ஆத்மாவில் ஒளிரும் சுடர்

ஆத்மாவில் ஒளிரும் சுடர்
This entry is part 2 of 45 in the series 2 அக்டோபர் 2011

      சுமையான, நெஞ்சை ஈர்க்கும் வண்ணம் கச்சிதமான அட்டைப் படத்தைக் கொண்ட அந்தப் புத்தகத்தைக் கண்ட போது, உடனேயே வாங்கிப் படித்துவிட வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டுப் போனது. அதிலும் சுரா அவர்களின் இளமைத் தோற்றம் எங்கள் குடும்பத்து சாயலாக, அப்படியே அச்சு அசலாக ஒத்து இருந்ததாக உணரவே, மனதில் சட்டென்று பரவிய ஈரமும் நெருக்கமும் என்னை அப்படியே புரட்டிப் போட்டு விட்டன.

 

திரு சுரா அவர்களின் துணைவியார் அவரோடு இணைந்த வாழ்க்கையின் சாராம்சங்களையும், மறக்க முடியாத உள்ளார்ந்த அனுபவங்களையும், திருமணத்திற்கு முன்பான அவரது பிள்ளைப் பிராயத்தின் படி நிலைகளையும், அவரது குடும்பம் சார்ந்த பெரியோர்களுடனான அவரது அனுபவங்களையும் இப்புத்தகத்தில் பகிர்ந்து கொண்டும், அதன் தொடர்ச்சியாக திரு சுரா அவர்களுக்கு வாழ்க்கைப்பட்ட பிறகு அவருடனான தனது அவதானிப்புகளையும், அனுபவ சாரங்களையும், நேர்த்தியுடனும், நேர்மையுடனும் பதிவு செய்திருக்கிறார். ஆஉறா! இதை அவர் சொல்லச் சொல்லக் கேட்டுக் கேட்டு நாம் எழுதும்படியான ஒரு நல் வாய்ப்பு நமக்கு இல்லாமல் போனதே என்று மனம் வருந்த ஆரம்பித்துவிட்டது.

 

எண்பதுகளின் கடைசியில் என்று நினைக்கிறேன். மதுரை காந்தி மியூசியத்தில் ஒரு கவிதை விவாதக் கருத்தரங்கின் போது பிரமிள் அவர்களை நேரில் சந்தித்துப் பேசும் அரும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. வெகு நேரம் அவரோடு விவாதித்து விட்டு கடைசியாக அவர் பிரியும்போது சொன்னார். மீசையை எடுத்துவிட்டால் அச்சு அசலாக நீங்கள் ஒரு சுந்தர ராமசாமிதான். தாடி வைத்துக் கொண்டீர்கள் என்றால் நிச்சயம் அவரைப் போலவே உணர்வீர்கள் என்று அருகில் வந்து கையைப் பிடித்துக் கொண்டு நெருக்கமாகச் சொல்லி விட்டுப் போனார். சத்தியமான ஒரு விஷயம். இது, ஏதோ ஒரு வழியில் என்னைப் பெருமைப் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவிழ்த்து விடும் புளுகு அல்லது அல்ப ஆசை என்று யாரேனும் தவறாக, இகழ்ச்சியாக நினைத்துக் கொண்டர்களானால் அதுபற்றி எனக்குக் கவலையில்லை. அல்லது இவனென்ன சொல்வது நானென்ன படிப்பது என்று விட்டாலும் சரி. இப்படியான மனநிலைதான் இன்று பரவலாகப் பலரிடம் உள்ளது என்பதை மனதில் வைத்துத்தான் இதை இத்தனை அழுத்தமாக இங்கே நான் சொல்கிறேன். திரு சுரா அவர்களுடனான  ஆத்மார்த்தமான ஒரு பிணைப்பு எனக்கு அவரது எழுத்து மூலம் கிடைத்திருந்தது என்பதே சத்தியமான உண்மை. இந்த ஈடுபாட்டின் பாற்பட்டுத்தான் எனது நினைவுத் தடங்கள் என்ற சிறுகதைத் தொகுப்பினை அவருக்கு சமர்ப்பணம் செய்திருந்தேன்.  இம்மாதிரி நான் மட்டும் உணரவில்லை. அவரது எழுத்தைப் படித்த பற்பல எழுத்தாளர்களும் வாசகர்களும் தங்களுக்குத் தாங்களே மிக நெருக்கமாக அவர் இருந்திருப்பதாக உணர்ந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

 

அம்மாதிரியான பேறு எத்தனை எழுத்தாளர்களுக்குக் கிடைத்திருக்கும்.இதிலென்ன பேறு இருக்கிறது? என்று யாரோ கேட்பது இங்கேயும் காதில் விழத்தான் செய்கிறது. இம்மாதிரியான உணர்வுகளை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். வார்த்தைகளினால் சொல்லி உணரப்படுவதில்லை அது.  இதை மறுதலிக்கும் படைப்பாளிகள் அல்லது வெறும் பேத்தல் என்று நினைக்கும் எழுத்தாளர்கள் அவர்களது தீவிர வாசகர்களால் அவர்கள் அவ்வாறு உணரப் படுவதாகக் கேள்விப்படும்போது மனதுக்குள் புளகாங்கிதமடைந்து போகிறார்கள் என்பதுதான் இங்கே பிரத்தியட்ச உண்மை. திரு சுரா அவர்கள் மாதிரி எழுத முடியாவிட்டாலும் அவரைப் போலான சிறு உருவ அடையாளமாவது கொண்டிருக்கிறோமே என்று ஒருவர், ஒரு முக்கியமானவர் உணர்த்தியிருக்கிற அளவில் ஒரு திருப்தி ஏற்படத்தான் செய்கிறது எனக்கு.

பல வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஆதர்ஸமாக இருந்திருக்கும் திரு சுரா அவர்கள் அவரது துணைவியாருக்கு ஆத்மார்த்தமான, தோழமைமிக்க கணவராகவும், அவரது பிள்ளைகளுக்கு ஒரு பொறுப்பான தந்தையாகவும் விளங்கியதுபற்றி இந்தப் புத்தகத்தில் திருமதி கமலா ராமசாமி அவர்கள் வெவ்வேறு கால கட்டங்களிலான அனுபவங்களை  எடுத்துரைத்திருக்கும் விதம் நம் மனதில் மிகவும் மதிப்பிற்குரியதாகவும் மரியாதைக்குகந்ததாகவும் தோன்றி, ஒரு நல்ல புத்தகத்தினைப் படிக்கின்ற நிறைவைத் தருகிறது.

கடம்போடு வாழ்வு என்று அழைக்கப்படுகின்ற சிறு கிராமம்தான் எனது பிறந்த ஊர் என்கிற அறிமுகத்துடன் அவர்கள் ஆரம்பிக்கும்போதே நாமும் உடன் சேர்ந்து அவர்களுடன் பயணிக்கத் தயாராகி விடுகிறோம்.

வாழ்வில் இம்மாதிரி மூத்த தலைமுறையினரின் ஆழமான மதிப்புமிக்க அனுபவங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற உள்ளார்ந்த பிடிப்போடும், ஆர்வத்தோடும் நாம் இந்தப் புத்தகத்திற்குள் நுழைய வேண்டும். குடும்பத்தோடு ரொம்பவும் அழுத்தமாகப் பொருந்திப் போன பெண்மணி என்பதற்கடையாளமாக சிறு பிராயத்தின் நினைவுகளை அவர்கள் முன் வைக்கும் விதம் பிராம்மண சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், அந்த சமூகத்தோடு நிறையப் பழக்கப்பட்டவர்களுக்கும் மனதுக்குப் பிடித்துப் போன பழைய கூட்டுக் குடும்பக் கட்டமைப்பு பற்றிய மதிப்பான எண்ணங்களை மனதுக்குள் தோற்றுவிக்கும் விதமாக விஷயங்களைச் சொல்லும் விதம் பாந்தமாக அமைந்திருப்பதை நன்றாக உணர முடியும்.

ஐம்பது, அறுபதுகள், எழுபதுகளில் புழக்கத்தில் இருந்த பல வார்த்தைகள் அவர்களால் அப்படியே உபயோகப்படுத்தப்படுகின்றன என்பதை நாம் படிக்கும்போது மனதுக்கு மிகவும் இதமாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

உதாரணமாக ”அண்ணாமார்கள் யாராவது வீட்டிலிருந்தால் தண்ணீர் இறைத்துக் குடத்தில் விட்டுத் தருவார்கள். எங்கள் வயதிற்கேற்றாற்போல் குடங்கள், தோண்டிகள் இருக்கும். அம்மா வீட்டிலுள்ள கல் தொட்டி, சிமென்ட் தொட்டி, அண்டா, கொப்பரை, அடுக்கஞ்சட்டி, செப்புப்பானை, பித்தளைப்பானை என்று விதவிதமான பாத்திரங்களைக் கழுவிச் சுத்தம் செய்து தண்ணீர் விடத் தோதாக வைத்திருப்பாள்”

 

இதில் அண்ணாமார்கள், தோண்டிகள், அடுக்கஞ்சட்டி, கொப்பரை செப்புப்பானை ஆகிய சொற்பதங்கள் இப்போதுள்ள தலைமுறைக்கு முற்றிலும் புதிதாகத் தோன்றுபவையாகும். ஆனாலும் இவற்றை அன்றாட வாழ்க்கையில் உச்சரித்துப் பேசுவதும், புழங்குவதுமாகிய நடவடிக்கைகளே மனதுக்கு இன்பம் தரக் கூடியவை என்பதை இன்று ஐம்பது, அறுபதுகளில் இருக்கக்கூடிய பெரியோர்கள் எவரும் மறுக்க முடியாது. . இவற்றின் மூலமாகப் பழைமையை அசை போட்டுக் கொள்ளுதலும், ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த அந்தக் கால வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளுதலும், அந்த இழப்பினை நினைத்து மனம் வருந்துதலும், கூட்டுக் குடும்பத்து நடவடிக்கைகளின் அடையாளங்களாய் இவையெல்லாம் மிளிர்ந்ததையும் இன்றெல்லாம் நினைத்து நினைத்து ஏங்க வேண்டியதுதான்.

 

”குழந்தைகள் சாயங்காலம் ஸ்கூல் விட்டு வந்தா ஏதாச்சும் திங்கறதுக்குக் கேட்கும்….” என்று சொல்லும் மாமிகளை நிறைய கிராம அக்ரஉறாரங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். குழந்தைகள் புத்தகப் பைகளை தொபீர் என்று போட்டுவிட்டு விளையாடக் கிளம்பும் முன் அம்மாவிடம் வந்து திங்கறதுக்குக் குடும்மா என்று அனத்த ஆரம்பிக்கும். அந்த நேரம் கையில் எதையாவது திணிக்காவிட்டால் அழுகைதான். போம்மா…நீ எதுவுமே தரமாட்டேங்கிற…என்னும்பொழுது அந்த அம்மா மாமிகளின் முகம் இம்புட்டா சுருங்கிப் போகும்போது நமக்கு அவர்களைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கும். பெரும்பாலும் பிராம்மணக் குடும்பங்களில் முறுக்கு, தட்டை, சீடை, என்று ஏதாவது நிச்சயம் இருக்கும். டின், டின்னாகச் செய்து வைத்துக் கொண்டு மதியச் சாப்பாட்டிற்கு மேல் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு கொறிப்பார்கள் வீட்டு ஆம்பளைகள்.  பிற்பகல் நாலு மணிக்கு மேல் கொஞ்சம் கொறித்து விட்டு பெரிய டம்ளருக்கு ஒரு டம்ளர் முக்க முழுங்க காபியை உள்ளே தள்ளுவார்கள். அந்தக் காட்சிகள் எல்லாம் இழந்து போன காலங்கள் இப்போது.

வீட்டிற்குத் குழந்தைகள் தண்ணீர் கொண்டு வரும் அழகினை ஒரு இடத்தில் இப்படிச் சுட்டுகிறார்கள்.

 

ஒரே நடையாகத் தண்ணீர் கொண்டு நிரப்புவது போரடிக்கும்பொழுது நானும் தங்கையுமாக நடுவழியில் தோண்டி மாற்றி தண்ணீர் எடுப்போம்…

 

இதைப் படிக்கும்போது எங்களுர் வத்தலக்குண்டில் அக்ரஉறாரத்தில் பெண்டுகள் தெருக்குழாயில் குடம் மாற்றி மாற்றித் தண்ணீர் கொண்டு நிரப்பிடும் காட்சி என் கண் முன்னே விரிந்து அன்றைய கட்டமைப்பான சமூகம் இன்று எங்கே போனது என்று நினைத்து ஏங்க வைக்கிறது.

 

கிராமங்களில் கழிப்பறைகள் கிடையாது என்பதும், ஆற்றின் ஓரங்களிலான வெட்ட வெளிகளிலும், எதிர்ப்புற தரிசாகப் போடப்பட்ட புஞ்சைக் காடுகளிலும், மனிதர்கள் காலைக் கடன்களைக் கழிக்க அப்படி அப்படியே ஒதுங்குவதும் சுத்தம் செய்யும் பணிகளைப் பன்றிகளே செய்து விடும் என்பதையும் சொல்ல வரும்போது ஒரு இடத்தில் வாலில் சுழி போட்டபடியே சுற்றித் திரியும் பன்றிகள் என்று அவர் சொல்லும் அழகு அந்த இயல்பான ரசனைக்கு நம்மை அடிபணிய வைக்கிறது.

 

நிறையக் காரியங்களுக்கு வாய்க்கால் தண்ணீரையே பயன்படுத்துவது, உமிக்கரி எடுத்துக் கொண்டு போய் பல் தேய்ப்பது, தோசைக்கல்லை எடுத்துக் கொண்டுபோய் வாய்க்கால் மணலில் பளிச்சென்று தேய்த்து வருவது, கொடுக்காப்புளி மரத்தை உலுக்கி, உதிரும் பழுத்த பழங்களைப் போட்டி போட்டுக் கொண்டு எடுத்துத் தின்பது, சொடக்குச் செடியிலிருந்து காய் பறித்து சத்தம் எழுவதுபோல் சொடக்கு விடுவது, யார் சொடக்கு விடும்பொழுது அதிகச் சத்தம் கேட்கிறதோ அவர்கள்தான் ஜெயித்தவர்கள், தட்டாம்பூச்சியைப் பிடித்து கல்லைத்தூக்கச் செய்வது, சூடு கல்லைத் தரையில் உரசிச் சூடு வைக்க ஒருவருக்கொருவர் விரட்டிக்கொண்டு செல்வது, மணத் தக்காளிப் பழங்களைப் பறித்துத் தின்பது, வாய்க்காலில் நிறையத் தண்ணீர் வந்தால் அதிலேயே நீந்தி நேரம் காலமின்றிக்  குளிப்பது       இப்படியாக இளம்பிராய நினைவுகளோடு அவரது அனுபவங்கள் முதல் அத்தியாயத்திலேயே படு ஸ்வாரஸ்யமாய்த்  துவங்குவது படிக்கும் வாசகர்களுக்கு மனதுக்குள் அத்தனை உற்சாகத்தை ஏற்படுத்தி விடுகின்றது.

 

இந்தப் புத்தகத்தின்  முதல் அத்தியாயம் பற்றிய தகவல்களே இவ்வளவு வந்து விட்டது என்றால், மொத்தம் 145 பக்கங்களுக்கு அவர்கள் எவ்வளவு தகவல்களை உள்ளடக்கியிருப்பார்கள் என்பதை வாசகர்கள் திறந்த மனதோடு எண்ணிப் பார்க்க வேண்டும்.  நான் ஒரு ஆரம்பம்தான் சொல்லியிருக்கிறேன். முழுவதும் சொல்வது உங்களைப் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கிப் படிக்கச் செய்யாமல் போய்விடும் அபாயம் உண்டு. அந்தப் பாவத்திற்கு ஆளாக நான் தயாராயில்லை.

 

ஆழ்ந்த ரசனையின்பாற்பட்டு நான் அந்தப் புத்தகத்தை எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அவ்வளவு ஈடுபாட்டோடு படித்து அனுபவித்து விட்டேன். காலச் சுவடு வெளீயீடாக வந்திருக்கும் இப்புத்தகம் அனைவரும், குறிப்பாக திரு சுரா அவர்களிடம் ஆத்மார்த்தமாக அன்பு கொண்டிருந்த வாசகர்களும், எழுத்தாளர்களும் கண்டிப்பாக விலை கொடுத்து வாங்கிப் படித்து தங்கள் உள்ளங்களில் தூய காற்றை நிரப்பிக் கொள்ள வேண்டியது அவசியம்.

Series Navigationவரலாற்றின் தடத்தில்கூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் ! (கட்டுரை 1)

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *