நடக்காததன் மெய்

This entry is part 10 of 16 in the series 10 ஆகஸ்ட் 2025

ரவி அல்லது

பேசும் தூரத்தில் நடப்பவர்களின் முகம் அறிய முடியாத அளவிற்கு பனி கொட்டிக்கொண்டிருந்தது. வழக்கமாக நடைப்பயிற்சிக்கு வருகிறவர்களில் சிலரைக் காணவில்லை. பலர் தலையில் தொப்பியும் முகத்தில் கவசமும் அணிந்திருந்தனர்.

இரயில் நிலையத்தில் நெல் மூட்டைகள் ஏற்றுவதற்கு லாரிகள் வரிசையாக நின்றிருந்தன. இரவு கொஞ்சம் லாரிகளில் நெல் மூட்டைகள் ஏற்றியதால் பல இரயில் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டிருந்தன. கொட்டிக்கிடந்த நெல் மணிகளைக் காக்கைகள் இங்குமங்கும் பறந்து கொத்தித் தின்றன.

மூட்டைகள் ஏற்றிய இரயில் பெட்டிகள் ஒவ்வொன்றிலும் லாரிகளின் பதிவு எண்களை சாக்பீஸால் எழுதி, ஒவ்வொரு லாரியின் மூட்டைகளும் அதில் எழுதப்பட்டு மொத்தக் கூடுதல் போடப்பட்டிருந்தது. இரண்டு லாரிகளுக்கு 450 மூட்டைகள் வீதமும், இன்னும் இரண்டு லாரிகளுக்கு 150 மூட்டைகள் வீதமும், இரயில் பெட்டியில் 1200 மூட்டைகள் ஏற்றியதற்கான கணக்கு விவரம் இருந்தது.

தரையில் பின்புறத்தை தூக்கி ஊர்ந்து செல்லும் கருப்பு எறும்புகள் அங்குமிங்கும் ஓடியதில், சிலது தங்களுக்கான இரையைச் சுமந்து சென்றன. பிளாட்பார்ம் காங்கிரீட் இணைப்பு பிளவில் சிவப்பு சிற்றெறும்புகள் வரிசையாக சென்றன. சில எறும்புகள் அரிசியை தூக்கிச் சென்றன.

பெட்டைத் தெரு நாய் ஒன்றைப் பல நாய்கள் துரத்தி ஓடிக்கொண்டிருந்தன. வாய்ப்புகளை நாய் எப்படி தேர்தெடுக்கிறது என்று பின்னால் ஓடிப் பார்க்க வேண்டும் என்ற நினைவு இப்போதும் வந்தது. கபிலன் சாரிடம் கேட்டால் இது பற்றிய ஏதாவது தகவல் வைத்திருப்பார்.

இப்பொழுது தேவாலயத்தில் ‘தேடுங்கள் தரப்படும்’ பாடல் ஒலித்தது. ஏனோ திடீரென சிறுவயது ஞாபகம் வந்துவிட்டது. வீட்டிற்கு மாடு மேய்க்க வந்த ரெங்கன்தான் இந்தப் பாடலை எனக்கு கற்றுக்கொடுத்தார். பூம்பூம் மாடு வைத்து பிழைப்பை ஓட்டியவர், மாடு இறந்துபோக, கோயில்களில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தவர் எப்படியோ ஒரு வகையில் எங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிட்டார். பல சினிமாப் பாடல்கள், பக்திப்பாடல்களை அவர் மனப்பாடமாக பாடுவார்.

முழுப் பாடலையும் எழுதி வாங்கி மனப்பாடம் செய்து அன்று இரவே அவரிடம் பாடிக் காட்டினேன். அந்த சிறு வயதில் இயேசுவின் மேல் அத்தனை பிரியம். அதற்கு லீமா டீச்சரும் காரணமாக இருக்கலாம். ஆனால் அவர் ஒருபொழுதும் இயேசுவைப் பற்றி என்னிடம் பேசியதே இல்லை. இத்தனை வருடம் கழித்து முழுமையாக அந்தப் பாடல் நினைவுக்கு வருமா என்கிற தயக்கம் இருந்தது. ஆனால் பாடினால் நன்றாக இருக்குமென்று தோன்றியது. கபிலன் சார் போன் செய்தால் அவரிடம் பாடிக் காட்டலாம். அதற்குள் அந்தப் பாடலை ஒரு முறை கேட்டு ஒத்திகை பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனோ அவரிடம் பாட வேண்டும் போல உள்ளது. அவர் இயேசுவைப் பற்றி என்ன கருத்து வைத்திருக்கிறாரோ தெரியவில்லை.

லாரிகள் முன் பின் நகர்ந்ததற்கான டயரின் தேய்மானத் தடங்கள் நடைமேடையில் இருந்தன. அது அந்த டயரின் தேய்மானத்தை அறியும்படியாக பதிந்திருந்தது.

நான்கு பேர் அமெரிக்கா அதிபர் டிரம்பின் செயலைக் குறித்து ஆருடம் பேசிக்கொண்டு சென்றார்கள்.

ஒரு சிறுவன் சுனாமி பற்றி அவனுக்கு பக்கத்தில் வந்தவரிடம் சந்தேகங்கள் கேட்டுக்கொண்டு சென்றுகொண்டிருந்தான். அவர் தயங்கியபடியே பதில் சொல்லிக்கொண்டு இருந்தார்.

இன்றும் சுப்ரபாதம் கேட்டு நடப்பவர் சத்தமாக கேட்டுக்கொண்டு நடந்து கொண்டிருந்தார். அது இறுதிக்கட்டத்தில் மங்கலம் பாடியது.

பெங்களூர் ரமணியம்மாள் ஒருவருக்கு தினமும் பிடித்து, இன்றும் “பம்மபம்மதா” என்று கேட்டபடி வேகமாக நடந்து கொண்டிருந்தார்.

நேற்று மது அருந்திய போது வாந்தி எடுத்தவரை தயக்கமற்று வைத்து வறுத்தெடுத்துக்கொண்டு சிலர் கேலியும் கிண்டலுமாக சென்றனர்.

“மேடம். வரலையா சார்.”

“மந்த்திலி ப்ராப்ளம் சார்.”

ஒரு குட்மார்னிங். ஒரு விசாரிப்பு. நிச்சயமாக அவர் யாரென்று எனக்குத் தெரியாது. என்னைத் தெரிந்து வைத்திருக்கிறாரா என்று இதுவரை நான் அவரிடம் கேட்டதில்லை.

கைபேசி இருந்ததால் எது பற்றியும் ஏதாவது ஒரு கருத்தை நடைப்பயிற்சியில் எப்பொழுதும் யாராவது விவாதிக்கொண்டு நடந்து கொண்டிருந்தார்கள்.

வருவதும் போவதுமாக இருப்பவர்களுக்கு மத்தியில் எனக்கான முதல் சுற்றை லாரிகளுக்கிடையில் நடந்து கொண்டிருந்தேன். யாரோ ஒருவரின் கால் பட்டு கருப்பு எறும்பு ஒன்று எந்தச் சேதாரமும் இல்லாமல் மல்லாக்கக் கால்களை வைத்தபடி இறந்து கிடந்தது.

பல லாரிகளில் ஏற்றிய மூட்டைகளில் சிந்திய நெல் மணிகள் கூட்டி அள்ளும்படியாக இருந்தது. அதற்காக வேலைக்கு அமர்த்தப்பட்ட பெண்கள் அவர்களின் ஓய்வறையிலிருந்து கட்டுக் கம்பியையும் ஏணி மாதிரி ஒன்றையும் எடுத்துக் கொண்டு கடைசிப் பெட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். கடைசிப் பெட்டியில் லாரியிலிருந்து மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இருந்தார்கள்.

“அத்தான். இங்கதான் டெய்லி வாக்கிங்கா.” என்ற குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினேன். லாரியிலிருந்து உறவினர் கீழே இறங்கினார்.

“ஆமாம். மாப்பிள்ளை. உங்க வண்டிகள் நிக்கிறதைப் பார்த்தேன்.”

“வண்டி ஸ்டார்ட் ஆகலைன்னு சொன்னாங்க. வந்து      பார்த்தா பேட்டரியை சார்ஜ் போடாம விட்டிருக்காங்க. அதான் செட்ல இருக்கிற பேட்டரியை எடுத்துட்டு வாங்கடான்னு சொல்லிட்டு உட்கார்ந்திருக்கிறேன்” என்றார்.

அதற்குள் அவருக்குப் போன் வர, நான் சிரித்தபடி நடக்க ஆரம்பித்துவிட்டேன்.

இவரின் அப்பா எனக்கு மாமா முறை வேண்டும். அவர் இரண்டு லாரிகள் வைத்து ஓட்டிக்கொண்டு இருந்தார். லாரி சங்க      தலைவர். நன்றாக சம்பாதிப்பதாக சொல்லிக்கொண்டு இருந்தார்கள். சொந்தமாக வீடு, கடைகளின் மூலமாக வாடகை என்று மதிப்பான மனிதராக வாழ்ந்தவர் இவரின் அப்பா. நான் கல்லூரி முடித்து வந்தபொழுது சொன்னார்கள். ‘அவர் அப்பா இறந்து போனதாகவும், சொத்துக்கள் பலவற்றை அவர் அம்மா தனது மகளுக்கு விற்றுக் கொடுத்துவிட்டார். இவர் வாடகை வீட்டில் வசிக்கிறா     ர்’ என்றார்கள்.

எனக்குத் தெரிந்து இருபது வருடங்கள் வறுமையின் கோரப்பிடியில் இவரைப் பார்த்திருக்கிறேன். கல்யாண வீடுகளில் அவர் மனைவியைப் பார்க்கவே பாவமாக இருக்கும். யாரிடமும் பெரிதாக ஒட்டாமல் திருமணத்திற்கு பேருக்கு வந்ததாக காட்டிவிட்டு சென்றுவிடுவார். எதற்கு மகனை வஞ்சித்து மகளிடம் எல்லாவற்றையும் கொண்டு சேர்த்துவிடுகிறார்கள் அம்மாக்கள் என்று தெரியவில்லை. அப்புறம் ஏன் கோயில் கோயிலாக சென்று ஆண் மகன் வேண்டுமென்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இப்படித்தான் மன்னார்குடியில் என் கல்லூரி நண்பன் சிங்கப்பூரில் இஞ்சினியராக இருந்து கோடிகளில் சம்பாதித்த பணம், ஊரில் உள்ள நிலங்களை எல்லாம் அவனின் அக்காவின் பெயருக்கு அவன் அம்மா, அப்பா மாற்றிவிட்டதால் இன்றுவரை குடிகாரனாகவே அலைகிறான். மாமியார் மருமகள் ஈகோ பிரச்னைகளில் சிக்கி சீரழிந்து போவது மகன்கள்தான்.

இவர் எப்படி பணம் ஈட்டினார் என்று தெரியவில்லை. இருபது லாரி வைத்திருக்கிறார். இப்பொழுது இவர்தான் சங்கத் தலைவர். சிலருக்கு ஆண்டவன் இங்கேயே கூலிகளைக் கொடுத்துவிடுகிறான். அவர் அம்மாவை அவர் மகள் வீட்டிற்கு அடித்து விரட்டிவிட்டதாக சொன்னார்கள்.அவர் நல்ல அம்மாவாக இல்லாமல் இருக்கட்டும், நீங்கள் உங்கள் பிள்ளைக்கு நல்ல அப்பாவாக வாழ்ந்து காட்டுங்கள் என்று சொல்லவேண்டும்.

எனக்கு கொட்டிக்கிடந்த நெல்லை மிதித்து நடப்பது கூச்சமாக இருந்தது. எல்லோரும் எந்தக் கவனமுமற்று நடந்து செல்லும் போது, எனக்கு நடப்பது தடுமாற்றமாக இருந்தது.

அய்யாவின் நினைவை ஒதுக்கி நடக்க முடியவில்லை. ஒரு நாள் காலை உணவுக்கு பழைய சோற்றைத் தூக்கு வாளியில் மாங்காய் ஊறுகாயோடு அய்யாவிற்காக வயலுக்கு எடுத்துக்கொண்டு சென்றேன். நாற்று விட சேறு (தண்ணீர் கணுக்கால் அளவு வைத்து உழுவது) அடித்துக்கொண்டிருந்த ஏரை நிறுத்திவிட்டு அய்யா சாப்பிட வந்தார்.

அவர் வாளியில் அப்படியே சாப்பிட்டுக்கொண்டு, எனக்கு அதன் மூடியில் ஒரு கை அள்ளி வைத்து சாப்பிடச் சொன்னார். வரப்பில் என்னோடு பேசியபடி சாப்பிடுவது அவருக்கு விருப்பமான ஒன்று. நாங்கள் சாப்பிட்டு முடித்ததும், நான் இருந்த இடத்தில் சிந்திய பருக்கைகளைப் பார்த்தவர்.

“தம்பி. அன்னத்தை வீணாக்கக்கூடாது. அது நாளைக்கு நம்மைப்பற்றி சொர்க்கலோகத்தில் புகார் சொல்லும்ப்பா. பொறுக்கி வாய்க்காலில் அலசிட்டு சாப்பிடு.” என்றார்.

‘வீண் விரயம் செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்’ போன்ற குர்ஆனின் எச்சரிக்கை வசனங்கள் மற்றும் நகர வாடைகள் எதுவும் எட்டிடாத பாமர விவசாயி அவர்.

அதன் பிறகு என் வாழ்நாளில் உணவுகளை நான் வீணாக்கியதே இல்லை. இன்று உணவகங்களில் சாப்பிட முடியாமல் மீதம் உள்ளதைப் பார்சல் செய்து தருகிறார்கள். நான் கல்லூரியில் படிக்கும் போது பல உணவகங்களில் “மீதமானதை பார்சல் செய்து கொடுங்கள்” என்றால் “இங்க அதுமாதிரி வழக்கமில்லை” என்பார்கள். பல கடைகளில் சண்டைகள் போட்டிருக்கிறேன். நண்பர்கள் ‘அசிங்கமாக இருக்கு வாடா’ என்பார்கள்.

பழைய சோற்றில் மீன் குழம்பு போட்டு சாப்பிடுவது, பழையதுல மோர் போட்டு சாப்பிடுவது, சோளக்கூழ் கட்டியில் மீன் குழம்பு ஊத்தி சாப்பிடுவது எனக்கு பிடிக்குமென்று அன்று காலேஜில் படிக்கும் போது வகுப்பில் சொன்னபோது என்னைத் தீண்டத்தகாதவனாக பார்த்தவர்கள். இப்போது ஸ்டார் ஹோட்டலில் அதை என் முன்னால் கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள்.

காலம்தான் ஒரு விசயத்தை தீர்மானிக்கிறது.

நடைமேடையின் இறுதிப் பகுதி இன்னும் வரவில்லை. அங்கு திரும்பி மறுபடியும் நடந்தால்தான் ஒரு சுற்றாவது வரும். அப்படி சுற்றி வந்தால்தான் வண்டியை எடுக்க முடியும். ஆனால் நெல் மணிகளை மிதித்து நடக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தேன். இரயில் தண்டவாளத்தைக் கடந்து இரண்டு நடைமேடைகளை கடந்தால் டிக்கெட் கொடுக்கும் இடம் வழியாக சுற்றி சென்று வண்டியை எடுக்கலாம். இப்படி செல்லும் போது தெரிந்தவர்கள் பலருக்கு பதில் சொல்ல வேண்டியதாக இருக்கும். ஸ்டேஷன் மாஸ்டர் ஏதாவது சொன்னால் பிரச்சனையாகிவிடும். ஏற்கெனவே இங்கு நடைப்பயிற்சி செய்யக்கூடாது என்று பல அதிகாரிகள் சொல்லிவிட்டார்களாம். இரயில் பயணிகள் சங்கத்திலிருந்து பேசி, “சரக்குகள் ஏற்றும் இந்த பக்கம் நடந்து கொள்ளுங்கள்” என்று பல கட்டுப்பாடுகள் போட்டதற்கு சம்மதித்து இங்கு நடக்கிறார்களாம்.

வேறு வழி இல்லாமல் நடக்கத் தொடங்கினேன். எனக்கு மயக்கம் வந்துவிடுமோ என்ற கவலையும் இருந்தது. இப்போது கடைசி பெட்டியிடம் வந்து இருந்தேன்.

அந்த பெண்கள் இருவரிடமும் பணம் கொடுத்து கொட்டிக்கிடக்கின்ற நெல்லைக் கூட்ட சொல்லலாமா என்று தோன்றியது. அது போல செய்வது எந்த பயனையும் கொடுக்காது. அவர்கள் லாரி எல்லாம் சென்ற பிறகு தான் கூட்டுவார்கள். “நாம் இன்று நடப்பதை நிறுத்திவிட்டு வீட்டிற்கு செல்ல வேண்டியதுதான்” என்று முடிவு எடுத்தாலும், ஒரு முழு நடைமேடையைக் கடக்க வேண்டுமே என்பது மலைப்பாக இருந்தது.

அய்யா ஒரு முறை சொன்னது நினைவுக்கு வந்தது.

“நாம விவசாயியா இருக்கிறதுக்கு சந்தோசப்படனும்ய்யா. பசிதான்ய்யா எல்லாத்துக்கும் ஆதாரம். அத போக்குறதுக்கு. நாம விளைவிச்சதை நனையாம காயவச்சு விக்கிறவரையும் அதைப் பத்திரமாக பாதுகாக்கனும்ய்யா. பணத்துக்காக மட்டும் இல்ல. நம்ம கிட்ட இருக்கிறது எங்கேயோ வாழ்ந்துக்கிட்டிருக்கிற எத்தனையோ பேரோட உணவு. அதுக்கு நாம பொறுப்புதாரி. அதை நாம மறக்கக்கூடாதுய்யா.”

இதுபோல பல நாட்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, அவர் வயிற்றின் மேல் படுத்துக் கிடக்கும் நான் தூங்கிப்போய் இருப்பேன்.

நான் ஐந்தாவது படிக்கும் போது வீடு முழுவதும் நெல் அடித்து கொட்டி இருக்கிறது. வாசலில் முட்டு முட்டாக வைக்கோல் தாள் போட்டு மூடி இருக்கிறது. கதிர் அறுக்கும் காலம் வந்துவிட்டால் வீடு வாசல் எங்குமே நெல்லாகவே குவிந்து கிடக்கும். அவைகளுக்கு இடையில்தான் சமைப்பது, சாப்பிடுவது, தூங்குவது எல்லாம் நடக்கும்.

அப்போது AIR என்று எழுதிய ஜீப் ஒன்று பாதையில் வந்து நின்றது. அதிலிருந்து நான்கு ஐந்து பேர் இறங்கினார்கள். அய்யா ஜீப்பைக் கண்டதும் கொல்லைப் புறமாக சென்றுவிட்டார். அநேகமாக அவர் அப்படியே வயலுக்கு போனாலும் போயிருக்கலாம். ஜீப் வந்தாலே எல்லோருக்கும் பயமாக இருக்கும். அக்கா “பள்ளிக்கூடத்துக்கு போடான்னுச்சு.” அதை நான் முறைச்ப்சுட்டு இருக்கும் போது அதிகாரிகள் என்னிடம் வந்தார்கள். எனக்குப் பயம் அதிகமாக இருந்தது.

“தம்பி. நாங்க ஆல் இண்டியா ரேடியோவில் இருந்து வருகிறோம். உங்கள் வீட்டில் நல்ல மகசூலோட அறுவடை பண்     றதா கேள்விப்பட்டோம். ‘உழவர் உலகம்’ன்னு ஒரு நிகழ்ச்சிக்காக பேட்டி எடுக்க வந்திருக்கோம். வீட்டில் அப்பா அம்மா யாரும் இல்லையா.”

அதற்குள் வந்தவர்களில் ஒருவர் ‘நாம் வந்து இந்த தம்பிகிட்டே பேசுவதை நின்று கேட்டுட்டு, ஒரு பெரியவர் அந்தப் பக்கமாக போகிறார்.’ என்றார்.

“அவருதான் எங்க அய்யா. வயலுக்கு போயிருப்பார்.”

“தண்ணி      குடிக்கிறீங்களா சார்.”

“வேண்டாம் தம்பி. நீங்கள் போய் அழைச்சிட்டு வாங்க. நாங்கள் காத்திருக்கிறோம். அய்யாதான் இரசாயன உரமே போடாமல் இயற்கை உரம் போட்டு, இந்த ஏரியாவுலையே மாவுக்கு நாலஞ்சு மூட்டை அதிகமாக மகசூல் எடுக்கிறாராமே.” என்றார்.

நான் எதுவும் சொல்லாமல் அய்யாவை அழைக்க ஓடினேன்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத் ஸ்தாபனத்தில் ‘இவ்வார நேயர்’, ‘பாட்டும் பதமும்’ போன்ற நிகழ்ச்சிகளில் வேப்பங்காடும் என் பெயரும் வந்ததுக்கே ஊரே பெரிதாக மதித்தார்கள். அய்யாவோட பேட்டி அரை மணி நேரம் வரப்போகிறது என்றால் நினைக்கும்போதே சந்தோசமாக இருந்தது. நிகழ்ச்சி நிரலில் முன்கூட்டியே அறிவிப்பார்கள். அது சொல்ல முடியாதபடி சந்தோசமாக இருக்கும்.

எல்லோரும் உரம் போடும் போது, இவர் மட்டு இலை, தழைகளைப் போட்டு என்னென்னமோ பண்     றாரேன்னு எனக்கு வெறுப்பாக இருக்கும். நம்மகிட்ட பணம் இருக்கும் போது அய்யா ஏன் உரம் வாங்காம அசிக்கப்படுத்துறார்ன்னு அக்காகிட்டே சண்டைகள் போட்டிருக்கேன். அதே விசயத்திற்கு பேட்டி கேட்க வந்திருப்பது ஆச்சரியமாக இருந்தது. அது ஏன் என்று அந்த வயதில் புரியவில்லை.

அய்யா பேசியது இப்போதும் நினைவில் இருக்கிறது. அந்த பேச்சிற்கு பிறகு நான் அய்யாவை கொஞ்சம் அந்த வயதில் வெறுத்தேன். அய்யா படிக்காததால் இப்படி செய்கிறார். படிக்காத கூமுட்டை என்று மனதில் திட்டி இருக்கிறேன்.

“அய்யா. அவுங்க ரேடியோ ஸ்டேசன்லேர்ந்து வந்திருக்காங்க. உங்க கிட்ட பேட்டி எடுக்கனுமாம்.”

“எதுக்குப் பேட்டியாம்.”

“நீங்கதான் அதிகமாக நெல் அறுவடை பண்ணி இருக்கீங்களாம்.”

“நான் அறுவடை பண்     ற ரகசியத்தை இவன்கிட்ட நான் ஏன் சொல்லனும். ஓம் பெரியப்பன் இருக்கான் பார்த்தியா. அவன்தான்டா வரவழைச்சு இருப்பான். உன் பெரியப்பன் குடும்பத்துக்கிட்ட பாத்து பத்திரமா இருந்துக்க. அவன் கிழக்கே போகச்சொன்னா நீ மேற்கே போடா. வடக்கே போகச்சொன்னா தெற்கே போடா.”

கூமுட்டை.

கூமுட்டை.

கூமுட்டை.

“நான் அவுங்க கிட்டே என்னைய்யா சொல்ல.” என்று சொல்லும்போதே அழுதுவிட்டேன். அய்யா பேட்டி ரேடியோவில் வருதுன்னு பள்ளிக்கூடத்தில் சொன்னால் எவ்வளவு பெருமையாக இருக்கும். பஞ்சாயத்து போர்ட் ரேடியோவுல ஆகாஷ்வாணி செய்தியை இரவு ஊரே உட்கார்ந்து கேட்கும். அதன் பிறகு 07:25க்கு வரும் உழவர் உலகம் நிகழ்ச்சியை கண்டிப்பாக எல்லோரும் கேட்பார்கள். ஊரில், பள்ளியில் இதுதான் பேச்சாக இருக்குமென்று நான் கனவில் மிதந்ததை அவர் சிதைத்ததால், அவர் மேல் வெறுப்பாக இருந்தது.

“நீ ஏன்ய்யா அழுவுறே. உனக்குச் சொன்னாப் புரியாது. நீ போய் அய்யா டவுனுக்கு போயிட்டார்ன்னு சொல்லு.” என்றார்.

“இந்தா இதுல காரூபா இருக்கு. கடலை முட்டாய் செல்லிக் கடையில வாங்கி சாப்புட்டுக்க. (செல்லம்மாள் கடை. அவர் கணவர் பாலத்தில் கடை வைத்திருந்தார். அது ஜமீன்தார் கடை).

பாலத்துக்கு போயிறாத. அங்க சாராயத்தை குடிச்சிட்டு சண்டை போட்டுக்கிட்டு இரும்பாங்க. ஜமீன்தார் ஏதாவது கடுப்புல இருந்தா உன்னை திட்டிறுவான்.”

“ம்ம்ம்.”

“இங்கிருய்யா. அந்த ஆபிசர் பயலுவலப் பார்த்தியா. ஒவ்வொருத்தனும் செருப்பக் கழட்டாம நெல்ல மிதிச்சுக்கிட்டு உள்ள வர்றாங்க. இவன்க ஜீப்ல வராம இருந்தா, மரத்துல கட்டி வச்சு சாட்டையால வெளுத்துருப்பேன். அவுங்கல்லாம் சம்பளம் வாங்கிறதுக்கு மாரடிக்கிறவங்க. நீ வீட்டுக்கு போய்யா. அந்த காரூபாய தர்றீயா. எட்டணாத் தர்றேன்.”

“வேண்டாம்ய்யா. போதும்.”

அய்யா சொன்ன காரணம் ஏற்க முடியாவிட்டாலும், கோவம் எனக்கு கொஞ்சம் குறைந்தது. அவர்கள் செருப்பை கழட்டிப்போட்டுவிட்டு வந்திருக்கலாம் என்று நினைத்தேன். அய்யாவிற்கு அவர் விளைவித்த பொருட்கள் அவர் உயிரைவிட மேலானது. அவர்கள் மதியம்வரைக் காத்திருந்துவிட்டு கிளம்பிவிட்டார்கள்.

அய்யாவின் பல செயல்களை இன்று விவசாயத்தில் அரசாங்கமே செய்யச் சொல்கிறது. அதற்கென தனி அமைப்புக்கள், ஆர்வலர்கள் உருவாகிவிட்டார்கள். இதுபோன்ற தருணங்கள்தான் படிக்காத அந்த எளிய மனிதர் இன்று நம் கூட இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென தோன்ற வைக்கிறது. கண்ணீர் வழிவதை என்னால் நிறுத்த முடியவில்லை. பல முறை அய்யா என்ற வார்த்தையைக் கேட்டாலே அழுதுவிடுகிறேன்.

நான் காலில் மாட்டி இருந்த ஷூவைக் கழட்டி கையில் வைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். வழியில் கேட்டவர்களுக்கு கிழிந்துவிட்டதாக பொய் சொன்னேன். இந்த உலகத்தை ஆசுவாசப்படுத்த எனக்கு எப்போதும் ஒரு பொய் போதுமானதாக இருக்கிறது.

திரும்பி நடைமேடையைப் பார்த்தேன். ஒவ்வொருவரும் தம் வேலைகளில் கவனமாக இருந்தார்கள்.

சூரியனின் ஒளியில் பனியின் மூட்டம் காணாமல் குளிர்ந்த காற்று வீசியது.

இப்பொழுதெல்லாம் இரயில் பெட்டியில் நெல் மூட்டைகள் ஏற்றினால் அந்தப் பக்கமே செல்லுவதில்லை. இரயில் நிலையத்தின் முன்புறம் உள்ள தேசியக் கொடிக்கம்பத்தை சுற்றி நடக்கிறேன். எப்பொழுதும் நடைபயிற்சிக்கு வட்டமாக நடப்பது எனக்கு அசௌகரியமாக இருக்கும். அய்யாவின் நினைவுக்கு முன்னால் அது ஒன்றும் பெரியதில்லையென நடந்துவிடுகிறேன்.

***

-ரவி அல்லது.

ravialladhu@gmail.com

Series Navigationயாசகப்பொழுதில் துளிர்த்துஅருகில் வரும் வாழ்க்கை

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *