பார்வையாளர்கள் குறித்த பதட்டங்கள் ஏதுமின்றி ஒரு விளையாட்டு துவங்கியது கேள்விப்பட்டிடாது புதிதாக இருக்க எல்லோர் நாவுகளிலும் பற்றிய தீ வரைபடங்களில் மிளிரும் நாடுகள் மீதும் நகரத் துவங்கியது தேச நலனுக்கு பெரும் குந்தகம் வந்ததென கமிட்டிகளை நியமித்தது அரசு புத்தி ஜீவிகள் கணிப்புகளை மேற்கோள்களின் நிழலில் வைத்தனர் குறிசொல்லி சாமியாடிகளும் அவிழ்க்கத் துவங்கினர் பொய் மூட்டைகளை சமூக அறிஞர்கள் சந்தோசங்களை பகிர்ந்தனர் வேப்ப மரத்தில் பால் ஒழுகுகிறதெனும் செய்தியென அசட்டையாக இருந்த என்னுள்ளும் ஆவல் பற்றிக்கொள்ள ஓடினேன் […]
தன்னில் பயணித்த நீரோடைகளின் தடயங்களோடிருக்கும் மணல்பரப்பில் திரண்டிருந்த ஆடுகளோடு உரையாடினார் சிலுவையில் அறையப்பட வேண்டியவன்தான் பாவிகளை ரட்சித்து பாவமூட்டையின் சுமைதாங்கி நின்றேன் என் வழித்தடங்கள் புனிதமாக்கப்பட தேர்ந்த மேய்ப்பாளனானேன் அப்பங்கள்களை சகலருக்கும் பகிர்ந்து தொடுதலில் சுகப்படுத்தும் சிகிச்சை நிபுணன்தான் மனக்கசப்பும் வருத்தமுமின்றியே சுமக்கிறேன் எனது ஜனன நாளில் அவதரித்து என்பொருட்டு பலியான சிசுக்களுக்காகவென்றார் மேலிருந்து உதிரத்தொடங்கின கொன்றைப் பூக்கள்…
உடல் நொறுங்கி சரிய சபை அதிர்ந்தது சூதாடி தலைதொங்கியவன்களின் முகம் உமிழ்ந்த எச்சிலால் சபதம் நிறைவு கொள்ள பற்றி இழுத்தவனின் தொடை ரத்தம் பூசி முடிந்த கூந்தலுள் ஆதிக்க அழுகளின் வீச்சம் பெருக நீராடி கேசம் நீவிய துரோபதையை பிறப்பித்தது குளித்து வந்த மதுவாகினியின் கூந்தலில் வடிந்த நீர்த்துளிகள்…
காதறுந்த வீடுகள் கலையா துயிலில் சுகித்திருக்க பனிபோர்த்திய மைய இரவில் குறி இசைத்தான் கெட்டகாலம் பிறக்க கெடுதிகள் நடக்குமினி நோய்மை மனிதர்களையும் கடந்த பிணமும் கண்டு கற்றறிய பற்றற்றுப் போன போதியாய் உன் மகனும் தேசாந்திரியாவான் முதிர்ந்த உடல் கிடத்தி நிம்மதிக்கான வாழ்வின் கனவு பங்கப்படாமலிருக்க பரிகாரம் உண்டிங்கு அதிகாலை எனை அடைய ஆறுதல் கொள்வாய்யெனும் ஒலி தேய தொலைந்த நித்திரையை துழாவிடத் துவங்கினோம்…
சடசடவென பொழிந்த மழைக்குப் பின்னான புழுக்கம் சரசரவென அடித்த காற்றால் தின்றழிக்கப்படுகிறது ஒன்றை எப்பொழுதும் வேறொன்று வீழ்த்தக் காத்திருக்க வருத்தமெதற்கு வளரும் தொப்பை குறித்து பாரம் சுமக்கும் உடல் அறியும் பருமன் குறைக்கும் ரகசியங்களை மெலிந்த தேகத்தோடு இருந்தவன் உரையாடிக் கொண்டிருந்தான் சொல்லுதல் யாவர்க்கும்… குறள் தவளையாக குதிக்க ஒரு கோலினால் திருப்பிவிட்டேன் மனம் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை மீண்டும் துழாவிடத் துவங்க வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே என்னிடம் வாருங்கள்… பாவம் இயேசுபிரான் இப்பாரம் குறித்தெல்லாம் அறிந்திருக்கமாட்டார்.
தூர்த்த குளக்கரையிலிருந்து வந்த விசும்பலின் துயர்வெடிக்கக் கலைந்த தூக்கத்தின் எரிச்சலோடு இடம் அடைய அதிர்ந்தேன் எழுப்பிய தூண்களிடையே நின்றிருந்தாள் குலசாமியான செல்லியம்மன் யாது துயர் தாயே மண்டியிட்டேன் அவளும் மண்டியிட்டு தலைநிமிராது நாப்கீன்கள் படைக்க வேண்டினாள் வீடு திரும்ப நினைத்துக்கொண்டேன் பெரியாயிக்கு சேலை படைக்கும் அம்மாவின் வேண்டுதலையும் நிறைவேற்றிட வேண்டுமென…
– எள்ளளவும் சந்தேகமில்லை எளிதில் நீங்கள் மன்னித்துவிடுவீர்கள் காலகாலமாய் அதற்காகத்தான் பழக்கப்படுத்தப்பட்டீர்கள் இருக்கக்கூடும் உங்களின் பெரும்தன்மையாக அதுதான் எங்களுக்கான மூலதனமும் கச்சாப்பொருளும் நம்பிக்கையுண்டு அழைக்க பின்தொடர்வீர்கள் மந்தைகளாக அற்புதங்கள் நிறைந்தது என்றிட முள் அப்பிய பாதையைக்கூட சகித்தீர்கள் கடந்தபின் நீங்கள் கண்டது வறண்ட பொட்டல்வெளிதான் நாளைகளில் மாற்றங்கொள்ளுமென்றதும் வணங்கிவிட்டு திரும்பினீர்கள் குறைச்சலான காலத்திற்குப் பின் மீண்டும் பொய்களோடு வருவோம் நீங்களும் ஆசைகளோடு பின்தொடர்வீர்கள்…