Dr. ரமேஷ் தங்கமணி MSc., PhD., SLET
மண் இயற்கையின் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் ஆகும். அவை நமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன, உணவுப் பொருட்களின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கின்றன, மேலும் பலதரப்பட்ட உயிரினங்களின் இருப்பிடமாகவும் இருக்கின்றன. மண்ணின் தரத்தை பராமரிப்பதும், மண்ணின் தரம் வெப்பமாக இருப்பதை உறுதி செய்வதும் அனைவரின் பொறுப்பாகும். தொழில்மயமாக்கல் மற்றும் மோசமான நில மேலாண்மை அமைப்புகள் பல இடங்களில் மண்ணின் தரத்தை குறைத்து, மேலும் மண் அரிப்பு, வளம் குறைதல் மற்றும் கரிமப் பொருட்களின் இழப்பு ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது. மண்ணின் தரத்தைப் பேணுவதன் முக்கியத்துவம் மற்றும் அது நம் வாழ்வில் எவ்வளவு முக்கியமானது மற்றும் உணவு முறை குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்துவதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது.
உலக மண் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஜூன் 2013 இல், உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) மாநாடு உலக மண் தினத்தை அங்கீகரித்தது, பின்னர் FAO, ஐக்கிய நாடுகள் சபையை அணுகி அதை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளுமாறு கோரியது. 2013 ஆம் ஆண்டின் இறுதியில், ஐக்கிய நாடுகள் சபை டிசம்பர் 5, 2014 அன்று முதல் அதிகாரப்பூர்வ உலக மண் தினமாக அறிவித்தது. உலக மண் தினத்தினை முன்னிட்டு நடத்தப்படும் பிரச்சாரம் நிலையான மற்றும் மீள்தன்மை கொண்ட வேளாண் உணவு முறைகளை அடைவதில் மண்ணுக்கும் நீருக்கும் இடையிலான முக்கியத்துவம் மற்றும் உறவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலக மண் தினம் என்பது மண்ணைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், குடிமக்களையும் மண் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் உலகளாவிய முன்னெடுப்பு ஆகும்.
உலக மண் தினத்தில், குறைந்தபட்ச உழவு, பயிர் சுழற்சி, கரிமப் பொருட்களைச் சேர்ப்பது மற்றும் மூடி பயிர் செய்தல் ஆகியவை மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மண் அரிப்பைக் குறைக்கவும் மற்றும் நீர் ஊடுருவல் மற்றும் சேமிப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை விவசயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பரப்புரைகள் மூலம் தெரியப்படுத்த வேண்டும். மேற்குறிப்பிட்ட நடைமுறைகள் மண்ணின் பல்லுயிரியலைப் பாதுகாக்கின்றன, வளத்தை மேம்படுத்துகின்றன மற்றும் கார்பன் வரிசைப்படுத்துதலுக்கு பங்களிக்கின்றன, காலநிலை மாற்றத்தினை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உலக மண் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, “மிகப்பெரிய சிறு பண்ணை (2018)”, “சிம்பனி ஆப் தி சாயில் (2012)” மற்றும் “கிஸ் தி கிரவுண்ட் (2020)” போன்ற மண் குறித்த விழிப்புணர்வு ஆவணப்படங்களை மாணாக்கர் மத்தியில் திரையிட்டு விழிப்புணர்வினை ஏற்படுத்தலாம். இது தவிர, மனிதர்களின் வாழ்க்கைக்கு மண் எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றிக் கற்று அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள், பேராசிரியர் திரு. சுல்தான் அகமது இஸ்மாயில் அவர்கள் தமிழில் எழுதி வெளியிட்ட புத்தகங்களான; மண் நலப் புரட்சிப் பாதை, மண் மக்கள் மகசூல், மண்புழு என்னும் உழவன் மற்றும் மண்ணின் நண்பன் மண்புழு போன்றவற்றை படிக்கலாம். முடிவாக, இந்த ஆண்டு உலக மண் தினத்தினை அனைவரும் அறிவுபூர்வமாகவும், ஆக்கபூர்வமாகவும் அனுசரித்து, அனைவரும் மண்ணைப் பாதுகாப்பதன் அவசியத்தை அறிந்து கொள்ளச் செய்தல் வேண்டும்.
கட்டுரையாளர்:
Dr. ரமேஷ் தங்கமணி MSc., PhD., SLET
விஞ்ஞானி, ஜி.எஸ். கில் ஆய்வு நிறுவனம், வேளச்சேரி – 42
- அம்மா பார்த்துட்டாங்க!
- திருப்பூர் இலக்கிய விருது 2024 .. 16ஆம் ஆண்டு விழா 1/12/24
- நம்பிக்கை
- பார்வை
- மண் தினத்தின் மான்மியம்!