கேட்டது

This entry is part 5 of 9 in the series 4 ஜூன் 2023

ஸிந்துஜா

ஹால் ஒரே களேபரமாக இருந்தது. அப்படி ஒரு பேச்சும், சிரிப்புமாகச்
சத்தம். இன்று காலைதான் சேது துபாயிலிருந்து வந்தான். வரும் போதே
இந்த இரைச்சலையும் கூட்டிக் கொண்டு வந்து விட்டான். அவன் யானையாகவும் வீடு வெங்கலக்கடையுமாகவும் மாறி விட்ட தருணம் என்று கௌசி நினைத்தாள். ஹால் பக்கம் போக விடாமல் அவளைச்
சமையல் உள் கட்டிப் போட்டிருந்தது. சேதுவைப் பார்க்க வந்திருந்த கௌசியின் சொந்தக்காரர்கள், அவள் கணவன் சாயிராமின் உறவு ஜனம் என்கிற கும்பலுக்குக் காப்பி டிபன் கடை முடிந்தது. கௌசி இப்போது மத்தியான உணவைத் தயாரிக்க வேண்டும்.

கௌசிக்கும் அங்கு என்ன நடக்கிறது என்று அறிய ஆவலேற்பட்டது. சமையல் மேடையை ஒரு ஒழுங்குபடுத்தி விட்டு அங்கே சென்றாள்.

“பெரிம்மா, வா, இங்கே வந்து உக்காரு. சேது என்னென்னல்லாம் கொண்டு வந்திருக்கான் பாரு” என்று நித்யா அவளைப் பார்த்துக் கத்தினாள்.
சாயிராமின் தம்பி பெண்

“அத்தே, எனக்கு பர்பெரி பெர்ஃப்யூம் வாங்கிண்டு வந்திருக்கான்” என்று கௌசியின் தம்பி பையன் மோகன் அவளிடம் ஒரு பாட்டிலை நீட்டினான். மிஸ்டர் பர்பெரி என்று எழுதப்பட்டிருந்த கறுப்பும் வெள்ளையும் சேர்ந்த வண்ண பாட்டிலின் உள்ளே திரவம் துள்ளிக் கொண்டிருந்தது.”ரெண்டாயிரம்
ரூபாய் அத்தே!”

“என்னது?”

“அடச்சீ. அங்கே ஆயிரத்துக்குக் கீழதான்டா” என்றான் சேது.

சாயிராம் கையில் ஒரு புதிய கைபேசி காணப்பட்டது. அது அவன் முகத்தில் வரவழைத்திருந்த பெருமையை அவள் கவனித்தாள்.

“அம்மா, இது உனக்கு” என்று அவள் கையில் அழகிய வேலைப்பாடுடன் கூடிய சிறிய பெட்டியைத் தந்தான்.

“நகைப்பெட்டி மாதிரி இருக்கே?” என்றார் சாயிராமின் அப்பா.

கௌசி பெட்டியைத் திறந்து வெள்ளி நிறக் காகிதத்தில் சுற்றப்பட்டிருந்த பொருளை எடுத்தாள். பிரித்ததும் இரண்டு தங்க வளையல்கள் கௌசியின் கையில் தகதகத்தன.

“அடிச்சா பாரு லாட்டரி!” என்றான் சாயிராம். எல்லோரும் சிரித்தனர்.

கௌசி ஒரு வளையலை எடுத்துத் தன் வலது கையில் நுழைக்க முயன்றாள். கஷ்டப்பட வேண்டியிருந்தது.

“எப்படிடா உனக்கு அம்மாவின் அளவு தெரியும்?” என்று சாயிராம் கேட்டான்.

“பெரிம்மா, அவன் இதை உனக்கு வாங்கிண்டு வரலே!” என்று நித்யா சிரித்தாள்.

“என்னடி சொல்றே?” என்று அவள் அம்மா பெண்ணைக் கண்டிக்கிற மாதிரி பார்த்தாள்.

“இது இந்துவோட கை சைசாக்கும் ” என்று மறுபடியும் நித்யா சிரித்தாள்.

சேது அவளை பார்த்து “உனக்குத் திமிர் ஜாஸ்திடி” என்றான். “இதுதான் இந்துவுக்கு” என்று இன்னொரு பார்சலைத் திறந்து உள்ளிருந்ததை எடுத்துக் காட்டினான். தங்க முலாம் பூசப்பட்ட அழகான லேடீஸ் வாட்ச்.

அவர்களைச் சுற்றி வேறு சில பொருள்களும் கிடந்தன.

உல்லன் ஷால் தாத்தாவுக்கு. துபாய் காஃபி பவுடர் பாக்கெட்டுகள் மாமா,பெரியப்பா வீடுகளுக்கு. எலெக்ட்ரிக் ஷேவர் சேதுவின் கான் தோஸ்த் பிரதீபுக்கு, வேலைப்பாடுடன் கூடிய சிறிய விளக்குப் பிடிகள் இந்துவின் வீட்டுக்கு, சாக்லெட் பாக்கெட்டுகள் நெருங்கிய தோழமை கொண்ட பக்கத்து வீட்டு எதிர்வீட்டுக் குழந்தைகளுக்கு, கடைசியில் பெண்கள் அணியும் ஒரு ஜோடி செருப்பு. அதை எடுத்துக் காண்பித்
தான் சேது சிரிப்புடன்.

அப்போது வீட்டு வேலைக்காரி ரஞ்சிதம் வாசலிலிருந்து உள்ளே வந்தாள். ஹால் கூட்டத்தைப் பார்த்து ஒரு நிமிடம் தயங்கி நின்றாள்.

“யாருக்குடா இந்தப் பாதுகைப் பொக்கிஷம்?” என்று கௌசி கேட்டாள்.

“பார். நீ கேக்கறே. அவ வந்து நிக்கறா” என்ற சேது “ரஞ்சிதம், இந்தா, இது உனக்குத்தான்” என்றான்.

“சேது தம்பி, நல்லாயிருக்கியா?” என்று ரஞ்சிதம் அவன் தந்ததை வாங்கிக் கொண்டு பார்த்தாள்.”இவ்வளவு இஷ்டைலா இருக்கு.”

“உன் ஸ்டெயிலுக்கு என்ன குறைச்சல்?” என்று கௌசி அவளைப் பார்த்துச் சிரித்தாள்.

சாமான்களைப் பகிர்ந்து எடுத்துக் கொடுத்த பின் எல்லோரும் சேதுவிடம் அவனது துபாய் வாழ்க்கையைப் பற்றி விஜாரிக்க ஆரம்பித்தார்கள்.

“நான் போய் சமையலைக் கவனிக்கிறேன்” என்று கௌசி சமையலறையை நோக்கிச் சென்றாள்.

கடைசியில் துரையப்பாவுக்கு அவர் கேட்டதை சேது வாங்கி வரவில்லை என்று கௌசி நினைத்துக் கொண்டே போனாள். ஹாலிலேயே வைத்துக் கேட்டிருக்கலாம். ஆனால் கேலியும் கிண்டலும் அதைத் தொடர்ந்து வந்திருக்கும். இந்த சேதுக் கடன்காரனுக்கு யார் ஞாபகமெல்லாமோ இருந்திருக்கிறது. அம்மா சொன்னது மட்டும் நினைவில் நிற்கவில்லையா?

துரையப்பா கௌசியின் ஒன்றுவிட்ட அக்கா பாக்யாவின் கணவர். இரண்டு வருஷத்துக்கு முன்பு பாக்யா அக்கா இதய நோயால் பீடிக்கப்பட்டு மரணத்தை எதிர் கொண்டாள். அதன் பிறகு அவர் தனியாளாகத்தான்
இருந்து வந்தார். சமையலுக்கு மாத்திரம் ஒரு அம்மா காலையிலும் மாலையிலும் வந்து வேலை செய்து விட்டுப் போவாள். பண்டிகை நாள்களில் கௌசி அவரை வற்புறுத்தித் தங்கள் வீட்டில் வந்து இருந்து விட்டுப் போகும்படி செய்வாள்.

துரையப்பா எப்போதும் செல்வாக்கு நிரம்பியவராக இருந்தார். பதவியை விட்ட பிறகும் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என்று சாரி சாரியாக வந்து கொண்டிருந்தார்கள். அவர் ரிட்டையர் ஆவதற்கு மூன்று வருஷங்கள் இருக்கும் போது அவரை முதலமைச்சரின் இரண்டு செயலர்களில் ஒருவராக அரசாங்கம் நியமித்தது. அதற்குக் காரணம் முதலமைச்சர் சில வருஷங்களுக்கு முன்பு தொழில் அமைச்சராக இருந்த போது அரசின் கடன் வழங்கும் நிறுவனத்தில் துரையப்பா பொறுப்பாளராக இருந்தார். தொழில் அமைச்சர் பரிந்துரைத்த தனியார், மற்றும் அரசு நிறுவனங்களுக்குச் சரியாகவும் விரைவாகவும் கடனுதவிகள் செய்தார். துரையப்பாவின் நிர்வாகத் திறமையையும்
நேர்மையையும் அப்போதே பாராட்டிய கல்வியமைச்சர் , தான் முதலமைச்
சரானவுடன் தன்னுடன் வேலை பார்க்கஅவரை வரவழைத்து விட்டார். அந்த மூன்றுவருடங்களில் அவர் பலருக்கும் செய்த உதவிகள் பெரும் அரசாங்க அதிகாரிகளையும் தொழிலதிபர்களை மற்றும் சாதாரண மக்களையும் நன்றிக்கடன்பட வைத்து விட்டன.

பாக்யாவுக்கு கௌசியை மிகவும் பிடிக்கும். அவள் கௌசியைச் சொந்தத் தங்கை போலப் பார்த்துக் கொண்டாள். கௌசியின் எளிமை, சுறுசுறுப்பு, எப்போதும் பிறருக்கு உதவும் மனம் ஆகியவற்றால் துரையப்பாவும் கவரப்பட்டார். அவர்களுக்கு அவள் ஒரு மகள் போலத்தான் இருந்தாள். அது கௌசியின் சொந்தக்காரர்களைப் பொறாமைத் தீயில் தள்ளிக்
காயமுற்றவர்களாக ஆக்கி விட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலையில்
தான் சாயிராமின் அண்ணா ஜம்பு தம்பியின் மனத்தில் ஒரு விஷ விதையை ஊன்றி விட்டுப் போய் விட்டான். அது சாயிராமிடம் வளர்ந்து செடியாகிய பின்புதான் கௌசிக்கு விஷயமே தெரிந்தது.

“நீ எதுக்கு துரையப்பாவாத்துக்கு அடிக்கடி போயிண்டிருக்கே?” என்றான் சாயிராம் ஒருநாள். அவன் குரல் வித்தியாசமாக இருந்தது. எப்போதும்
பாக்யாவின் வீடு என்று அல்லவா சொல்லுவான்?

“எப்பவும் போலத்தானே போய் வந்துண்டு இருக்கேன்? எதுக்கு இன்னிக்கு திடீர்னு இந்தக் கேழ்வை? முந்தாநா நீங்கதானே ஆபீசில உங்களைக் குல்பர்காவுக்கு மாத்தணும்னு பேசிண்டு இருக்கா; அங்க போனா வெய்யில்லே உருகியே உசிர் போயிடும், துரையப்பா ஒரு வார்த்தை என்னோட டைரக்டர் கிட்டே சொன்னா என் ஃபைலைக் கெடப்பிலே
போட்டுருவான்கள்னு சொன்னேள். அதுக்குத்தான் நேத்திக்கிப் போயி
ருந்தேன்” என்றாள்

“அதைத்தான் எல்லாரும் கிண்டலும் கேலியுமா பேசி என் மானத்தை வாங்கறா”

அவன் பேசியது அவளுக்குப் புரியவில்லை.

“யார் அந்த எல்லாரும்? என்ன பேசறா? இதிலே மானப் பிரச்சனை எங்கேயிருந்து வந்தது?” என்றுஅவள் ஆத்திரத்துடன் கேட்டாள்.

அவன் தயங்கித் தயங்கி ஜம்பு அவளைத் துரையப்பாவுடன் இணைத்துப் பேசினான் என்றான்.

அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“அடப் பாவிகளா! அவர் பொண்ணு மாதிரின்னா என்னைப் பாத்துக்கறார். அவர் வயசென்ன, என் வயசென்ன? எப்படி இப்படி நாக்கிலே நரம்பில்லாம பேசறான் உங்க அண்ணா?”

சாயிராம் பதில் அளிக்காமல் நின்றான்.

“அதைக் கேட்டுண்டு அஞ்சு புருஷா மாதிரி கையாலாகாம நின்னுண்டி
ருந்தேளா? அண்ணான்னும் பாக்காம பளார்னு அறைஞ்சிருக்க வேண்டாம்?”

அவன் “சாரி” என்றான் அவளிடம். அது உள்ளத்திலிருந்து வந்ததா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால் அதற்காக அன்றைக்குப் பின் அவள் துரையப்பாவின் வீட்டிற்குச் செல்வதை நிறுத்தவில்லை. சாயிராமிடம் “நீங்களோ உங்க அண்ணா வோ சொல்றாங்கறதுக்காக பாக்யா ஆத்துக்குப் போகாம இருந்தா அது என்னவோ நான் இவ்வளவு நாளா ஏதோ தப்பு செஞ்சுண்டு இருந்துட்டு
நீங்க கண்டிச்சதும் நிறுத்திட்டேன்னு உங்க அண்ணாவே பேசுவான். நான் நேத்திக்கு எப்படி இருந்தேனோ அப்படிதான் இன்னிக்கும் இருப்பேன். நாளைக்கும் கூட” என்றாள்.

அப்படிப் பத்து நாள் முன்னால் அவள் துரையப்பா வீட்டுக்குப் போன போது வீட்டில் இருந்த வேலைக்காரன் அவர் பாத்ரூமில் இருப்பதாகக் கூறி அவளை உட்காரச் சொன்னான். அவர் வந்த போது கால்மணி நேரம் தாமதம் ஆகியிருந்தது. களைப்பாகக் காணப்பட்டார்.

“நீ வந்து ரொம்ப நாழியாச்சா?” என்று கேட்டார்.

“இல்லே. சித்தே நாழிக்கு மின்னேதான் வந்தேன். ஏன் டயர்டா இருக்கேள்? உடம்புக்கு…?”

“ஆமா. ஸ்டூல்ஸ் ப்ராப்ளம். டாக்டர் சொல்றார் வயசான இதெல்லாம் வரத்தான் வரும்னு. ரொம்ப கஷ்டப்படாம இருக்க வைத்தியம் ஏதோ ஹெல்ப் பண்ணும்னு சொல்றார்.”

“மருந்து மாத்திரை எல்லாம் கொடுத்திருக்கார் இல்லையா?”

“ஆமா. சாப்பிண்டு இருக்கேன். போன வாரம் போனப்ப பேரீச்சம் பழம் தினமும் சாப்பிடுங்கோ. அது பவல்ஸ் மூவ்மெண்டை ஈஸியாக்கும்னார். கேரளா டேட்ஸ் நல்ல குவாலிட்டின்னு யாரோ சொன்னான்னு வாங்கிண்டு வரச் சொன்னேன். பாதி மண்ணு பாதிப் பழம்னு சகிக்கப் போறலே.”

“அச்சச்சோ!” என்றாள் கௌசி.

“துபாய்லே, ஷார்ஜாலே நல்ல பழம் கிடைக்குமாம். பாக்கணும்.”

“எதுக்கு வேறே மனுஷாள் கிட்டே போகணும்? சேது இன்னும் பத்து நாள்ளே வரானே. அவன்கிட்டே வாங்கிண்டு வரச் சொல்றேன்” என்றாள் கௌசி.

“ஓ அப்படியா? சரி, சரி” என்றார்.

வந்தவர்கள் மத்தியானம் சாப்பிட்டு விட்டுக் கிளம்பிப் போனார்கள். மணிக்கணக்காக நின்று வேலை பார்த்ததில் கால்கள் இற்றுக் கீழே விழுந்து விடும் போலிருந்தன. கௌசி சாப்பிட்டு விட்டுக் களைப்பு நீங்க ஹாலில் இருந்த ஊஞ்சலில் படுத்துக் கொண்டாள். கால் மணி போயிருக்கும். வாசலில் அழைப்பு மணி ஒலித்தது.

இந்து.

“வா, வா. இந்தப் படபடக்கிற வெய்யில் வீணாப் போக வாண்டாம்னு கிளம்பி வந்தியா?” என்று கௌசி அவளை வரவேற்றாள்.

இந்து உள்ளே வந்து ஹாலில் போட்டிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டாள்.

“நீங்க எப்படி இருக்கேள் அத்தே?”

“அதான் பாக்கறயே!”

“சேது படுத்து ரெஸ்ட் எடுத்துண்டு இருக்காரா?” என்று கேட்டாள் இந்து.

“ஆளைப் பாத்தியே! அந்தப் பிரதீப் வந்து கூட்டிண்டு போயிருக்கான், அரை மணிலே வரேன்னுட்டு. இப்பவே ஒன்றரை மணி நேரம் ஆச்சு.”

“கார்த்தாலே நான் சேதுவோட பேசினேன். சாயங்காலம் வெளியிலே போகலாம்னார்” என்றாள் இந்து.

“அது சரி, நீ வரப்போ அம்மாவையும் அழைச்சுண்டு வந்திருக்க மாட்டியோ? ரெண்டு மாசம் முன்னாடியே கல்யாணத்தை சீக்கிரமா வச்சுக்கணும்னு சொன்னாளே ஆனா அதுக்கப்பறம் ஒண்ணும் தெரியலே. இல்லாட்டா இன்னும் கொஞ்ச நாள் லீவு எடுத்துண்டுவான்னு சேதுட்டே சொல்லிருக்கலாம்” என்றாள் கௌசி.

இந்து அவளைப் பார்த்து “நான்தான் அத்தே, அம்மா கிட்ட சொல்லிட்டேன். வேலைக்குப் போனப்பறம்தான் கல்யாணம்னு” என்றாள்.

கௌசி அவளைத் திகைப்புடன் பார்த்தாள்.

இந்து “அத்தே, அதுக்காகத்தான் நான் உங்ககிட்டே ஒரு ஹெல்ப் கேக்க வந்திருக்கேன். இன்னும் சேது கிட்டே கூடச் சொல்லலே. நேத்திக்குத்தான் எனக்கே தெரிஞ்சது.”

“ரொம்பப் பலமா இருக்கே பீடிகையெல்லாம். சொல்லு” என்று கௌசி அவளைப் பார்த்துச் சிரித்தாள்.

“பொம்மசந்திராலே ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பனியிலே இன்டர்வியுக்குப் போனேன்னு உங்களுக்குத் தெரியுமே. அதுக்கு இருபது பேர் வந்திருந்தா. இப்போ என்னையும் சேத்து மூணு பேரை ஃபைனல் இன்டர்வியூவுக்குக் கூப்பிட்டிருக்கா. ஒரு போஸ்டுதான். நாள்னிக்கு இன்டர்வியு. அந்தக் கம்பனிக்குக் கவர்மென்ட்டோட ஐடிசிலேர்ந்து நிறையக் கடன் கொடுத்
திருக்கறதாலே அந்தக் கம்பனியோட டைரக்டர்ஸ் போர்டுலே ஐடிசி எம்.டி.யையும் ஒரு டைரக்டரா கவர்மெண்ட் போட்டிருக்கு. நாளைக்கு இன்டெர்வியு கமிட்டிலே அவர்தான் சேர்மன். அவரைத் துரையப்பாவுக்கு ரொம்ப நன்னாப் பழக்கமாம். அதான் துரையப்பா அவர்கிட்டே ரெகமெண்ட் பண்ணினா நிச்சயம் எனக்குக் கிடைச்சுடும். நல்ல வேலை. நல்ல
சம்பளம்” என்று சொல்லி நிறுத்தினாள்.

ஒரு நிமிடம் மௌனத்தில் மூச்சு வாங்கிற்று.

“வேலைக்குப் போனப்பறம்தான் கல்யாணம்னு சேதுவுக்குத் தெரியுமோ?” என்று கௌசி கேட்டாள்.

“ஓ, தெரியுமே.”

“சரி அவசரம்னு சொல்றயே. நான் சாயங்காலம் கோயிலுக்குப் போயிட்டு துரையப்பா ஆத்துக்குப் போய் அவர்ட்டே பேசறேன். கோயிலுக்கு அடுத்த தெருதானே அவாம்?” என்றாள் கௌசி. கிருஷ்ணன் கோயிலுக்கு வலது புறம் திரும்பினால் முதலில் வரும் சந்தில்தான் துரையப்பாவின் வீடு இருந்தது.

இந்து எழுந்து வந்து ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த கௌசியின் கையைப் பிடித்துத் தன் கைக்குள் வைத்துக் கொண்டு “தாங்க்ஸ்லாம் சொல்லக்
கூடாது. ஆனா ரொம்பத் தாங்க்ஸ்” என்றாள்.

அன்று மாலை கௌசி கோயிலுக்குச் சென்றாள். தரிசனம் முடிந்த பின் கோயிலை விட்டு வெளியே வந்தவள் இடது பக்கம் திரும்பி நடந்து சென்றாள்.

*

Series Navigationபூதளக் கடற் தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி. பூகோளக் கடற்தளப் பெயர்ச்சி, கடலில் மூழ்கிய குமரிக் கண்டம்பழுப்பு இலை
author

ஸிந்துஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *