பாப் கார்ன் 00.45

author
4
0 minutes, 4 seconds Read
This entry is part 2 of 8 in the series 7 ஆகஸ்ட் 2022

 

 சத்யா GP

 

திகதி 28 :

தலை கீழாக ஓடியபடி படிக்கட்டுகளுக்கு அருகே பெரு மூச்சு வாங்கி நின்று, லிஃப்ட் இயங்காதிருப்பதை அறிந்து, வெறுப்பை ஏராளமாக உற்பத்தி செய்வதைப் புறந்தள்ளி, ஒவ்வொரு படியாக தலை வைத்துக் கடந்து, ஏழாம் தளத்தை எட்டிய தருணத்தில் லிஃப்ட் உயிர்த்தெழுந்ததை கவனிக்கும் போது உண்டாகும் மனோ நிலையை ப்ரதீப் இன்னும் இரு தினங்களுக்கு சிந்தனையில் ஆவாகனப்படுத்தித் தான் தீர வேண்டும். விலகல் சாத்தியமில்லை.

 

மாத இறுதி நாட்கள் நெருங்கினாலே தற்காலிக மூளைச் சிதைவை முடக்க முடியவில்லை. வாரத்திற்கு 10 பாலிஸிகள் என்ற கணக்கு, அடுத்த வார முதல் திங்கட்கிழமையன்று பழையன கழிதல், புதியன புகுதல், பழையன எதுவும் தங்காதிருத்தல் என்ற ஒழுங்கு விதிகள் சகலமும் ஒவ்வொரு மாதமும் 27 ஆம் திகதிக்குப் பிறகு அர்த்தமற்றுப் போவது சாஸ்வதமாகிவிட்டது.

 

ஐம்பது லட்சம் வரை அடிப்படை காப்பீட்டுத் தொகை உள்ள பாலிஸிகளை வழங்கலாம் என்ற அதிகாரம் கேலிக் கூத்தாகிப் போய்விட்டது.

 

பிடித்தங்கள் போக மாத ஊதியமாக எழுபத்தி ரெண்டாயிரத்தி சொச்ச ரூபாய் பெறும் ஆசாமி ஏற்கனவே இரண்டரை லட்ச ரூபாயை வருடாந்திர பீரிமியமாக கைவசமுள்ள பிற இன்ஷூரன்ஸ் பாலிஸிகளுக்காக செலுத்தி வருகிறான். இதற்கும் ஒப்புதல் தந்தால் அவன் செலுத்த வேண்டிய வருடாந்திர ப்ரீமியம் மூன்று லட்சமாகும். மனைவி ஹோம் மேக்கர், பள்ளி செல்லும் மகள், இவனுக்குப் புகை பிடிக்கும் பழக்கமில்லை. குடி எப்போதாவது, உத்யோகம் தந்த நிறுவனம்… அனைத்தையும் தாண்டி ஏதோ இடறியது.

ஏற்கனவே சுவாசம் பொங்கித் ததும்புமளவு காப்பீடு இருக்க, எதற்கு புதிதாக ஐம்பது லட்சம்?

 

காரணங்களை சுருக்கமாக வரைந்து “ரிஜக்டட்” என்று அலுவலக சுற்றுக்குட்பட்ட மின்னஞ்சலை  சகாக்களுக்கு அனுப்பி விட்டு யோசிக்க ஆரம்பித்தான் ப்ரதீப்.

 

சகலமும் போட்டி சூழ் சமூகமாகி விட்டது. அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்றே விளங்கவில்லை. அது கண்ணுக்குத் தெரியாமல், நுண்ணறிவுக்குப் புலப்படாமல் அலை பாய்கிறது.‌ துவக்க நிலையில் இப்பணிக்குள் சங்கமித்த போது இத்துறையில் பாண்டித்யம் பெற்றவர்கள் கற்பித்த நடைமுறைகள், கடைபிடிக்க வேண்டிய லஷ்மண் ரேகை, எதிக்ஸ்… அதன் தாக்கத்தில் கட்டுண்டு செய்த சங்கல்பங்கள் அனைத்தும் அந்தரத்தில் எங்கோ விலகி மறைந்து விட்டன என்ற நினைப்பு கலங்கச் செய்தது.

 

நிச்சயமாக எதிர்வினை ஆர்ப்பரித்து எழும்பி மின்னஞ்சலில் கரையைக் கடக்கும் என்ற நம்பிக்கை பொய்க்கவில்லை.

 

ஸோனல் ஹெட் ஆகாஷின் மறுப்பு தேன், குல்கந்த், க்ரீம் தடவி, ஷ்ரியா சரணின் கதக் முத்திரை போல் அழுத்தமான நளினத்துடன் வெளி வந்தது. ப்ரதீப்பின் மேலதிகாரிக்கும் மின் தகவலஞ்சல் போயிருந்தது.

 

அடுத்து அலை பேசியில் ஆகாஷின் கச்சேரி ‘தி க்ரேட் அண்டர் ரைட்டர் ப்ரதீப் ஜி’ என்ற ஆலாபனையுடன் யதார்த்தமற்ற, வழமையான நடைமுறை சம்பிரதாயம் தவறாது ஆரம்பமானது.

 

இயல்பாக அலைபேசியில் நேரத்தைப் பார்த்த போது மணி மதியம் 12.45 ஆகக் காட்டியது.

 

சம்பாஷணை முடிந்தவுடனேயே புரிந்து போனது. இதற்கான அழுத்தம் பல தரப்புகளிலிருந்து மையல் கொள்ளும். தன் பதவிக்குரிய மிடுக்கை திரைக்கதையில் எங்கேயாவது ஒரு இடத்திலாவது காண்பிக்க வேண்டும்.

 

அண்டர் ரைட்டர் கதாபாத்திரம் இந்த ஓடிடி சீரிஸில் முக்யமானது என்பதை விடாது உணர்த்த வேண்டும்.

 

தினசரி வாழ்க்கையும் காலத்திற்கேற்ப நாடகத் திரை, செவன்டி எம்எம் திரை என்பதைத் தாண்டி ஸ்மார்ட் டிவி, கம்ப்யூட்டர் & பேசி டிஜிட்டல் திரையாக மாற்றிக் கொண்டுவிட்டது.

 

பேசியை உயிர்ப்பித்து ப்ரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ஸி ஸ்நேகிதனிடம், மென் பொருள் நிறுவனம், 50 லட்ச ஆசாமி, அவன் குடும்பம் பற்றி புள்ளிகள் சேர்த்து விரிவானதொரு கோலம் வரைந்து விசாரணை அறிக்கையை ஒரே நாளில் அனுப்புமாறு மன்றாடி… ஏதாவது செய்ய வேண்டும், சகலமும் தாண்டி சுய அதிகாரத்தை காண்பிக்க வேண்டும் என்ற மமதை விரிவடையத் துவங்கியது.

 

ஏன் இப்படி? யோசனையைத் தவிர்த்து மன அழுத்தத்திற்கான தற்காலிக நிவாரணி பொம்மலாட்ட ஆளுமை மட்டுமே என்று நினைப்பு மட்டும் எந்த சமாதானத்தையும் ஏற்காது சுழன்றது.

 

‘வைஷூ…’ அப்பா ப்‌‌‌ரதீப்பின் குரலுக்கு சுகித்து துள்ளாட்டத்துடன் கைகளை விரித்தபடி ஓடோடி வந்தாள். அம்மா போய்‌‌‌ சேர்ந்து சடங்கு, காரியங்களெல்லாம் கடந்த பிறகு மனம் ஏதோ சூன்ய பிராந்தியத்தில் சிக்கிக் கொண்ட மனக்கிலேசத்தை பாய விட்ட போது சமவெளிக்‌‌‌கு கையைப் பிடித்து அழைத்து வந்து ஆதுரமாய் வளைய வந்தாள் வைஷூ.

 

ஆழமான பிடிமானங்கள் கை விட்டு இருள் சூழும் போது கச்சிதமான பொழுதில் மற்றொரு பிடிமானம் மனிதனுக்குக் கிடைத்து விடுகிறது. அகல் தீபம் பரவ இருள் மறைகிறது.

 

“அப்பா குளிச்சுட்டு க்ளீனா ஃப்ரெஷ்ஷா வரேன். ஓகே வா?”

 

“ஓகே”

 

நான்காம் வகுப்பில் மூழ்கித் திளைக்கும் வைஷாலி தனக்கு இப்படியொரு மனசாந்தியைத் தருவாள் என்று எப்போதும் நினைத்ததில்லை.‌ உண்டு முடித்து தாக சாந்தி செய்து கொண்ட போது இப்படியொரு நினைப்பு மறுபடியும் எட்டிப் பார்த்தது.

 

மாதத்தின் இறுதி வாரங்களில் ரவீணா அதிகம் பேசாது ப்ரதீப்பிற்கு அனுசரணையாக இருக்கத் துவங்கிவிட்டாள். அவள் உத்யோகத்திலுள்ள முரண்பாடுகள் எதையும் அவள் வீட்டில் புழங்கியதில்லை. ப்ரதீப்பும் குறைந்தபட்சம் தெரிந்து கொள்ளக் கூட முயற்சித்ததில்லை. பத்து வருட தாம்பத்யம் ஒரு பக்கமாக சாய்ந்த பின் புரிதல், இணக்கம், இரக்கம், கரிசனை என குடும்பம் ஸ்திரமாகிப் போனது.

 

“மனப்பாடம் படிப்புக்கு ரொம்ப முக்யம்னு நினைக்காத வரலாறு பாடத்துக்கு தேவைப்படும் ஆனால் கணக்குப் பாடத்துக்கு அது சரிப்படாது, புரிஞ்சு உள் வாங்கினாத் தான் பிடிபடும்” – ரவீணா பேசியது வைஷூவுடனான தொடர் சம்பாஷணையின் இறுதிப்பகுதியாகத் தோன்றியது.

 

“கணக்கு வெறும் பாடசாலைப் பாடமல்ல, எண்கள் அந்நியமான உருவமல்ல அவை வாழ்க்கைக்கு அத்யாவசியம். வரலாறுக்கு மட்டும் மனனம் ஆதாரமில்லை. வரலாறிலும் கணக்கு உண்டு. 1857, 1947, 1950, 2, 15, 17, 25, 26 போன்ற எண்களை மனதில் நிறுத்திக் கொள்வது நம் தேச வரலாற்றுக்கு மிக அவசியம். தவறினால் தப்பாகிவிடும்.”

 

சொல்ல நினைத்தவற்றை அணை போட்டுத் தடுத்தான். வீட்டில் மேதாவிலச பிம்பமாக இவ்வார்த்தைகள் தன்னைக் காட்டும் என்ற கருத்துக்கு உடன்பட்டான். 

 

“வர சண்டே, எங்கேயாவது வெளிய போவோமா ரவீணா?”

 

“வெளிய போற மாதிரி திருச்சியில பெருசா என்ன இருக்கு?”

 

“மலைக் கோட்டை”

 

“ஈவ்னிங்னா ஓகே ப்ரதீப்”

 

“காலைல கோயில் ஏதாவது…”

 

“கோயில்னா வெள்ளன கிளம்பனும், நிதானமா சந்நிதானத்துல தரிசனம் செய்யனும். உத்யோகம், லௌகீக வாழ்க்கைன்னு எல்லா முகமூடி அடையாளத்தையும் தற்காலிகமா வீசி எரிஞ்சுட்டு பக்தரா மனசு லேசாகி வீடு திரும்பிய பிறகு சாப்பாடு பத்தி யோசிச்சா நல்லாருக்கும். உனக்கு அது செட் ஆகாது”

 

“வைஷூக்கு மட்டும் நேரத்துக்கு ஏதாவது சாப்பிட  வாங்கித் தரலாம், இந்த வாரம் கோயில்லயும் உனக்கு ஜோடியா நான் மாறிடறேன், தொடர்ந்து இதை ஃபாலோ செய்யறேன்”

 

“நீ நிஜமாத் தான் சொல்றியா?”

 

“ஆமாம். எந்தக் கோயிலுக்குப் போகலாம்?”

 

“உய்யகொண்டான் மலை உஜ்ஜீவ நாதர் கோயிலுக்குப் போலாமா?

 

தலையசைத்து சம்மதித்தவன் வைஷூவுடன் இரவு உலாக்கு சுஸூகி பர்க்மேன் துணையுடன் புறப்பட்டான்.

 

திகதி 29 :

காரியாலயத்தில் நுழையும் போதே சக அண்டர் ரைட்டர் விஜியின் முகத்தில் சிரிப்பு வெளிப்பட்டது. கண்களில் நகை குறும்பாக தரித்திருந்தது.

 

“ஒரு பாலிஸியை வைச்சு சேல்ஸ் டீமை அலற விடுற ப்ரதீப்”

 

அதிகாரத்தை, கிடைத்த சந்து பொந்து இடைவெளியில் செலுத்தியதால் உண்டான வெகுமதியாக விஜியின் பேச்சை ஏற்பதா? யோசித்தபடி புன்னகைப் பதிலைத் தந்தான். எதுவும் பேசவில்லை.

 

“மாதக் கடைசி பாலிஸிகளில் நிறைய அக்ஸப்ட் பண்ணி இருக்க, ஆனால் மூனு பாலிஸிகளை அப்ரூப் செய்யாம பெண்டிங்ல வைச்சுருக்க”

 

நிராகரிப்பு என்பது ஒத்திவைப்பாக மாறி விட்டதா? சுய மரியாதையை யாரோ மிதிப்பதாக ப்ரதீப்பினுள் பொருமல் சூழ்ந்தது.

 

“மூன்றுமே வருடாந்திர ப்ரீமியம் மோட், மொத்த மதிப்பு 2 லட்சம். உன்னை விட மாட்டாங்க ப்ரதீப். இம்மாதத்தின் எஞ்சிய இரவுகளும் சுப சிவ ராத்திரியாக வாழ்த்துகிறேன்”

 

அக ரௌத்ரம் தணிந்தது போல இருந்தது. பாசாங்குகள் விலகி வாய் விட்டு சிரித்தான் ப்ரதீப். “தேங்க் யூ விஜி”

 

கம்ப்யூட்டருக்கு கதகதப்பை ஊட்டி மின்னஞ்சல்களைப் பார்வையிட முக்கால்வாசி ஓலைகள் இரண்டு லட்சம் ப்ரீமியம் என்ற ஈர்ப்பு மையத்தையே சுற்றி சுற்றி வந்தன. இவ்வுலகமே காரண வடிவமாக, காரிய வடிவமாக மாறிவிட்ட நிலையில் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு புள்ளியும் அந்த சூத்திரத்தைப் பின்பற்றுவது தானே புவியியல் விதியாகும்!

 

மூன்று பாலிஸி விண்ணப்பங்களில் ஒன்று நிராகரிப்பு என்ற நிலைக்கு கொண்டு செல்வதை யாராலும் தடுக்க முடியாது. புறந் தள்ளியதற்கான காரணங்களை எல்லா தரப்பினரும் ஏற்கும் விதத்தில் சமைக்க முடியும். பதார்த்தத்தைப் புசிக்க வைக்கவும் இயலும். அதுவே ருசி என்று வரையறுப்பதும் சுலபம்.

 

தர்க்கம், விவாதம், அறிவுரை, ஆலோசனை, ஏட்டிக்குப் போட்டி, கண்ணாமூச்சி ஆட்டம், முரண்டு பிடிப்பது, வீண் ஜம்பம், போலி மேதாவிலாசம், குழைவு, கரிசனம்… அனைத்தும் தற்காலிகமாக பொருத்திக் கொள்ளும் முகமூடிகள்.

அனைவருக்கும் தெரிந்த, பரிச்சயமான வேஷங்கள். கடைசி நான்கு தினங்களுக்கு நானூறு அவதாரங்கள், எண்ணிலடங்கா போலி பா வங்கள், போதிய ஒத்திகை பார்த்துப் பழகி வெளிக்காட்டும் உணர்வுகள்…

 

எக்காரணத்தைக் கொண்டும் வீட்டில் முகமூடிகளைத் தரிப்பதில்லை. பாசாங்கில்லை, செயற்கைத்தனம் தவிர்த்து கூடுமானவரை இயல்போடு வளைய வர வேண்டும் என்ற முடிவும் அதைக் கடைபிடிப்பதும் தான் மனிதன் என்ற அடையாளத்தை இழக்காதிருக்க உதவுகிறது.

 

இரவு பத்தரை மணிக்கு ஃபோர்ட் ஸ்டேஷன் ரோடு அருகே இருந்த ஆர் ஆர் டீக்கடை வழக்கம் போல் மூடப்பட்டிருந்தது.‌ அருகே அதிசயமாக ஐபாகோ ஐஸ்க்ரீம் கடை உறங்காது அசைந்து கொண்டிருந்தது. வாகனத்தை நிறுத்தி கீழிறங்கிய உடனே பேசியில் ரவீணாவை இணைத்தான்.

 

“சாஸ்திரி ரோடு ஐபாகோ இன்னும் மூடாம இருக்கு. அனேகமா ஜாமத்துல மழை அடிக்கும்னு நினைக்கிறேன். ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?”

 

ரவீணா இணக்கமாக பதில் சொன்னது அலுவலகச் சூழலை முற்றிலுமாக மறக்கச் செய்தது.

 

“ரெண்டு பட்டர் ஸ்காட்ச், ஒரு வெனிலா, டேக் அவே, பேக்கிங் பக்காவா செய்யுங்க”

 

தித்திப்பு உணர்வு மேலிட வாகனத்தில் விரைந்தவனை திருச்சி டயபடிக் ஸ்பெஷாலிட்டி சென்டர் வலதுபுறம் கண் சிமிட்டியபடி ப்ரதீப்பைத் தாண்டிச் சென்றது.

 

திகதி : 30

தனியார் டிடெக்டிவ் ஏஜென்ஸியிடம் பாலிஸிக்கு விண்ணப்பித்தவரின் குடும்பச் சூழல், வசிப்பிடம், பொருளாதார நிலை, குடும்பப் பின்னணி, ரத்த சொந்தங்கள், பணி புரியும் நிறுவனம், தேக நிலை, மருத்துவப் பரிசோதனை குறித்த கூடுதல் தகவல்கள் என பல்வேறு விவரங்களை துரித கதியில் சேகரித்து வழங்குமாறு தகவல் அனுப்பியிருக்கிறேன். டிடெக்டிவ் ஏஜென்ஸி நாளை விரிவான அறிக்கையை சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் பாலிஸி தொடர்பான இறுதி முடிவை டீம் ஹெட் ஆனந்த் மஹாதேவனின் அறிவுரையின் பேரில் எடுக்கலாம் என்ற கருத்தைப் பகிர்கிறேன்.

மின்னஞ்சலை ஆறு முறை படித்து டிராஃப்ட்டில் சேமித்த ப்ரதீப் அலைபேசி வாயிலாக ஆனந்திடம் கதைத்து அனுப்பவிருக்கும் மின்னஞ்சலை உர்ஜிதப்படுத்திக் கொண்டான்.

ஐந்து நிமிடங்களுக்கு நிதானமாக ஒவ்வொன்றாக வரிசைப்படுத்தி அடுக்கடுக்காக அலசி முடித்து கண்களை மூடி மூச்சை உள்ளே இழுத்து வெளியேற்றிய பின் விரல்களுக்கு கட்டளையிட்டான். மின்னஞ்சல் போய் சேர்ந்தது.

 

ரைடர் இணைப்பு, காப்பீட்டுத் தொகையில் திருத்தம் என மற்றொரு பாலிஸி கோரிக்கை இறுதி கட்டத்தை எட்டிப் பிடித்தது. விண்ணப்பதாரரை பாலிஸிதாரராக மாற்றிய முடிவில் ப்ரதீப்பிற்கு திருப்தியில்லை. வருத்தமுமில்லை.

 

“ஒரு சீப்பு பூவன் பழம் 45 ரூபாய் மா”

 

“நாற்பது ரூபாய்க்குத் தாப்பா”

 

“கட்டாது மா”

 

“அப்போ வேண்டாம்”

 

“ரெண்டு சீப்பா எடுத்துக்குங்க, எண்பது ரூபாய்க்குத் தரேன்”

 

“பாப்பாவோட சேர்த்து வீட்ல மூனு பேர் தான், ரெண்டு சீப்பை வைச்சு நான் என்ன செய்ய?”

 

“தெருத் தெரு வா போய் வியாபாரம் செய்யறவன் மா, மெயின் ரோடு பழமுதிர் சோலையில் விசாரிங்க, விலை வித்யாசம் தெரியும், சீப்பு அறுபது ரூபாய்க்கு கம்மியா உங்களால வாங்க முடியாது. அஞ்சு ரூபாய்க்கு யோசிக்காதீங்க மா, ரெண்டு பழம் வேணா சேர்த்து தரேன்”

 

வியாபாரம் சுமூகமாக முடிந்தது.

 

ரவீணாவின் பழ பேரத்தையும், அலுவலக பரமபதத்தையும் ப்ரதீப் ஒப்பிட்டுப் பார்த்தான். எந்தவொரு வேறுபாடும் புலப்படவில்லை. அடிப்படையான நுட்பங்கள் எத்தனை படிகள் தாண்டினாலும் தம்மைப் புதைத்துக் கொள்வதில்லை. கூட்டல், வகுத்தல், பெருக்கல், கழித்தல் தான் உச்சகட்ட கணக்குகளுக்கும் அடிப்படை. பெருக்கல் கூட்டலின் நீட்சி. வகுத்தல் கழித்தலின் விஸ்வரூபம். வாழ்க்கையே இப்படித்தான். எல்லாம் தெரிந்தவனாக நினைப்பவனும் சராசரியைத் தான் பின்பற்றுவான்.

 

நாளிறுதியில், இரண்டு விண்ணப்பதாரர் மற்றும் ஒரு பாலிஸிதாரர் என்று மறு நாளுக்கான அலுவலகப் பாடமாக நின்றது.

 

பாடசாலை பருவத்தில் உலா வந்த வீட்டுப் பாடம், பணி புரியும் காலத்தில் வேறு வடிவத்தை சுமந்தபடி தொடர்கிறது.

 

திகதி 31 :

சம்பளக் கணக்கைத் தன் ஆளுகைக்குள் வைத்திருக்கும் வங்கிக் கிளைக்கு ப்ரதீப் சென்ற போது மணி காலை 10. அடுத்த மாதம் சுகப் பிரசவமாக ஜனனிக்க வேண்டுமென்ற பரிதவிப்பை வங்கி காட்டிக் கொண்டிருந்தது.

 

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியான சுகந்தியைப் பார்த்தாலே மனதுக்கொரு சாந்தமும், துலக்கமும் கை கூடுவதை ப்ரதீப்பின் மனம் வழமையாக்கிக் கொண்டு விட்டது.

 

நேர்த்தியாக உடுத்திய சேலை, சுருக்கங்கள் இல்லாத வதனம், நெற்றியில் சந்தனக் கீற்று, அதன் கீழே காண்பவர்களுக்குத் தெளிவாகத் தெரியும் அளவில் பொட்டு, யாரிடமும் கடிந்து பேசாது சௌஜன்யமாகப் பழகும் பாங்கு, அளவான சொற் பிரயோகம்…

 

இன்னார் இன்ன பதவிக்குப் பொருத்தமானவர் என்பதைக் காலை முதல் மாலை வரையிலான அலுவல் நேரத்தில் அப்பெண் வெளிப்படுத்தும் கச்சிதமான பாங்கு. ஒவ்வொரு முறையும் அவளைக் காணும் போதும் ப்ரதீப்பிற்கு பிரமிப்பு கலந்த மரியாதை ஊற்றெடுக்கும்.

 

அவள் எதிரே வாடிக்கையாளர்களுக்கான இருக்கையில் அமர்ந்திருந்தவருடன் பேசிக் கொண்டிருந்தவள், இவனைப் பார்த்து “குட் மார்னிங் சார், ப்ளீஸ் வெயிட்” என்றாள். வார்த்தைகளை அதரங்களும், காத்திருக்கும் படி கண்களும் வெளிக்காட்டி ஒரு சேர இயங்கின.

 

“சீதா அபார்ட்மெண்ட்ஸ் பில்டிங்ல 40 ஃப்ளாட்ஸ், எல்லாத்துக்கும் மொத்தமா ப்ராபர்டி இன்சூரன்ஸை ஃபண்ட் பண்ற எங்க பேங்க்கே செய்துடும் சார். ப்ரீமியம் ரொம்ப குறைவு. எங்களுக்கு அஸைன்ட் ஆகி இருக்கிற இன்சூரன்ஸ் கம்பெனி ஸோனல் மேனஜரை உங்க கிட்ட பேச சொல்றேன். இன்னிக்கு ஃபைனலைஸ் செய்யுங்க சார், ப்ளீஸ்”

 

தொடர் விசாரிப்புகள்… மற்றுமொரு பழ பேரம் ஆனால் துவக்க கட்டம். 10 நிமிட காத்திருப்புக்குப் பின் மேஜையிலிருந்த ஒரு ஃபாரமை எடுத்து நிரப்பித் தந்தான்.

 

“அட்வான்ஸா தந்துட்டேன். நாளைக்கு காலைல வாங்கிக்கறேன்”

 

“11 மணி போல வாங்க சார். ஆறு மாச ஸ்டேட்மெண்ட்டா?”

 

“ஆமாம், நெட்ல டவுன் லோட் செய்யலாம் ஆனால் பேங்க் சீல், கையெழுத்து வேணுமாம், கேட்கறாங்க. அந்த ஃப்ளாட்க்கு புக்கிங் அட்வான்ஸ் தொகை எவ்வளவு?

 

“ஓகே ஓகே… அச்சாரம் அம்பதாயிரம் ரூபாய் சார். பதமாக சிரித்தாள், இதமாக இருந்தது.

 

விண்ணப்பதாரர் பணி புரியும் மென் பொருள் நிறுவனம் கடந்த மூன்றாண்டுகளாக ஆட்குறைப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடை நிலைப் பணியாளரிலிருந்து உயர் அதிகாரிகள் வரை யாரையும் விடாது அப்புறப்படுத்துகிறது. செலவினக் குறைப்பின் மூலம் லாப விகிதத்தை உயர்த்துவதே பாதுகாப்பானது என்பதை சுவிசேஷமாக பாவித்து கடைபிடிக்கிறது. பெரு நகரங்களிலுள்ள கிளை அலுவலகங்களையும் மூடி விட்டது.

 

கோவிட் கால கட்டுப்பாடுகளின் போது ‘இருப்பிடத்திலிருந்து பணி புரியுங்கள்’ என்று துவக்கக் கோடுகளில் ஆரம்பித்த ஓவியம் இன்று வரை நிறைவை எட்டவில்லை. ஒரு காலத்தில் பாரம்பரிய ஓவியமாக அடையாளங் காட்டப்பட்ட நிறுவனம் தற்போது புரியாத நவீன ஓவியத்தின் பிடியில் சிக்கி விட்டது.

 

நவீன ஓவியத்தின் கோட்பாடுகள், புரிதல்கள், சூட்சுமங்கள் என சிலர் வலிந்து கட்டமைத்தாலும் உடைந்த கண்ணாடிப் பிம்பம் நிஜத்தின் நிழலாகப் பின்னமின்றி எப்போதும் பிரதிபலிப்பதில்லை.

 

அறிக்கையை நான்கு முறை படித்து தெளிவாக கிரகித்துக் கொண்டதன் உட்பொருள் இது தான் என்று புத்திக்குள் வலுவான கருத்து ஊடுருவியது.

 

அக்கம் பக்கத்தார், ரத்த சொந்தங்கள், மருத்துவ அறிக்கை என சில காரணிகள் எதுவும் வலுப் பெறவில்லை. பணியிடம் பற்றிய சந்தேகங்கள், செய்தித் தாள்களில் தென்பட்ட தகவல்கள்… சந்தேகத்திற்கு நீருற்றிக் கொண்டே இருந்தன.

 

தரவுகள் சூடி, திருத்தப்பட்ட சேர்மானங்களுடன் அலங்கரிக்கப்பட்ட அறிக்கை சாளரங்களைத் திறந்து காண்பித்துப் பார்வையை விசாலமாக்கியது.

 

ஹெட், ஆகாஷ், ஆகாஷின் மேலதிகாரி என அலைபேசி சம்பாஷணை நீடித்தபடி இருந்தது. மற்றொரு விண்ணப்பதாரருக்காக ஓடிய குறுக்கு சாலும் தலைவலியைக் கூட்டியது.

50 லட்சம் காப்பீட்டுத் தொகை, 50 ஆயிரம் ரூபாய் ஆண்டு ப்ரீமியம் இதுவே பேசு பொருளாய் மைய நிலையை எட்டிப் பிடித்தது.

 

பல விதமான, பல தினுசான மாற்றங்களைப் ப்ரதீப் முன் வைக்க, அதை விண்ணப்பதாரருக்காக கொடி பிடித்த ஆகாஷ் தரப்பு ஏற்காது அடம் பிடிக்க, ‘பாரீஸ் காஃபி பைட்’ தொடர்ந்தது. முடிவு எட்டப்படவில்லை.

 

‘குறுக்கு சால் விண்ணப்பம் நிராகரிப்பு’ என்று கண்டிப்பு காட்டிய ப்ரதீப்பின் முடிவு அம்பலம் ஏறியது.

 

இரவு 10.30 மணிக்கு ஹெட், பேசியில் அழைத்து ஐம்பது லட்சத்தை முடித்து வைக்கும்படி கேட்டுக் கொள்ள,

ப்ரதீப் நிதானமாக யோசிக்கத் துவங்கினான்.

 

பழவண்டி, பேரம், பேச்சுவார்த்தை நினைவுக்கு வந்தது.

 

1 சீப்பு + கூடுதல் பழங்களுக்கு வியாபாரி சொன்ன விலை. இதை மாற்றி யோசித்தால்?

நாற்பது ஃப்ளாட்ஸ் சீதா அபார்ட்மெண்ட்ஸ் பில்டிங்… அச்சாரம் அம்பதாயிரம் ரூபாய்.

 

நாற்பது, ஐம்பதாயிரம்… இரு எண்களும் தீர்க்கமாக பரவ ஆரம்பித்தன.

 

“ஐம்பதாயிரம் ரூபாய் ப்ரீமியத்தில் மாற்றமில்லை

காப்பீட்டுத் தொகை : நாற்பது லட்ச ரூபாய்” – காப்பீடு எழுதப்பட்டது

விண்ணப்பதாரர் பாலிஸிதாரர் ஆனார்.

 

மூன்றுக்கு ஒன்றில் ஆகாஷ், இரண்டாவதில் ப்ரதீப், மூன்றாவதில் சமநிலை.

 

ஒட்டு மொத்தத்தில் இருவருக்கும் வெற்றி என்று சொல்லலாம்.

டிராவில் முடிந்த தொடர் என்றும் சொல்லலாம்

 

சமநிலையை வெற்றி என்று இரு தரப்பும் தேர்ந்தெடுத்த பார்வையுடன், சாதக பாதகங்களை அவரவர் பார்வைக்கு ஏற்றவாறு வெளிப்படுத்தியோ, மறைத்தோ களமாடி தங்கள் தரப்புக்கு உரியது என கட்டமைக்கலாம்.

 

மூன்றாவது நபரின் கோணத்தில் அனைத்தையும் அசை போட்டு, ப்ரதீப் தனது ஈகோவை மீட்டுக் கொண்டதாக ப்ரதீப்பாகி நின்றான். யாராலும் மூன்றாவது பார்வையை செலுத்த இயலாது.

 

00.15 மணிக்கு காரியாலயத்திலிருந்து வசிப்பிடம் நோக்கி சாதித்த மனோநிலையில் கிளம்பினான்.

பார்க்கிங்கில் வண்டியைப் பூட்டி லிஃப்ட் உதவியுடன் இரண்டாவது தளத்தை அடைந்து ஃப்ளாட்டிற்குள் பிரவேசித்த போது வைஷூ சயனம் கொள்ளாது விழிப்புடன் இருந்து ஆச்சர்யமூட்டினாள்.

 

“வைஷூம்மா தூங்கலியா?

 

“நாளைக்கு சனிக்கிழமை லீவுப்பா”

 

“ஓஹோ அதனால தூங்காம லூட்டி அடிக்கிறியா?

 

“லூட்டியா? பாப்கார்ன் வேணும்னு அழிச்சாட்டியம் செய்யறா, உன்கிட்டயும் பஞ்சாயத்தைக் கூட்டுவா ப்ரதீப்”

 

“வைஷூக்கு இப்பவே பாப்கார்ன் வேணுமா?, மார்னிங் வாங்கித் தரேனே”

 

“இப்பவே வேணும் பா”

 

“வீட்ல ஆக்ட் 2 எதுவும் இல்லியா ரவீணா?”

 

“இல்லியே, இருந்தா இவ அடம் பிடிப்பாளா? இந்த நேரத்துல பாப்கார்ன் எங்க கிடைக்கும்?”

 

ப்ரதீப் சகலமும் மறந்தான், துறந்தான். மூளை முழுதும் பாப்கார்ன் மணம் வியாபித்துக் கொண்டது. ஹெட்டிடம் பேச வேண்டாம், சேல்ஸ் டீம் ப்ரஷருக்கு சேர்ந்திசைக்க வேண்டாம். சுயமாக முடிவெடுக்கலாம். பாப்கார்ன்… எங்கே பாப்கார்ன்? புலனுக்குள் ஒரு மின்னல் விழுந்தது. திறவு வசமானது.

 

மொபைலை எடுத்து மணி பார்த்தான் 00.45.

 

“அப்பா பாப்கார்னோட வரேன், நீ வெயிட் பண்ணு ஓகே வா?”

 

“ஓகே பா”

 

ஸ்நேகிதன் பர்க்மேனை செலுத்தியபடி அரவம் குன்றிய சாஸ்திரி ரோடில் பயணித்துக் கொண்டிருந்தான். ஆஸிஃப் பிரியாணி கடையருகே பணியாளர்கள் இன்றைய ஸ்தாபன மூடலுக்கும், நாளைய திறப்புக்குமான பணியைச் செய்தபடி விழித்திருந்தார்கள். பிரும்ம முஹூர்த்த நேரம் வரை இவர்கள் இரவு நீடிக்கும் என்று யூகித்தபடி வாகன செலுத்தலில் கவனத்தைத் தொடர்ந்தான். முதல் க்ராஸில் வலது திரும்பி, இடதில் வளைந்து, மீண்டும் வலது என சாலை ரோடைக் கைப்பற்றிய வாகனம் சாலையைத் தொடர்ந்து புசித்தது.

 

மாரீஸ் காம்ப்ளக்ஸ் 70 எம் எம் தியேட்டர் நுழைவிடத்தைப் பிடித்து, படிக்கட்டுகள் ஓரமாக பர்க்மேனைக் காத்திருக்கச் சொல்லி, சாத்தியிருந்த கண்ணாடிக் கதவில் பார்வையை ஊடுருவினான். பணியாளரைக் கண்டு கை தட்டி அழைத்தான். கேள்வியை முகத்தில் வெளிப்படுத்தியபடி வந்தவர் தாடையை மேல் நோக்கி செலுத்தி வினா பாவத்தைக் காட்டினார்.

 

“இன்டர்வெல் முடிஞ்சுருச்சா?”

 

“20 நிமிஷத்துல படமே முடிஞ்சுரும்”

 

“2 பாக்கெட் பாப்கார்ன் வேணும், வீட்ல பாப்பா அடம் பிடிக்கிறா ப்ளீஸ்”

 

“கண்களில் ஒரு உணர்வு, முகத்திலொரு பா வம், குரலில் நெகிழ்ச்சி என மூன்று ரசத்துடன் ஊழியர் காத்திருக்கச் சொல்லி உள்ளே போனார்.

 

ஐந்து நிமிட காத்திருப்பு வைஷூ பிரசவத்தின் போது டெலிவரி அறை வெளியே தவிப்போடிருந்த உணர்வின் அடுத்த நிலையை எட்டிப் பிடித்தது‌.

 

வேறொரு வாகன சப்தம் செவிக்கு நெருக்கமாக ஒலித்தபடி கடந்தது. ப்ரதீப் புறந்தள்ளினான். ஊழியர் கரங்களில் இரு பாப்கார்ன் பாக்கெட்கள். திரை விலக்கி மஹா தீபத்துடன் இறைவனைக் காணும் உணர்வுக்கு அழைத்துச் சென்றது.

 

பாப்கார்னைப் பெற்றுக் கொண்டு கை கூப்பினான். பணத்தைத் தந்து வெளியே வந்தவனுக்கு ராக் தியேட்டர் வாசலில் நின்று கொண்டிருந்த ஆக்டிவாவும், அருகே இருந்த உருவங்களும் கண்ணுக்குப் பழக்கமான வடிவங்களாக இருந்தன.

 

‘அட!’ஆச்சர்யத்துடன் அவர்களை நெருங்கினான்.

 

“குட் மார்னிங் சுகந்தி மேம், படம் பாக்க வந்தீங்களா?”

 

சுகந்தி சிரித்தபடி, “நீங்க எங்க சார் இங்க? படம் பாக்க வரல, பையன் அகால நேரத்துல கோன் ஐஸ்க்ரீம் கேட்டான்…”

 

இருவர் கரங்களில் அளவு குறைந்தபடி இருந்த ஐஸ்க்ரீமைப் பார்த்தபடி வியந்து சிரித்தான்.

 

“நானும் படம் பார்க்க வரல, கேரி பேக்கில் இருந்த பாப் கார்னைக் காண்பித்தான்.

 

சுகந்தியின் சிரிப்பு இப்போது மேலும் வசீகரமாக உருமாறியது. கண்கள் முழுதும் அம்மா எனும் பெருமிதத்தைப் பதித்தது.

 

“வரேங்க, காலைல பிரான்ச்ல பார்ப்போம்”

 

பர்க்மேனை உசுப்பினான். பேசியில் அலைபாயுதே படப் பாடல்களை ஒலிக்க விட்டான்.

 

ஸ்நேகிதனே ஸ்நேகிதனே… பாடல் துல்லிய ஒலித் தரத்தில் செவியை நிறைத்துக் கொண்டிருந்தது.

 

“கர்வம் அழிந்ததடி” தன்னை மறந்து பாடலுடன் சேர்ந்து பாடிக் கொண்டு, கிரி ட்ரேடிங் ஸ்தாபனத்தைக் கடந்து மிதந்தபடி வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தான் ப்ரதீப்.

Series Navigation  சொல்லட்டுமேஇரட்டைப்பட்டுச் சங்கிலி
author

Similar Posts

4 Comments

  1. Avatar
    Kavitha. S says:

    மனிதர்கள் பலவிதம் அது போல மனிதர்களின் சின்ன சின்ன ஆசைகளும்.. நேசிப்பவர்களுக்காக மெனகெடுவது அழகு ❤️அருமையான கதை.

  2. Avatar
    Yamini says:

    Under writers, அறிவியல் புனைவு போல கணக்குப் புனைவுன்னு கதை வித்தியாசமா இருக்கு. பாப்கார்ன் யூகிக்க முடியாதது. மாறுபட்ட கதை

  3. Avatar
    Ramakrishnan Sivasankaran says:

    Neat narration.
    அருமையான கதைக்கரு.
    வாழ்த்துகள்.

  4. Avatar
    Jayashree Sadagopan says:

    ஆஹா. நிறைவான கதை. எனக்கு இந்த பாலிசி சமாச்சாரங்கள் ஒன்றும் தெரியாது. இருப்பினும், இந்த கதை ஹீரோ ஐம்பது லட்சமாக இருந்த பாலிசி தொகையை நாற்பது லட்சமாக குறைத்தலில் தன் ஈகோ நிறைந்ததாக உணர்வதாக நினைக்கிறேன். அந்த நிறைந்த உணர்வின் வெளிப்பாடாகவே, தன் மகளுக்கு நள்ளிரவில் பாப்கார்ன் வாங்க விரைந்ததாக இந்த கதையை பார்க்கிறேன். என் புரிதல் தவறாக இருப்பின் மன்னிக்கவும். கதை சுவாரஸ்யமாகவும், வேகமாகவும் போகிறது. மேலும், ஆங்காங்கே ஆழ்ந்த சிந்தனை மற்றும் தத்துவ தூறல்கள் advanced thinkers க்கு மிகவும் பிடிக்கும். பாலிசி சமாச்சாரங்கள் ஆகியன ஆசிரியருக்கும் புதிது என்பதுபோல எங்கும் தெரியவில்லை. நல்ல அனுபவஸ்தராக, உணர்ந்து எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *