கடவுள் மனித உருவெடுத்து வருவாரா? கிருஷ்ணன் அசாதாரணமானவன் ஆனால் கடவுளல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது. புத்தரையே பத்தாவது அவதாரம் என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏதோவொன்றுக்கு இந்த உலகை தயார்படுத்தவே இத்தகைய மனிதர்கள் வந்து சென்றிருக்கிறார்கள். அந்த புயலின் மையம் இன்னும் பூமியை நெருங்கவில்லை என்றே தெரிகிறது. கிருஷ்ணன் மாயாவியாக இருக்கலாம் கடலிலிருந்து எப்போதாவது எழும் ஆழிப்பேரலை போல. அதன் தாக்கம் மட்டும் பல ஆயிரம் ஆண்டுகள் பூமியில் இருக்கிறது. ஆனாலும் அவதாரங்கள் பக்கமே தர்மம் இருப்பதாக நான் நம்பவில்லை. கண்ணன் கருமை நிறத்தவன் ஆனால் இவ்வுலகில் கருப்பு அழகின்மையைக் குறிக்கிறது. ஒருத்தி மகனாகப் பிறந்து ஒருத்தி மகனாக வளர்ந்தவன் கண்ணன். பிறக்கும் முன்பே கம்சனின் எதிர்ப்பை சம்பாதித்தவன். இந்த உலகில் கடவுளின் நிழல்கூட பதிந்ததில்லை எனத்தான் நினைக்க வேண்டியிருக்கிறது. கிருஷ்ணன் வாழ்க்கையை கொண்டாட்டமாகக் கருதினான். அதனால் தான் மேற்கு அவனைக் கொண்டாடுகிறது. இயேசு ஒருமுறைக் கூட சிரித்ததில்லை கிழக்குக்கு அவர்தான் சரியானவர்.
இந்தியா திருவிழாக்களின் தேசமாக இருக்கலாம் ஆனால் மக்களின் மனோநிலை அப்படியல்ல. வாழ்க்கை அவர்களுக்கு சுமக்க முடியாத சுமையாக இருக்கிறது. பிறந்துவிட்டோம் என்பதற்காக வாழும் கூட்டத்திலிருந்து ஒரு கிருஷ்ணர் தோன்றுகிறார். இதே பாரதத்தில் பிறந்த கிருஷ்ணர் வாழ்வைக் கொண்டாடுகிறார். புத்தரோ மரணத்தைக் கொண்டாடினார். வாழ்க்கைச் சுழலில் சிக்கித் தவிப்பவர்களுக்கு மரணம் ஒரு விடுதலை. யாராக இருந்தாலும் விதியின் கொடிய பசிக்கு இரையாகத்தான் வேண்டியிருக்கிறது. மேற்கு தேவைக்கு அதிகமான வசதி வாய்ப்புகளை பெற்றிருக்கிறது. மரணம் என்ற ஒன்று இருப்பதால் மட்டுமே மேற்கு பூமிக்கு அப்பாற்பட்டதைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியது. கிழக்கு முக்கியமாக புத்தர் வாழ்வை புறக்கணித்தார். மரணம் என்பது ஒரு வாயில் அதன் வழியாக உயிர்கள் இன்னொரு உலகிற்கு நுழைந்தாக வேண்டுமென்பது அவர் கருத்து.
தருமன் நடத்திய ராஜசூய யக்ஞத்திற்கு பின்புலமாக இருந்தவன் கிருஷ்ணன். தருமன் சாம்ராட் கெளரவம் பெறவேண்டி கம்சன், ஜராசந்தன், கீசகன் மற்றும் சிசுபாலனை கிருஷ்ணன் எதிர்க்க வேண்டி இருந்தது. திருதராஷ்டிரன் காட்டுப் பகுதியையே பாகமாக பாண்டவர்களுக்கு அளித்தான். காட்டைத் திருத்த இந்திரன் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது. காட்டுவாசிகளின் எதிர்ப்பையும், தட்சகன் முதலான பாம்பு இனத்தவர்களின் எதிர்ப்பையும் கிருஷ்ணன் இல்லாமல் பாண்டவர்களால் சமாளித்திருக்க முடியாது. காடு இந்திரப்ரஸ்தம் நகராகியது, பாண்டவர்களின் தலைநகரானது இதற்கு கிருஷ்ணனே காரணம். திரெளபதியின் சுயம்வரத்தின் போதுதான் கிருஷ்ணன் அர்ச்சுனனைச் சந்திக்கிறான். கர்ணன் வெற்றியின் விளிம்புக்கு சென்றபோது பேரழகி திரெளபதியை அர்ச்சுனன் இழந்துவிடுவானோ எனப் பதைபதைத்தவன் கிருஷ்ணன்.அர்ச்சுனன் இலக்கை வீழ்த்தி திரெளபதியை கரம்பிடித்தபோது ஓடிச்சென்று முதலில் வாழ்த்தியவன் அது முதற்கொண்டு அர்ச்சுனனின் நிழலாக இருந்து வந்தான். பலராமரின் எதிர்ப்பையும் மீறி தனது தங்கை சுபத்ராவை அர்ச்சுனனுக்கு மணம் முடித்து வைத்தான்.
பதினெட்டு நாள் யுத்தத்தில் அர்ச்சுனனுக்கு சாரதியாக இருந்தான். பாண்டவர்களுக்காக பல மாயாவி வேலைகளைச் செய்தான். ஆயுத்தால் வீழ்த்தவே முடியாத பீஷ்மரின் முன்பு பெண் தன்மையுள்ள சிகண்டியை நிறுத்தினான். துரோணரின் பலகீனம் அவர் தன் மகன் மீது கொண்ட பாசம் என்றறிந்தான் தருமன் வாயாலேயே அஸ்வத்தாமன் போர்க்களத்தில் செத்து விழுந்ததாக சொல்ல வைத்து துரோணர் வில்லை நழுவவிட்டபோது திருஷ்டத்துய்மனை வைத்து அம்பெய்தி கொல்ல வைத்தான். மண்ணில் புதைந்த தேர்ச்சக்கரத்தை விடுவிக்க போராடிய கர்ணன் மீது யுத்த தர்மத்தை மீறி அர்ச்சுனன் அம்பு எய்ததற்கு கிருஷ்ணனின் சூழ்ச்சியே காரணம். அர்ச்சுனனை ஜெயத்ரதனிடமிருந்து காக்க சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தையே மாற்றிக்காட்டியவன் கண்ணன். பீமன் தாக்குப்பிடிக்க முடியாமல் பின்வாங்கிய போது துரியோதனனின் தொடையில் அடித்து கொல்லச் சொல்லவனும் கண்ணன் தான். நிகரற்ற வீரனான பீமபுத்ரன் கடோத்கஜனை வீழ்த்தினான். அர்ச்சுனனின் மகனாகிய அரவானை களப்பலி கொடுக்க ஏற்பாடு செய்தான். கிருஷ்ணன் தன் கரத்திலுள்ள ஐந்து விரல்களாவே பஞ்ச பாண்டவர்களை நினைத்தான். மொத்தத்தில் பாண்டவர்களுக்கு வெற்றி தேடித் தந்தவன் மாயாவி கண்ணன்.
கிருஷ்ணனையும் புத்திர பாசம் விட்டுவைக்கவில்லை. கிருஷ்ணனுக்கும் காதல் மனைவி ருக்மிணிக்கும் பிறந்தவன் பிரத்யும்னன். அசுர தலைவன் சம்பரன் பிரத்யும்னனால் தனக்கு மரணம் ஏற்படும் என சாபம் பெற்றிருந்தான். துவாரகை அரண்மனையிலேயே குழந்தை பிரத்யும்னனை கவர்ந்து சென்றான். திரும்பவும் பிரத்யும்னன் ருக்மிணியை சந்திக்க பதினாறு ஆண்டுகள் ஆனது. அதுவரை அவள் மயக்கத்திலேயே இருந்தாள். கிருஷ்ணன் தனது மகனைக் காப்பாற்றிய சம்பரன் அரண்மனையில் பணிசெய்த பணிப்பெண்ணான மாயாவதிக்கு நன்றிக் கடன் செலுத்த தவறவில்லை. கிருஷ்ணன் காந்தாரியின் சாபத்தை ஏற்றுக் கொண்டான். நூறு புத்திரர்களையும் போரில் இழந்தவளல்லவா? இரண்டாவது சாபம் அவருக்கு ஜாம்பவதிக்கும் பிறந்த மகன் சாம்பனால் ஏற்பட்டது. கிருஷ்ணரைப் போலவே விளையாட்டுப் புத்தி சாம்பனுக்கு. துவாரகை அருகிலுள்ள சேத்ரத்துக்கு வருகை புரிந்திருந்த விசுவாமித்ரர், கண்வர், துர்வாசர் மற்றும் நாரதர் முன்பாக அவர்களின் ஞானதிருஷ்டியைப் பரிசோதிக்கும் வகையில் சாம்பன் பெண்மேடம் தரித்து எனக்கு என்ன குழந்தை பிறக்கும் என்றான் சினம் கொண்ட துர்வாசர் உனக்கு இரும்புலக்கை பிறக்கும் அதனால் குலநாசம் விளையும் என சாபமிட்டார்.
மறுநாள் சாம்பன் இரும்புலக்கையை பெற்றெடுத்தான். மன்னர் உக்ரசேனரின் யோசனைப்படி அதை கடலில் கரைத்தான். பொடியாகாத ஒரு துண்டு மீனின் வாய்க்குள் சென்றது. அந்த மீனை வேட்டையாடிய ஜரை என்ற வேடன் அந்தத் துண்டினை கூர்தீட்டி தன் அம்பின் முனையில் பொருத்திக் கொண்டான். அடுத்த சில நாட்களில் துவாரகையில் இயற்கைக்கு மாறான சில நிகழ்வுகள் நடைபெறத் துவங்கின. வானம் கொடிய கருமேகங்களால் சூழப்பட்டது. தொடர்ந்து பத்துநாட்கள் சூரிய, சந்திரர்களை வானில் காண முடியவில்லை. வானிலிருந்து எரிகற்கள் வீழ்ந்தன. இரவில் நாய்கள் அழுதன. துவாரகை அரண்மனை வெளவால்களின் சரணாலயம் ஆனது. கிருஷ்ணன் சபையைக் கூட்டினான். துவாரகை கடலுக்குள் மூழ்கப்போவதைத் தெரிவித்தான். வீரர்களிடம் பெண்களையும், குழந்தைகளையும், வயோதிகர்களையும் அழைத்துக் கொண்டு கங்கோத்தார சேத்திரத்துக்கு செல்லுமாறு பணித்தான். நாம் அனைவரும் படகில் பிரபாச தீர்த்தத்துக்கு செல்வோம் என்றான். சரஸ்வதி நதியில் அனைவரும் நீராடினர் பிரபாச தீர்த்தத்துக்கு சென்றடைந்தனர். யாதவ இனத்தில் உட்பகை இருந்தது. அது குருட்சேத்திர போரில் வெளிச்சத்திற்கு வந்தது.
துவாரகையிலிருந்து கிளம்பும் போதே மது அருந்தக்கூடாது என மக்களை கிருஷ்ணர் விண்ணப்பித்து இருந்தார். அருந்தினால் கடும் தண்டனை எனவும் தேசப்பிரஷ்டம் செய்துவிடுவேன் எனவும் எச்சரித்திருந்தார். ஏழுநாட்கள் மதுவை மறந்திருந்த யாதவர்கள் அன்று கிருஷ்ணர் எதிரிலேயே கூட்டம் கூட்டமாக அமர்ந்து மதுவை அருந்த ஆரம்பித்தார்கள். மது போதையில் சத்யகி கிருதவர்மனை பரிகாசம் செய்ய யாதவர்களின் ஒரு தரப்பினர் கைகொட்டிச் சிரித்தார்கள். சத்யகியை அமைதிப்படுத்தாமல் கிருஷ்ணன் மகன் பிரத்யும்னன் ஊக்குவித்தான். கிருதவர்மன் கொதித்தெழுந்து சத்யகியை சொற்களால் அவமானப்படுத்த சொல் பொறுக்க முடியாத சாத்யகி கிருதவர்மனின் தலையை தனது வாளால் கொய்தான். எதிர் தரப்பினர் சாத்யகியின் மீது பாய்ந்தார்கள் கிருஷ்ணர் தன்னிலை இழந்தவராய் கரையில் ஒதுங்கியிருந்த இரும்புபொடிகள் கோர்த்திருந்த கோரைகளை எடுத்து கண்ணில் பட்ட அனைவரையும் கொன்றார். கிருஷ்ணர் மகன் சாம்பன் பேரன் அநிருத்தன் என எல்லோரும் கொல்லப்பட்டு பிணமாகக் கிடந்தார்கள். தேரோட்டி தாருகன் அவரை கொலைக் களத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றான். கிருஷ்ணர் பலராமரை காணச் சென்றார்.
நிஷ்டையில் அமர்ந்திருந்த பலராமர் உயிரைவிட காத்திருந்தார். கிருஷ்ணர் தாருகனிடம் அர்ச்சுனனிடம் நடந்ததை சொல்லி துவாரகைக்கு அழைத்து வா என்றார். தாருகன் அஸ்தினாபுரம் புறப்பட கிருஷ்ணர் துவாரகை சென்றார். தந்தை வசுதேவரின் தாழ்பணிந்து வணங்கினார். உத்தமன் அர்ச்சுனன் உங்களை மீட்டு அஸ்தினாபுரம் அழைத்துச் செல்வான் என குலப்பெண்களிடம் தெரிவித்தார். என் கண்முன்னே அன்று குருவம்சம் அழிந்தது இன்று யதுவம்சம் அழிந்தது என நினைத்துக் கொண்டார். துவாரகையைப் பார்க்க பார்க்க வேதனையாக இருந்தது அவருக்கு. தந்தையிடம் விடை பெற்றார். வசுதேவர் உணர்ச்சியற்று போயிருந்தார். பிரபாச தீர்த்தத்துக்கு கிருஷ்ணர் திரும்பியபோது பலராமரின் உயிரற்ற உடலைத்தான் அவரால் காணமுடிந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பிணக்குவியல்கள். அதனூடே சென்று பார்த்தார். குருட்சேத்திர போர்க்களத்தில் தான் கண்ட காட்சி அவர் நினைவுக்கு வந்தது. அது நடந்து முப்பத்துஆறு வருடங்கள் முடிந்து போயிருந்தது. காந்தாரியின் சாபம் ஏனோ அவருக்கு இப்போது நினைவுக்கு வந்தது.
வாழ்வின் இருவேறு துருவங்களை கிருஷ்ணர் தன் வாழ்நாளில் சந்திக்க நேர்ந்தது. விதி செய்பவனையே ஆட்டுவிக்கக்கூடியது என நிரூபணம் ஆனது. படகு கரை ஒதுங்கித்தான் ஆகவேண்டும் என நினைத்துக் கொண்டார். அவர் உதட்டில் புன்னகை அரும்பியது. காலைப் புலர்ந்தது எதிரே தெரிந்த ஆலமரத்தின் வேரில் தலைசாய்த்து அமர்ந்தார். நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அவர் மனத்திரையில் நாடகம்போல் ஓடிக் கொண்டிருந்தது. தூரத்தில் வேடன் ஜரை இரும்புத்துண்டாலான அம்பினை கூர்தீட்டிக் கொண்டிருந்தான். அந்த சத்தம் கிருஷ்ணருக்கு கேட்டது. ஆனால் அவரோ எதையும் சட்டை செய்யும் மனநிலையில் இல்லை. கிருஷ்ணரின் பாதம் மானின் காது போல் வேடனுக்குத் தோன்ற எய்த அம்பு கிருஷ்ணரின் பாதத்தை துளைத்தது. இரும்புலக்கையின் கடைசி துணுக்கு அது. அர்ச்சுனன் எரியூட்டினான். அவனால் நம்பமுடியவில்லை கிருஷ்ணர் இறப்பாரா என வியாசரிடம் கேட்டான். வியாசர் அர்ச்சுனனைப் பார்த்து புன்னகையித்தார் பிறகு சொன்னார் மழை பெய்கிறது விதை முளைக்கிறது பறவைகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறது எச்சத்திலிருந்து ஆயிரம் விருட்சம் எழுகிறது காடாகிறது அதுவே கிருஷ்ணர், அவர் எப்படி இறக்க முடியும் அவர் என்னுள்ளும் இருக்கிறார் உன்னுள்ளும் இருக்கிறார். நீ இருக்கும் வரை நான் இருக்கும்வரை கடைசி மனிதன் இருக்கும்வரை இருந்துகொண்டிருப்பார் அவர் எப்படி இறக்க முடியும். அவர் இல்லாமல் போயிருக்கிறார் இறக்கவில்லை. நீ மரத்தைப் பார்க்கிறாய் அவர் வேராக இருக்கிறார். அதுதான் அவர் உன் கண்ணுக்குப்படவில்லை. எல்லாவற்றுக்கும் வித்தாக அவர் இருக்கும்போது அவர் எப்படி இறக்க முடியும். அர்ச்சுனனுக்கு ஏதோ புரிந்தது போல் இருந்தது. கிருஷ்ணர் கடவுளா? மனிதனா? என இன்று வரை புரிந்துகொள்ள முடியாதவராகத்தான் இருக்கிறார்!
- தமிழ்,மலையாள கவிதை சங்கமம்
- சாணி யுகம் மீளுது
- குருட்ஷேத்திரம் 22 (கிருஷ்ணர் என்ற புரிந்துகொள்ள முடியாத மனிதர்!)
- குருட்ஷேத்திரம் 21 (வியாசரின் சுயசரிதமே பாரதம்)
- ரொறன்ரோவில் எருமை மாட்டின் தலைகள்
- பாரதி தரிசனம் – யாழ்ப்பாணத்திலிருந்து மாஸ்கோ வரையில் !
- ஹைக்கூ தெறிப்புகள்
- அவரவர் நியாயங்கள்
- சுவர்
- ஜெர்மனி தூய செயற்கை கெரோசின் ஜெட் விமான எரித்திரவம் தயாரிக்கும் உலக முதன்மையான தொழிற்சாலை நிறுவகம்
- கடலும் கரையும்
- கறிவேப்பிலைகள்
- ஹவாய் தீவுகளில் தமிழர் கலாச்சாரம்