பாலமுருகன்.லோ
சைக்கிளை வேக வேகமாக அழுத்திக்கொண்டு அவன் மின்வாரியத்துக்குப் புறப்பட்டான். மின் கட்டணத்தைச் செலுத்த வரிசையில் நின்றிருந்தான் ஶ்ரீராம். ஒவ்வொருவராக அவரவர் வீட்டு மின் கட்டணத்தைச் செலுத்தினார்கள். ஶ்ரீராமும் முன்வந்து அவனது வீட்டு மின் அட்டையைக் கௌண்டரில் இருந்த பணம் வசூல் செய்யும் நபரிடம் காண்பித்தான். அவர் அந்த வீட்டு மின் அட்டையைப் பார்த்தவுடனே, இந்த அட்டைக்குக் கட்டணத் தேதி முடிந்து பத்து நாள் ஆகிறதே!
“இப்ப லேட் சார்ஜ் எல்லாம் சேர்த்து, இவ்வளவு வருது. பணம் இருக்கிறதா?” என்றார்.
“சார் இருக்கு. நீங்க ரசீது எடுங்க நான் கொடுக்கிறேன்” என்றான்.
“ஏம்பா… நீ பணம் செலுத்தினாலும் மேலே அசிஸ்டென்ட் எஞ்சினியர் (AE) இருப்பாரு. அவரிடம் போய் இந்த ரசீதை காட்டி உங்க வீட்டு பியூஸ் கேரியரை வாங்கிக்கோ.”
“ஆகட்டும் சார், நான் அசிஸ்டென்ட் எஞ்சினியரைப் பார்த்து இதைக் காண்பித்து எங்க வீட்டு பியூஸ் கேரியரை வாங்குறேன்” என்றான்.
“எக்ஸ்க்யூஸ் மீ சார், உள்ளே வரலாமா?”
“யாரு? என்ன வேணும்?”
“சார் நான் ஶ்ரீராம். எங்க வீட்டு பியூஸ் கேரியரை மின் கட்டணம் செலுத்தவில்லையே என்பதால் எடுத்துக்கிட்டு வந்துட்டாங்க. இப்ப லேட் சார்ஜ் எல்லாம் சேர்த்து அதன் கட்டணத்தைக் கட்டிட்டேன். கௌண்டரில் இருப்பவர் உங்களைப் பார்த்து இந்த ரசீதை காண்பித்து பியூஸ் கேரியரை வாங்கிப் போகச் சொன்னார்.”
“ஏம்பா… இரண்டு மாசத்திற்கு ஒரு முறை தான் பணம் செலுத்தணும். அது கூட ஒழுங்கா செலுத்தலேன்னா என்ன செய்யறது? இந்த மாதிரி பியூஸ் கேரியரை பிடுங்கத் தான் வேண்டும். வீட்டில் போய் அப்பாவிடம் சொல்லு, நேரம் தவறாமல் பணத்தைச் செலுத்தினால் இது போன்று தொந்தரவுகள் இருக்காது என்று.”
“ஆகட்டும் சார், நான் அப்பாவிடம் நீங்க சொன்னதாகச் சொல்லறேன். இப்ப கொஞ்சம் பியூஸ் கேரியர் கிடைக்குமா?”
“இந்தா… இனி இது போல நடக்காமல் பார்த்துக்கோ.”
அவரிடம் நன்றியினைத் தெரிவித்த பிறகு ஶ்ரீராம் அங்கிருந்து வீட்டிற்கு வந்தான்.
***
“அம்மா… பியூஸ் கேரியரை மாட்டிட்டேன், ரொம்ப அவமானமா போச்சு! என்ன கேள்வியெல்லாம் அந்த ஆளு கேட்டான் தெரியுமா? ஏன் இவரு ஒழுங்கா பணம் கட்ட வேண்டியது தானே? இதைக் கூடக் கட்டலேன்னா அப்புறம் இந்த மாதம் நடந்த மாதிரி தான் பியூஸ் கேரியரை புடிங்கிட்டு போவாங்க. அம்மா… நீ கொஞ்சம் சொல்லுமா அப்பாவிடம்?” என்றான்.
கஸ்தூரி அவனைப் பார்த்தபடி நின்றாள், ஒன்றும் பேசாமல். அவளது மௌனத்தில் பல அர்த்தங்கள் புதைந்திருந்தது. கண்களில் கண்ணீர் துளிகள், அவளது கண் விளிம்பிலிருந்து கீழே வழியலாமா வேண்டாமா என்று துருத்திக் கொண்டு இருந்தது. ஆனால் ஶ்ரீராமால் இதையெல்லாம் கவனிக்க நேரமில்லை. இதை ஒரு சாதாரண நிகழ்வாகத் தான் ஶ்ரீராம் பார்கிறான். அதனால் தான் அவனது அம்மாவின் கண்களிலிருந்து கண்ணீர் துருத்திக் கொண்டிருந்ததை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஶ்ரீராம் முதலாம் ஆண்டு எஞ்சினியரிங் படிக்கிறான், அது ஒரு பெரிய கதை அவன் எஞ்சினியரிங் காலேஜில் சேர்ந்தது. பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தால் அவனுக்கு மெரிட்டில் நல்ல கல்லூரியில் இடம் கிடைத்திருக்கும். ஆனால் ஶ்ரீராம் எழுபது சதவீதம் தான் பெற்றிருந்தான் பன்னிரண்டாம் வகுப்பில். இந்தச் சதவீதத்தை வைத்து நல்ல கல்லூரியில் இடம் கிடைப்பது என்பது முடியாத காரியம். ஆகையால் ஶ்ரீராமின் அப்பாவும் அம்மாவும் பிரைவேட் காலேஜில் இடம் பார்த்துவந்தனர். ஒவ்வொரு காலேஜும் ஏறி இறங்கினர் மூவரும். அப்போது தான் ஶ்ரீராமுக்கு விளங்கியது பன்னிரண்டாம் வகுப்பின் சதவீதம் எவ்வளவு முக்கியமானது என்று. ஏன் ஒவ்வொரு வீட்டிலும் பெரியவர்கள் தங்களது குழந்தைகளைப் படி படி என்று கூறுகிறார்கள் என்று.
இருந்தும் என்ன செய்ய? இப்ப இந்தச் சதவீதத்தை வைத்து நல்ல கல்லூரியில் இடம் கிடைக்காது. இந்தச் சதவிதத்திற்கு ஏற்ப ஒரு பிரைவேட் காலேஜ் தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு காலேஜிலும் செமஸ்டர் ஃபீ அவர்கள் வைத்ததுதான் சட்டம். நமக்கு எந்தக் காலேஜு ஒத்துவருமோ அதையே தேர்ந்தெடுக்க வேண்டும். இவர்கள் மூவரும் ஒரு பிரைவேட் காலேஜை தேர்ந்தெடுத்தனர். வருடம் இரண்டு லட்சம் பணம் செமஸ்டர் ஃபீ ஆகக் கொடுக்க வேண்டும். இதைத் தவிர புத்தகக் கட்டணம் தனி, காலேஜில் உள்ள விடுதியில் தங்கிப் படித்தால் அதற்கு வேறு தனியாகக் கட்டணம், சாப்பாட்டு கட்டணம், போக வர கல்லூரி பேருந்தை நாம் தேர்வு செய்தால் அதற்கு ஒரு தொகையைக் கொடுக்க வேண்டும்.
***
இப்படிக் கல்வி நிலையத்திற்குள் பெற்றவர்கள் தங்களது காலை எடுத்துவைத்தனர் என்றால் ஒவ்வொன்றுக்கும் பணம் தான் பிரதானமாக உள்ளது என்று நன்றாக அறிந்து கொள்கின்றனர். இதில் முக்கியமாகப் பேசும் பொருளாக மாறியிருப்பது நடுத்தர வர்க்கத்தினர் தான். ஏனெனில் மேல் தட்டு மக்களுக்கும் பணக் கஷ்டமென்றால் என்ன என்று தெரிய வாய்ப்பே இல்லை, அதே மாதிரி வாழ்கையில் அடி தட்டில் உள்ளவர்கள் பணத்தைப் பெரிதாகப் பார்க்கும் போது அவர்களுக்கும் இந்தச் சிக்கல்களெல்லாம் இல்லை. ஏனென்றால் அவர்களிடம் பணம் இருந்ததில்லையே அதனாலேயே அவர்கள் இந்த மாதிரி கல்லூரியெல்லாம் நினைப்பதில்லை. இந்தப் பிடியில் மாட்டிக்கொண்டு திண்டாடுவது நடுத்தர வர்க்கத்தினரே.
குழந்தைகள் படிப்பதற்கு என்று தங்களிடமிருக்கும் அனைத்தையும் விற்றோ அல்லது அடமானம் வைத்தோ தான் பணத்தைச் செமஸ்டர் ஃபீ ஆகக் கட்டுகிறார்கள், அதில் எந்த ஐயப்பாடுமில்லை. ஆனால் இந்தக் கஷ்டத்தைப் புரிந்து நடந்து கொள்கின்றனரா என்றால் பெரும்பாலும் “இல்லை” என்ற பதில் தான் வரும். ஶ்ரீராமும் இதே மனநிலையில் தான் இருந்தான். அம்மா, அப்பா படும் கஷ்டத்தை அவன் ஒரு வினாடி நினைத்திருந்தான் என்றால் கஸ்தூரியின் கண்களிலிருந்து துருத்திக் கொண்டிருந்த கண்ணீரை அவன் கவனித்திருப்பான்.
“ஏம்மா… கஸ்தூரி! ஶ்ரீராம் மின்வாரியத்திற்குப் போனானா?” என்று குரல் கொடுத்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தார் கண்ணன்.
“ஏங்க, அவன் அப்பவே போயிட்டு வந்துட்டான். நீங்க போய் கை, கால் எல்லாம் சுத்தம் செஞ்சுட்டு வாங்க சாப்பிடலாம்” என்றாள் கஸ்தூரி.
“ஏம்மா… ஶ்ரீராம் எங்கே?”
“அவன் இப்பதான் ஃப்ரெண்ட் வீட்டிற்குப் போயிட்டு வரேன் என்றான். நானும் சரி, போயிட்டு வா! என்று சொல்லிட்டேன்.”
“என்னமா மத்தியான நேரத்தில் அதுவும் சாப்பிடும் சமயமா நீ அவனை வெளியே அனுப்பனும்? இப்ப பாரு, அவன் எப்ப வந்து சாப்பிட போறானோ.”
“சரி, நீங்க இப்ப சாப்பிடுங்க. அவன் வந்ததும் நான் அவனுக்குச் சாப்பாடு போடுறேன்.” என்றாள் கஸ்தூரி.
கண்ணன் சாப்பாடு தட்டில் கையை வைத்து சாப்பிடப் போகும் போது ஶ்ரீராம் வீட்டினுள் நுழைந்தான். நுழைந்தவுடன் கண்ணனை பார்த்தவுடன்…
***
“ஏம்பா, நீ ஒழுங்கா மின் கட்டணம் செலுத்த வேண்டியது தானே. ஏன் கட்டாம விட்ட? இப்ப பாரு, எவனெவனுடைய ஏச்சும், பேச்சும் கேட்கிற மாதிரி இருக்கிறது.”
“ஏம்பா… இன்னைக்குக் காலையில் என்ன நடந்தது மின்வாரியத்தில் என்று அம்மா சொல்லுச்சா உனக்கு?”
“அவள் ஏதும் சொல்லலை, நீயே சொல்லு.”
“என்னத்த சொல்ல? நம்ம வீட்டு பியூஸ் கேரியரை எடுத்துட்டு போயிட்டாங்க தானே. நாம அதுக்கு லேட் சார்ஜ் எல்லாம் கட்டி அந்த அசிஸ்டென்ட் எஞ்சினியரை பார்த்த பிறகு தான் பியூஸ் கேரியரை கொடுத்தான். அவன் என்னிடம் கொடுக்கும் முன்னர் என்னென்ன கேள்வியெல்லாம் கேட்டான் தெரியுமா? இரண்டு மாசத்திற்கு ஒரு முறை தான் மின் கட்டணம். ஏன் அது கூட ஒழுங்கா கட்ட முடியாதா? ஒழுங்கா பணம் கட்ட முடிய வில்லை என்றால் கரெண்ட் கனெக்ஷனெல்லாம் எதற்கு என்றான். இந்த மாதிரி அடுத்த முறை நடக்காமல் பார்த்துக்கோ, போய் நீ உன் அப்பாவிடம் சொல்லு என்றான்.”
“இப்ப, சொல்லு நீ என்ன பதில் வைத்திருக்க அவனுக்கு?”
“என்னிடம் என்ன பதிலை எதிர்பார்கிற? அதான் நான் பணமெல்லாம் ஏற்பாடு செய்து கொடுத்துட்டேன் அல்லவா? பிறகு என்ன?”
“இல்லப்பா, நீ ஏன் சரியான நேரத்தில் பணம் செலுத்தல? நாம்ம ஒழுங்கா நேரத்திற்குப் பணத்தைச் செலுத்தினா அவன் அப்படி நம்மைக் கேட்டிருப்பானா?” கண்ணன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ஶ்ரீராமிடம், “கொஞ்சம் சிந்தித்துப் பாரு இந்த மாதம் என்னென்ன செலவு எல்லாம் இருந்தது என்று” என்றார்.
“அப்பா, வழக்கமான செலவு தானே. என்ன புதிதாக இருக்கப் போகிறது? வீட்டுச் செலவு என்று பார்த்தால் வீட்டு வாடகை, மளிகை பொருள், பால் காசு, நியூஸ்பேப்பர் காசு, தம்பி மருத்துவச் செலவு, அப்பப்போ சினிமா போன காசு, எல்லாச் சேர்த்துப் பார்த்தா கூடக் கொஞ்சம் மிஞ்சுமே அப்பா” என்றான்.
“ஶ்ரீராம், முக்கியமா ஒன்றை மறந்துட்டு பேசற! உன்னோட காலேஜ் செமஸ்டர் ஃபீ எப்படிக் கட்டினோம் என்று உனக்குத் தெரியுமா? நானும் சொல்லல, அவளும் உன்னிடத்தில் எதுவும் சொல்லல. அம்மாவிடம் இருந்த ஆறு சவரன் நகையை அடமானம் வைத்து தான் இந்தச் செமஸ்டர் ஃபீ கட்டினோம். ஆறு சவரனுக்கு வங்கியல் எவ்வளவு சதவீதம் தரப்போறான்? மார்க்கெட் நிலவரத்தை காட்டிலும் குறைத்து தான் கொடுப்பான். எவ்வளவு கிடைத்திருக்கப் போகிறது, பத்தும் பத்தாமல் இருப்பதற்கு நம் கையிலிருந்து தான் போட வேண்டும். அப்படி எல்லாத்தையும் சேர்த்து தான் உனக்குச் செமஸ்டர் ஃபீ கட்டியிருக்கிறது.
நீ என்னடானா எதையும் புரிஞ்சுக்காம கேள்வியினால் குத்தினால், நாங்க இருவரும் என்ன செய்வோம்? அழுவதைத் தவிர வேறு வழி இல்லையே? கஷ்டப்பட்டாலும் பிள்ளை நல்ல படிச்சு பெரிய ஆளாக வர வேண்டும் என்பதே எங்கள் இருவரது கனவு. இப்பதான் முதல் வருடம். இனியும் மூணு வருசம் இருக்கிறது. இப்பவே நீ புரிஞ்சுக்காம இப்படியெல்லாம் எடுத்தமா கவுத்தமா என்று பேசினால் பாதிப்பு யாருக்கு? எங்களுக்குத் தான். நீ முழுமையாகக் கூடப் புரிஞ்சுக்க வேண்டாம். வீட்டில் உள்ள நிலைமை புரிந்து அறிந்துகொண்டாலே போதும். வேறு பெரிதாக நாங்க உன்னிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.
***
“நீ உன் சொந்த காலில் தனித்து நிற்க வேண்டும், நிறையச் சம்பாதிக்க வேண்டும். உன் குடும்பத்தை நீ ஒழுங்கா பார்த்துகிட்டினா போதும். ஏதோ எங்க காலம் இருக்கிற வரை நான் இப்படியே உனக்கும் உன் கூடப் பிறந்தவனுக்கும் செய்துடுவேன். பின் அவனவன் சமத்து அவனவன் காலில் நிற்பது. இந்த இடைப்பட்ட காலத்தில் கேள்விகளால் மேலும் எங்க இருவரையும் குத்திக் கிழிக்காதே” என்றார்.
ஶ்ரீராம் அவனது அப்பாவின் ஆதங்கத்தைக் கேட்ட பிறகு ஏன் அப்படி அவரிடம் கேட்டோம் என்று வருந்தினான். இன்னும் மூணு வருசம் இருக்கிறது, எப்படியெல்லாம் அம்மாவும் அப்பாவும் கஷ்டப்படப் போகிறார்களோ என்று நினைத்தான். அவனது கண்ணில் நீர் துளிகள் ததும்பிக் கொண்டிருந்தது. மேலும் அவன் தன் அப்பாவிடம் சொன்னான்.
“அப்பா, இனி நான் சாயங்காலம் தினமும் நம் கடைக்கு வருகிறேன். ஏன் காலேஜ் போகும் பையன் கடையிலெல்லாம் வேலை செய்யக்கூடாதா? நீ சாயங்காலம் கடையில் கல்லாவில் தான் உட்காற வேண்டும். நான் ஓர் இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணி நேரம் டீ போட்டா ஒன்றும் குறைந்து போய் விடமாட்டேன். என் கடை, என் அப்பாவின் கடை, நான் அங்கு வேலை செய்தால் என்ன தவறு? காலேஜ் படித்தால் இந்த மாதிரி எல்லாம் வேலை ஏதும் செய்யக் கூடாதா என்ன? நாம் மாற்றுவோம், கஷ்டத்தில் இருக்கும் பெற்றவர்களைக் குழந்தைகள் படிக்கும் போதே. அதுவும் காலேஜ் போகும் போது புரிந்துகொண்டால் அதை விடப் பெரிய விஷயம் எதுவுமில்லை” என்று தன் ஆழ் மனதில் நினைக்கத் தொடங்கினான்.
எப்போது குழந்தைகள் தங்களது பெற்றவர்களைப் புரிந்துகொள்கிறார்களோ அப்போதே குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாது.
-பாலமுருகன்.லோ-