குளிர்வித்தால் குளிர்கின்றேன்
– பி.கே. சிவகுமார்
நியூ ஜெர்சி முருகன் கோவிலில் ஆகஸ்ட் 9, 2025 சனி மாலை இசைக்கலைஞர் திருபுவனம் ஜி. ஆத்மநாதன் அவர்களின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. பக்கவாத்தியத்தில் – மிருதங்கத்தில் சர்வேஷ் பிரேம்குமாரும் வயலினில் மேகா சுவாமியும் உதவினார்கள்.
திரு ஆத்மநாதன் அவர்கள் பெயரைப் பல்லாண்டுகளாக அறிவேன். பெட்னா நிகழ்ச்சிகளில் பங்குபெற அமெரிக்கா வந்திருக்கிறார் – இந்த முறையும். இவரிடம் தொலைதூரக் கல்வி முறையில் சங்கீதம் பயிலும் பல அமெரிக்கக் குழந்தைகள் உண்டு. ஆனாலும் இப்போதுதான் முதன்முறையாக அவர் கச்சேரி கேட்கிறேன்.
நிகழ்ச்சி மாலை 6:45க்குத் தொடங்கியது. வரவேற்பு, அறிமுகவுரைக்குப் பின் கச்சேரி 7 மணிக்குத் தொடங்கியது. ஒன்றரை மணி நேரம் பாடினார். நேயர்களின் விருப்பப் பாடல்கள் கேட்டும் பாடினார். எனக்குப் பிடித்த வள்ளலார் பாடல்கள் நிறைய இருந்தது நிறைவாக இருந்தது. என் மனதை உருக்குகிற என்ன கவி பாடினாலும் பாடலையும் பாடினார். நான் கேட்டதற்காக – எனக்கு அதைப் பாடப் பிடிக்கும், கோவில் என்பதால் பரவாயில்லையா எனக் கேட்டு, பாடல் தந்தை மகளைக் குறித்துப் பாடுவதுதான், காதல் பாட்டு இல்லை என்பதையும் விளக்கி – துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ என்கிற பாரதிதாசனின் பாடலையும் பாடினார். அவர் பாடிய பாடல்களின் பட்டியலை, எனக்குத் தெரிந்தவரை எழுதியவர், ராகம், தாளத்துடன் கீழே இணைத்துள்ளேன். தவறிருப்பின் திருத்தவும்.
என்னுடைய இல்லவே இல்லாத இசையறிவுக்கு எல்லா ராகமும், தாளமும் எனக்கு ஒன்றுதான். ஆனால் தமிழிசை என்கிற போது இந்த அறியாமையைத் தாண்டி உணர்வுபூர்வமாக என்னால் ஒன்றிவிட முடிகிறது. ராகம் புரியாத போதும் கேட்கும்போது எங்கேயோ உள்ளே சிலிர்க்கிறது – தமிழால்.
எழுத்தாளர் ஜெயகாந்தனின் தாத்தா பரம நாத்திகராம். ஆனால் தமிழ்ப் பக்திப் பாடல்களை அவர் பாடும்போது அவர் கண்ணில் நீர் வடியுமாம். அவரிடம் இருந்து தனக்கு இசையிலும் தமிழ் பக்தி இலக்கியத்திலும் ஆர்வம் உண்டானது என ஜெயகாந்தன் அமெரிக்கப் பயணத்தில் நினைவு கூர்ந்தார். தமிழிசையில் இசை தெரியாதவர்களும் நாத்திகர்களும் ஒன்றக் காரணம் தமிழ் தான்.
நியூ ஜெர்சியில் 12க்கு மேற்பட்ட தமிழ் அமைப்புகள் உள்ளன. ஏறக்குறைய 2000 மாணவர்கள் படிக்கும் பல தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. இதிலே ஓர் அமைப்பைச் சார்ந்த சிலர் இப்போது பெட்னாவில் பொறுப்பிலும் இருக்கிறார்கள். பெட்னாவின் அதிகாரமே இப்போது தமிழை முன்வைக்கிற ஒரு தமிழர் கட்சியின் அனுதாபிகள் கையில் உள்ளது. ஆனால் பெட்னாவுக்கு விருந்தினராக வந்த எழுத்தாளர்களை வைத்து – பெட்னாவில் எந்தச் செல்வாக்கும் இல்லாத – நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கமே நிகழ்ச்சியை நடத்தியது. இப்போது பெட்னாவுக்கு வந்த ஆத்மநாதனின் இந்நிகழ்ச்சியை தனிப்பட்ட ஆர்வம் கொண்டவர்கள் முருகன் கோவிலில் நடத்தினார்கள்.
நியூ ஜெர்சியில் இங்கிருக்கிற எல்லாத் தமிழ் அமைப்புகளில் இருக்கிறவர்களும் எனக்கு நன்கு தெரிந்தவர்களோ ஓரளவு அறிமுகமானவர்களோ தான். இந்த மாதிரியான தமிழிசை நிகழ்ச்சியை வாரயிறுதியில் அந்த அமைப்புகள் ஏற்பாடு செய்து, குழந்தைகளை, பார்வையாளர்களை அழைக்க முடியவில்லை எனில் எதற்கு நாம் தமிழ், தமிழார்வம் என இங்கே பம்மாத்து செய்து கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் நான் எழுதினால் தெரிந்தவர்களே கோபப்படக் கூடும். நாளைக்கு நல்ல எழுத்தாளர் என அழைக்க நான் பொதுநோக்கில் சிபாரிசு செய்தால் காணாதமாதிரி போகக்கூடும். ஆனாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
இதற்கு முந்தைய வருடங்களில் இவரை வைத்து நிகழ்ச்சி நடத்தியுள்ளோம் எனச் சில அமைப்புகள் சொல்லலாம். இருந்தால் என்ன? இவரைப் போன்ற தமிழிசைப் பாடகர்கள் அமெரிக்கா வரும்போதெல்லாம் அழைக்கலாம். பலமுறை வந்த பட்டிமன்றப் பேச்சாளர்கள் திரும்பத் திரும்பத் தமிழ் அமைப்புகளில் பேசுவது இல்லையா என்ன?
ஒரு வெகுஜன நிகழ்ச்சி நடத்தினால் – அதில் வருகிற வருமானத்தை வைத்துக் கொண்டு இரண்டு கலை, இலக்கிய, தமிழிசை நிகழ்ச்சிகளை அமெரிக்கத் தமிழ் அமைப்புகள் நடத்தாவிட்டால், தமிழை நேசிப்பதாகவும், வளர்ப்பதாகவும் சொல்லிக் கொள்வது உண்மையாக இருக்காது. கலை, இலக்கிய, தமிழிசை நிகழ்ச்சிகள் நடந்தாலும் அதில் நெபோடிசம் இருக்காது என எப்படிச் சொல்லமுடியும் எனக் கேட்கலாம். முதலில் அத்தகைய நிகழ்ச்சிகள் அதிகமாகட்டும். அப்படி ஆனால், போகப் போக இத்தகைய பிரச்னைகளைச் சுட்டிக் காட்டி சரி செய்து கொள்ளலாம்.
தமிழ் சினிமா நட்சத்திரங்கள், வெகுஜனப் பேச்சாளர்களையே எவ்வளவு நாட்களுக்கு இங்கே தமிழ் அமைப்புகளில் கூட்டம் வருகிறது எனச் சொல்லி முன்னிறுத்தப் போகிறோம். இப்படியே தொடர்ந்தால் 12 தமிழ் அமைப்புகள் என்ன 100 தமிழ் அமைப்புகள் ஒரு மாநிலத்தில் வந்தாலும் எந்த வித்தியாசமும் தெரியப் போவதில்லை.
எனக்கு ஆத்மநாதன் அவர்களை முன் பின் தெரியாது. கச்சேரி முடிந்தபின் தனியே சென்று அவரைப் பார்த்துப் பேசக்கூட இல்லை. அதனால் ஏதோ தெரிந்தவர் பாதிக்கப்படுகிறார் எனப் பேசவில்லை. ஆத்மநாதனை முன்வைத்து தமிழ் அமைப்புகளின் பொதுவான செயற்பாட்டைச் சுட்டிக் காட்டுகிறேன். அவ்வளவுதான்.
இந்நிகழ்வில் 40-45 பெரியவர்களும் குழந்தைகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். இதை ஆத்மநாதன் அவர்களை அறிந்த அன்பர் ஒருவர் முன்னெடுத்துக் கோவிலின் உதவியுடன் ஏற்பாடு செய்திருந்தார்
முடிவில் அனைவருக்கும் குறைந்தது 4 வகையான இரவு உணவும் தன்னார்வலர்களாலும் கோவிலாலும் வழங்கப்பட்டது. கச்சேரிக்கு அனுமதியும் இலவசம் தான். ஆனால் லட்சக்கணக்கிலாவது தமிழர்கள் வசிக்கும் மாநிலத்தில் இவ்வளவு பேர்களாவது வந்தார்களே என மகிழ்வதா வருந்துவதா?
அடுத்த வாரம் வரவிருக்கிற ரஜினி படத்தை முதல் இரண்டு மூன்று நாட்களிலேயே ஏறக்குறைய 30 டாலர் டிக்கெட் கொடுத்துப் பார்த்துவிட்டு இணையத்தில் கருத்தைக் கொட்டப்போகும் அமெரிக்கத் தமிழர்களையும் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.
ஆத்மநாதன் பாடிய பாடல்களின் விவரம்:
1. கலை நிறை கணபதி சரணம் சரணம் – வள்ளலார் – அம்சத்வனி ராகம் – ஆதி தாளம்
2. மால் மருகா ஷண்முகா முருகா – பாபநாசம் சிவன் – ராகம் வசந்தா – தாளம் ஆதி
3. ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் – வள்ளலார் – விருத்தம்
4. என்ன தவம் செய்தனை யசோதா – பாபநாசம் சிவன் – ராகம்: காபி தாளம் ஆதி
5. எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ – வள்ளலார்
6. வேலோடும் மயிலோடும் முருகன் வந்தான் –
7. நாளை வருமென்று நம்பலாமா குகன் தாளைப் பணிந்தருள் பெற வேண்டாமா – மதுரை ஜி எஸ் மணி
8. அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து – சென்னிக்குல நகர் வாசன் தமிழ் தேறும் அண்ணாமலை தாசன்
9. பாடாத பாட்டில்லை எழுதாத எழுத்தில்லை தேடாத இரவில்லை முருகா நீ ஏன் தரிசனம் தரவில்லை
10. என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை – ஆனயாம்பட்டி ஆதிசேஷ ஐயர் – ராகம்: சிவரஞ்சனி தாளம்: ஆதி
11. குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும் – திருநாவுக்கரசர்
12. பித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது பேரின்பமன்றுள்ளே – கோபால கிருஷ்ண பாரதியார் – ராகம் செஞ்சுருட்டி தாளம்: ரூபகம்
13. ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று – அருணகிரிநாதர்
14. எங்கள் செந்தமிழ் தாயே நீ – பெருஞ்சித்திரனார்?
15. துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ – பாரதிதாசன்
16. அருள்ஜோதி தெய்வம் என்னை ஆண்டு கொண்ட தெய்வம் – வள்ளலார்
17. முக்திநெறிஅறியாது – திருவாசகம்
18. அபகார நிந்தை பட்டுழலாதே – திருப்புகழ் – அருணகிரிநாதர்
(Photo that I have taken at the event is also attached along with)
- மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல் – 3
- வண்டி
- காடன் கண்டது – பிரமிள் – சிறுகதை குறித்த கலந்துரையாடல்
- குளிர்வித்தால் குளிர்கின்றேன்
- பூஜ்யக் கனவுகள்
- அசோகமித்திரனின் “ஒற்றன்”
- அப்பாவின் திண்ணை
- சொல்லவேண்டிய சில…..மூத்த குடிமக்களும் சமூகமும்
- யாசகப்பொழுதில் துளிர்த்து
- நடக்காததன் மெய்
- அருகில் வரும் வாழ்க்கை
- கவிதைகள்
- மகிழ்ச்சி மறைப்பு வயது
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 10
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 11
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 12