அண்மையில் படித்தது ம.ராஜேந்திரனின் “சிற்பியின் விதி” [ சிறுகதைத் தொகுப்பு ]

Spread the love

———-வளவ.துரையன்———-

sirpiyin-vithiம. ராஜேந்திரன்  தஞ்சைப் பல்கலைக் கழகத்தில் துணை  வேந்தராகப் பணியாற்றி ஓய்விற்குப்பின் இலக்கியத் தாகத்தால் கணையாழிக்குப் புத்துயிர் ஊட்டி வருபவர்.

எட்டுக் கதைகள் கொண்ட தொகுப்பாக “சிற்பியின் விதி” வெளிவந்துள்ளது. மனிதனையும் நாயையும் வைத்து முதல் கதை “கடவுளும் டைகர்சாமியும்” பின்னப்பட்டுள்ளது. கடவுள் ஒருநாள் மனிதனை நாயாகவும் அம்மனிதனின் நாயை அவனாகாவும் மாற்றுகிறார். ஆனால் நாய் மனிதனாக இருக்க விரும்பவில்லை. மீண்டும் நாயாகவே விரும்புகிறது. மனித வாழ்வும் நாயின் வாழ்வும் ஒன்றாக இருக்கிறது என்றே நாய் கருதுகிறது. காரணங்களும் சொல்கிறது.

“எஜமான் அழைத்தால் வருவதுபோல் மனிதன் போன் பெல் அடித்தால் ஓடுகிறான். நாய் லைசென்சுடன் திரிவது போல் மனிதனும் அட்ரஸ் பேரு என்று கட்டிக்கொண்டிருக்கிறான்.’ என்றெல்லாம் ஒற்றுமை காட்டும் கதாசிரியர் காட்டும் வேற்றுமைகளால் கதை சிறக்கிறது. “நாங்க எஜமானை அடிக்கடி மாத்திக்கறது இல்ல, எஜமானே கூப்பிட்டு சும்மா இருன்னு சொன்னாலும் விசுவாசம் கட்ட உறுமுவோம் “ என்றெல்லாம் நாய் சொல்கிறது. .

கடைசியில் எஜமானையும் நாயாகக் கருதி  “இப்போ  நாய்களுக்குதான் நான் நாயாக இருக்கிறேன்” என்பதைத் தெரிந்துகொண்டுவிட்டதாக நாய் கூற கடவுளும் “இவ்வளவு நாளா நானும் மனுசங்களுக்குக் கடவுளா இருக்கிறதா நெனச்சுக்கிட்டிருந்தேன்” என்கிறார். மனிதநேயம், பண்பாடு முதலிய மனித குணங்கள் அருகிப்போய்க் கொண்டிருக்கின்றன. மாந்தன் பண்பாட்டையும் மனித நேயத்தையும் மறந்து கற்காலத்தை நோக்கிப் பயணிக்கிறான். இவை எல்லாம் கதை மறைமுகமாக   உணர்த்துபவை. அதனால்தான் நாய் கூட ஒருநாள் மனிதனாக இருந்ததை  “என்ன வாழ்நாள் முழுக்க வதைக்கற மாதிரி இருக்கு சாமி” என்று கூறுகிறது.

பெரும்பாலும் எல்லாக்கதைகளுமே சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளாகவே இருக்கின்றன. ஆனால்  பாடம் புகட்டுவனவாகவோ  நீதி மொழிபவனவாகவோ இல்லை. “இதோ இது நடக்கிறது, இதைப் பார்த்து நீ முடிவெடு” என்பனவாகவே இருப்பதுதான் கதைகளின் பலம்.

பெற்றோரை இறுதிக்காலத்தில் பங்கு போடும் சூழல், திக்கற்றவர்களை ஆதரிக்க வேண்டிய மனம், குடும்ப உறவுகள் ஒதுக்கித்  தள்ளிய திருநங்கையின் பாசம், அழுதால்தான் வேதனை குறையும் எனும் மனம், கணவன் மனைவி பிரச்சனைகள், விளக்குமாறு இருக்க வேண்டிய இடம், மாற்றுத் திறனாளிகளின் மன வலிமை இப்படிப் பல வகைப்பட்டவை கதைகளாகி இருக்கின்றன.

ஒவ்வோர் அடிமனத்திலும்  பிறர் சாதியைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பிசாசு உள்ளது. அது பழகுபவரின் பெயரை முதலில் கேட்கும்போதே பெயரை வைத்து, அப்பா பெயரை வைத்து, அப்பாவின் தொழிலை வைத்து, ஊரில் எந்தத் தெருவில் வசிக்கிறார்கள் என்பதை வைத்து சாதியை அறிந்து கொள்ள முனைகிறது. இது எல்லார்க்கும் நேர்ந்திருக்கிறது. இச்சமூக அவலத்தைப் “பார்வை”  கதையில் காட்டுகிறார் ம.ரா.

நரசிம்ம மூர்த்தியின் உக்கிரம் குறைக்க அதைச் செய்த சிற்பி  அதன் கால் கட்டை விரலைப் பாதியாய் வெட்டி வைத்துள்ளதாக “ சிற்பியின் விதி”  கதையில் வருகிறது. தங்களைப் பெரியதாக தத்தம் மனத்தில் பிம்பம் உருவாக்கிக் கொண்டுள்ள கணவன், மனைவி திருக்கோஷ்டியூர் கோவிலில் புழங்கும் சூழல் யதார்த்தமாக உள்ளது. ஒவ்வோர் மனத்திலும் உள்ள “நான்’ என்பது அகல வேண்டும் என்று ஆன்மீகம் கூறுகிறது.   ஆனால் அது தானே அழிந்து மறையாமல் பிறர்  “நானை” அழிக்க முயல்வதுதான் வாழ்க்கையா  எனும் கேள்வியைக் கதை எழுப்புகிறது. விடை காண முடியாத வினாதான் அது.

வாசகனின் மனத்தைப் புரட்டி எடுத்து விளக்கங்கள் காணத் துடிக்கும் கதைகள் உள்ள தொகுப்பு இது. கணையாழி படைப்பகம் நேர்த்தியாக வெளியிட்டுள்ளது.

[ சிற்பியின் விதி—ம. ராஜேந்திரன்,  கணையாழி படைப்பகம், சென்னை. பக் : 112,  விலை ரூ  : 50 ]

Series Navigationகடவுள்களும் மரிக்கும் தேசம்நீங்காத நினைவுகள் 12