இராமானுஜம் மேகநாதன்
அதெப்படி?
எங்கே சாவானாலும் எங்கள் சாவாக இருக்கிறதே?
கள்ளச்சாராய சவானாலும்,
காவடி தூக்கி
காவல் தெய்வம் திருவிழாவானாலும்,
கடலில் உப்பெடுக்க போராடினாலும்,
காவிரி தண்ணீர் போராட்டமானாலும்,
தண்ணீர் இன்றி தவித்தாலும்
அதெப்படி?
சாவது மட்டும் நாங்களாகவே இருக்கிறதே!
எங்கள் அதிசய நாயகன், ஹீரோ வந்தாலும்,
எங்கள் அந்த நாயகன் கட்சி தொடங்கினாலும்,
எந்த அரசியல் தலைவர்கள் வந்தாலும்,
அந்த மதத்தலைவர்கள்
எங்கள் வாழ்க்கையை இரட்ச்சிக்க வந்தாலும்,
சாவு மட்டும் எங்களுக்குத்தான்,
அதெப்படி ?
சாவது மட்டும் நாங்களாகவே இருக்கிறதே!
தென் தமிழ்நாட்டு தொழிற்சாலை மூடலானாலும்,
கூடங்குக்குளம் போராட்டமானாலும்,
ஹைட்ரோ கார்பன் துளை தடுக்க போராடினாலும்
முதல் ஹீரோவின் திரைப்படம்
முதல் காட்சியில் நெரிசலானாலும்
கூடுவதென்பதே நாங்கள்தான்,
கூடிச்சாவதும் நாங்கள்தான்.
அதெப்படி ?
சாவது மட்டும் நாங்களாகவே இருக்கிறதே!
இலவசங்கள் வழங்கினாலும்,
விலையில்லா பொருள்கள்
எங்கள் வரிப்பணத்தில் வழங்கினாலும்,
வாங்க வந்து
நீங்கள் கொடுப்பதாக நினைத்து
வாங்க வந்து சாவது மட்டும் நாங்கள்தானே!
அதெப்படி ?
எங்கே சாவானாலும் எங்கள் சவாகவே இருக்கிறதே!
அரசியல் போராட்டமானாலும்
ஆசிதரும் சாமியார் தரிசனமென்றாலும்
அழகிய நடிகை துணிக்கடை திறந்தாலும்
நெருக்கடியில் தவிப்பதுவும்
திக்கு தெரியாமல் துடிப்பதுவும் நாங்கள்தானே
துப்பாக்கி குண்டு துளைத்தலும்
தொடர் மழை வெள்ளம் வந்திட்டாலும்
சுழற்காற்று புயலாய் வீசி வீழ்த்திட்டாலும்
போவது என்னவே எங்கள் உயிர்கள்தானே!
எல்லோர்க்கும் எல்லாமும் வேண்டிடும்
மக்கள் நலம் காக்கும் அரசுகள்தானே
இங்கு கோ லோச்சுகின்றன,
பிறகு ஏன் இந்த சாவுகள்
எங்கள் சாவுகள்
அதெப்படி ?
எங்கே சாவானாலும் எங்கள் சவாகவே இருக்கிறதே!
அதுசரி
யார் இந்த, அந்த ‘நாங்கள்’?
எங்களுக்கோ பல பெயர்கள்:
தாழ்த்தப்பட்ட, அழுத்தப்பட்ட
ஒடுக்கப்பட்ட, படுத்தப்பட்ட மக்கள் என்றே.
ஆமாம் ‘படுபத்தப்பட்ட’ ‘பாடாய் படுத்தப்பட்ட’
‘பாடாய் படுத்தப்படுகின்ற’ மக்கள்
என பல பெயர்கள்.
எங்களை நீங்கள் எப்படிவேண்டுமானாலும் அழைக்கலாம்
ஏன் என்றால் நாங்கள் ‘கேட்பாரற்ற மக்கள்’
எங்கள் உயிர்கள் எல்லாவகையிலும்
எங்கள் உயிர்கள் விலையற்றவைகள்தானே?
எங்கள் உயிர்கள் விலைமதிப்பற்றவையல்ல
விலையற்றவைகள் எங்கள் உயிர்கள்.
இனியொரு வகை செய்யுங்கள்
எங்களை ‘கேட்பாரற்ற மக்கள்’ என்றே அழையுங்கள்
ஏனென்றல்
எங்கே சாவானாலும்
எப்போ சாவானாலும்
எவர் சாவானாலும்
அது எங்கள் சவாகத்தான் இருக்கின்றது!
அதெப்படி ?
எங்கே சாவானாலும் எங்கள் சவாகவே இருக்கிறதே?
முனைவர் இராமானுஜம் மேகநாதன்
rama_meganathan@yahoo.com
- அன்றொருநாள்…..
- திறனாய்வும் தனிமனிதத் தாக்குதலும் – மற்றும் ஒரு கவிதை
- அதெப்படி? எங்கே சாவானாலும் எங்கள் சவாக இருக்கிறதே?