கோ. மன்றவாணன்
பின்இரவு நேரம். சாலை வெறிச்சோடிக் கிடக்கிறது. கோழிக் கோட்டில் இருந்து மஞ்ஞேரி நோக்கி அந்தப் புதிய மகிழுந்து பறக்கிறது. பின்னிருந்து துரத்தும் நிலாவால் அந்தக் காரை முந்த முடியவில்லை. இன்னும் வேகத்தை அதிகப் படுத்துவதற்காக உடலை அசைத்து நேராக அமர்கிறார் அதன் ஓட்டுநர். அதே நேரத்தில் திடீரெனச் சாலையின் குறுக்கே கை அசைத்தபடி ஒரு முதியவர் ஓடி வருகிறார்.
மின்னல் எனத் திசைமாற்றியை இடது பக்கம் ஒடித்து, வலது பக்கம் திருப்பி நிறுத்துக் கட்டையை மிதிக்கிறார், கார் குலுங்கி நிற்கிறது. வண்டியைப் பின் நகர்த்தி நிறுத்துகிறார்.
அந்த முதியவரைப் பாதுகாத்து விட்டோம் என்ற நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், திடீரெனக் குறுக்கே வந்த அவர்மீது கோபம் எரிமலையாய்க் கனல்கிறது. முதியவர் ஓட்டுநர் முன் வந்து நிற்கிறார். அப்போதுதான் சாலையின் ஓரம் கந்தல் துணிபோல ஒரு பெண் படுத்தபடியும் துடித்தபடியும் இருப்பதைப் பார்க்கிறார் அந்த ஓட்டுநர்.
எழுபது வயது மதிக்கத் தக்க அந்தப் பெரியவர், கை கூப்பியவாறு குரல் நடுங்கச் சொல்கிறார்.
“பாப்பாவுக்குப் பிரசவ வலி அதிகமாயிடுச்சு. ஆஸ்பத்திரிக்குப் போகணும். நீங்கதான் பெரிய மனசு பண்ணி உதவணும்”
அப்போது இரண்டு மணி. வாகனம் ஏதும் கிடைக்க வாய்ப்பில்லை. அவசரமாய்ப் போய்க் கொண்டிருந்த அந்த ஓட்டுநர், அந்தப் பெண்ணையும் அந்த முதியவரையும் காரில் ஏற்றிக்கொண்டு முன்னிலும் அதிக வேகமாக மருத்துவ மனைக்கு விரைகிறார். மஞ்ஞேரி அரசு மருத்துவ மனையின் வாசலில் பிரேக்கைப் பிடித்துப் பெரும் உராய்வு ஒலியோடு காரை நிறுத்துகிறார். அந்த அதிர்வைக் கேட்டு மருத்துவ மனை ஊழியர்கள் வேகமாக வருகிறார்கள். அந்தப் பெண்ணைக் கைத்தாங்கலாக மருத்துவ மனைக்கு உள்ளே அழைத்துச் செல்கிறார்கள். அவசரப் பணியில் கவனம் செலுத்தியதால், ஓட்டுநரை அவர்கள் பார்க்கவில்லை.
அந்தப் பெண்ணுக்கு வயது பதினெட்டுதான் இருக்கும். முதியவருக்கு அவள் பேத்தியாகத்தான் இருப்பாள்.
ஓர் உயிரைக் காப்பாற்றவும் முடிந்தது; ஓர் உயிரைப் பூமிக்குக் கொண்டுவரவும் முடிந்தது என்று அந்த ஓட்டுநர் மனநிறைவு அடைந்த போது, முதியவர் அருகில் ஓடி வருகிறார்.
“உங்கப் பேரு என்ன?”
“மம்முட்டி”
“என் மன திருப்திக்காக இதை வச்சுக்குங்க” என்று சொல்லிக் கையில் ஒரு சிறு தாளைத் திணித்துவிட்டு மருத்துவ மனைக்குள் சென்று விடுகிறார்.. கைதிறந்து பார்த்தபோது அது இரண்டு ரூபாய்த் தாள்.
மம்முட்டி எனப் பேர் சொன்ன பிறகும்; முகத்தை நேருக்கு நேர் பார்த்த போதும் அந்த முதியவருக்கு அவர் மலையாள சூப்பர் ஸ்டார் என்ற விபரம் தெரியவே இல்லை.
காலத்தில் செய்த அந்த உதவிக்கு, முதியவர் கொடுத்த அந்த இரண்டு ரூபாய் சரியாகி விடுமா? இந்தப் பூமியையே கொடுத்தாலும் ஈடாகி விடுமா?
ஃ
மும்பை வாங்கணி தொடர்வண்டி நிலையம். ஆறு வயது சிறுவனைக் கையில் பிடித்தபடி நடைமேடையில் கண்பார்வை இல்லாத பெண்ஒருத்தி நடந்து போகிறாள். எதிர்பாராத வகையில் அந்தச் சிறுவன் ரயில் பாதையில் தவறி விழுந்துவிடுகிறான். அப்போதுதான் மின்னல் வேகத் தொடர்வண்டி ஒன்று, அந்த நிலையத்தில் நுழைகிறது. சிறுவன் நடைமேடையில் ஏற முயலுகிறான். முடியவில்லை. கண் தெரியாத பெண், நடை மேடையைக் கைகளால் தட்டுத் தடவியபடி அலறுகிறாள்.
அந்த அதிவேக ரயில் மிக அருகே வந்துவிட்டது. அங்கே அது நிற்காது. “சிறுவன் உடல் சிதைந்து போகும். உயிர் பிரிந்து போகும்” என்றே நடைமேடையில் உள்ள பயணிகள் அழுகுரல் இடுகின்றனர்.
இருப்புப் பாதைத் துறையில் பணியாற்றும் ஊழியர் மயூர் செல்கா மின்னலைவிட வேகமாக ஓடி வந்து ரயில் பாதையில் குதிக்கிறார். அவரும் சிதைந்துதான் போகப் போகிறார் என்பது உறுதியான நேரம் அது. எப்படியோ சிறுவனை நடைமேடையில் ஏற்றித் தானும் ஏறும் அந்த நொடியின் நுனிப்பொழுதில்… எதுவும் நடவாததுபோல் அதிவேக ரயில் அந்த இடத்தைக் கடந்து போகிறது…
அடுத்த நொடியே உயிர்போகும் நிலையில்… உயிர்காத்த அந்த உதவிக்கு என்ன பரிசு தர முடியும்? என்ன கைம்மாறு செய்ய முடியும்? இந்த ஞாலத்தையே கொடுத்தாலும் அது போதுமா? அந்த உதவி, ஞாலத்தைவிடப் பெரியது என்று புகழ்ந்தால் மனம் சமாதானம் அடையுமா?
ஃ
இதுபோன்ற நிகழ்வுகள் அரிதாகச் சிலர் வாழ்வில் ஏற்பட்டு இருக்கும். இப்பொழுது உங்களுக்கு வள்ளுவரின் குறள் ஒன்று நினைவுக்கு வருமே…
காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
இடர்படும் நேரத்தில் செய்யும் உதவி சிறியதுதான் என்றாலும்… அது, இந்த உலகத்தைவிடப் பெரியது. இவ்வாறுதான் உரை ஆசிரியர்கள் பொருள் உரைத்து உள்ளனர்.
உலகத்தைவிடப் பெரியது என்பதுதான் வள்ளுவரின் எண்ணமா? அதற்குள் ஏதும் நுண்பொருள் வைத்து இருப்பாரா? – என்று என் மனத்துக்குள் நெடுங்காலமாக அலை ஒன்று வந்துவந்து மோதியபடி இருந்தது.
உதவி செய்தல் என்பது ஒரு தன்மை. ஒரு பண்புநலன். அவசர காலத்தில் செய்கிற உதவி என்பது, அரிய பண்புகளிலேயே உயர்ந்த ஓர் உன்னதக் கூறு.
உலகம் என்பதோ மிகப்பெரிய நிலப்பரப்பு.
இப்போது நமக்குள் கேள்வி பிறக்கிறது. அரியதொரு தன்மையையும் பெரியதொரு பரப்பையும் ஒப்பீடு செய்வது சரி ஆகுமா? சமம் ஆகுமா? ஆகாது என்பதே என் கருத்து.
அப்படி ஆனால் அதனை எப்படிப் பொருத்தி நுண்பொருள் காண்பது?
பூமியில் உள்ள செல்வங்களை… வளங்களை எல்லாம் அள்ளிக் கொடுத்தாலும் உற்ற காலத்தில் செய்த உதவிக்கு இணை ஆகாது என்று சொன்னால் ஓரளவுக்கு ஒப்புக்கொள்ள முடிகிறது. ஆனால் அவ்வாறு அள்ளித் தர முடியுமா? முடியாத ஒன்றைச் சொல்லி, ஈடு காட்டுவது கவிதைக்கு அழகாக இருக்கலாம். கருத்து ஒப்புமைக்கு ஒத்து வருமா?
நிலத்தின் தன்மை என்ன என்பதை எண்ணித் தொகுத்துப் பாருங்கள்.
தாவரங்களை வளர்க்கிறது. உயிரினங்கள் வாழ உணவு வழங்குகிறது. உயிர்க்காற்றுத் தந்து உயிர் காக்கிறது. வான் அமுதாகிய மழையைத் தேக்கி வைத்துக் குடிநீர் தருகிறது. கனிம வளங்களைக் கொடுத்து உலக வாழ்வை வளப்படுத்துகிறது. இன்னும் பல. இவை யாவும் உலகம் நமக்குச் செய்யும் உதவிகள்.
காலம் உணர்ந்து செய்யும் சிறு உதவியை ஒப்பிடுகையில், ஞாலம் செய்யும் இந்த உதவிகள் மிகமிகச் சிறியவை. எப்படி?
உலகம் நமக்குத் தேவையான போது உதவி செய்யாமல் போகும். தண்ணீரைக் கோடைக் காலத்தில் கொடுக்காமல் போகிறது. மருந்துக்கு உதவும் சில தாவரங்களைத் தேவைப்படும் காலத்தில் தருவது இல்லை. எந்தப் பருவத்தில் எதைக் கொடுக்குமோ அந்தப் பருவத்தில்தான் அதைக் கொடுக்கும். கொடுக்காமலும் போகும்.
தேவைப்படாத காலத்தில் என்ன கொடுத்தாலும் அப்போதைக்கு அது பயனில்லை. தேவையான நேரத்தில் கொடுக்காமல் போனால், அது பெருமையா? அதுதான் மாணப் பெரிதா? இல்லை!
இடர்காலம் உணர்ந்து செய்யும் சிலரின் சிறு உதவிதான், ஞாலம் செய்யும் இயற்கை உதவிகளைவிடப் பெரியது.
இந்த விரிவான கருத்தாடலுக்கு ஆதரவாக நாவலர் இரா. நெடுஞ்செழியனின் கருத்துரை உள்ளது. சுருக்கமாகவும் ஏற்கத் தக்கதாகவும் உள்ளது. அந்த கருத்து உரை இதோ…
பருவம் அல்லாத காலத்தில் உதவி செய்யாத உலகத்தைவிட, காலம் அல்லாத காலத்திலும் உதவி செய்கின்றவன்தான் பெருமையில் மிக்கவன் ஆவான்.
—கோ. மன்றவாணன்