Posted in

கவிதை

This entry is part 22 of 41 in the series 13 நவம்பர் 2011

பூபாளம்

 

சிறகை கொடுத்த கடவுள்

பறக்கவும் கற்றுத் தருவாரா

அன்பை பருகிக் கொண்டிருக்கும் போது

எனக்கு எப்படி பசியெடுக்கும்

தனிமையில் அலைகளைப் பார்த்தபடி

கடற்கரையில் நின்றிருக்கின்றாயா

கூண்டுப் பறவைக்கு

விடுதலை அளித்தபோது

ஏற்பட்ட நிறைவை

எப்போதாவது அனுபவித்திருக்கின்றாயா

தாயின் கரங்களுக்கு அப்புறம்

தென்றல் வருடிக் கொடுப்பது தானே

மனதுக்கு இதமளிக்கின்றது

தோல்வியின் மூலம்

கற்கும் பாடங்களை

எளிதில் மறந்துவிட முடியுமா

சிகரத்தை அடைந்ததும்

மனதில் வெற்றிடம்

ஏற்படுவதில்லையா

காயம்பட்ட இதயங்களுக்கு

வார்த்தைகள் தானே

ஒத்தடம் கொடுக்கின்றன

விடியலின் பூபாளத்தை

உயிர்கள் ரசிப்பதில்லையா

அந்தி சாயும் போது

நிழல்கள் நீளுவதில்லையா.

 

 

 

 

 

 

 

 

 

 

மறுபக்கம்

 

அடிக்கடி

சமநிலை பாதிக்கும்படி

சிந்திக்காதே

வாழ்க்கை நீ நினைப்பது போல்

கொடியதல்ல

இலையைப் போல்

இலகுவாக இருக்கமுடியவில்லை

என்றாலும் பரவாயில்லை

தண்ணீரைப் போலாவது

சலசலத்துக் கொண்டிறேன்

நமது திட்டப்படி எதுவும்

நடக்காத போது

அச்சாணி கழன்றதைப் போல்

ஏன் தவித்துப் போகிறாய்

மழையை எதிர்பார்த்திருக்க

அது தூறலுடன்

விடை பெற்றுக்கொள்வதை

கவனித்திருக்கின்றாயா

நாளைக்கான

டைரிக் குறிப்பை

இன்று யாராவது

எழுத இயலுமா

ரயிலில் பயணம் செய்பவர்கள்

சுமைகளை தனது தலையிலா

சுமந்து செல்கிறார்கள்

சில சமயம் கேள்விகளுக்கு

நாம் மெளனத்தை

பதிலாகத் தருவதில்லையா

நாளையின் ரகசியத்தில்

யாராவது

நுழைந்து பார்க்க முடியுமா.

 

 

 

ப.மதியழகன்

 

mathi2134@gmail.com

 

Series Navigationஜெயலலிதா எதை தேர்ந்தெடுக்கப்போகிறார் ?ஜென் ஒரு புரிதல்- பகுதி 18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *