தொடரும் நிழல்கள்

This entry is part 8 of 20 in the series 23 மே 2021

 

                            ஜோதிர்லதா கிரிஜா

( “மங்கையர் மலர்”- ஜூலை, 2004 இதழில் வந்தது. “மாற்றம்எனும் சேதுஅலமி பிரசுரத்தில் இடம் பெற்றுள்ளது.)

                “என்னங்க! நம்ம சாருஹாசன் தனக்கு என்ன சம்பளம்கிறதைப் பத்தித் தன்னோட கடிதத்துல எதுவுமே எழுதல்லையே?”                                                         

தியாகராஜனும் அதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தார். எனவே, “நானும் அதைப் பத்தித்தான் யோசிச்சுக்கிட்டிருக்கேன், சங்கரி!” என்றார்.                                             “அமெரிக்காவில என்னமோ லட்சம் லட்சமாச் சம்பளம்கிறாங்களே!”                                         “ஆமா… ஆனா அங்கே விலைவாசி அதிகம்.”                                                                       “மாசாமாசம் அவன் நமக்குப் பணம் அனுப்புவான்தானே?”                                                         “அப்படித்தான் நானும் நம்பிக்கிட்டிருக்கேன். இருபத்தாறு வயசிலே ஒரு தங்கை கலியாணத்துக்கு நிக்கிறதைப் பத்தின பொறுப்பு இருந்தா நிச்சயம் ஒரு கணிசமான தொகையையே அவன் அனுப்பணும். பாக்கலாம்.”

                அமெரிக்காவின் ஒரு மிகப் பெரிய கம்பெனியில் பணி புரியச் சென்று முதல் மாதச் சம்பளமும் வாங்கியிருந்த தங்கள் மகன் சாருஹாசன் பற்றிய நினைவு இருவரையும் ஆட்டி அலைக்கழித்துக் கொண்டிருந்தது. அவனுக்குச் சம்பளம் எவ்வளவு இருக்கும் என்கிற கேள்வி அவன் போன நாளிலிருந்தே இருவரையும் ஓர் ஆவலாதியில் ஆழ்த்தியிருந்தது. ஆனால், அவனோ தன் கடிதத்தில் அது பற்றி எதுவுமே சொல்லவில்லை. அவர்களுக்குப் பணம் அனுப்புவது பற்றிய குறிப்பே அதில் இல்லை.

                “ஏங்க! அவன் நமக்குப் பணம் அனுப்புவான்தானே?” என்று சங்கரி மறுபடியும் கேட்டாள்.                                                                                                                                                   “பின்னே? அவன் படிப்புக்காகக் கொஞ்சமாவா செலவு பண்ணியிருக்குறோம்? கலியாணத்துக்குத் தங்கைக்காரி வேற ஒருத்தி காத்துக்கிட்டிருக்கிறப்போ அனுப்பாம இருப்பானா என்ன? ஒருக்கா, முதல் மாசத்துல அவனுக்குச் சில செலவுகள் இருக்கும். நண்பர்களுக்கு விருந்து, வீட்டு வாடகை முன்பணம், அங்கே இருக்குறதுக்கு ஏத்த மாதிரி டிரெஸ் வாங்குறது, கொளறதுன்னு…”                                                                                                                                                             “சரி. அப்படியே இருக்கட்டும். அது பத்தி ஒரு வார்த்தை நமக்கு எழுத வேண்டியதுதானே? கூடப் பொறந்த தங்கச்சி மேல பாசம் இருந்தா, ‘இந்த மாசம் ஒண்ணும் அனுப்ப முடியல்லே. வர்ற மாசத்துலேர்ந்து இவ்வளவு அனுப்பறேன்’ அப்படின்னு எழுதலாமில்லே?”                                                                                                                              தியாகராஜன் பதில் சொல்லவில்லை. அவரது சிந்தனை எங்கோ போய்விட்டது.  ‘கூடப் பொறந்த தங்கச்சி மேல பாசம் இருந்தா’ என்று அவள் சொன்ன சொற்கள் அவருள் ஏதேதோ நினைவுகளைக் கிளர்த்தின.

“என்னங்க, ஒண்ணுமே சொல்லாம இருக்கீங்க?”                                                                            “ஆ….ங்? … ஆமாமா….ஒரு வார்த்தை அவன் எழுதியிருக்கலாம்தான்.”                                                    “நாம வேணா எழுதிக் கேக்கலாமா?”                                                                                                          “அது நல்லாயிருக்காது, சங்கரி. கொஞ்சம் பொறுமையா இரு. வர்ற மாசமும் அனுப்பலைன்னா அப்ப  கேக்கலாம். எனக்கு அவன் மேல முழு நம்பிக்கை கிடையாது. அவன் ஒரு சுயநலக்காரன் தான். அவன் ஒண்ணுமே அனுப்பாமயே இருந்தாக் கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன்.”

                … அடுத்த மாதம் அமெரிக்காவிலிருந்து அந்த வெடிகுண்டு சாருஹாசனின் கடித உருவில் வந்து சேர்ந்தது. சென்னையிலிருந்து கிளம்பும்போதே ஒரு திட்டத்துடன்தான் அவன் சென்றிருந்தான் என்பதை அந்தக் கடிதம் தெரிவித்தது. தன்னுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த மல்லிகாவும் அமெரிக்காவில் மேல்படிப்புப் படித்துக் கொண்டிருப்பதாகவும் அவளைத் தான் மணம் செய்துகொண்டு விட்டதாகவும் அது கூறிய தகவலில் இருவரும் ஆடிப் போய்விட்டார்கள். அமெரிக்காவுக்குத் தம் மகனைப் பார்ப்பதற்காக ஆறு மாதங்களுக்கு முன் போயிருந்த தியாகராஜனின் நண்பர் குமரேசனின் பார்வையில் இருவரும் பட்டுவிட்டதால்தான் அந்த உண்மையை அவன் கூறினான் என்பது பின்னர் அவர்கள் ஊகித்த உண்மையாகும்!

                தியாகராஜனைக் காட்டிலும் சங்கரிதான் அதிகமாய்க் கொதித்துப் போனாள். அவனுக்குத் தான் காரசாரமாய் ஒரு கடிதம் எழுதப் போவதாய் அவள் சொன்னதும் அவர் கசப்புடன் சிரித்தார்.

                “அமெரிக்காவிலே அந்தப் பொண்ணு படிச்சிட்டிருக்கிறதா வேற சொல்றான். அவ படிப்புக்கும் இவன் செலவு பண்றானோ என்னவோ! அவன் அனுப்பினா அனுப்பட்டும். இல்லாட்டி போகட்டும். கேக்காதே. விடு.”                                                “அதெப்படிங்க விட முடியும்? கூடப் பொறந்த தங்கச்சி மேல ஒரு அண்ணனுக்கு அக்கறை இருக்கணுமா வேண்டாமா? ஏதுடா, கஷ்டப்பட்டு நம்மளைப் படிக்க வெச்சிருக்காங்களே, நம்ம தங்கச்சி கலியாணத்துக்கு நாம உதவி பண்ணணும்கிற கரிசனம் துளியாவது இருக்கணுமா, இல்லியா?”

        … சாருஹாசன் பணம் எதுவும் அனுப்பாமல் மூன்று மாதங்கள் கழிந்துவிட்டன. அதற்கும் மேல் சங்கரியால் சும்மா இருக்க முடியவில்லை. அவன் பணம் அனுப்புவதாக இல்லை என்பது உள்ளுணர்வாய்ப் புரிந்துவிட்டாலும், ‘எழுதித்தான் பார்க்கலாமே’ எனும் எண்ணம் அவளை ஆட்டி வைக்க, உடன் பிறந்த தங்கையின்பால் அவனுக்கு இருக்க வேண்டிய கடமையை ஞாபகப்படுத்தி அவள் அவனுக்கு எழுதினாள். நடந்து முடிந்துவிட்ட திருமணத்தை ஏற்பது தவிர வேறு வழியில்லை என்பது அவளுக்குப் புரிந்தது. ஏற்காவிடில், அவள் கேட்ட பிறகு அவன் அனுப்பக் கூடிய பணம் கூட அனுப்பப்படாது போய்விடக் கூடும் எனும் சாத்தியக்கூற்றால் அவள் பொறுமை காட்ட முடிவு செய்தாள்.

       ‘நீ சொல்லியிருந்தா, நாங்களே உன் கலியாணத்தை நடத்தி வெச்ச பிற்பாடு உன்னை அமெரிக்காவுக்கு அனுப்பி வெச்சிருப்போம். பொண்ணோட ஃபோட்டோ அனுப்பு. அப்பா-அம்மா இல்லாத பொண்ணுன்னு சொல்லியிருக்குறே. பரவால்லே. நடந்தது நடந்து போச்சு. இருக்கட்டும். உனக்கு என்ன சம்பளம்? நம்ம பவானிக்கு இருபத்தாறு வயசு ஆயிடிச்சு. அவளுக்கும் கலியாணம் பண்ணணுமில்ல? மாசாமாசம் நீ ஒரு தொகையை எங்களுக்கு அனுப்பணும். உன் தங்கைக்குக் கலியாணம் பண்ணிவைக்க வேண்டிய கடமை உனக்கு இருக்கு. அமெரிக்காவிலே ரொம்ப நல்ல சம்பளம்னு கேள்விப்பட்றோம். அதனால மாசாமாசம் நீ சில ஆயிரங்களாவது அனுப்பினாத்தான் பவானியோட கலியாணத்தை நடத்த முடியும். இங்கே வரதட்சிணை ரேட்டு நாளுக்கு நாள் அதிகமாயிட்டிருக்கு. அந்தச் சிக்கலாலதான் பவானிக்கு இன்னும் கலியாணம் பண்ண முடியல்லேங்கிற விஷயமும் உனக்குத் தெரியும். இதுக்கு மேலே உன்னோட கடமையை நான் ஞாபகப்படுத்தத் தேவை இல்லைன்னுதான் நினைக்கிறேன். உன்னை நிறையப் படிக்க வெச்சதுனாலதான் நீ இந்த நல்ல நிலைமைக்கு வந்தேங்கிறதை மறக்காதே. ….’                                                               மனைவியின் கடிதத்தைப் படித்த பின், ஒரு மர்மப் புன்சிரிப்புடன் தியாகராஜன் அதை அவளிடம் திருப்பிக் கொடுத்தார்,

       “என்ன சிரிப்பு மொகத்துலே? வக்கணையா எழுதியிருக்குறாளே இவள்னுதானே சிரிக்கிறீங்க?”

       தமது புன்னகையில் பொதிந்திருந்த மர்மத்தை உடனே வெளிப்படுத்த அவர் விரும்பவில்லை. அதனால், ‘ஆமாம்’ என்கிற பாவனையில் தலையை ஆட்டிவைத்தார்.

       “சரி. ஒரு கவர்லே போட்டு விலாசம் எழுதுங்க. பெட்டியில போட்டுட்டு வர்றேன் …”

       … சுமார் ஒரு மாதம் கழித்து அவனிடமிருந்து பதில் வந்தது:

       ‘அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சாருஹாசன் எழுதியது. கடிதம் அம்மா எழுதியதானாலும், அப்பாவின் சம்மதத்துடன்தான் அது எழுதப்பட்டுள்ளது என்று நம்புகிறேன் – என் விலாசம் அப்பாவின் கையெத்தில் இருப்பதால். நிறையப் படிக்க வைத்ததால்தான் நான் நல்ல நிலைமைக்கு வந்ததாக எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் படிக்க வைத்தாலும், கஷ்டப்பட்டுப் பொறுப்புடன் நன்றாய்ப் படித்தது நான்தானே? என்னுடைய உழைப்புக்குக் கிடைத்த பயன் அது. பெற்ற மகனைப் படிக்கவைப்பது ஒரு பெரிய விஷயமா என்ன? என்னமோ ஊர் உலகத்தில் இல்லாத அதிசயம் போல் சொல்லிக்காட்டி யிருக்கிறீர்களே? அது உங்கள் கடமை.                                            பெற்றோர் இல்லாமல் போனால்தான் ஓர் அண்ணனுக்குத் தங்கைக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டிய கடமை உண்டு. நீங்கள் இருவரும் இருக்கும்போது அது என் கடமை என்று எந்த அடிப்படையில் சொல்லுகிறீர்கள்?                                                              இங்கே என் மனைவி படித்துக்கொண்டுதான் இருக்கிறாள். வேலையில் இல்லை. எனவே, என் ஒருவனுடைய சம்பாத்தியம்தான். அவளுக்கு யாரும் ஆதரவு இல்லை என்பதால், அவளது படிப்புக்கு நான்தான் செலவு செய்து கொண்டிருக்கிறேன். இங்கே அமெரிக்காவில் இரண்டு பேர் சம்பாதித்தால்தான் பணமெல்லாம் அனுப்ப முடியும். அதற்குள் குழந்தை, குட்டி என்று குடும்பம் பெருகினால் அதுவும் முடியாது. எனவே என் மனைவிக்கு வேலை கிடைத்ததும் நான் பணம் அனுப்புவேன் என்று நம்பி, என்னைப் பின்னொரு நாளில் குற்றம் சொல்ல வேண்டாம்.                                                 ‘நீ சொல்லியிருந்தால் நாங்களே உன் கலியாணத்தை நடத்தி வெச்ச பிற்பாடு உன்னை அமெரிக்காவுக்கு அனுப்பி வெச்சிருப்போம்’ என்று நீங்கள் சொல்லுவது பச்சைப் பொய். எனக்கு உங்களைத் தெரியாதா என்ன? தவிர அவள் ஒரு கிறிஸ்துவப் பெண் வேறு.                                                  உங்கள் கடிதத்தின் தொனி அன்பாக இல்லை. அன்பு என்பது கொடுத்து வாங்குவது. அறியவும்.                                                                                                             இப்படிக்கு,                                                               சாருஹாசன்.

      கடிதத்தைப் படித்து முடித்த சங்கரி விக்கி விக்கி அழலானாள். தியாகராஜனுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும், அவர் அவளைச் சமாதானப்படுத்த முயலவில்லை. எதிர்பார்த்த அதிர்ச்சி ஒன்றை எதிர்கொண்ட விவேகி போல் அவர் அசைவற்றும், எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாதவராகவும் உட்கார்ந்து கொண்டிருந்தார்.

        “பாத்தீங்களாங்க! ‘அன்புள்ள அப்பா அம்மாவுக்கு’ன்னும் எழுதல்லே.  ‘அன்புள்ள சாருஹாசன்’னும் எழுதல்லே. என்ன அநியாயம்ங்க இது! படிக்க வைக்க வேண்டியது நம்ம கடமையாம்! ஆனா, தங்கச்சியைப் பொறுத்த வரையிலே அவனுக்குன்னு எந்தக் கடமையும் கிடையாதாம்! நாம ரெண்டு பேரும் குத்துக்கல்லா உசிரோட இருக்கிறதுனால அது தன்னோட கடமை இல்லேன்னு சொல்லாம சொல்லிட்டான்! என்ன நன்றிகெட்ட தனம் பாத்தீங்களா! கூடப் பொறந்தவ மேலே துளியாச்சும் அவனுக்குப் பாசம் இருக்குதா, பாத்தீங்களா?”                                                 தியாகராஜன் புன்னகை புரிந்தார். அவள் சாருஹாசனுக்கு எழுதிய கடிதத்தைப் படித்துப் பார்த்த பின் அவளிடம் அதைத் திருப்பிக்கொடுத்த போது புரிந்த அதே மர்மப் புன்னகை!

       கண்களைத் துடைத்துக்கொண்டு தலை உயர்த்திய சங்கரி தன் கணவரின் முகத்துச் சிரிப்பைப் பார்த்துத் திகைத்தாள்.                              “எதுக்குங்க சிரிச்சுக்குறீங்க? நான் அவனுக்கு எழுதின கடுதாசியைப் படிச்ச அன்னைக்கும் இதே மாதிரிதான் சிரிச்சுக்கிட்டீங்க!”                        “பரவால்லே. நீ ரொம்பவே கெட்டிக்காரிதான். கரெக்டா அதே மாதிரி சிரிப்புன்னு கண்டுபிடிச்சுட்டே! கொஞ்சம் பழைய விஷயங்களைப் பத்தி யோசிச்சுப் பாத்தியானா, நான் எதுக்கு சிரிச்சேன்கிறதையும் கண்டு பிடிச்சுடுவே! யோசி!”                                                         “என்னங்க சொல்றீங்க?”                                                  “சங்கரி! கூடப் பொறந்தவங்க மேல ஒருத்தருக்கு இருக்க வேண்டிய பாசத்தைப் பத்தி நீயா பேசறே? அவங்களுக்குச் செய்ய வேண்டிய கடமையைப் பத்தியும் நீயா உன் மகனுக்கு உபதேசிக்கிறே? அதுக்குக் கொஞ்சமாச்சும் உனக்குத் தகுதி உண்டா? அன்னைக்கு என் தம்பி பாபுவை என்ன பாடு படுத்தி வெச்சே? வருஷா வருஷம் பாஸ் பண்ணிக்கிட்டிருந்த அவன் ஒம்பதாம் வகுப்பில ஃபெயில் ஆனப்ப மறுபடியும் தொடர்ந்து படிக்க அவனை விட்டியா? என்ன திட்டுத் திட்டினே? நான் எவ்வளவு கெஞ்சினேன்! ‘சங்கரி! அவன் ரோசக்காரன். ஏதாவது ஏடாகூடமாப் பண்ணிக்கிடுவான். திட்டாதே’ ன்னு தலைதலையா அடிச்சுக்கிட்டேனே! கேட்டியா? கேட்டியாடி? ஒரு அண்ணனுக்குத் தம்பி மேல இருக்கக் கூடிய பாசத்தை அன்னைக்கு நீ கொஞ்சங்கூடப் புரிஞ்சுக்கல்லே. அது மட்டுமா? ஒரு அண்ணனுக்கு இருக்க வேண்டிய கடமையைப் பத்தி நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் நீ ஒப்புக்கொள்ளல்லே. ஆனா, இப்ப? உன் மகனுக்கு அவனோட தங்கச்சி மேல இருக்க வேண்டிய பாசத்தைப் பத்திப் பெரிசாப் பேச வந்துட்டே! எனக்கு என் தம்பி மேல இருக்கக்கூடாத பாசமும் கடமை உணர்ச்சியும் உன் மகனுக்கு மட்டும் அவனோட தங்கச்சி மேல இருக்கணுமோ? இது எந்த ஊரு நியாயம்?  … என் தம்பி பாபு – ரோசப்பட்டுப் பன்னண்டு வயசிலே ஓடிப் போனவன் – இப்ப எங்கே இருக்கனோ? எப்படிப் பிழைக்கிறானோ? இருக்கானோ, இல்லாட்டி, இல்லவே இல்லையோ? என்னை நம்பி அவனை எங்கிட்ட விட்டுட்டுச் செத்துப் போன எங்க அம்மா உன்னை மன்னிச்சிருப்பாங்களா? அந்தப் பாவம்தான் இப்ப நம்மளைத் துரத்துது.  நாம செய்யிற பாவங்கள்லாம் நம்மோட நிழல் மாதிரி நம்ம கூடவே வரும்!” என்ற தியாகராஜன் தம்பி பாபுவின் நினைப்பில் கண்களின் ஈரத்தைத் துடைத்துக்கொண்டார்.

       சங்கரி வாயடைத்துப் போனாள்.                                                                        …….\

Series Navigationகாற்றுவெளி மின்னிதழின் ஆவணிமாத இதழ் சிற்றிதழ்களின் சிறப்பிதழாக வெளிவரும்நாஞ்சில் நாடன் சிறுகதைகள்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *