத்
தாங்குதல் தருமம் என்றான்
[கிட்கிந்தா காண்டம்] [நட்புக் கோட் படலம் 24] 3810
இராமனுக்கும் சுக்கிரீவனுக்கும் நட்பு ஏற்பட
“உன்தனக்கு உரிய இன்பதுன்பங்கள் உள்ள, முந்நாள்
சென்றனபோக, மேல்வந்து உறுவல் தீர்ப்பன்”
[நட்புக் கோட் படலம் 26]3811
என்று உறுதியளிக்கிறான். மேலும், உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார்; உன்கிளை எனது. என் காதல்
சுற்றம் உன் சுற்றம் நீ என் இன் உயிர்த் துணைவன்
[நட்புக் கோட் படலம் 27] 3812
என்றும் ஆறுதல் சொல்கிறான்..
எல்லோரும் ஒன்றாக உணவருந்தும் வேளை, சுக்கிரீவன் மனவி உபசரிக்க வராததைக் கண்ட இராமன்
அது பற்றி வினவ, அனுமன், வாலியால் சுக்கிரீவனுக்கு ஏற்பட்ட துன்பங்களையெல்லாம் சொல்கிறான். சுக்கிரீவனின் தமையனான வாலியின் தேகபலம், வரபலம் பற்றியும் விவரிக்கிறான். சுக்கிரீவன் மனைவி ருமையோடு அரசையும் வாலி கவர்ந்து
கொண்டான் என்பதைக் கேட்ட இராமன், (வாலியை வீழ்த்தி)
“தலைமையோடு தாரமும் உனக்கு இன்று தருவன்
[நட்புக் கோட் படலம் 69] 3855
என்று வாக்களிக்கிறான்.
இராமன் வாக்களித்த போதிலும் வாலி யின் தோள்வலிமை பற்றி நன்கறிந்த சுக்கிரீவன் கொஞ்சம் தயங்குகிறான். அவனுடைய தயக்கத்தைப் போக்க இராமன் ஏழு பெரிய மராமரங்களையும் ஒரே அம்பால் துளைக்கிறான்.
இராமனிடம் உரையாடும் பொழுது, ஒருநாள் வான் வழியே சென்ற விமானத்திலிருந்து ஒரு பெண் ஒரு முடிப்பைக் கீழே போட்டதைச் சொல்கிறான். ஒருவேளை அப் பெண்மணி சீதையாக இருக்கலாமோ? என்று தன் சந்தேகத்தை யும் வெளிப்படுத்துகிறான். பின் அந்த முடிப்பைக்காட்ட அதிலி ருந்தவை சீதையின் நகைகள்தான் என்று இராமன் உணர்ந்து மயக்கமடைகிறான் மயங்கிய இராமனைத் தன் தோளில் சாய்த்து ஆறுதல் சொல்கிறான் சுக்கிரீவன்.
விலங்கு எழில் தோள்——மலை போன்ற அழகிய தோள்
இராமன்,”நானும் என் வில்லும் இருக்கும் போதே சீதை தன் கலன்களைக் கழற்றி வீச நேரிட்டதே என்று தன்னையே நொந்து கொள்கிறான்
விலங்கு எழில் தோளினாய்! வினையினேனும் இவ்
இலங்கு வில் கரத்திலும் இருக்கவே, அவள்
கலன் கழித்தனள்;
[கிட்கிந்தா காண்டம்] கலன் காண் படலம் 19] 3920
அலங்கு தோள்
வாலியை வதம் செய்வது பற்றி இராமன், அனுமன் சுக்கிரீவன் மூவரும் ஆலோசனை செய்கிறார்கள் இராமன் அறிவுரைப்படி சுக்கிரீவன்.வாலியின் இருப்பிடம் சென்று,தோள் தட்டி பாதங் களைத் தரையில் தட்டி, ”வந்து போர் செய்தால் உன்னைக் கொல்வேன்” என்று போருக்கழைக்கிறான். ஆரவாரம் செய்கிறான்
இடித்து, உரப்பி, “வந்து போர் எதிர்த்தியேல்
அடர்ப்பென் என்று
அடித்தலங்கள் கொட்டி, வாய் மடித்து, அடுத்து
அலங்கு தோள்
புடைத்து நின்று, உளைத்த பூசல்
[கிட்கிந்தா காண்டம்] வாலி வதைப் படலம் 12] 3946
உறங்கிக் கொண்டிருக்கும் வாலியின் செவிகளைத் துளைக்கிறது.
சண்ட மாருதம் எனக் கிளம்பி வருகிறான் வாலி. தடுத்த மனைவி தாரையைச் சமாதானம் செய்து, குன்றின் மேல் நரசிங்கம் போல் நிற்கிறான் வாலியப் பார்த்த இலக்குவன்,சுக்கிரீவன்
, தம்முன் வாழ்நாள் கொள்ள கொடுங்
கூற்றுவனைக் கொணர்ந்தான்
இவனை எவ்வளவு தூரம் நம்பலாம்? என்று தன் சந்தேகத்தைத் தெரிவிக்கிறான். ஆனால் இராமன்,”எல்லோரும் பரதன் போல் இருப்பார்களா?” என்று எதிக் கேள்வி கேட்டு இலக்குவனை மேற்
கொண்டு பேசவிடாமல் செய்து விடுகிறான்.
இதே சமயம் வாலி, சுக்கிரீவன் இரு வரும் மூரித் திசை யானை என முட்டுகிறார்கள். குன்றுகள் ஒன் றோடொன்று மோதுவது போலவும் கடல்கள் இரண்டு போர் செய் வது போலவும் இருவரும் போர் செய்த போதிலும் வாலிக்கு ஈடு கொடுக்க முடியாமல் சுக்கிரீவன் தளர்ந்து போய் இராமனிடம் செல்கிறான்.
”உங்கள் இருவருக்கும் வேறுபாடு தெரியாததால் அம்பு விட முடியவில்லை. எனவே நீ இந்த கொடிப்பூச்சூடிச் செல்”
என இராமன் சொல்ல கொடிப்பூ அணிந்து சுக்கிரீவன் மீண்டும் போர் செய்யச் செல்கிறான். இருவரும் உக்கிரமாகப் போர் செய் கிறார்கள், தோள் வலிமையை இழந்த சுக்கிரீவன் மேல் இரக்க
மில்லாமல் அவனைத் தரையில் மோதிக் கொல்ல முயன்ற தருணம் இராமன்அம்பு தொடுக்கிறான். வாலி கலங்கி, மேருமலை வேர் பறிக்கப் பெற்று விழுவது போல் விழுகிறான்.
அலங்கு தோள்———-விளங்கும் தோள்
அலங்கு தோள்வலி அழிந்த அத்தம்பியை அருளான்;
வலம் கொள் பாரிடை எற்றுவான் உற்ற போர் வாலி
கலங்கி, வல் விசைக்கால் கிளர்ந்து எறிவுற, கடைக்கால்
விலங்கல் மேருவும் வேர் பறித்தாலென, வீழ்ந்தான்
[வாலிவதைப் படலம் 67] 4001
வாலியின் மலை போன்ற மார்பிலிருந்து அருவிபோல் கொப்பளித்து வரும் குருதியைக் கண்ட சுக்கிரீவன்
கண்ணீர் பெருக நீண்ட தரையில் வீழ்ந்தான்
பாசத்தால் பிணிப்புண்ட அத்தம்பியும் பசுங்கண்
நேசத் தாரைகள் சொரிதர, நெடு நிலம் சேர்ந்தான்
[வாலிவதைப் படலம் 76] 4011
தன்முன் வந்து நின்ற இராமனைக் கேள்விக் கணைகளால் துளைக்கிறான் வாலி. ”இருவர் பொரும் சமயம் மறைந்து நின்று அம்பு போடுவதுதான் அறமா? அரக்கர் அழிவு செய்தால் குரக் கைத்தண்டிப்பது தான் மனு நீதியா?” என்றெல்லாம் வாதாடுகி றான்.
உள்ளுணர்வு வரப்பெற்ற வாலி, வெற்று அரசு எய்தி எம்பி வீட்டு அரசு எனக்கு விட்டான் என்று சமாதானம் அடைகிறான். தம்பி சுக்கிரீவன் மேலுள்ள பாசத்தால் இராமனிடம் ஒரு வரம் கேட்கிறான் மது அருந்தி அறிவு மயங்கிய நிலையில் தீயகாரியங்களைச் செய்யத் துணிந்தால், என் தம்பி மேல் கோபம் கொண்டு, என்மேல் ஏவிய அம்பு என்னும் யமனை அவன்மேல் ஏவ வேண்டாம் என்று இராமனிடம் வேண்டுகிறான்.
“பூ இயல் நறவம் மாந்தி, புந்தி வேருற்ற போழ்தில்
தீவினை இயற்று மேனும் எம்பிமேல் சீறி என்மேல்
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல்”
[வாலி வதைப் படலம் 134] 4068
குன்றினும் உயர்ந்த தோள்—–மலையினும் உயர்ந்த தோள்
என்று வேண்டிக் கொள்கிறான் இந்தத் தமையன்! மேலும் ஒரு கோரிக்கை! தமையனைக் கொல்வித்தான் இவன் என்று யாரும் இவனைப் பழிக்காமல் நீ தடுக்க வேண்டும் என்ற வன் சுக்கிரீவனை நோக்கி, ”குன்றினும் உயர்ந்த தோளாய்! வருந்தலை” என்று தம்பியைத் தழுவிக் கொள்கிறான்
”பொன் குன்றம் அனைய தோளாய்!
நிற்கின்ற செல்வம் வேண்டி நெறி நின்ற
பொருள்கள் எல்லாம்
கற்கின்றது இவன் தன் நாமம்; கருதுவது
இவனைக் கண்டாய்
பொற்குன்றம் அனைய தோளாய்!
[வாலி வதைப் படலம் 139] 4074
என்று இராம நாமப் பெருமை பற்றி பேசுகிறான். மேலும்
மற்று இவன் சுற்றத்தோடும் உன் அடைக்கலம்” என்று இராம னிடம் ஒப்படைக்கிறான்.
இராமன் ஆணைப்படி, இலக்குவன், சுக்கிரீவனுக்கு நூல்முறை மௌலி சூட்டுகிறான்.
”கிஷ்கிந்தை சென்று அரசு புரிந்து, கார்காலம் கழிந்தபின் சீதை யைத் தேடும் பணியில் ஈடுபடலாம்”,என்று வழியனுப்புகிறான்
பாழி அம் தடந் தோள்——வலிமை வாய்ந்த அழகிய பெரிய தோள்
சுக்கிரீவனுக்கு விடை கொடுத்தனுப்பும் நேரம் சுக்கிரீவன், இராமனைத் தன்னுடன் வந்து தங்கும் படி அழைக்கிறான். வீர! நான் பதினான்கு ஆண்டுகள் வனத்தில் வசிப்பதாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அரசர்கள் வாழும் செல்வம் கொழிக்கும் வள நகரில் தங்க உடன்பட மாட்டேன் என்று மறுத்து விடுகிறான்.
ஏழ் இரண்டு ஆண்டு, யான் போந்து எரி வனத்து
இருக்க ஏன்றேன்;
வாழியாய்! அரசர் வைகும் வள நகர் வைகல் ஒல்லேன்
பாழி அம் தடந்தோள் வீர!
[கிட்கிந்தா காண்டம்] அரசியல் படலம் 21] 4135
. சுக்கிரீவன் கிஷ்கிந்தை சென்று, தாரையை வணங்கி அவளைத் தாய் என மதித்து தமையனின் அறிவுரைகளைத் தந்தை சொல் எனக் கொண்டு அரசு செய்ய லானான். நாட்கள் நகர்ந்தன. சுக்கிரீவன் சொன்னபடி வரவில்லை. சீற்றமடைந்த இராமன், ”விராதன் போன்ற அரக்கர்களைக் கொன்ற வில்லும் அம்பும் கைவசம் இருக்கிறது, யமனும் இருக் கிறான்.நல்லறம் செய்ய எடுத்த வில்லும் வாலியைப்படுத்த அம் பும் எம்மிடம் உள்ளது” என்று சுக்கிரீவனுக்கு நினைவூட்டு” என்று இலக்குவனிடம் சொல்லி அனுப்புகிறான்.
இம்பர் நல்லறம் செய்ய எடுத்த விற்
கொம்பும் உண்டு; அருங் கூற்றமும் உண்டு
உங்கள் அம்பும் உண்டு என்று சொல்லு,
[கிட்கிந்தைப் படலம் 4] 4272
. சிங்கம் போல் சீற்றம் கொண்டு வரும் இலக்குவணைக் கண்ட வானரர்கள், அங்கதனிடம் சென்று செய்தியைத் தெரிவிக்கிறார்கள்.அங்கதன் சுக்கிரீவனைத் தேடிச் செல்கிறான். சுக்கிரீவன் மதுமயக்கத்தில் இருப்பதை அனுமனிடம் சொல்ல இருவரும் தாரையிடம் செல்கிறார்கள். தாரை, ”நீங்கள் கொடுத்தவாக்கை மறந்து விட்டீர்கள். அவர்கள் வீரத்தைக் குறைத்து மதிப்பிட்டீர்கள், அவர்கள் கோபித்தால் என்ன ஆகும் தெரியுமா?” என்று கடிந்து கொள்கிறாள்
இதற்குள் இலக்குவன் வரவே வானரர்கள் அஞ்சி ஓட, தாரை, ”நான் எதிர் கொள்கிறேன் என்று உறுதியளிக் கிறாள். தன் தோழிகளுடன் இலக்குவனை எதிர் கொண்டு இனி மையாகப் பேசி, அவன் சீற்றத்தைத் தணிக்கிறாள். மயக்கம் தெளிந்த சுக்கிரீவன், அங்கதனிடம், இலக்குவன் வருகை பற்றி ஏன் தெரிவிக்க வில்லை? என்று வினவுகிறான். அங்கதன், நடந்தவற்றை விவரிக்கிறான். இலக்குவனைச் சந்திக்கும்படி சொல்கிறான்
எறுழ் வலித் தடந்தோள்—மிக்க வலிமை பொருந்திய பெரிய
தோள்
உணர்த்தினேன் முன்னர்; நீ அஃது உணர்ந்திலை;
உணர்வின் தீர்ந்தாய்;
புணர்ப்பது ஒன்று இன்மை நோக்கி, மாருதிக்கு
உரைக்கப் போனேன்;
எறுழ் வலித் தடந்தோள் எந்தாய்!
கணத்திடை, அவனை, நீயும் காணுதல்
கருமம்” என்றான்
[கிட்கிந்தா காண்டம்] [கிட்கிந்தைப் படலம் 85] 4353
சுக்கிரீவன் இலக்குவனை சந்திக்கச் செல்கிறான்.
சீற்றம் தணிந்த இலக்குவன், சுக்கிரீவனை வரவேற்கிறான்
எழுவினும், மலையினும் எழுந்த தோள்களால் தழுவினர்
இருவரும்.
இராமனைச் சந்தித்தபின் வானரப் படைகளைத் திரட்டுகிறான்.
சேனை வந்து இறுத்தலும் அருக்கன் தனயன்
நொய்தினின் தயரதன் புதல்வனைச் சார்ந்தான்
நினையும் முன்னையும் வந்து அடைந்தது நின்
பெருஞ்சேனை
”உன் சேனை வந்து சேர்ந்து விட்டது”என்று சுக்கிரீவன் அறிவிக் கிறான். அனுமனை அழைத்து, அங்கதன் தலைமையில் வானரர் களுடன் தென் திசைக்கு அனுப்புகிறான்,
தென் திசையில் சென்ற அனுமன் கடல் தாண்டி இலங்கை சென்று அசோகவனத்தில் சீதையைக் காண் கிறான். இராமன் சொன்ன அடையாளங்களைச் சொல்லி, கணை யாழியும் காட்டுகிறான். பிராட்டியிடம் சூடாமணி பெற்று, இராவ ணனையும் சந்திக்கிறான். இராவணனால் வாலில் தீ வைக்கப் பெற்று அத் தீயாலேயே இலங்கையை அழித்து. உடனடியாக இராமனிடம் திரும்புகிறான். வானரர்கள் திரும்ப வேண்டிய காலம் கடந்ததால் இராமன் பலவாறு எண்ணிச் சோர்ந்து போகிறான். அவனுக்குச் சுக்கிரீவன் தேறுதல் சொல்கிறான்.
தூண் திரண்டனைய தோள்—-தூண் திரண்டிருப்பது போன்ற தோள்
இந்த நேரம் அனுமன் வந்து விடுகிறான்
பிராட்டியைக் கண்டதையும், இன்னும் ஒரு திங்களே உயிரோடு இருப்பேன் அதற்குள் ஐயன் என்னை விடுவிக்க வேண்டும் என்று அவள் காலக்கெடு வைத்திருப்பதையும் சொல்கிறான். பிராட்டி யைக் கண்டு பிடித்து விட்டோம் என்று மகிழ்ந்த சுக்கிரீவனிடம்
“வீணாக இன்னும் கால தாமதம் செய்வாயோ? என்று இராமன்
வினவ பொருக்கென சுக்கிரீவன் எழுந்து, “ படைகள் எழட்டும்” என்ற்ய் கட்டளையிடுகிறான் காலம் தாழ
ஈண்டு இனும் இருத்தி போலாம் என்றனன்; என்றலோடும்
தூண் திரண்டனைய தோளான், பொருக்கென எழுந்து
[சுந்தர காண்டம்] திருவடி தொழுத படலம் 49] 6055
சுக்கிரீவன் ஆணையிட்டதும் எழுபது வெள்ளம் வானர சேனை திரண்டது.தென்திசையில் பரவியது
எழுக வெம்படைகள்! என்றான்; ஏ எனும் அளவில் எங்கும்
வழுவில் வெள்ளத் தானை, தென் திசை வளர்ந்தது அன்றே!
[திருவடி தொழுத படலம் 50] 6056
அனைத்து வானரப் படைகளுடன் இராம இலக்குவர்கள் பன்னிரண்டு நாட்களில் கடற்கரையை வந்தடை கிறார்கள்.
========================================================================
சுக்கிரீவன் (பகுதி 2)
சீதையை விட்டு விடும்படி இராவணனுக்கு அறிவுரைகள் சொன்ன வீடணனைக் கொன்று விடுவதாக இராவ ணன் மிரட்டி விரட்டவே வீடணன் இராமனிடம் சரணடைகிறான்.
சரணடைந்தவனைச் சேர்த்துக் கொள்ளலாமா என்பது பற்றி விவாதம் எழுகிறது. சுக்கிரீவன் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக நிற்கிறான்.பலரும் சுக்கிரீவனின் கருத்தை அமோதிக்கிறார்கள். அனுமன் மட்டும் வீடணனைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு பலவிதமான நியாயங் களை எடுத்துச் சொல்கிறான். இறுதியாக இராமனும் சரணடைந்த வரைக் காப்பதே அறம் என்று தன் தரப்பு வாதங்களை முன் வைக் கிறான். பின், சுக்கிரீவா! நீயே சென்று குற்றமில்லாத வீடணனை
அழைத்து வா” என்கிறான்
“கதிரோன் மைந்த!
கோதிலாதவனை நீயே என்வயின் கொணர்தி” என்றான்
இரு குன்றம் அனைய தோள்—இரண்டு மலைகளை ஒத்த தோள்
சுக்கிரீவன் வருவதைக் கண்ட துமிந்தன் வீடணனிடம் ”உன்னை அழைத்துச் செல்ல கதிரவன் மைந்தனான, இரு மலைகளை ஒத்த தோள்களை உடைய சுக்கிரீவன் வரு கிறான்” என்று கூற வீடணன் மகிழ்ச்சியுடன் சுக்கிரீவனை வரவேற்கச் செல்கிறான்
உன்னை எதிர் கொளற்கு அருக்கன் தந்த
இரு குன்றம் அனைய தோளான் எய்தினன்” என்னலோடும்
திரிகின்ற உள்ளத்தானும், அகம் மலர்ந்து அவன் முன் சென்றான்
[யுத்த காண்டம்] [வீடணன் அடைக்கலப் படலம் 119] 6483
எழுவின் தோள்—–தூண் போன்ற தோள்
மனத்தூய்மை இல்லாதவர்கள் எவ்வளவு
காலம் பழகினாலும் ஒன்றுபடமாட்டார்கள். ஆனால் தூயமனம் கொண்ட சான்றோர்கள் சந்தித்த அக்கணமேஒன்றிவிடுவார்கள். விரைந்துவந்து, ஒத்த உணர்வுடன் வீடணன், சுக்கிரீவன் ஆகிய இருவரும் ஒரு நாளீல் பொருந்திய பகலும் இரவும் போலத் தழு
விக் கொள்கிறார்கள்
தொல் அருங் காலம் எல்லாம் பழகினும், தூயர் அல்லார்
புல்லலர்; உள்ளம் தூயார் பொருந்துவர் எதிர்ந்த ஞான்றே;
ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற, இருவரும் ஒரு நாள் உற்ற
எல்லியும் பகலும் போல, தழுவினர் எழுவின் தோளார்
[வீடணன் அடைக்கலப் படலம் 120] 6484
வருணன் வழிதர சேது கட்டி கடலைக் கடக்கிறார்கள் இராம இலக்குவர்கள். இராவணன், வானர சேனையைக் காண, ஒரு கோபுரத்தின் மேல் நிற்கிறான்.வானர சேனையில் ஒவ்வொரு வராக அறிமுகம் செய்கிறான் சாரன்.
வாலியோடு இவ்வுலகம் நடுங்கும்படி போர் செய்து புகழ் பெற்ற சுக்கிரீவன் இராமனோடு நட்புக் கொள் ளும் பேறு பெற்றவன். இவன் எல்லோரையும் விட வலிமை வாய்ந்தவன் என்று சுக்கிரீவனைக் காட்டுகிறான்
ஐய! வாலியொடு இவ்வண்டம் நடுங்கச்
செய்த வன் செருவினின் திகழ்கின்றான்
வெய்யவன் புதல்வன்; யாரினும் வெய்யான்
[இராவணன் வானரத் தானை காண் படலம் 23] 6882
சுவேல மலை மீதிருந்து இராமனும் அரக்கர் படையைக் காண்கிறான் “அதோ கோபுரத்துக் குன்றின் மீது நிற்கிறானே அவன் தான் புன் தொழில் இராவணன் என்று வீடணன் சொன்னது தான் தாமதம், உடனே சுக்கிரீவன், இராவ ணன் மேல் பாய்ந்த சடாயுவைப்போலப் பாய்ந்தான். நிலை குலைந்த அரக்கன், ”இங்கு எதற்காக வந்தாய்? என்று கேட்க இராவணனைக் குத்தினான். இருவரும் கைகலந்து வெகு நேரம் மாறி மாறிப் பொருதுகிறார்கள்
சுக்கிரீவனைக் காணாமல் இராமன் மிக வருந்துகிறான். மாயத்தில் வல்ல இராவணனால், தன் நண்ப னுக்கு ஏதேனும் ஊறு நேர்ந்தால் அதைத் தாங்க முடியாது என்று தவிக்கிறான். நீ இல்லாமல் நான் வாழ முடியாது” என்று அரற்று கிறான். இராவணனுடன் பொருத சுக்கிரீவன், அரக்கன் மகுடமணி களைப் பறித்து அரக்கன் நாண வெற்றியோடு வருகிறான்.வந்து, தன்னைக்காணாத துன்பத்தால் அரற்றும் இராமனின் அடிகளில் மணிகளைச் சூட்டி, தொழுது அருகில் நாணி நிற்கிறான்.
கொழு மணி முடிகள் தோறும் கொண்ட நல் மணியின்
கூட்டம்
அழுது அயர்வுறுகின்றான் தன் அடித்தலம் அதனில் சூட்டி
தொழுது, அயல் நாணி நின்றான்
[யுத்தகாண்டம்] மகுட பங்கப் படலம் 33] 6928
கல்லினும் வலிய தோள்—–மலையை விட வலிய தோள்
சுக்கிரீவனைத்தழுவிய இராமன்,கல்லைவிட வலிய தோளைப் பெற்றவனே! உன்னை அக்கொடியோன் கொலை செய்திருந்தால், நான் போரில் வெற்றி பெற்றாலும் தோற்றவனா வேன். என்ன நினைத்து நீ இக்காரியம் செய்தாய்?
கல்லினும் வலிய தோளாய்! நின்னை
அக் கருணை இல்லோன்
கொல்லுதல் செய்தான் ஆகின்
வெல்லினும் தோற்றேன் யானே அல்லெனோ?
என் நினைந்து என் செய்தாய் நீ?
என்று உரிமையோடு கடிந்து கொள்கிறான்.,”அரிக்குலத்து அரச! இராவணன் சிவபெருமானிடமிருந்து மணிகளும் வயிரமும் பதிக்கப் பெற்ற சந்திரகாசம் என்னும் வாளைப் பெற்றான். நீ அவன் மகுடத்திலிருந்த மணிகளையா பறித்து வந்தாய்? இல்லை இராமன் முடிக்கப்போகும் வெற்றிக்கு அடித்தளம் இடும் வேலையை அல்லவா செய்து வந்திருக்கிறாய் என்று பாராட்டு கிறான்.
தொடி மணி இமைக்கும் தோள்—–தோள்வளையில் பதிக்கப்
பெற்ற மணிகள் ஒளிரும் தோள்
தொடி மணி இமைக்கும் தோளாய்!—சொல் இனி வேறும்
உண்டோ?
வடிமணி வயிர ஒள்வாள் சிவன்வயின் வாங்கிக்
கொண்டான்
முடி மணி பறித்திட்டாயோ? இவன் இனி முடிக்கும்
வென்றிக்கு
அடி மணி இட்டாய் அன்றோ? அரிக்குலத்து அரச!
[மகுட பங்கப் படலம் 47] 6941
அங்கதன் தூதும் பயனற்றுப் போக போர் முழக்கம் கேட்கிறது. முதல் நாள் போரில் சுக்கிரீவனும் இராவணனும் எதிர் கொள்கிறார்கள்.சுக்கிரீவன் எறிந்த பெரிய மரத்தை, இராவணன் உக்கிர வாளி ஒன்றால் தடுத்து விட்ட தோடு சுக்கிரீவன் மார்பில் எய்கிறான். சுக்கிரீவன் தளர்ந்ததைக் கண்ட அனுமன் உதவிக்கு வருகிறான். முதல் நாள் போரில் அனைத்தயும் இழந்து இராவணன் வெறுங்கையோடு போனபின்
கும்பகருணன் போர் செய்ய வருகிறான்.
கும்பகருணனும் இலக்குவனும் வெகு
உக்கிரமாகப் போர் செய்கிறார்கள். இதைக் கண்ட சுக்கிரீவன்
கும்பகருணன் தோள் முறிந்தன என்று சொல்லும்படி பெரிய மலையை எறிகிறான். ஆனால் கும்பகருணன் அம்மலையை அநாயாசமாக வாங்கி,” நீ வீசிய மலை தானா, இது? என்று அம் மலையைப் ”போ” என்று தூற்றி விடுகிறான். அவன் எறிந்த சூலத்தை அனுமன் முறிக்கிறான்
சுக்கிரீவன் மீண்டும் கும்பனை எதிர்க்கிறான். கும்பன் தன் நீண்ட கைகளால் சுக்கிரீவனை இறுக்க அவன் சிறிது உணர்வு இழக்கிறான். இதைக் கண்ட வானரக் கூட்டம் கதறுகின்றன. தேவர்களும் நடுங்குகிறார்கள்.
சுக்கிரீவன் அரவம் தீண்டிய சந்திரன் என மெலிந்து தோன்று கிறான்
மயங்கிய சுக்கிரீவனத் தூக்கிக் கொண்டு கும்பகருணன் விரைகிறான். வானரக் கூட்டம் இராமனைச் சரணடைகிறது. உடனே இராமன், கும்பன் செல்லும் வாயிலை அம்பு மழையால் அடைக்கிறான். கும்பகருணன்,” உன்னைத்தான் தேடினேன். உன் தம்பி ஓய்ந்து போனான். அனுமனும் வலி இழந் தான். அதனால் எளிதில் இவனைப் பற்றினேன் நீ இவனைக் காக்க வந்திருக்கிறாய் என்றால் நான் பாக்கியம் பெற்றவனா வேன்.
நீமட்டும் என் கையிலிருந்து இவனை மீட்டாய் என்றால் சீதையும் சிறையிலிருந்து மீண்டு விடுவாள் என்று சவால் விடுகிறான். ”இவனை மீட்கா விட்டால் நானும் இனி வில் பிடிக்க மாட்டேன்” என்று ராமன் பதிலடி கொடுத்த போது கும்பன் தலையிலிருந்து பெருகிய குருதி சுக்கிரீவன் முகத்தில் வழிய, மயக்கம் தெளிகிறான். சுக்கிரீவன் தெளிந்த போது இராம பாணத்தால் கும்பன் மயக்கமடைகிறான். இராம னைக் கண்டதும் சுக்கிரீவன் மானமும் நாணமும் சேர கும்ப னின் நாசியும் செவியும் வேரோடு கொண்டு வானவரோடு சேர்கிறான்.
சுக்கிரீவனால் மூக்கும் செவியும் இழந்ததை கும்பகருணனால் பொறுக்க முடிய வில்லை, அவ னுக்கு அது மானப் பிரச்சனை! அதனால் தன் இறுதி நேரத்தில் இராமனிடம், மூக்கு இலா முகம் என்று தேவர்களும் முனிவர் களும் என்னை நோக்காவண்ணம் என் தலையை நீக்கி, பின் அதைக் கடலுள் போக்குவாய் என்று வேண்ட.,கோரிக்கையை நிறைவேற்றுகிறான் இராமன்
தூண் திரண்டனைய திண் தோள்—-தூண் போல் பருத்த
திண்ணிய தோள்
இந்திரசித் இலக்குவனால் வீழ்த்தப் பட்டபின், மூலபலப் படைகள் திரண்டு வருகின்றன. இராமன் அப்படைகளை அழித்து வெற்றி வாகை சூடுகிறான். சுக்கிரீவன் தன் படையுடன் சென்று இராமனை வணங்கி, ஐய!“ அரக்கர் படையை வென்றது எப்படி? என்று எனக் கேட்டதும், வீடண னோடு சென்று களம் கண்டால் புலனாகும் என்று சொல்கிறான்
மூண்டெழு சேனை வெள்ளம் உலகு, ஒரு மூன்றின் மேலும்
நீண்டுள அதனை, ஐய! எங்ஙனம் நிமிர்ந்தது? என்னத்
தூண் திரண்டனைய திண் தோள் சூரியன் சிறுவன் சொல்ல,
காண்டி நீ, அரக்கர் வேந்தன் தன்னொடும் களத்தை”
[யுத்த காண்டம்] வானரர் களம் காண் படலம் 2] 9582
இராவணன் தம்பியான வீடணனுடன் சென்ற வானரத் தலைவர்கள்,கழுகும் பருந்தும், பாறும் பேய் களும், காகங்களும் கூடியிருந்த போர்க்களத்தைக் கண்டு நடுங் கினர். அங்கு அவர்கள் அடைந்த உணர்ச்சியை விவரிக்க இய லாது என்கிறான் கவிஞன்.
இந்திரன் அனுப்பிய தேரில் இராமன்
போர்க்களம் செல்கிறான். இராவணனும் தேரில் வருகிறான். இரு வரும் மாறி மாறி கணைகள் விடுகிறார்கள் இப்போரைக்காண
தேவர்கள் வானில் கூடுகிறார்கள்.
இராவணன் விட்ட அம்புகள் அனைத்தையும் துண்டித்து இராமன் குவியலாகக் குவிக்கிறான். இவற்றால் இவனை வெல்லமுடியாது என்று உணர்ந்து பிரும் மாஸ்திரத்தை விட அப்படை இராவணன் மார்பில் புக்கு ஓடி உயிர் பருகி புறம் போயிற்று. தேரினின்றும் நெடு நிலத்தில் விழுந்தான் இராவணன்.
பிராட்டியை மீட்டபின் அனைவரும் அயோத்தி செல்லத் தயாரான நிலையில்
”சுக்கிரீவா உன்னுடைய தோள் வலிமையால் பத்துத் தலைகளையுடைய இராவணனை வென்று கொன்று விட்டோம். உன் படைகள் மிகவும் தளர்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய களைப்பும் தளர்வும் நீங்கும்படி கிட்கிந்தை சென்று வாழ்வாயாக என்று விடை கூறுகிறான் இராமன்
சுக்கிரீவ! நின் தோளுடை வன்மையால் தசம் தொகு
அக்கிரீவனைத் தடிந்து, வெம்படையினால் அசைந்த
மிக்க வானரச் சேனையின் இளைப்புற, மீண்டு, ஊர்
புக்கு வாழ்க!
[யுத்த காண்டம்] [மீட்சிப் படலம் 150] 10101
இராமன் விடை கொடுக்க வானரர்கள் திடுக்கிட்டு,”அயோத்தி வந்து உன்னுடைய முடி சூட்டு விழாவில் நாங்களும் கலந்து கொள்ள அருள வேண்டும் என்று வேண்ட இராமன் சம்மதம் தருகிறான். அனைவரையும் தாங்கிக் கொண்டு
புட்பக விமானம் அயோத்தி செல்கிறது.
முடி சூட்டு நாளில்முனிவர்களூம் அந்தணர்களூம் அமைச்சர்களும் பேரறிஞர்களும் முதலில் அபிடேகம் செய்தபின் சுக்கிரீவனும் அனுமனும் வீடணனும் அபிடேகம் செய்கிறார்கள். எழுபது வெள்ளம் வானரரோடும் வந்து சுக்கிரீவன் வணங்கு கிறான் அனைவருக்கும் விடை கொடுத்து அனுப்பும் முன்பு, இராமன் பரிசளிக்கிறான்.
, முதல் பரிசு சுக்கிரீவனுக்கே! இந்திரனால் தனக்களிக்கப்பட்ட ஒளி மணிக்கடகமும் பட்டாடை களும். யானைகளும் குதிரை களும் தேர்களையும் அளித்து பிரியாவிடை கொடுத்தனுப்புகிறான் இராமன். கிட்கிந்தா காண் டத்தில் அறிமுகமாகி இறுதியாக விடை கொடுத்து அனுப்பும் வரை உற்ற தோழனாக விளங்குகிறான் சுக்கிரீவன்.
பிராட்டியைத்தேடவும் அணைகட்டவும், போர்செய்யவும் இவன் பெரிதும் உதவி செய்கிறான்
=======================================================================
- “எலி” – சிறுகதை அசோகமித்திரன் (1972)
- இருப்பதோடு இரு
- கவிதையும் ரசனையும் – 9
- புதியனபுகுதல்
- நான்கு கவிதைகள்
- மூட முடியாத ஜன்னல்
- மாசறு பொன்னே
- தோள்வலியும் தோளழகும் – சுக்கிரீவன்(பகுதி 1)
- மொழிபெயர்ப்பு கவிதைகள் – ஜரோஸ்லவ் செய்ஃர்ட்
- பல்லுயிர் ஓம்பல்
- அட கல்யாணமேதான் !
- “விச்சுளிப் பாய்ச்சல்” (ஓரு கழைக்கூத்தாடிப் பெண்ணின் கதை)