அம்மா பார்த்துட்டாங்க!

author
0 minutes, 5 seconds Read
This entry is part 1 of 5 in the series 8 டிசம்பர் 2024

வெ.தி.சந்திரசேகரன்

வழக்கம்போல கல்லூரிக்கு வந்த தமிழ்க்கொடியை, இன்றைக்கு கால்குலஸ் நடத்தும் புரபசர் பொன்னுச்சாமி வராத காரணத்தால், அவளோடு படிக்கும் அருண் சினிமாவிற்கு அழைக்க, அவளும், சிறிது நேரம் யோசித்துவிட்டு, ‘சரி’ யென்று தலையாட்டினாள். நாளையும், நாளைமறுநாளும் சனி, ஞாயிறு ஆதலால் கல்லூரிக்கு விடுமுறை. அதனால் கிராமத்திலிருந்து பேருந்தில் தினமும் கல்லூரிக்கு வரும் தமிழ்க்கொடியால் இரண்டுநாட்கள் திண்டுக்கல்லுக்கு வரமுடியாது என்பதும் அவள் ஒத்துக்கொண்டதுக்கு ஒரு காரணம்.

தமிழ்க்கொடி, ஒரு ஏழெட்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சில்வார்பட்டி என்னும் சின்ன கிராமத்திலிருந்து, திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் படித்துக் கொண்டிருக்கிறாள். தினமும் அரசுப் பேருந்தில் கல்லூரிக்கு வந்து போகிறவள். பிளஸ்டூவில் கணிதத்தில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தாள். அதனால் ‘பி.எஸ்சி.’ கணிதமும் பின்னர் ‘பி.எட்.’டும் படித்துவிட்டு ‘டெட்’ தேர்வில் வெற்றிபெற்று எப்படியாவது அரசுப்பள்ளி ஆசிரியராகிவிட வேண்டும் என்பது அவள் கனவு. 

தமிழ்க்கொடியின் அப்பா ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு வங்கியில் பியூனாக வேலை பார்க்கிறார். அம்மா இருக்கின்ற கொஞ்ச நிலத்தில் விவசாயம் செய்துகொண்டும், கறவைமாடு இரண்டு வைத்துக் கொண்டும் உழன்று கொண்டிருப்பவள். அப்பா, அம்மா இருவருமே அதிகம் படிக்காதவர்கள். இருந்தாலும் தனது மகள்கள் இருவரையுமே நன்கு படிக்க வைத்துவிடவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். தமிழ்க்கொடியின் தங்கை பைங்கொடி, உள்ளூரிலேயே ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள்.

பிளஸ்டூ முடித்தவுடனே, தங்கள் குடும்பச் சூழ்நிலை கருதி, மெடிக்கல், என்ஜினியரிங் கனவுகளைத் தவிர்த்துவிட்டுத் தானே முடிவெடுத்து, கணிதப் பட்டப்படிப்பைத் தேர்ந்தெடுத்தவள் தமிழ்க்கொடி. அப்பாவும் அம்மாவும் ‘உன் விருப்பப்படியே செய்’ எனச் சொல்லிவிட்டார்கள். இருவருக்குமே தங்கள் மகள்களின் மீது அவ்வளவு பாசம். இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் கண்டிப்புடன்தான் நடத்துவார்கள். ஒருதடவை குச்சி ஐஸ் வாங்கித் தின்றுகொண்டுவந்த பைங்கொடி, யூனிஃபாமில் சிந்தி அங்கங்கே கலர்கலராய் மாற, அப்பா கண்டபடி திட்டிவிட்டார். ‘பொட்டப்புள்ள, இப்படித்தான் ரோட்டில் ஆடிக்கொண்டே தின்று கொண்டு வருவாயா?’ எனப் பொரிந்து தள்ளிவிட்டார்.

தமிழ்க்கொடியின் அப்பா எப்போதாவது மது குடிப்பார். வீட்டில் யாருக்கும் அது தெரியாது என்று அவர் நினைத்துக்கொண்டிருந்தாலும், எல்லாருக்கும் அது தெரியும் என்பதுதான் உண்மை. 

சினிமா முடிந்து வெளியே வந்ததும் அருண், ‘ஒரு கப் காபி சாப்பிட்டுவிட்டுப் போவோமா?’ எனத் தமிழ்க்கொடியைக் கேட்க, ‘இல் லை இல்லை, பஸ்ஸுக்கு நேரமாகுது’ என்றாள்.

‘சரி வா, உன்னை பஸ்டாண்டில் இறக்கி விடுகிறேன்’ என அருண் சொல்ல, தமிழ்க்கொடி பின்னால் ஏறி உட்கார்ந்தாள். வண்டியை பஸ்டாண்டுக்கு ஓட்டினான் அருண்.

வழியில் ஒரு சிக்னலில் நிற்க, பார்வையை அலைபாயவிட்ட தமிழ்க்கொடிக்கு ‘பக்’ கென்றாகி விட்டது. எதிரே அவளது அம்மா நடந்து வந்து கொண்டிருந்தாள். அருண் பைக்கை சாலையின் இடதுபுறம் நிறுத்தியிருந்ததால், நிச்சயம் அவள், இவர்களின் அருகில் வந்துதான் கடந்து செல்வாள். அம்மா எதற்காக மாலைநேரம் திண்டுக்கல் வந்திருப்பாள், எதற்கும் அம்மாதானா என ஒருமுறை உறுதி செய்ய நினைத்து, கண்ணை மட்டும் உருட்டிப் பார்க்க, அவளது அம்மா, பார்வைகள் சந்திக்கவிடாமல் தலையைத் திருப்பிக்கொண்டு நேராகச் சென்றுகொண்டிருந்தாள். கடந்து சென்றதும் திரும்பிப்பார்த்து நிச்சயம் அம்மாவேதான் எனத் தமிழ்க்கொடி உறுதி செய்துகொண்டாள்.

இப்போது அவளது இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. ‘நான் பைக்கில் உட்கார்ந்திருந்ததை அம்மா பார்க்கவில்லையோ? பார்த்திருந்தால், ஏன் எதுவும் பேசாமல் சென்றாள்?’ மனதிற்குள் பதில் கிடைக்காத கேள்விகள் சுழன்று சுழன்று வந்தன.

‘ம்ம், இறங்கிக்கோ, உங்க ஊரு பஸ், அங்க நிக்குது, போய் ஏறிக்க’ என்றவன் இறங்கிய தமிழ்க்கொடியைப் பார்த்தவுடன் ‘ஏய், ஏன் ஒரு மாதிரியா இருக்க, என்ன ஆச்சு’ என்றான் அருண்.

‘ஒன்னுமில்லையே, நல்லாத்தான் இருக்கேன்’ என்ற தமிழ்க்கொடி, ‘சரி வர்ரேன்’ எனச் சொல்லிவிட்டுப் பேருந்தை நோக்கி வேகமாக நடந்தாள்.

அம்மா வீட்டிற்கு வந்தவுடன் ஏதாவது கேட்பாளா, கேட்டால் என்ன சொல்லுவது, அப்பாவிடம் சொல்லி கேட்கச் சொல்வாளோ, ‘படிக்க அனுப்பிச்சா யாரோடு ஊர் சுத்தற? என்று திட்டுவார்களோ, எனக் குழப்பத்துடன் இருந்தாள் தமிழ்க்கொடி. 

‘சில்வார்பட்டி இறங்குங்க’ என நடத்துனர் சத்தம் போட, இறங்கி வீட்டிற்கு நடந்தாள் தமிழ்க்கொடி. அப்பா வீட்டிற்குவர தினமும் இரவு எட்டுமணி அல்லது அதற்கு மேலாகும். வீட்டிற்குள் நுழைந்தவள், தங்கையைப் பார்த்து, ‘அம்மா எங்க?’ எனக் கேட்க, ‘எனக்குத்தெரியாது, நான் ஸ்கூல் முடிச்சு வர்ரப்பவே இல்லை’ என்றாள் பைங்கொடி. 

‘சரி, அம்மா வந்தா, நான் தோட்டத்துக்குப் போயிருக்கேன்னு சொல்லு’ எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள். ரெண்டு மாட்டுக்கும் தண்ணி கட்டி, கொஞ்சம் தீவனம் போட்டுவிட்டு வரலாம் என்று சென்றாள். ஊரை ஒட்டியே தோட்டம் இருப்பதால், சிறிது நேரத்திலேயே நடந்து சென்று விடலாம்.

வெயிலுக்காக சாலைக்குள் கட்டியிருந்த மாடுகளை அவிழ்த்து, வெளியே இருக்கும் குருதாளிக்குள் ஊற்றிவைத்திருந்த கழுநீரைக் குடிக்கவைத்தாள். அரிசி, பருப்பு, உளுந்து கழுவிய நீரை மாட்டுக்கு ஊற்றினால் நன்றாகப் பால்கறக்கும். மாடுகளைக் கிடை மாற்றிக்கட்டிவிட்டு, போரிலிருந்து ஒரு கத்தை சோளத்தட்டை எடுத்து, மூனா நாலாத் தரிச்சு, இரண்டுக்கும் பிரித்துப் போட்டாள். கன்றுக் குட்டிகளுக்கும் குண்டாவில் தண்ணீர் காட்டிவிட்டு, கொஞ்சம் பச்சைப்புல் புடுங்கிப் போட்டாள்.  

சூரியன் மேற்கில் தலை சாய, சாலைக்குள் இருந்த கயிற்றுக் கட்டலை எடுத்துப்போட்டு உட்கார்ந்து கொண்டாள். அவளுடைய நினைவுகள் மீண்டும் திண்டுக்கல் சிக்னலுக்குச் சென்றது.

அம்மா கேட்டால் என்ன சொல்லலாம். சினிமாவுக்குப் போனதை யூகித்திருப்பாளா? ஒரு ஆடவனுடன் பைக்கில் சென்றதைக் கேட்டால் என்ன பதில் சொல்வது. இந்தக் காலத்தில் இதுவெல்லாம் சாதரணம் என்பது அம்மாவுக்குப் புரியுமா? அவன் வெறும் நண்பனா, காதலனா என்பதில் அவளே இன்னும் தெளிவாக இல்லை. ஆனால் அவளுக்கு அருண்மேல் ஒருவித ஈர்ப்பு இருப்பது உண்மைதான். அவன் வகுப்புத்தோழன் என்று சொன்னால் நம்புவாளா?  அப்பாவிடம் சொல்லிவிட்டால், அவர் வேறு கேள்வி மேல் கேள்வி கேட்பார். அருணைப்பற்றி அம்மா, அப்பாவிடம் பேசியதேயில்லை. அவன் வகுப்புத்தோழன் என்பது பைங்கொடிக்குக் கூடத்தெரியாது. இதுவரைக்கும் அருணைப்பற்றி வீட்டில் பேசவேண்டிய தேவை ஏற்பட்டதேயில்லை. அவளுடைய கவலையெல்லாம், அவளைப் பற்றி அம்மா தவறாக நினைத்திருப்பாளோ என்பதுதான்.

ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பினாள் தமிழ்க்கொடி. பால்பாத்திரங்களைத் தூக்கிக்கொண்டு வேகமாக வந்துகொண்டிருந்தாள் அம்மா. ‘உரக்கடைக்காரரு நெய் அவசரமா வேணும்னு கேட்டிருந்தாரு, அதனால டவுனுக்குப் போயிட்டுவர நேரமாயிடுச்சு. நம்மளோட சுத்தமான பசுமாட்டு நெய் மாதிரி எங்க கிடைக்கும்?’ எனச் சொல்லிக்கொண்டே வந்தவள், ‘நல்லவேளை தாயி, நீ வந்து மாடு கன்னுகளப் பாத்துக்கிட்ட, பால்காரர் வர்ர நேரமாச்சு, நீ வீட்டுக்கு கிளம்பு தாயி, உனக்கு ஏதாவது படிப்பு வேலையிருக்கும்’ எனச் சொல்ல, ‘சரிம்மா’ எனப்புறப்பட்டாள் தமிழ்க்கொடி. 

அம்மா ஒன்னுமே கேட்கலையே, ஒருவேளை வீட்டுக்கு வந்து கேட்பாளோ? அப்பா வந்து விடுவாரோ? ச்சே, மனம் ஏன் இப்படி கனக்கிறது. வீட்டிற்கு வந்தவள் டிவிக்குள் தொலைய முயற்சி செய்தாள். 

அரைமணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்த அம்மா இயல்பாகவே இருந்தாள். ச்சே, எப்படி இவளால் இப்படி இருக்க முடிகிறது, ஒருவேளை நானாக ஏதாவது சொல்லட்டும் என்று, அமைதியாக இருப்பதுபோல் நடிக்கிறாளோ? என்றெல்லாம் குழம்பிக் கொண்டிருந்தவள், அம்மா அழைத்ததும் சென்று சாப்பிட்டுவிட்டு, ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு படுக்கைக்குச் சென்றுவிட்டாள்.

சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் பைக்கில் சென்றதைப் பற்றி அம்மா எதுவுமே கேட்கவில்லை. அப்பாவும் கேட்கவில்லை. 

வாடிய மனத்துடனேயே மறுநாள் கல்லூரிக்குச் சென்றாள். ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தில் கவனம் செல்லவில்லை. தோழிகளுடனும் கலகலப்பாய்ப் பேசமுடியவில்லை.

‘ஏன் சோகமாகவே இருக்க?’ என்று அருண் கேட்க, ‘நீயும் நானும் அன்னைக்கு பைக்குல வந்ததை அம்மா பார்த்துட்டாங்க’ என்றாள் தமிழ்க்கொடி.

‘ஓ! அப்படியா? அம்மா ஏதும் சொன்னாங்களா, இல்லை திட்டுனாங்களா?’ என்று வினவினான் அருண். 

‘அப்படிக் கேட்டு, திட்டியிருந்தால் கூடப் பரவாயில்லை, ஆனால் அம்மா ஒன்றுமே கேட்கலை’ என்றாள். படிக்காதவளாக இருந்தாலும், அம்மா என்ற உரிமையில் என்னிடம் அது யாரு? எங்கடி போன? என்றெல்லாம் கேட்டிருக்கலாம். எதுவுமே பேசவில்லை. இவளாகவே சொல்லட்டும் என்று திமிராக இருக்கிறாளோ? புலம்பினாள் தமிழ்க்கொடி.

அருண் யோசித்தான். ‘சரி, ஒன்னு செய், இன்னைக்கு வீட்டுக்குப் போனதும் அம்மாகிட்ட நீயே சொல்லிவிடு. தோழிகளுடன் சினிமாவுக்குப் போனோம், நேரமானதால் அருண் பைக்கில் வந்தேன். அம்மா திட்டினால், இனிமேல் போகமாட்டேன் எனச்சொல்லி பிரச்சினையை முடித்துக்கொள்’ என்றான்.

இவன் சொல்வதுபோல் பேசிவிடலாமா என நினைத்த தமிழ்க்கொடி, ஒருமுடிவு செய்தாள். அம்மாவிடம் பேசலாம். எதாவது திட்டினால், உனக்கென்ன தெரியும், இதில் என்ன தவறு இருக்கிறது? நீ ஒரு பட்டிக்காடு, இதல்லாம் உனக்குப் புரியாது என்று பதிலுக்குத் திட்டிவிடலாம் என நினைத்தாள்.  

மாலை வீட்டுக்கு வந்தவள், அம்மா இல்லையென்றதும் தோட்டத்திற்குச் சென்றாள். மாடுகளைக் கொசு கடிக்காமலிருக்க, புகை போடுவதற்காக குப்பை கூளங்களை இரண்டு இடங்களில் குமித்துக் கொண்டிருந்தாள் அம்மா. ‘வா தாயி, என்ன வந்தவுடன் இங்க வந்திட்ட?’ எனக் கேட்ட அம்மாவிடம் ஒன்றும் சொல்லாமல் கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டாள் தமிழ்க்கொடி. 

பதில் சொல்லாத மகளிடம் வாஞ்சையுடன் அருகில் சென்று அமர்ந்துகொண்டாள். ‘என்ன தாயி, ரெண்டு நாளா சரியா பேசமாட்டங்கிற, ஏதாவது பிரச்சனையா?’

தமிழ்க்கொடி நேரடியாகக் கேட்டாள், ‘திண்டுக்கல்லுல நான் இன்னொருத்தன் பைக்குல போனத நீ பாத்தியா?’

‘ஆமா, அதுக்கென்ன இப்போ…’ 

‘அதுக்கென்ன இப்போவா! என்னப்பத்தி நீ தப்பா நினைக்கலையா?’

‘அடப் பைத்தியம்! நான் எதுக்கு உன்ன தப்பா நெனைக்கனும், ஏம் மகளப் பத்தி எனக்குத் தெரியாதா? நீ காலேஜ்ல படிக்கிறவ, நாலு இடத்துக்குப் போக வர்ர வேலையிருக்கும், நடந்து போறப்ப யாராவது உனக்குத் தெரிஞ்சவங்க உன்னைப் போற இடத்துல பைக்குல இறக்கி விடலாம். இதுல என்ன இருக்கு!’

என்னோட அம்மாவா இப்படிப் பேசறது, இவளையா நான் பட்டிக்கடுன்னு நெனைச்சேன், கூனிக் குறுகிப் போனாள் தமிழ்க்கொடி. கண்களில் நீர் ததும்பத்துவங்கியது. என்மேல் எவ்வளவு ஆளமான நம்பிக்கை. இந்தப் பத்தரை மாற்றுத் தங்கத்திடம் பொய் சொல்லக்கூடாது என நினைத்தாள் தமிழ்க்கொடி.

‘அம்மா, அன்னைக்கி நான் சினிமாவுக்குப் போயிட்டு வந்தேன்’ என உண்மையை உடைத்தாள்.

‘நீ என்ன தெனமுமா சினிமாவுக்குப் போற, என்னைகாவது ஒரு நாள் தானம்மா…, படிப்பு, படிப்புன்னே இருந்தாலும் போரடிக்கும்ல’

அழுகை பீரிட்டுவர ‘சரிம்மா, நீ ஏன் அன்னைக்கு என்னப் பார்க்காத மாதிரிப் போன?’ என்று உடைந்தாள் தமிழ்க்கொடி.

‘ஒங்கூட இருக்கிறது யாருன்னு எனக்குத் தெரியாது, நாந்தான் உன் அம்மான்னு அவருக்குத் தெரிஞ்சா, அது உனக்குச் சரியா இருக்குமான்னு எனக்குத் தெரியல… அதான் நான் எம்பாட்டுக்கு வேலையப் பாத்துட்டு வந்துட்டேன் தாயி… அது தப்பா?

இரண்டு கைகளாலும் தாயை இறுக அணைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள் தமிழ்க்கொடி. 

‘இத நெனச்சுதான் ரெண்டு நாளா உம்முன்னு இருந்தியா தாயி, எனக்குத் தப்பாத் தெரிஞ்சா நான் உங்கிட்டக் கேக்க மாட்டனா தாயி, நான் சத்தியமா உன்னத் தப்பாவே நெனக்கல தாயி’  

தன்னைத் தாயி, தாயி என அழைக்கும் தாயின் நெஞ்சில் அழுது தீர்த்துவிட்டாள் தமிழ்க்கொடி. அவளின் கண்ணீரை அம்மா முந்தானையால் துடைத்துவிட, மழைவிட்டதும் வெளிரிய வானம் போல, தமிழ்க்கொடியின் மனம் பளீரென ஆனது.

தொலைபேசி: 9443049862

Series Navigationதிருப்பூர்   இலக்கிய விருது   2024 .. 16ஆம் ஆண்டு விழா 1/12/24
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *