கிருஷ்ணன் கடவுளா? இந்த உலகத்தில் ஒருவன் மனிதனாக வாழ்ந்தாலே அவன் கடவுள் தானே! திரெளபதி சுயம்வரத்தில் தான் அர்ச்சுனனுக்கு அறிமுகமாகிறான் கிருஷ்ணன். தருமன் போர் தேவையா என சாத்விகம் பேசிய போது பாஞ்சாலி அவமானப்படுத்தப்பட்டதை சுட்டிக்காட்டி பகைமைத்தீ அணையாமல் பார்த்துக் கொண்டவனும் கிருஷ்ணன் தான். அஸ்வத்தாமன் போர்தர்மம் மீறி பாசறையில் உறங்கிக் கொண்டிருந்த பாண்டவ புத்திரர்களைக் கொன்றான். இறந்த அபிமன்யூ மனைவியின் வயிற்றிலிருந்து சிசு இறந்தே பிறக்கிறது. குருவம்சத்தைக் காப்பாற்ற தசைப்பிண்டத்தை குழந்தையாக உயிர்த்தெழ வைத்தவனும் கிருஷ்னன் தான்.
பெண் தன்மை உடையவனிடம் நேருக்கு நேர் மோத மாட்டார் பீஷ்மர் என்று தெரிந்து தான் அவர் முன்பு சிகண்டியை நிறுத்தினான் கிருஷ்ணன். துரோணரின் அம்பு நழுவி கீழே விழாதவரை அவரை வீழ்த்த முடியாது என்றுணர்ந்த கண்ணன் தருமன் வாயாலேயே துரோணருக்கு காதில் கேட்கும்படி அவரது மகன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என்று பொய்யுரைக்கச் செய்ததும் கிருஷ்ணன்தான். மண்ணில் புதைந்த தேரை கர்ணன் தன் கைகளால் விடுவிக்க போராடிக் கொண்டிருந்து போது அர்ச்சுனனிடம் கண்ணசைத்து அம்பு எய்யச் சொன்னதும் கிருஷ்ணன் தான். துரியோதனனை வீழ்த்த முடியாமல் பீமன் திகைத்தபோது கதையால் துரியோதனனின் தொடையில் அடிக்கச் சொல்லி சைகை புரிந்தவனும் கிருஷ்ணன் தான்.
அர்ச்சுனன் உறவுகளுக்கு முன் வில்லேந்த நேர்கிறதே என்று மனத்தளர்ச்சியடைந்த போது, சத்ரியனுக்கு தர்மத்தைக் காப்பதுதான் சகலத்தையும்விட சிறந்தது என்று போதித்தவனும் கிருஷ்ணன் தான். நாம் எந்த ஆயுதத்தை கையாளப் போகிறோம் என்பதை நம் எதிரியே தீர்மானிக்கிறான். அம்பு நீ அதைச் செலுத்துபவன் நானென்கிறான். ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட விதி உன்னைத் தன் கருவியாக்கிக் கொள்கிறது. பாண்டவர்களின் வெற்றிக்காக அவதாரமே யுத்த தர்மத்தை மீறிச் செல்கிறது.
பாண்டவர்களின் படை வலிமையைவிட கிருஷ்ணனின் பக்க பலமே பாண்டவர்களுக்கு வெற்றியைத் தேடித் தருகிறது. கெளரவர்களின் சாவுக்கு கிருஷ்ணனே காரணம் என குற்றம் சுமத்தி காந்தாரி அவனுக்கு சாபம் தருகிறாள். தர்மத்துக்காகத்தான் நான் இதைச் செய்தேன் எனக் கூறியும் காந்தாரி சமாதானமடையவில்லை. கிருஷ்ணனின் மகன் சாம்பன் பெண்ணாக மாறுவேடமணிந்து துர்வாசரிடம் தனக்கு என்ன குழந்தை பிறக்குமென்று கேட்க அதனை ஞானதிருஷ்டியால் அறிந்த துர்வாசர் உனக்கு உலக்கை பிறக்கும் அது உன் குலத்தையே அழிக்கும் என்று சாபமிடுகிறார்.
அடுத்த நாளே உலக்கையை பெற்றெடுக்கிறான் சாம்பன். மன்னர் உக்ரசேனரின் யோசனைப்படி அதை தூள்தூளாக்கி கடலில் கரைத்து விடுகிறார்கள். பொடியாகாத ஒரு இரும்புத் துணுக்கு மீனின் வயிற்றுக்குள் செல்கிறது. அந்த மீனின் மூலம் ஜரை என்ற வேடனுக்கு அந்த இரும்புத் துண்டு கிடைத்து அதை அவன் கூர்தீட்டி தன் அம்பில் பொருத்திக் கொள்கிறான்.
கிருஷ்ணனின் கண்ணெதிரிலேயே ஒழுக்க நெறி தவறிய யாதவ குலமும், துவாரகையும் அழிகிறது. குருவம்சம் மாதிரியே யதுவம்சமும் ஆயிற்றே என்று சஞ்சலப்பட்டுக் கொண்டே தீராத வேதனையுடன் ஆலமர நிழலில் சற்றே தலைவைத்து படுத்தான். கிருஷ்ணனின் பாதம் வேடன் ஜரைக்கு மானின் காது மாதிரி தோன்றவே அம்பெய்தான். அம்பு பாதத்தை ஊடுருவியது. சாம்பன் ஈன்ற இரும்புத்துண்டின் கடைசிப்பகுதி அது. கிருஷ்ணனுக்கு எரியூட்டிய அர்ச்சுனனால் அவனது இறப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பரமாத்மாவையே பொம்மையாக்கி விளையாடுவதால் தானே அதற்கு விதி என்று பெயர் வைத்தார்கள். ஆக்கினவனையே ஆட்டுவிக்கும் விதிக்கு முன்பு நாமெல்லோரும் சிறு கொசுக்கள் தான்.
ப.மதியழகன்
115,வள்ளலார் சாலை,
ஆர்.பி.சிவம் நகர்,
மன்னார்குடி – 614001.
திருவாரூர் மாவட்டம்.
cell:9597332952
Whatsapp: 9384251845
- உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை பன்னாட்டு கருத்தரங்கு அமர்வுகள்
- பாரதியின் மனிதநேயம்
- ஸ்பேஸ் X ஏவிய விண்சிமிழ் முதன்முதல் நான்கு சுற்றுலா பொதுநபரை ஏற்றிச் சென்று பூமியை மூன்று நாட்கள் சுற்றி மீண்டது.
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 254 ஆம் இதழ்
- கிண்டா
- ப.தனஞ்ஜெயன் கவிதைகள்
- குருட்ஷேத்திரம் 16 (தருமனால் ஏற்பட்ட தலைகுனிவு)
- குருட்ஷேத்திரம் 15 (சாத்வீக மனம் கொண்ட பாண்டு)
- கருங்கோட்டு எருமை
- பாரதியை நினைவுகூர்வோம் – பாரதியாரின் மூன்று கவிதைகளும் டாக்டர்.கே.எஸ். சுப்பிரமணியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பும்
- தற்கால சிறுகதை, புதினங்களில் காலத்தின் சுவடுகள்
- மதுர பாவம்
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- கவியின் இருப்பும் இன்மையும்
- ஒரு கதை ஒரு கருத்து – கு.ப.ராவின் கனகாம்பரம்
- அஞ்சலிக்குறிப்பு: எழுத்தாளர் நந்தினிசேவியர் விடைபெற்றார் !
- நெருடல்
- குருட்ஷேத்திரம் 13 (திருதராஷ்டிரன் என்ற யானைக்கு அங்குசமாக இருந்த காந்தாரி)
- குருட்ஷேத்திரம் 14 (யாதவ வம்சமும் கிருஷ்ணனும் துர்வாசரின் சாபத்தால் அழிந்தார்கள்)