வட கிழக்குப் பருவம்

5
0 minutes, 4 seconds Read
This entry is part 20 of 41 in the series 13 நவம்பர் 2011

 

 

 ரமணி

 

நேற்று மென் தூறலில் நனைந்துகொண்டே வண்டியில் போனதில் ஜலதோஷம் பிடித்துக்கொண்டுவிட்டது.  உடனே ஒரு  ரெய்ன்கோட் வாங்கிவிட உத்தரவு வந்ததில் இந்தியப்பொருளாதரம் இன்னொரு இயக்கத்தைச் சந்தித்தது. ஆனால், மழையில் ரெய்ன்கோட்டை உபயோகிக்க வாய்ப்பு வரவில்லை இன்னும்.  இருந்தாலும் திபாவளிக்குப் புது ட்ரெஸ் போட்டுக்கொள்வது மாதிரி  மஞ்சள் குங்குமம் எல்லாம் தடவி டி.வி யில் நாதஸ்வரம் ஒலிக்கப் போட்டுக்கொண்டு கழற்றிவைத்துவிட்டோம்  . இந்த ஸீஸனுக்கான மழை ,கோடை மழைபோல இருக்காது. இது ட்ராவிட் ஆட்டமென்றால்,  கோ.மழை ஷேவாக் ஆட்டம்.

 

கோடைக்காலத்தில் சிமெண்ட் போடும் நாளிலோ, மிளகாய் காயவைக்கும் நாளிலோ, கட்டாயம் மழைவந்து அம்மாவிடம் வருணபகவான் திட்டுவாங்கிக்கொள்வார்.  நாங்கள் விளையாடிக்கொண்டிருக்கும் பெரிய மைதானத்தின் பின் மிகத்தள்ளியிருக்கும் தோப்பின் பின்னாலிருந்து யாரோ ஒரு ராட்ஷஸன் மிகப் பிரம்மாண்டமான வாயைக்குவித்து ஊதிவிட்டாற்போல மேகக்கூட்டம், ப்ரகாஷ்ராஜ் ஏவிவிட்ட அடியாட்களின் சத்தத்தோடு வரும்.  தோற்றுக்கொண்டிருக்கும் அணியினர்  “ஆட்டம் ஓவர், வீட்டுக்குப்போவர் ” என்று ஓடிவிடுவார்கள் மழையின் முதல் துளி விழுமுன்னரே.   சில பெருசுகள் கண்களுக்குமேல் தளர்ந்த ‘ நேவி ‘ஸல்யூட்போல் கைவைத்து வரப்போகும் மழையின் தன்மைபற்றிச் சொல்லும்.  இளமை வரும்போதே காதலும் வந்துவிடுவதுபோல மேகத்திரட்சியின் அடுத்த சில நிமிடங்களில் பெரிய காற்று, குப்பைக்கூளத்தையெல்லாம் சுருட்டி அடிக்கும்.  மழை வந்தாலும் வரும் வராமலும் போகும், காதலுக்கான ரிசல்ட் போன்றே. வடகிழக்குப் பருவ மழை அப்படியெல்லாம் இல்லை. சிலசமயங்கள் தவிர்த்து, பொதுவாக நின்று விளையாடும்.  நடுவில் கொஞ்ச நேரம் வெயில் அடிக்கிறதே என்று துணிமணிகளைக் காய்வதற்கு வெளியில் போட்டுவிட்டால் சடசடவென்று டயப்பர் போட்டுக்கொள்ளாத குழந்தை நம்பர் ஒன் போய் எல்லாத் துணிகளையும் நனைத்துவிடுவது போன்று ஈரம் பண்ணிவிடும்.  டைப் பண்ணின மேட்டரை ஸேவ் பண்ணாமல் இருக்கும்போது கரண்ட்போய் விட்டாற்போல மறுபடியும்  “அடியைப் புடிடா பாரத பட்டா “தான்.

 

அந்த நாட்களில் எல்லாம் , தொடர்ந்து காலையிலிருந்து மழை சற்றே கனமாகவோ அல்லது மிகக்கனமாகவோ  வானிலை ரமணன் தலையை வெட்டியும் ஆட்டியும் சொல்வதுபோலப் பெய்தால் நிச்சயம் ஸ்கூல் ஐந்து பீரியட் தொடர்ச்சியாக நடக்க மதியம் லீவ் விட்டுவிடுவார்கள். ஸ்கூல் விட்டவுடன் மழையும் விட்டுவிடும். நானும் நண்பர்களும் வீட்டுக்குப்போகாமல் கொண்டுவந்த அலுமினியம் டிஃபன் பாக்ஸைத் திறந்து கடுகு மிதந்துகொண்டிருக்கும் மோர் சாதத்தைச் சாப்பிட்டுவிட்டு ( குடித்துவிட்டு )  எங்களிலேயே பெரிய, நிறைய வருடம்  அதே க்ளாசில் படித்துக்கொண்டிருந்த கேப்டனுக்காகக் காத்திருப்போம். அவன் வீட்டுக்குப்போய் சாப்பிட்டுவந்தவுடன், அவன் ஆணைப்படி மீன்பிடிக்கவோ அல்லது கப்பல் விடவோ ஏதோ ஒன்றிற்குத் தயாராவோம்.  கேப்டன் பெயர் ஷம்சுதீன். செக்கச் செவேலென்று சுருள்முடியுடன் உடம்புமுழுக்க வழவழவென்று இருப்பான். வாய், கத்தியால் கீறிவிட்டாற்போல் சற்றே பெரியதாய் இருக்கும். ரோஜாச் சிவப்பில் உதடு ரொம்ப மெல்லிசாய் இருக்கும். வெள்ளைவெளெரென்று பற்கள் காம்பௌண்டைவிட்டு ரொம்பத்தள்ளிக் கட்டின வீடுமாதிரி உள்ளடங்கி வரிசையாக இருக்கும்.  இப்படி வில்லனுக்கான அம்சங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் அவன் பயங்கரமானவன்.  தோள்மேல் கைபோட்டுக்கொண்டு சமர்த்தாகப் பேசிக்கொண்டே வருபவன் எதிர்பாராத சமயத்தில் ஏடாகூடமான இடத்தில் வலிவருமாறு ஏதாவது செய்துவிடுவான். திடீரென்று சட்டைப்பாக்கெட்டையோ அல்லது ட்ரௌசரின் பின்பக்கத்தையோ ப்ளேட் கொண்டு கிழித்துவிடுவான்.  ஹெட் மாஸ்டரிடம் ஒரு பையன் கம்ப்ளெய்ண்ட் செய்தபோது, அவர் அவனைக்கூப்பிட்டு அடிப்பாரென்று எல்லாரும் நம்பிக்கொண்டிருந்தபோது, அவர், அவன் தோளில் ஏதோ வெகு நாளைய நண்பன்போல் கைபோட்டுக்கொண்டு வெளியே அழைத்துப்போய் டிஃபனை முடித்துகொண்டு வந்துவிட்டார்.  அடிவாங்கிய பையனின் அப்பா ஸ்கூலுக்கு வந்து  ஹெட் மற்றும் ஹெட் இல்லா மாஸ்டர்கள் யாரையும் பார்க்கவியலாது திரும்பும்போது, சைக்கிள் எப்படியோ பங்க்ச்சர் ஆகியிருந்தது.  போதாக்குறைக்கு, எங்கள் கேப்டன் கணக்கு வாத்தியாரின் பெரிய பெண்ணைக் கணக்குப் பண்ணிக்கொண்டிருந்தான். பயந்துபோன கணக்கு ஆசிரியர்,  அவன் பரீட்சையே எழுதாவிட்டாலும் அவனுக்குத் தொடர்ந்து விடாமல் பாஸ் மார்க் போட்டுக்கொண்டிருந்தார்.  இருந்தாலும் அவன் வசீகரமான வில்லன். எங்களால் அவனைத் தவிர்க்க முடியாததற்கு அவன் சொல்லும் கதைகளும்,  மிட்டாய்க்கடைக்  கிழவியை ஏமாற்றி வாங்கித்தரும்  ஈ மொய்க்கும் டாஃபியும் தான்.

 

அவன் வந்தவுடன் அவன் சைக்கிளில் எங்கெல்லாம் இடம் உண்டோ அங்கெல்லாம் பைகளை மாட்டிக்கொண்டு கிளம்பிவிடுவோம்.  இருப்பதிலேயே குட்டையான ( சைக்கிளையும்விட )  நான்தான்  சைக்கிளை உருட்டிக்கொண்டு  வரவேண்டும்.  மற்றவர்கள் வேகத்துக்கு ஈடுகொடுத்துத் தள்ளும்போது, சைக்கிள் பெடல் ஏகத்துக்குக் காலில் இடிக்கும். குரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஓட்டும் அளவுக்கு ( சங்கீதத்தில் ஸ, ப , ஸ மாதிரி ) இன்னும் வளர்ந்திருக்கவில்லை அப்போது. மெதுவாக உருட்டிக்கொண்டுபோனால் அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று காதில் விழாது.  கேப்டன் முன்தினம் ஐந்தாவது தடவையாகப் பார்த்த ஜெய்ஷங்கர் படத்தை எழுத்துபோடும்போதுவரும் ம்யூசிக்கிலிருந்து, வளையம் வளையமாகச் சுழன்று பின் கட்டம் கட்டமாகமாறி, பின்புலத்தில் ட்ரம்ஸ்கள் அதிர வில்லன் கொட்டும் மழையில் ரெயின் கோட்டும் பெரிய தொப்பியும் அணிந்து, க்ளௌஸ் கையில் துப்பாக்கியோடு பதுங்கிப் பதுங்கி  வந்து கதா நாயகியின் அம்மாவை வீட்டு ஜன்னல்வழியாக ‘டொப்’ பென்று சுட்டுவிட்டு ஓடும்போது டைரக் ஷன் ‘ ஜம்பு ‘ என்று போடுவதை விவரிப்பதைக் கேட்பதற்காகவே பெடல், முட்டியைப் பேர்த்தாலும் பரவாயில்லை என்று சைக்கிளை என் வயதிற்கு மீறிய வேகத்தில் தள்ளிக்கொண்டுபோவேன். சில சமயங்களில் அப்படி வேகமாய்த் தள்ளும்போது சில பைகள் கீழேவிழுந்துவிடும்.  புத்தகமூட்டை சேற்றில் விழுந்ததைக்கூட கவனிக்காமல் போய்க்கொண்டிருக்கும் குழுவைக் கூப்பிட்டால் உதைகிடைக்கும் என்பதால் நானே அதை எடுக்கும் முயற்சியில் பலதடவை தோற்று ஸ்டாண்ட் போட முடியாமல் சைக்கிளோடு கீழேவிழுந்து  இன்சென்டிவ் போனஸாய் அடியும் வாங்கிக்கொள்வேன்.

 

ஷம்சுதின் மழைத்தண்ணீரில் கப்பல் விடலாம் என்றால் கப்பல் செய்ய பேப்பரை எல்லோருடைய நோட்களிலிருந்தும் எந்த நோட்டு என்று பார்க்காமல் கிழித்துவிடுவான். “கணக்கு நோட்டிலிருந்து ஏண்டா பேப்பரப் பிச்சே? ஆதி ஸார் அடிப்பாருடா ” என்று சொன்னால், ” ஆதியாவது,  —— யாவது ” என்று ஆதிக்கு எதுகையாக ஒரு கெட்ட வார்த்தையைச் சொல்வான். வருங்கால மாமனாரையே ஏன் இப்படித் திட்டுகிறான் என்று எங்களுக்குப் புரியாது.  ஆனால்  எல்லா வாத்தியார்களுக்கும் ஒரு கெட்டவார்த்தை அவனிடம் உண்டு.  ஒரு மழை  நாள் விடுமுறையில் மீன்பிடிக்கப் போனபோது என் டிஃபன் பாக்சிலும் ரெண்டு மீன்களைப் பிடித்துப்போட்டு எனக்குத் தெரியாமல் என்பையில் வைத்துவிட்டான். நானும் வீட்டிற்கு வந்ததும் வழக்கம்போல டிஃபன் பாக்சை அடுப்பங்கரையில் வைத்துவிட்டு மறுபடியும்  லோகல் பாய்ஸோடு விளையாடப்போய்விட்டேன்.  பாலித்தீன் பையைத் தலைக்குக்காப்பாக அணிந்த பால்காரன் மழைக்குப் பயந்து  சீக்கிரம்  பால் ஊற்றும் வேலையை முடிக்கும் நோக்குடன் வீட்டுவாசல் முன் விடாமல் ஃபயர்  இன்ஜின் மாதிரி அடித்த மணிகேட்டு ” பால்காரனுக்கு என்னவோ ஏதோ ; வேகமாய்ப் பால் வாங்கிவிடுவோம் ” என்று ரெகுலர் பால்பாத்திரம் கிடைக்காமல்  ( கடங்காரீ, எங்கக் கொண்டு பாத்திரத்தை வச்சாளோ? ),  என் விலைமதிக்கமுடியாத அலுமினியப்பாத்திரத்தை எடுத்துக்கொண்டு ஓடி அதற்குள் என்ன இருக்கு என்பதைப் பார்க்காமல் பாலை வாங்கி மூடிவைத்துவிட்டு மீண்டும் விவித பாரதி கேட்கப்போய்விட்டாள். பால்காரனும் பால்கேனை பைசா கோபுரம் மாதிரி சாய்க்காமல் சின்ன கேனிலிருந்த முழுப்பாலையும் ( கால் லிட்டர்தான் )  டிஃபன் பாக்ஸில் சாய்த்துவிட்டுப் போய்விட்டான்.   சீக்கிரமாக இருட்டிவிட்ட அந்த நாளில் ராத்திரிப் பால் காய்ச்சுவதற்கு அம்மா பாலைத் தேடியபோதுதான் டிஃபன் பாக்ஸில் மத்யஸ்ங்கள் பால்மயக்கத்திலிருந்ததைப் பார்த்து ,  தான் மயங்கி விழுந்துவிட்டாள். பால் வாங்கும்போது விவித பாரதி மயக்கத்திலிருந்ததால் அதைக்  கவனிக்காத என் அக்கா,  அது பால்காரனின் திரிசமந்தான் என்று எந்த என்கொயரியுமில்லாமலேயே ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள். ” ஸ்பீக்கிங் ஆர்டரில் ”  தெளிவாக,  பால்காரன் பாலில் மழைத்தண்ணீரை எந்த அக்கறையும் இல்லாமல் இண்டிஸ்க்ரிமினேட்டாகக் கலந்ததால்தான் இப்படி நடந்ததாகக்குறிப்பிட்டு,  அந்தச்செய்கை “அன்பிகமிங்க் ஆஃப்  எ மில்க்மேன்” எனக் குற்றம்சாட்டி அவனிடம் பால்வாங்குவதை நிறுத்தியதோடல்லாமல் அந்தப் பாலுக்கும் பணம் கொடுக்க மறுத்துவிட்டாள்.  மறு நாள், ஷம்சுதீன் என்னிடம் கண்சிமிட்டிக்கொண்டேவந்து ” என்ன ஐயரே! இன்னிக்கு மீன் கொளம்பு கொண்டு வந்திருக்கியா? ” என்று கேட்டபோதுதான் அவன் விஷமம் புரிந்தது.  பாண்டியன் ( மீன் சின்னம் கொண்ட ) என்ற பேர்கொண்ட அந்தப் பால்காரருக்கு எப்பாடுபட்டேனும் அவருக்கு மறுக்கப்பட்ட ஒரு  நாள் பால் பணத்தைக் கொடுத்துவிடவேண்டும் என அவரைப் பார்க்கும்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன்.  ஆனால் அவருடைய மாடுகள் அடுத்தடுத்து செத்துப்போக நான் சம்பாதிக்கும் முன்பே அவர் ஊரைவிட்டுப் போய்விட்டார்.  ஷம்சுதீன் பொன்மலை ரயில்வே  ஒர்க்   ஷாப்பில் க்ரேட் ஒன் டெக்னீஷியனாக புதிதுபுதிதானகெட்டவார்த்தைகளோடு வந்து போய்க்கொண்டிருக்கிறான். கணக்கு வாத்தியாரின் பெரியபெண்ணிடம்  ” ஈக்வேஷன்”  ஒத்துவராததால், ஒரு ஆயிஷாவைக் நிக்காஹ்  செய்துகொண்டு பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்து வருகிறான்.  அன்றொரு நாள் என்னைபார்த்து ” என்ன ஐயரே! நீயும் ரயில்லதான் இருக்கியா? வேற நல்ல வேல ஒண்ணும் கெடக்கலையாக்கும் ! ” என்று என் பதிலை எதிர்பார்க்காமலயே அந்தப் பழைய சைக்கிளை மிதித்துக்கொண்டு  போய்விட்டான்.

 

 

Series Navigationகிருமி நுழைந்து விட்டதுஜெயலலிதா எதை தேர்ந்தெடுக்கப்போகிறார் ?
author

ரமணி

Similar Posts

5 Comments

  1. Avatar
    Cyberpayanee says:

    Tales of yester years consistently good. Obviously there is more from where it originates. Ramani …. the name and style rings a bell? Did I know you from Tamilnet days? hmm hmm

Leave a Reply to Cyberpayanee Cancel reply

Your email address will not be published. Required fields are marked *