மூன்றாம் பாலின முக்கோணப் போராட்டங்கள்

author
1
0 minutes, 3 seconds Read
This entry is part 13 of 18 in the series 11 ஜூலை 2021

 

அழகர்சாமி சக்திவேல் 

திரைப்பட விமர்சனம் – 

ஒரு லெஸ்பியன் தாய், அவள் காதலி, இவர்கள் இருவரும், விந்து வங்கி மூலம் பெற்றுக்கொள்ளும் பிள்ளைகள். அந்தப் பிள்ளைகள் பெறுவதற்குக் காரணமான தந்தை, இவர்களில் யார் மீது பிள்ளைகள் பாசம் காட்டும்? இது ஒரு முக்கோணம்.  

 

ஒரு தாய், அவள் கணவன், அந்தக் கணவனுக்கு ஒரு காதலன், இவர்களில் யார் மீது ஒரு மகன் பாசம் காட்டுவான்? இது, இன்னொரு முக்கோணம்.  

 

ஒரு கணவன், அவனுக்கு ஒரு மனைவியும் மகனும். கூடவே ஒரு திருநங்கைக் காதலி. இவர்களில், யாருக்கு அந்த கணவன் மீது அதிக உரிமை? இது, மற்றொரு முக்கோணம். 

 

இப்படி, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில், பின்னிப்பிணைந்து வாழும் மூன்றாம் பாலின முக்கோணக்கதைகள், உலகில் எவ்வளவோ இருக்கின்றன. அப்படிப்பட்ட கதைகளில், மூன்று சுவாரசியமான கதைகளை விமர்சிக்கும் கட்டுரைதான் இந்தக் கட்டுரை. இந்தக் கட்டுரையில் விவரிக்கப்படும் மூன்று படங்களில், ஒரு படமானது, அமெரிக்க ஆங்கிலப் படம் ஆகும். இன்னொன்று, சிலி நாட்டின், ஸ்பானிய மொழியில் எடுக்கப்பட்ட படம். மூன்றாவது படம்,, தைவானிய மாண்டரின் சீன மொழியில் எடுக்கப்பட்ட படம் ஆகும்.  

 

இந்தியாவில், இப்போதுதான், மூன்றாம் பாலினம், மெல்ல மெல்ல, கூட்டை விட்டு வெளியே வர ஆரம்பித்து இருக்கின்றன. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழும், மூன்றாம் பாலின மக்கள், தத்தம் உரிமைகள் குறித்து, இப்போது, வெளிப்படையாகப் பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ சார்ந்து வாழும் மூன்றாம் பாலினத்தின் உரிமைகள், அவர்கள் அடையாளங்கள், எந்த அளவிற்கு மதிக்கப்படுகிறது என்பதற்கு, இந்தக் கட்டுரையில் சொல்லப்படுகிற கதைகள், உதாரணங்கள் ஆகி நிற்கின்றன. 

மூன்று கதைகளில், ஒரு கதையில், விந்து வங்கி பற்றிச் சொல்லப்படுகிறது என்பதால், விந்து வங்கி குறித்தும் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே. இரத்ததானம் செய்வோரின் இரத்தம், இரத்த சேமிப்பு வங்கிகளில், சேமித்து வைக்கப்படுகிறது. அப்படி, சேமித்து வைக்கப்படும் இரத்தத்தை, இரத்தம் தேவைப்படுவோருக்கு, இரத்த சேமிப்பு வங்கிகள், அவ்வப்போது கொடுத்து உதவுகின்றன, இரத்த சேமிப்பு வங்கிகள் போலவே, இயற்கையில் பிள்ளை பெற முடியாத, அல்லது பிள்ளை பெற விரும்பாத பெண்களுக்கு, ஆணகளிடம் இருந்து பெறப்பட்டு, சேமித்து வைக்கப்படும், விந்தினைக் கொடுத்து உதவுவதே, விந்து வங்கிகளின் நோக்கமாகும்.  

 

“எங்களுக்கு ஒரு சரியான ஆண் துணை கிடைக்காவிட்டால், பிள்ளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு, ‘நாங்கள் விந்து வங்கியின் மூலம், பிள்ளை பெற்றுக்கொள்ள முயற்சி செய்வோம்” என்று, நான்கில் ஒரு பெண்கள், ஒரு ஆராய்ச்சியில் சொல்லி இருக்கிறார்கள். பிள்ளை பெற, அறிவியல் ரீதியாக இயலாதவர்கள், ஆண் துணை இல்லாமல், பிள்ளை மற்றும் பெற்றுக் கொண்டு, தனித்து வாழ விரும்பும் பெண்கள், பெண்-பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், இப்படிப்பட்ட எல்லாப் பெண்களுக்கும், குழந்தை பெறுவதற்கு உதவும், இது போன்ற விந்து வங்கிகளின் பங்கு, மிகவும் பாராட்டத்தக்கது.  

 

விந்து வங்கி என்றால், அங்கே சேகரித்து வைப்பதற்கு என, விந்துக்கள் தேவை அல்லவா?. ஆரோக்கியமான விந்துக்களை, இலவசமாகக் கொடுப்பதற்கு, இன்னும் பல ஆண்கள், சமூக ரீதியாக முன்வரவில்லை என்பது உண்மைதான். எனினும், இந்த விந்து வழங்கும் சேவைக்கென,  மனமுவந்து வரும் ஆண் சமூக சேவகர்கள், உலகம் முழுவதும், ஒரு குறிப்பிட்ட அளவில் இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். பிறப்பிலேயே, ஆண்-ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் ஆகப் பிறந்தாலும், ‘மூன்றாம் பாலினமும், பிள்ளை பெற்று மகிழ வேண்டும்’ என்ற நல்ல எண்ணத்தில், விந்து வழங்கும் ஆண்-ஆண் மகிழ்வன்களும், இந்த விந்து வங்கிகளுக்கு, தங்கள் விந்துக்களை வழங்கி மகிழ்கிறார்கள். 

 

சரி, இனி கதைகளுக்கு வருவோம். 

 

தி கிட்ஸ் ஆர் ஆல் ரைட் – இந்த அமெரிக்க லெஸ்பியன் திரைப்படம், உலகின் பல விருதுகளை வென்று குவித்த ஒரு படம் ஆகும். நிக் என்ற பெண்ணும், ஜுல்ஸ் என்ற பெண்ணும் கணவன் மனைவியாக வாழும் லெஸ்பியன் பெண்கள். தங்கள் ஓரின இல்லற வாழ்வில், இன்னும் மகிழ்ச்சியை உண்டாக்க, இருவருமே, அருகில் இருக்கும் ஒரு விந்து வங்கியை நாடி, விந்துக்களின் மூலம் கருத்தரித்து, பிள்ளை பெற்றுக் கொள்கிறார்கள். அப்படி விந்துவங்கி மூலம் பெற்றுக்கொண்ட இரு பிள்ளைகளில்,  மூத்தவள், பெண் பிள்ளை ஜோனி, இளையவன், ஆண் பிள்ளை லேசர். பிள்ளைகள் இருவரும், ஒரு குறிப்பிட்ட வயது வரை சந்தோசமாக வளர்கின்றனர்.  

 

பதினேழு வயதாகும் ஆண் பிள்ளை லேசருக்கு, விந்து தானம் செய்த அந்தத் தந்தை யார் என்று தெரிந்து கொள்ள ஆசைவருகிறது. தனது தம்பிக்கு உதவ முன்வருகிறார், அக்காள் ஜோனி. பிள்ளைகள் இருவரும், தங்கள் இரண்டு லெஸ்பியன் தாய்களுக்கும் தெரியாமலேயே, தங்கள் இருவரின், சொந்தத் தந்தையைத் தேடும் முயற்சியில், தீவிரமாக இறங்குகிறார்கள். ஒரு கட்டத்தில், தங்கள் தந்தையைக் கண்டு பிடித்தும் விடுகிறார்கள்.  

 

தனது விந்தின் மூலம் பிறந்த மகன் மற்றும் மகள்தான், லேசரும் ஜோனியும் என்று தெரிந்துகொள்ளும் தந்தை பவுல், அந்த இரண்டு பிள்ளைகளின்  வாழ்க்கைக்குள், மெல்ல நுழைகிறார். தங்கள் பிள்ளைகள் செய்யும், விஷயங்கள் எதுவும், அந்த இரண்டு லெஸ்பியன் பெண் பெற்றோர்களுக்கும் தெரியவில்லை. பிள்ளைகளின் அன்பை, கொஞ்சம் கொஞ்சமாய்ப் பெரும், தந்தையான பவுல், லெஸ்பியன் பெண்களின் ஒருவரான ஜுல்ஸின் மனதை மாற்றி, உடல் உறவும் கொள்கிறார். ஒரு கட்டத்தில், உண்மை, இன்னொரு லெஸ்பியன் பெண்ணான நிக்கிற்குத் தெரிய, வெகுண்டு எழுகிறார். மகிழ்வி நிக். பெற்ற இரு பிள்ளைகளின் அன்பைக் கவர, ஆண் பவுலுக்கும், லெஸ்பியன் பெண் நிக்கிற்கும், உரிமைப் போராட்ட யுத்தம் தொடங்குகிறது. இதற்கு மேல் என்ன நடக்கிறது என்பதைத் திரைப்படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். 

 

படம் என்னவோ, ஒரு விசு இயக்கிய படம் போல, நாடகத் தன்மை கொண்டு இருக்கிறது எனினும், கதைக்குள் இருக்கும் அந்த விறுவிறுப்பு, நம்மைப் படம் முடியும் வரை, ஒரு ஆவலோடு உட்கார வைக்கிறது என்பது உண்மை. ஆண்மைத் தன்மை கொண்ட லெஸ்பியன் பெண்னான நிக் ரசித்துப் பார்க்கும், அந்த ஆண்-ஆண் ஓரினச்சேர்க்கைப் படம், தனது லெஸ்பியன் காதலியை, இன்னொரு ஆண் வந்து கவருகிறான் என்று தெரிய வருகிறபோது, அந்தப் பெண்ணுக்குள் இருக்கும் ஆண்மை, துடிக்கும் துடிப்பு, இப்படிப் பல வடிவங்களில் நம்மைக் கவர்கிறார், நிக் ஆக நடிக்கும், நடிகை ஆனட் பெனினா. 

 

எ ஃபன்டாஸ்டிக் வுமன் – இந்தச் சிலி நாட்டின், ஸ்பானிய மொழிப் படம் ஒரு திருநங்கையின் உரிமைப் போராட்டம் பற்றியது. கதாநாயகன் ஒர்லாண்டோ, ஒரு நடுத்தர வயதைக் கடந்த ஆண். அவருக்கு ஏற்கனவே ஒரு கல்யாணம் ஆகி, மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கிறார்கள். இருப்பினும், கொஞ்ச காலம் கழித்து, தனது மனைவியிடம், கருத்து வேறுபாடு கொண்டு, பிரிந்து வாழ்கிறார் ஒர்லாண்டோ. தனித்து வாழும் ஓர்லாண்டோவிற்கு, புதிய காதலியாக, இளம் திருநங்கை மெரினா நுழைகிறார். மெரினா, ஒரு நல்ல அழகான மேடைப் பாடகி. மெரினா, ஒர்லான்டோ, இவர்கள் இருவரும், ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, துணையாக வாழுகிறார்கள்.  

 

ஒருநாள், இரவு விருந்திற்கு, இருவரும் வருகிறார்கள். மெரினாவின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒர்லாண்டோ, பின் நீராவிக்குளியல் எடுத்துக்கொள்ள, தனது காதலியோடு செல்கிறார். போகும் இடத்தில், ஒர்லாண்டோவிற்கு மூச்சுத்திணறல் வருகிறது. பதறிப்போகும் மெரீனா, ஒர்லாண்டோவை, அருகில் உள்ள, மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்கிறார். ஆனால், அதற்குள், நிலைத்டுமாறிக் கீழே விழும் ஒர்லாண்டோவிற்கு, பலத்த காயங்கள் ஏற்படுகிறது. அந்த இரத்தக் காயங்களுடனேயே, இறந்தும் போகிறார் ஒர்லாண்டோ. 

 

விசயம் போலீசுக்குப் போகிறது. காயங்களுக்குக் காரணம், மெரினா, ஒர்லாண்டோ மீது கொண்ட, தனிப்பட்ட விரோதமாக இருக்கலாம் என, காவல்துறை இன்ஸ்பெக்டர் சந்தேகப்பட, மெரினாவின் போராட்டம் ஆரம்பிக்கிறது. இதற்கிடையில், ஒர்லாண்டோவின் சகோதரன், ஒர்லாண்டோவின் பழைய மனைவி, அவளது வயதுக்கு வந்த மகன், என அத்தனை பேரின் வெறுப்புக்கும் உள்ளாகிறார் திருநங்கை மெரீனா. ஒர்லாண்டோவின் இறந்த உடலைப் பார்க்க, திருநங்கை மெரினாவிற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இத்தனை எதிர்ப்புக்களையும் மீறி, மெரினா என்ற அந்தத் திருநங்கை, தனது உரிமைப் போராட்டத்தில் வெற்றி பெற்றாரா, என்பதை, படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். 

 

படத்தில், குறிப்பிட்டுச் சொல்ல, பல காட்சிகள் உண்டு. விசாரணைக்கு வரும் இன்ஸ்பெக்டர், மெரீனா, ஆணாக இருந்தபோது கொடுக்கப்பட்ட, அடையாள அட்டைப் பெயரைக் கொண்டு, திருநங்கை மெரினாவை “சார், சார்” என்று விளிக்கும்போது, அமைதியாய்க் குமுறுவதில் ஆரம்பித்து, படத்தின் கடைசி வரை, தனது அனாயாச நடிப்பால், பாராட்டுப் பெறுகிறார், மெரினாவாக வரும், நடிகை டேனியலா வேகா. இவர், உண்மையிலேயே ஒரு திருநங்கையாய் வாழும், நடிகை ஆவார். இந்தப் படத்தில், இவரது எதார்த்தமான நடிப்புக்காக, உலகப்புகழ் பெற்ற அகாடமி விருது, இவருக்குக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கூடவே, அகாடமி விருது பெற்ற, முதல் திருநங்கை என்ற பெருமையும், இவர் நடிப்பிற்கு, இந்தப்படத்தின் மூலம் கிடைத்து இருக்கிறது.  

 

தென்றல் போல, கதைக்குள் நுழையும் மெரீனா, கொஞ்சம் கொஞ்சமாய், புயலாய் மாறி, விறுவிறுப்பைக் கூட்டும் இந்தப் படம், திருநங்கைகள் உரிமை, எப்படி எல்லாம் காயப்படுத்தப் படுகிறது, என்று விளக்கமாகச் சொல்லும் படம் என்று நான் சொன்னால், அது மிகையாகாது. 

 

டியர் எக்ஸ் – இந்த தைவானியத் திரைப்படம், ஆண்-ஆண் உறவின் உரிமைகள் குறித்துப் பேசுகிறது. பற்பல ஆசிய விருதுகளைக் குவித்து இருக்கும், இந்தப்படம், தைவானிய மாண்டரின் என்று சொல்லப்படும், சீன மொழியில் எடுக்கப்பட்ட படம் ஆகும். மெதுவாக நகரும் ஒரு படம், இந்தப் படம் என்றாலும், கதாபாத்திரங்களின் உணர்ச்சிவசமான நடிப்பு, நம்மை படம் முழுதும் பார்க்கத் தூண்டுகிறது. முக்கியமாய் மன அழுத்தம் அதிகமாகி, எப்போதும் கத்திக்கொண்டே இருக்கிற, அந்தத் தாயின் நடிப்பு அற்புதம்.  

 

இந்தப் படத்தின் கதையை, இப்போது பார்ப்போம். ஓரினச்சேர்க்கை விரும்பியான முதல் கதாநாயகன் செங் யுவன், ஒரு கல்லூரிப் பேராசிரியர். ஒரு ஆண் மீதே, பேராசிரியர் செங் யுவனுக்கு, உடலுறவு விருப்பம் இருந்தபோதும், ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தால், சான் லியன் என்ற பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளுகிறார். இருவருக்கும், செங் சி என்ற, ஆண் குழந்தையும் பிறக்கிறது. இல்லற வாழ்க்கை, நல்லபடியாக நகர்ந்த போதும், ஆண்-ஆண் விரும்பியான, பேராசிரியர் செங் யுவன், தனது மனைவியை ஏமாற்றும், குற்ற உணர்வோடு, வாழ்க்கையை நகர்த்துகிறார். இந்த நேரத்தில், ஜே என்ற இன்னொரு ஆண்-ஆண் விரும்பியை, பேராசிரியர் சந்திக்க நேருகிறது. ஆண்கள் இருவருக்குள்ளும், காதல் வளர்கிறது. காதலனோடு, நிரந்தரமாகத் தங்க முடிவெடுக்கும், பேராசிரியர், தனது மனைவியிடம், தான் ஒரு ஆண்-ஆண் விரும்பி என்ற உண்மையை, ஒரு நாள் சொல்லி விடுகிறார். அதைக் கேட்கும் மனைவி, அதிர்ந்து போனாலும், தனது கணவனோடேயே, இன்னும் வாழ ஆசைப் படுகிறார். ஆனால், பேராசிரியரோ, சித்திரவதைக்கு உள்ளாக்கும், இந்த வாழ்க்கை தேவை இல்லை, என்ற முடிவுக்கு வந்து, மனைவியையும், மகனையும் பிரிந்து, தனது காதலன் ஜே உடன், நிரந்தரமாக சேர்ந்து கொள்கிறார். பணம் மட்டும், மனைவிக்கு அனுப்புகிறார். 

 

காதலன் ஜே உடன் வாழும் பேராசிரியர், ஒரு நாள் இறந்தும் போகிறார். பேராசிரியர் இறப்பதற்கு முன், ஒரு பெருந்தொகைக்கு, ஆயுள் காப்பீடு எடுத்து, அதற்கு உரிமையாளராக, மனைவியின் பெயரை எழுதாமல், காதலன் ஜேயின் பெயரை எழுதி வைத்து விடுகிறார். இப்போது அந்த இன்சூரன்ஸ் பணம் முழுவதும், ஜேக்கு சென்று விடுகிறது. இந்த இன்சூரன்ஸ் விசயம், பேராசிரியரின் மனைவிக்குத் தெரிய வர, உரிமைப் பிரச்சினை ஆரம்பித்து விடுகிறது. 

 

பொறுப்பில்லாத தனது கணவனையும், காதலன் ஜேயையும் திட்டித் தீர்க்கும் மனைவி, தனது மகனின் வெளிநாட்டுப் படிப்புக்கு, அந்த இன்சூரன்ஸ் பணம் வேண்டும் என்று தனது கணவனின் காதலனோடு வாதாடுகிறார். பதின்ம வயதில் இருக்கும் பேராசிரியரின் மகனான செங் சி, தனது அம்மாவின் பாசத்திற்கும், தனது அப்பாவின் காதலனின் பாசத்திற்கும் இடையில் தடுமாறுகிறான். கடைசியில், என்ன நடந்தது, அந்த இன்சூரன்ஸ் பணத்தை, மனைவி பெற்றாரா, மகன் நிலை என்னவாயிற்று என்பதை, படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். 

 

தனது கணவன் ஒரு ஓரினச்சேர்க்கை செய்பவன் என்ற உண்மை தெரிந்ததுமே, அதிரும் மனைவி, “இதெல்லாம் நமக்குள் ஒரு பிரச்சினை இல்லை. உங்களுக்கு அது போன்ற சுகத்தை, நான் கொடுக்கிறேன்” என்று பேசியபடி, தனது பேராசிரியர் கணவனின் பேண்டைக் கழற்றும் காட்சியிலும் சரி, “நீ மனைவி, நீ மனைவி” என்று, தனது கணவனின் காதலனை, கேலி செய்யும் காட்சியிலும் சரி, தனது கணவனான பேராசிரியர்தான், மனைவி போல வாழ்ந்து இருக்கிறார் என்ற உண்மை தெரிந்து, குமுறுகிற காட்சியிலும் சரி, தனது மகன், நன்கு வளர வேண்டும், என்ற ஆதங்கத்தில், மகன் செய்யும் சின்னச் சின்னத் தவறுக்கும், மன அழுத்தத்துடன், கத்துகிற காட்சியிலும் சரி, ஒரு மன அழுத்தம் உள்ள தாயின், பல்வேறு பரிமாணங்களை, அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார், தைவானிய நடிகை, சியே இங் சுவான். காதலன் ஜே ஆக வருபவரின், இயல்பான நடிப்பும், பாராட்டத்தக்கது. 

 

தனது அப்பா ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று தெரிந்து கொள்ளும், ஒரு பதின்ம வயதுச் சிறுவனின், மனநிலை எப்படி இருக்கும் என்று நமக்கு உணர்த்த வரும் இயக்குனர்கள், படத்தின் கதையை, அந்த பதின்ம வயதுச் சிறுவன் சொல்லுவது போலவே, படத்தை நகர்த்தி இருப்பதில், ஒரு புதுமை தெரிகிறது. 

 

ஆக, இந்த மூன்று படங்களின் மூலம், நாம் தெரிந்துகொள்வது ஒன்றுதான். ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில், உரிமை கேட்டு, மூன்றாம் பாலினமும், அங்கங்கே போராடிக்கொண்டு இருக்கிறது என்ற உண்மையை, நாம், இந்தப் படங்களின் மூலம், அறிந்து கொள்கிறோம். காலம், செல்லச் செல்ல, இந்த உரிமைக் குரல்களின், சத்தமும், பன்மடங்காகும் என்பதில், எள்ளளவும் சந்தேகம் இல்லை.  

 

அழகர்சாமி சக்திவேல் 

Series Navigationபுகலிட  தமிழ் சிறுகதை இலக்கியத்தில் முருகபூபதியின் வகிபாகம்வெண்பூப் பகரும் -சங்கநடைச்செய்யுட் கவிதை
author

Similar Posts

Comments

  1. Avatar
    Yousuf Rajid says:

    யாரிடமாவது சொன்னால்கூட நம்பமாட்டார்கள். இப்படியெல்லாம்கூட மனிதர்கள் இருக்கிறார்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *