ஜெ.பாஸ்கரன்
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்க வைத்திருந்த எழுத்தாளர் ஆர் சூடாமணி – அவரது படைப்புகள் இன்றைக்கும் வாசிப்பவர்களுக்கு அளிக்கும் உணர்வுகள் அதே வீச்சுடனும், புத்துணர்ச்சியுடனும் இருப்பது, அவரது காலம் கடந்தும் உயிர்ப்புடன் இருக்கும் எழுத்துக்கும், சமூக சிந்தனைகளுக்கும் சான்றாகும்.
இறந்து போன பாட்டியின் பேத்தி ஶ்ரீமதியின் பார்வையில் சொல்லப்படுகிறது கதை –
பாட்டி இறந்து இரண்டு வாரம் ஆகிவிட்டது – தாத்தா அழவே இல்லை – யாருடனும் பேச விரும்பவில்லை. துக்கம் கேட்க வருபவர்களையும் தவிர்க்கிறார் தாத்தா.
“பாவம் இந்த வயசில் உங்களுக்கு இந்தக் கஷ்டம் வந்திருக்க வேணாம்.”
“போனவ புண்ணியவதி. பழுத்த சுமங்கலியாய் மஞ்சக் குங்குமத்தோட ஜம்னு கல்யாணப் பொண்ணாட்டம் போயிட்டா. அதை நினைச்சுத்தான் நீங்க மனசத் தேத்திக்கணும்”
“பிள்ளையும், மாட்டுப்பொண்ணும் உங்களை உள்ளங்கையில் வச்சுத் தாங்கறா. பேரன் பேத்திகளுக்கு உங்க மேல உசிரு. அதையெல்லாம் நெனச்சு ஆறுதலா இருங்கோ”
இந்த மாதிரி அர்த்தமற்ற, உயிரற்ற, உண்மையின் விளிம்பைக்கூட நெருங்காத வார்த்தைக் குப்பைகளை தாத்தா கேட்க விரும்பவில்லை.
துக்கம் கேட்க வரும் வரதனிடம், மழை வருவதைப் பற்றி, பையனின் இன்டர்வியூ பற்றி எல்லாம் கேட்டு பேச்சை மாற்றி, பாட்டியைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கிறார். “என்னைக்குமே மண்டைக்கனந்தான். மூஞ்சி குடுத்துக்கூட பேச இஷ்டப்படல்லே பாருங்கோ. அந்தம்மா எப்படித்தான் இந்த மனுஷன் கூடக் குடித்தனம் பண்ணினாளோ, பாவம்!” என்று பேசுகிறார் வந்தவர்.
தாத்தா வானத்தை வெறித்துப் பார்க்கிறார். மாட்டுத்தொழுவத்தை, துணி துவைக்கும் கல்லை, வேலியாகப் படர்ந்திருக்கும் மல்லிகைக் கொடிகளை – ஒவ்வொன்றையும் பார்வையால் தடவிக் கொடுப்பதைப் போலப் பார்க்கிறார். பாட்டி இறந்ததிலிருந்து, இரண்டு வாரமாகிறது, தாத்தா அழவே இல்லை. இப்படி இடம் இடமாக, பொருள் பொருளாக கண்களினால் வருடிக்கொடுக்கிறாரே, அவ்வளவுதான்!
அறுபதாண்டுகால உறுதுணையின் இழப்பு. பாட்டியைத் தவிர இன்னொரு பெண்ணை இவர் திரும்பிக் கூடப் பார்த்ததில்லை.
“இனிமே இப்படி யாரானும் நீட்டி முழக்கிப் பேசிண்டு என்கிட்ட அழவந்தாளோ, ஜோட்டாலேயே அடிச்சு வெரட்டிடுவேன் ஜாக்கிரதை!” என்கிறார் தாத்தா.
‘பாவம் அப்பா! அவர் வாய்விட்டுக் கதறி அழுதுட்டார்னா தேவலைன்னு எனக்குத் தோண்றது” – ஶ்ரீமதியின் அப்பா.
‘நிஜமாய்த் துக்கம் இருந்ததானால் கட்டின பொண்டாட்டி செத்துக் கிடக்கிறப்போது கூடவா கண்ணில் ஜலமே வராம இருக்கும்? பாவம் உங்கம்மா. அவருக்காகக் கொஞ்சமாவா உழைச்சா? ஆயுசெல்லாம் கூடவே இருந்தவள் போய்ட்டாளேன்னு துளிக்கூட இல்லையே!” – இது மாட்டுப் பொண்ணின் கோபம்.
கடைசீ பேரனுக்கும் கோபம். “எனக்குக் கூட மனசு தாங்கலே ஶ்ரீமதி. பாட்டி இல்லாமே வீடே நன்னா இல்லே. அவருக்கென்ன கேடு! அவர் துளிக்கூட அழல்லே. அவருக்காக நீ ஏண்டி அழறே?” என்கிறான் தன் அக்கா ஶ்ரீமதியைப் பார்த்து.
முதல் பேரன், புதிதாய்த் திருமணம் ஆனவன் தன் மனைவியிடம் சொல்கிறான். “பாட்டியைத் துக்கம் கொண்டாடறவா, பாட்டியையே புரிஞ்சுக்காதவா. அப்படிப் பார்த்தால், தாத்தா நடந்துக்கறவிதம் சரின்னுதான் சொல்லணும். பாட்டியின் பார்வையில் வாழ்க்கையே ஒரு பெரிய திருவிழா. உயிர் ஒரு நிரந்தரமான வசந்தம். அவளுக்குச் சாவில் நம்பிக்கை கிடையாது. அவளுக்காகத் துக்கம் கொண்டாடினால் அவளைப் புரிஞ்சுக்காத மாதிரின்னு தோணுது. வருத்தமிருக்கிற மனசாலே பாட்டியைத் தெரிஞ்சிக்க முடியாது. வாழ்க்கை அற்புதமானதுன்னு உணர்கிற உணர்ச்சிதான் என் பாட்டி!” – பாட்டியையும் தாத்தாவையும் சரியாகப் புரிந்து வைத்திருக்கிற பேரன்!
உலகம் உறங்கும் நள்ளிரவு வேளையில், இருளை வெறித்துக் கொண்டிருக்கிறார் – ஒவ்வொரு அறையாகச் செல்கிறார். பாட்டி பூஜை அறைக்குச் சென்று அசையாமல் சிறிது நேரம் நிற்கிறார். தொழுவம், துவைக்கும் கல், மல்லிகைக் கொடி – அங்கங்கே தயங்கித் தயங்கி நின்று மண்ணிலும் வானத்திலும் பார்வையை நெடுக அலையவிடுகிறார். தடுமாறி நடந்து வந்து, படுக்கையில் படுக்கிறார். ஆழமாகப் பெருமூச்சு விடுகிறார்.
மறுநாள் காலை தாத்தா எழுந்திருக்கவில்லை!
அறுபது வருட வாழ்க்கைத் துணையினை – இணைப் பறவையின் உணர்ச்சிகளை – முழுவதுமாகப் புரிந்துகொண்ட தாத்தாவின் துக்கம் அவரை அழவிடாமல் செய்கிறது. பாட்டியைப் புரிந்து கொண்டிருப்பதால், அவளுக்குப் பிடிக்காத துக்கத்தை வெளியில் காட்ட மறுக்கும் தாத்தாவின் மனது. அவள் பிரிவைப் பிறர் பேசுவதைக் கூட மறுதலிக்கும் மனது. உடல் மறைந்த பின்னும், அவள் உணர்வுகளுடன், அவள் புழங்கிய இடங்களில் தாத்தா – ‘என் மனம் நானறிவேன், என் இணைப் பறவையின் மனமும்’ என்று ஏதும் கூறாமல் உறக்கத்திலேயே மறையும் தாத்தா வியப்புக்கும், விருப்பத்துக்கும் உரியவர்.
சூடாமணியின் பார்வையில் மனித நேயமும், கண்ணியமும், மனிதாபிமானமும் கொண்டவர்கள் மாமனிதர்கள் – ஆணானாலும், பெண்ணானாலும்!
ஜெ.பாஸ்கரன்.
- ஆர்.சூடாமணி – இணைப் பறவை – சிறுகதை ஒரு பார்வை!
- தேன்மாவு : மூலம் : வைக்கம் முகமது பஷீர்
- தமிழிய ஆன்மீக சிந்தனை
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- கவிதையும் ரசனையும் – 10 – “பூஜ்ய விலாசம்” நெகிழன் கவிதைத் தொகுதி
- கடலோரம் வாங்கிய காற்று
- பக்கத்து வீட்டுப் பூனை !
- மகாத்மா காந்தியின் மரணம்
- மூன்று ஆப்பிரிக்க அமெரிக்கக் கவிதைகள்
- வானவில் (இதழ் 121)
- வீடு “போ, போ” என்கிறது
- நிரம்பி வழிகிறது !
- தோள்வலியும் தோளழகும் – இந்திரசித்
- தோள்வலியும் தோளழகும் – கும்பகருணன் (2)
- தோள்வலியும் தோளழகும் – வாலி
- சத்திய சோதனை