மகாபாரதக்கதை வடிவில் நமக்கு தர்மத்தை போதிக்கிறார் வியாசர். உலகமே தர்மம், அதர்மம் என்று இரு அணியாகப் பிரிந்து நிற்கிறது. அதர்மத்தின் கை மேலோங்கும் போதெல்லாம் நான் அவதாரமெடுப்பேன் என்பது உண்மை வழி நடப்பவர்களுக்கு பரம்பொருள் தந்த வாக்குறுதி. இந்த உலகச்சக்கரம் உண்மை என்ற அச்சாணியை மையமாக வைத்தே சுற்றி வருகிறது. திரைப்படத்தில் எல்லா காட்சிகளிலும் வில்லனே ஜெயிப்பான் கடைசியில் சுபம் போடுவதற்கு முன் மட்டுமே கதாநாயகன் ஜெயிப்பான் என்று பகடி செய்வோரின் பக்கம் நியாயம் இல்லாமல் இல்லை. சத்திய வேள்விக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணிக்கத் துணிந்தவர்கள் வாழ்க்கையைப் பார்த்தால் நமக்கு இரத்தக் கண்ணீர்தான் வரும். ஈவு இரக்கமற்றவர்கள், பிச்சைக்காரர்களுக்கு ஒரு ரூபாய் தர்மம் செய்ய யோசிப்பவர்கள்தான் மாடமாளிகைளில் வசிக்கிறார்கள் ரதம் போன்ற கார்களில் உலகைச் சுற்றி பவனி வருகிறார்கள்.
வாழ்க்கை சிலுவையில் அறைந்தாலும் சத்தியத்தைப் பற்றி நிற்பவர்கள் தான் உலகை வெல்லுகிறார்கள். மதத்துக்காக மோதிக் கொண்டவர்கள் மண்ணை உதிரத்தால் நனைத்தார்களேத் தவிர தான் வைத்திருக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கைகளை மறுபரிசீலனை செய்ய எந்த ஒரு மனிதனும் முன்வரவில்லை. யாருடைய பசிக்கு இரையாகப் போகிறோம் என்று தெரியாமல் வீணே வலையில் சிக்கிக்கொள்ளும் மீன்களைப் போன்றவன் தான் மனிதன். இரைக்கு ஆசைப்பட்டால் தூண்டிலின் ரணத்தை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். இந்த உலகில் கடவுளை முன்நிறுத்தி செய்யப்படும் காரியங்கள் நமக்கு பெரும் தலைகுனிவையே ஏற்படுத்துகின்றன. மதம் கடவுளை அடைவதற்குரிய ஒரு மார்க்கம் மட்டுமே இதில் எது உயர்ந்தது எது தாழ்ந்தது. எப்படிப்பட்ட வேடதாரிகளாக இருந்தாலும் அரிதாரத்தை இறுதியில் கலைத்துத்தானே ஆகவேண்டும். நாமெல்லோரும் பிச்சைக்காரர்களே, வாழ்க்கை நமது கைகளை எதைக் கொண்டு நிரப்பப் போகின்றது என்பதில் தான் சூட்சுமம் அடங்கி இருக்கிறது.
எல்லாம் விதியென்று கூறுவோர் சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும் மறுமைக்காக இம்மையில் நடக்கும் சித்ரவதைகளை ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும் என, அதிமனிதன் என்ற குறிக்கோள் அடையப்படாத ஒன்றாகவே இருக்கிறது. மரணத்துக்கு சமீபமாய் இருப்பவர்கள் கூட கடந்த கால தவறுகளுக்காக குற்றவுணர்வு கொள்வதில்லை. ஐம்புலன்களையும் அதனதன் போக்கில் கட்டவிழ்த்துவிடுவதற்காக நமக்கு வாழ்க்கை கொடுக்கப்படவில்லை. இந்த வாழ்க்கை நமது ஞானக்கண் திறப்பதற்கான ஒரு வாய்ப்பு. யாருக்கும் இங்கு ஆயுள் நூறாண்டுகள் என உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுக்கப்படவில்லை. அப்படியிருந்தும் மானிடர்கள் தனக்கு மட்டும் வாழ்வு சாசுவதம் என்றே நினைக்கிறார்கள். அன்பைப் பற்றி போதித்த மகான்களெல்லாம் ஆலயங்களில் சிறைப்பட்டுப் போன காட்சியை நாம் இன்று பார்க்கிறோம். நமது இந்த நிலைமைக்கு கர்மவினையைக் காரணம் காட்டுவது கொடூரமான ஒரு செயலாகத்தான் படுகிறது.
நடப்பவையெல்லாம் நமக்கும் சாதகமா பாதகமா என யாராலும் கணிக்க முடியாது. சட்டதிட்டத்திற்காக மட்டுமின்றி நான்கு சுவர்களுக்கு மத்தியிலும் மனிதன் மகாத்மாவைப் போல நடக்க முயல்வானென்றால் உலகம் தன் இலக்கை எட்டிவிட்டது என்று அர்த்தம். மனித மனம் பலகீனமானது ஆசைக்கடலின் அலைகளை எதிர்த்து அதனால் எதிர்நீச்சல் போடமுடியாது. ஐம்புலன்களையும் அதனதன் போக்கில் விட்டுவிட்டால் பிறவி சுழற்சியில் சிக்கிக்கொள்ள வேண்டிவரும். வாழ்க்கையை ஒன்றுமில்லாதது என உதறிச்செல்லவும் முடியவில்லை அதுவே நிதர்சனம் என ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. எல்லோருமே இரவு பகலைத்தான் எதிர்கொள்கிறோம் இந்த உலக இயக்கத்திற்கு எது அச்சாணியாகத் திகழ்கிறது என தெரியவில்லை. மனிதன் தன்னை மேம்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பா இந்த வாழ்க்கை. கர்மவினையை அனுபவிக்கத்தான் இங்கு பிறக்கிறோம் என்றால் இந்த உலகம் மாபெரும் சித்ரவதைக்கூடமாகத்தான் இருந்து தொலைக்கும்.
இருட்டறையில் குண்டூசியைத் தேடுவது தான் இந்த வாழ்க்கை. அதிஉன்னத மனிதர்களைப் பற்றி பிரசங்களில் பேசுவதைக் கேட்கின்றோம், புத்தகங்களில் படிக்கின்றோம். அவர் கூறிய ஒரு அறிவுரையையாவது வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்கின்றோமா? எதுவுமே மலினமாகிப் போன துர்பாக்கியச் சூழலில் நாம் வாழ நேரிடுகிறது. முங்குகிறவனுக்கெல்லாம் முத்து கிடைத்துவிடுவதில்லை தான். வாழ்க்கை ரசமிழந்த கண்ணாடி வசீகரத்தை இழந்துவிட்ட ஒன்று. இந்த உலகத்தில் ஜனனிப்பதும் நரகத்தில் எண்ணெய் கொப்பறைகளில் வறுத்தெடுக்கப்படுவதும் ஒன்றுதான். என்னை அழைத்து இது மாமரம் காய்த்துத் தொங்கும் பழங்களெல்லாம் தேனாய் இனிக்கும் ஆனால் உனக்கு கொடுப்பினை கிடையாது உனக்கு கோவைப்பழம் தான் என்பவனை நீதானடா கடவுள் என்று தலையில் தூக்கி வைத்து கூத்தாடமுடியுமா என்ன? ஒருவனுக்கு கேட்டதைக் கொடுக்கும் காமதேனுவாக நடந்து கொள்ளும் நீ மற்றொருவனை காலணா காசுக்காக திருவோட்டை ஏந்தி ஏன் அலைய வைக்கிறாய்?
இந்த உலகம் குபேரனுக்கானது என்றால் அங்கு ஏன் என்னை பிச்சையெடுக்க அனுப்புகிறாய்? வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். நீ அப்படி வாடினாயா சாதாரண காகிதத்தில் ஆன கரன்சி நோட்டு உன் முகத்தில் மகிழ்ச்சியை வரவழைக்கிறதே. பணத்தால் ஊமையை பேச வைக்கவும் முடிகிறது. அன்பு என்பது இரத்த பந்தத்திடம் மட்டும் ஏற்படுவதல்ல அப்புறம் எதற்கு அன்பே சிவம் என்று சொன்னார்கள். பிறப்பால் நான் உயர்ந்தவன் என்று பைத்தியம் தான் சொல்லிக் கொண்டு திரியும். ஆட்டுமந்தையை காவல் காக்கும் பொறுப்பை கடவுள் நரியிடம் ஒப்படைத்தால் என்னவாகும்? பெண்ணாசையை வென்ற பீஷ்மருக்கே இங்கு அம்புப் படுக்கை தான் கிடைக்கிறது. சாகப் போகும் பீஷ்மர் சக்கரவர்த்தியான தருமனுக்கு அரச தர்மம் பற்றி உபதேசித்தார்.
வாழ்க்கையில் மனிதர்கள் விரோதிகளைச் சம்பாதித்துக் கொள்கின்றார்கள். ஒரு காரியத்துக்காக விரோதியிடம் குசலம் விசாரித்து உன்னைப் போல் ஊரில் உண்டா என நட்பு பாராட்ட வேண்டியிருக்கிறது இல்லையேல் காரியம் கைகூடாது. சாதாரண மனிதனென்றால் கவலையில்லை. ஒரு அரசனாகப்பட்டவன் இவ்விஷயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதே பீஷ்மரின் முன்பு தருமன் வைத்த கேள்வி. வலியைப் பொறுத்துக் கொண்டு பீஷ்மர் மெல்ல வாய் திறந்து எலிமாதிரி என்கிறார். அது என்ன எலி என்று கேள்வி எழுகிறதல்லவா? காட்டில் பெரிய ஆலமரத்தில் கீழே பலிதன் என்ற எலி வளை அமைத்து வாழ்ந்து வந்தது. கிளையில் லோமசன் என்ற பூனையும வசித்து வந்தது. ஒருநாள் வேடன் பறவைகளுக்காக வைத்த வலையில் மாட்டிக் கொண்டது அந்தப் பூனை. எதிரி மாட்டிக் கொண்டதால் துள்ளிக் குதித்தது எலி. கொஞ்சம் கூட பயமின்றி பொறியில் வைத்திருந்த இரைச்சியைத் தின்றது. எலியின் திருவிளையாடலை அங்கிருந்த கீரியும், கோட்டானும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தன.
சுதாரித்துக் கொண்ட எலி கீரியும், கோட்டானும் தமது உயிருக்குஉலை வைத்துவிடும் என்று எண்ணி பூனையிடம் நட்பு பாராட்டியது. அது பூனையிடம் நமக்கு அடைக்கலம் அளித்தது இந்த ஆலமரம் ஒரு கிளையில் இருமலர்கள் நாம். நான் உன்னை காப்பாற்ற விரும்புகிறேன் என்றது எலி. பூனைக்கு போன உயிர் திரும்ப வந்தது. கீரியும், கோட்டானும் எலி மீது பாயக் காத்திருந்தன. எலி தந்திரமாக பூனையிடம் நாமிருவரும் நண்பர்களாகிவிட்டோம் நான் உன்னுடைய முதுகில் ஓடி ஒளிந்து புரண்டு விளையாடப்போகிறேன் நீ என்னை கொல்ல எத்தனித்தால் உன்னைக் காப்பாற்ற வேறு ஆளில்லாமல் போகும் என்பதை உணர்ந்துகொள் என்றது எலி. எப்படிக் காப்பாற்றுவாய் என பூனை எலியிடம் தன் சந்தேகத்தைத் தெரிவித்தது. எனது கூரிய பல் கொண்டு வலைநரம்புகளை கடித்தால் போதும் என்றது எலி. பூனைமீது எலி துள்ளிக் குதித்து விளையாடுவதைக் கண்ட கீரியும், கோட்டானும் பூனையும், எலியும் நகமும் சதையுமாக இருக்கிறார்கள் இதில் நாம் ஏன் வேலியில் போற ஓணானை காதுகளில் எடுத்து விட்டுக் கொள்ளவேண்டும் என யோசித்தன. பூனையின் எதிர்ப்பை சந்திக்க பயந்து வேண்டாமென்று பின்வாங்கின.
எலியின் தந்திரம் வெற்றி கண்டது. பூனை எலியிடம் தன்னை விடுவிக்கச் சொல்லி வற்புறுத்தியது. எலியோ பூனையாரே நாம் இருவரும் நண்பர்கள் தான் நீங்கள் உங்கள் பிறவிக் குணத்தைக் காட்டிவிட்டால் என்ன செய்வது? இப்போது உங்கள் கண்ணுக்கு ஆபத்பாந்தவனாகத் தெரியும் நான் தப்பிவிட்ட பிறகு எலியாகத் தெரிந்தால் நாக்கில் எச்சில ஊறும் அல்லவா? அதனால் எனக்கு நீங்கள் துரோகம் இழைக்காமல் இருக்க வேடன் வரும்வரை காத்திருங்கள் அப்போது உங்களுக்கு தப்பித்தலே பிரதானமாய் இருக்கும் என்னைப் பொருட்படுத்தமாட்டீர்கள் என்றது. அதன்படி சற்று நேரம் கழித்து வேடன் வந்தான். பூனை உயிரை கையில் பிடித்துக் கொண்டு நடுநடுங்கியது. எலி வலையை அறுத்து பூனையைவிடுவித்தது. தப்பித்தோம் என்று பூனை கிளையில் தாவிக்கொண்டது. எலி வளைக்குள் புகுந்துகொண்டது. இவ்வுலகில் அன்புக்காக அன்பு செய்கின்றவர்களெல்லாம் அருகிப் போய்விட்டார்கள் அடுத்தவனின் தோல்வியையே தமது வெற்றியாக கருதுகிறார்கள். வாழ்க்கையின் குறிக்கோள் பொருள் ஈட்டுவது. அது நேர்மையான வழியாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்ற கருத்து தான் இன்று நிலவுகிறது. எந்த வழியில் அவர் சம்பாதித்தார் என சமூகம் பார்க்கப் போவதில்லை. மனசாட்சி செத்துப்போன இந்த உலகில் இன்னொரு அவதாரம் நிகழும் என்று நீங்கள் நம்பினால் உங்களைவிட அடிமுட்டாள் இந்த உலகிலேயே இல்லை!
ப.மதியழகன்
115,வள்ளலார் சாலை,
ஆர்.பி.சிவம் நகர்,
மன்னார்குடி – 614001.
திருவாரூர் மாவட்டம்.
cell:9597332952
Whatsapp: 9384251845
- முகமது சஃபி எழுதும் மனநலத்துறை வரலாறு
- இந்தியா மூவாயிரம் மைல் செல்லும் கட்டளை வெடிகணைச் சோதனையில் முதல் வெற்றி
- குருட்ஷேத்திரம் 28 (சத்திரிய தர்மம் பற்றி தருமனின் ஐயம்)
- குருட்ஷேத்திரம் 27 (அஸ்வத்தாமன் எனும் மதம்கொண்ட யானை)
- கனடாவில் கலோவீன் தினம்
- நாமென்ன செய்யலாம் பூமிக்கு?
- பெண்ணுக்கென்று ஒரு கோணம்
- ‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- பாரதியும் சிறுகதை இலக்கியமும்
- அறியாமை
- என் நண்பர் வேணுகோபாலனின் ‘தர்ப்பண சுந்தரி’ என்ற கதைத் தொகுப்பு
- தமிழகத்தின் மிகமூத்த பஞ்சாயத்துத் தலைவியா, அல்லது மிகஇளைய பஞ்சாயத்துத் தலைவியா தங்கள் பணியில் சிறக்கப்போகிறார்கள்?
- எனது கவிதை தொகுப்பான சாத்தானின் வேதம் பற்றி
- மரமும் கொடியும்
- டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனுக்கு எங்கள் எளிய நினைவஞ்சலி
- செந்தமிழ் இலக்கியம் சொல்ல மறந்த சுந்தரக் களவியல்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 257 ஆம் இதழ்
- திருமந்திர சிந்தனைகள்: பார்ப்பானும், வெறித்தோடும் பசுக்களும்