ஒரு கலைஞனின் கதை – சி.மோகனின் ’விந்தைக்கலைஞனின் உருவச்சித்திரம்’

Spread the love

 

பாவண்ணன்

 

1980 ஆம் ஆண்டில் தொலைபேசித்துறையின் ஊழியனாக வேலையில் சேர்ந்த காலத்தில் பெரும்பாலும் இரவு நேரப் பணிகளையே நான் தேர்ந்தெடுத்து வேலை செய்து வந்தேன். அரசு போட்டித் தேர்வுகளுக்காக  நூலகத்தில் உட்கார்ந்து குறிப்புகள் எடுக்கவும் படிக்கவும் பகல்நேரத்தைச் செலவிடவேண்டிய நெருக்கடி இருந்ததால் இரவு நேரப் பணியே எனக்கு வசதியாக இருந்தது. திருமணமான குடும்பஸ்தர்கள் என்னைப் போன்ற இளைஞர்களுக்கு இரவுநேரப் பணிகளை மாற்றிக் கொடுத்து உதவுவார்கள். என்னோடு நசீர் என்கிற நண்பரும் இரவுப்பணிக்கு வருவார்.  அவர் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முதுகலைப் பட்டத்துக்காக படித்துக்கொண்டிருந்தார். பகலில் கல்லூரி, இரவில் பணி என்பது அவர் வழி. என் தமிழிலக்கிய நாட்டம் அவருக்குப் பிடித்திருந்தது. அவருடைய ஆங்கில இலக்கிய நாட்டம் எனக்கும் பிடித்திருந்தது. நான் எனக்குத் தெரிந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை அவருக்கு அறிமுகப்படுத்தினேன். அவர் தனக்குத் தெரிந்த ஆங்கில எழுத்தாளர்களின் படைப்புகளை எனக்கு அறிமுகப்படுத்தினார். ஒருநாள் சோமர்செட்மாம் எழுதிய ‘நிலவும் ஆறு நாணயங்களும்’ என்கிற நாவலை எடுத்துவந்து, ‘ரொம்ப முக்கியமான நாவல். படிச்சிப் பாருங்க’ என்றார். ’பால் காகின்னு ஒரு முக்கியமான ஓவியர் பாரீஸ்ல இருந்தார். வான்காவுடைய நண்பர். அவருடைய வாழ்க்கையை அடிப்படையா வச்சி இத எழுதியிருக்கார்’ என்று கூடுதல் தகவலையும் அளித்தார். வான்காவின்  சுயசரிதையான ‘வாழும் விருப்பம்’ புத்தகத்தை அப்போதுதான் படித்து முடித்திருந்தேன். அதனால் நசீர் கொடுத்த கூடுதல் குறிப்பு, அப்புத்தகத்தை உடனே படிக்கத் தூண்டியது. விட்டுவிட்டு, ஒரு வார காலத்தில் அதைப் படித்து முடித்தேன். தரகனாகவும் ஓவியனாகவும் வாழ்கிற ஒரு மனிதன், ஒரு கட்டத்தில் ஓவியனாகமட்டுமே வாழ்வது என்று குடும்பத்தைத் துறந்து வெளியேறி அடையும் வெற்றிகளையும் தோல்விகளையும் அவமானங்களையும் சிரமங்களையும் தொகுத்து முன்வைத்திருந்த அந்தப் படைப்பு என்னை மிகவும் கலங்கவைத்துவிட்டது. கலையைப் பின்தொடர்ந்து செல்லும் கலைஞனுக்கு இப்படி ஒரு சிக்கலான வாழ்வா என்று நினைத்து நிலைகுலைந்திருந்தேன். நசீருடன் என் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன். ‘உலகம் முழுக்க கலையை வாழவைக்க, கலைஞர்கள் இப்படி வாழ்ந்து வதைபட்டிருக்கிறார்கள்’ என்று நாக்கைச் சப்புக்கொட்டியபடி சொன்னார் அவர். மேலும், ‘நம் பாரதியார், புதுமைப்பித்தன்னு எழுத்துக்கலைஞர்கள் சந்தித்த வாழ்க்கை நெருக்கடிகள்போல, நெருக்கடிக்கு ஆளான ஓவியக் கலைஞர்கள் உலகம் முழுதும் இருக்கிறார்கள்’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

 

அதைப் படித்துமுடித்த சில வாரங்களிலேயே எனக்கு சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ நாவல் படிக்கக் கிடைத்தது. தரமான கலையின்மீது தீராத தாகம் கொண்ட ஜே.ஜே. என்கிற எழுத்துக்கலைஞனின் வாழ்க்கையை முன்வைக்கும் நாவல். நான் படித்துமுடித்ததும் நசீருக்கு அந்தப் புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தேன். அதற்குப் பிறகு, சோமர்செட்மாம் படைத்திருந்த ஸ்ட்ரிக்லாண்டுக்கும் சு.ரா. படைத்திருந்த ஜே.ஜே.வுக்கும் இருக்கும் ஒற்றுமை வேற்றுமைகளை நாங்கள் பணிக்கு இடையில் கிடைக்கும் சிறுசிறு ஓய்வுகளில் பேசிக்கொண்டோம். முப்பதாண்டுகளுக்கும் மேலாக காலம் கடந்துபோனாலும் அந்த நினைவுகள் பசுமையாக நெஞ்சில் பதிந்துள்ளன. சி.மோகன் எழுதிய ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ நாவலை சமீபத்தில் படித்து முடித்ததும், அந்தப் பழைய நினைவுகள் பொங்கிவருவதைத் தவிர்க்க இயலவில்லை.  பால் காகின் போல, தமிழ்மண்ணிலும் ஓவியத்தைமட்டுமே தன்னுடைய தனி உலகமாகக் கொண்டு வாழ்ந்து 33 வயதிலேயே இந்த மண்ணைவிட்டு மறைந்துபோன ராமானுஜன் என்கிற ஓவியரின் சாயலைக் கொண்ட ராமன் என்னும் பாத்திரத்தை மையப்படுத்தி, இந்த நாவலைப் படைத்திருக்கிறார் மோகன். கச்சிதமாக நெய்யப்பட்ட ஒரு பட்டுத்துணியைப்போல கனவுக்கலைஞனின் தாகத்தையும் வெற்றியையும் தவிப்பையும் உத்வேகத்தையும் தோல்விகளையும் ஆசைகளையும் நிராசைகளையும் மிக நுட்பமாக தொகுத்து நாவலாக முன்வைத்திருக்கிறார் மோகன்.

 

நாற்பதாண்டுகளுக்கு முன்னால் மறைந்துபோன ஓவியர் ராமனின் சுயசரிதை ஒன்றை எழுத நினைக்கும் எழுத்தாளர் தனக்குக் கிடைத்த தகவல்களைத் தொகுத்துச் செல்லும் முறையில் இந்த நாவல் விரிகிறது. முதல் காட்சியிலேயே, ஓவியரின் மரணம் நிகழ்ந்துவிடுகிறது. தன்னுடைய படைப்பாற்றல் அடுத்த கட்டத்தை நோக்கித் தாவவில்லை என்கிற தோல்வியுணர்வால் உத்வேகம் குறைந்து, நிகழ இருக்கிற படைப்புக்கணத்துக்காக ஒவ்வொரு நாளாகக் கழித்துவரும் கலைஞன்  ஒரு கட்டத்தில் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள தற்கொலை செய்துகொள்ளும் முடிவை அடைகிறான். தற்கொலைக்கு முந்தையை ஒரு சில மணிநேர வாழ்க்கையை நாவலின் முதல் காட்சி முன்வைக்கிறது. மதுப்புட்டியோடு தன் குடிலைவிட்டு வாசலுக்கு வந்து மணற்பரப்பில் உட்கார்கிற கலைஞனுக்கு அருகில் அவனுடைய வளர்ப்புநாயும் வந்து அமர்கிறது. கலைஞன் அந்த நாயை, ஒருபோதும் ஒரு வளர்ப்புவிலங்காகவே கருதியதில்லை. தனக்கு இணையான ஓர் உயிராகவே கருதுகிறான். மடியில் வைத்து கொஞ்சவோ, உச்சந்தலையை வருடிக்கொடுக்கவோ, அதன் எச்சிலோடு தன் எச்சில் கலந்து வடியும் அளவுக்கு நெருக்கமாக முகத்தோடு முகம் உரச உட்கார்வதிலோ, அவன் மனம் தயங்கியதே இல்லை. இருவரும் சேர்ந்து மது அருந்துகிறார்கள். மது அருந்திய நாய், போதையின் மகிழ்ச்சியில் அவன் பிடியிலிருந்து விடுபட்டு சிறிது தொலைவு நடந்துசென்று, தனக்குத்தானே ஒரு வட்டப்பாதையை வடிவமைத்துக்கொண்டு, அதில் ஆனந்தமாக ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆனந்தமயமான அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அக்கலைஞனின் அகமனம் ஒரு கட்டத்தில் விழிப்படைகிறது. ஓடிக்கொண்டிருப்பது நாயல்ல, தானே என்கிற எண்ணம் ஓடுகிறது. அந்த வட்டப்பாதை தான் கண்டடைந்து மீறிச் செல்லமுடியாதபடி தன்னைக் கட்டுப்படுத்தும் தன் படைப்பாக்கப்பாதைதான் என்கிற எண்ணமும் எழுகிறது. மறுகணமே ஓவியம் தீட்டும் உத்வேகம் கைவரப்பெற்றவனாக, குடிலுக்குள் சென்று தாளையும் பேனாவையும் கொண்டுவந்து ஓவியத்தை வரையத் தொடங்குகிறான். வட்டப்பாதையில் ஓடும் நாய் மெல்லமெல்ல ஒரு சித்திரமாக மாறுகிறது. நாயின் தலைக்கு மாறாக மனிதத்தலையை எழுதுகிறான்.   தன்னைத்தானே வரைந்துகொண்ட நிறைவு உருவான போதிலும், அந்த ஓவியமும் மீறிச் செல்ல முனைகிற தன் படைப்புமுறையின் பாணியிலேயே அமைந்திருக்கக் கண்ட நிராசையை எழுப்பிவிட்டது போலும். ஓவியத்தைக் கொண்டுசென்று அறைக்குள் வைத்துவிட்டு, மதுவையும் பூச்சிமருந்தையும் எடுத்துக் கொண்டுவந்து ஓடும் நாயின் முன்பு மறுபடியும் உட்கார்கிறான். உணவையும் மதுவையும் நாய்க்குப் பரிமாறிவிட்டு, எந்தப் பதற்றமும் இல்லாமல் நஞ்சு கலந்த மதுவை கொஞ்சம் கொஞ்சமாக தான்மட்டுமே அருந்தி தன் உயிரை மாய்த்துக்கொள்கிறான். நாவலுக்கு அற்புதமான ஒரு தொடக்கத்தைக் கொடுக்கும் இந்த முதற்காட்சியை அடுத்தடுத்து, அந்த மகத்தான ஆளுமையின் வாழ்வை தகவல்திரட்டுகள் மற்றும் சில காட்சிகளின் துணைகொண்டு அறிமுகப்படுத்தியபடி செல்கின்றன. 115 பக்கங்களைமட்டுமே கொண்ட நாவல் என்றாலும் இந்தப் படைப்பு இந்தத் தமிழ்மண்ணில் வாழ்ந்து மறைந்த ஓர் உன்னதமான ஓவியக்கலைஞனைப்பற்றிய ஆவணம் என்றே சொல்லவேண்டும்.

 

ராமன் இயற்கையாகவே ஓவிய ஆற்றல் கைவரப்பெற்றவனாக உள்ளான். 14 வயதில் கோயில் மண்டபத்துத் தூண்களில் உள்ள சிற்பங்களைப் பார்த்து வரைந்து பழகுவதிலிருந்து அவனுடைய ஓவிய வாழ்க்கை தொடங்குகிறது. அவன் வயதொத்த சிறுவர்கள் அவனை விளையாட்டில் சேர்த்துக்கொள்வதில்லை. அவனுடைய அண்ணன்மார்களே அவனைச் சிறுமைப்படுத்தும் விதத்தில் நடத்துகின்றனர். மிகக்குறைவான கிரகிக்கும் சக்தி கொண்ட அவரால் பள்ளிப்படிப்பில் நாட்டம் செலுத்தமுடியாமல் போகிறது. ஓவியமே தன் உலகம் என அவன் அந்த வயதிலேயே வரையறுத்துக்கொண்டுவிடுகிறான். அவனைப் பாராட்டி உத்வேகமூட்டிக்கொண்டே இருந்தவர் அவன் அடிக்கடி வருகிற கோயில் மண்டபத்துப் பட்டர் மட்டுமே. அவர் அவ்வப்போது கொடுக்கிற காசுகளில்தான் அவன் தனக்குத் தேவையான மைப்புட்டிகளையும் தாள்களையும் பேனாக்களையும் வாங்கிக்கொண்டான். அவராகவும் சில சமயங்களில்  வாங்கிவந்து தருகிறார். காட்சிகளை மனதளவில் ஒரு சட்டகமாக வடிவமைத்துக்கொள்ளவும் உருவங்களை வரிவடிவங்களாகவும் உள்வாங்கிக்கொள்ளவும் அவனால் இயல்பாகவே முடிந்தது.

 

ராமனின் மனம் ஓவியத்துக்கான கருவை உருக்கொள்ளும் விதம் மிகவும் விசித்திரமானது. அவன் பார்க்கநேரும் பல காட்சிகளில் ஏதோ ஒன்று, அதுவரை அவன் அனுபவித்திராத ஒரு கிளர்ச்சியை முதலில் உருவாக்குகிறது. அக்கிளர்ச்சியை ஒட்டி அவன் மனத்தில் விதம்விதமான கற்பனைகள் உருவாகி மிதந்தபடி இருக்கின்றன.  அந்தக் கற்பனையில் அவன் கனவுலகில் ஆழ்ந்துவிடுகிறான். விசித்திரமான பல காட்சிகளாக அந்த உலகம் விரிந்துகொண்டே செல்கிறது. ஒன்றைத் தொட்டு ஒன்றாக வளர்ந்துவளர்ந்து, தன்னைத்தானே முழுமைப்படுத்திக்கொண்டு முடிவடைகிறது. காலையில் அவன் மனம் அக்கனவுக்காட்சியை அசைபோட்டுப் பார்க்கிறது. அக்கனவுக்காட்சியை, கனவுக்குத் தூண்டிய  எதார்த்தக்காட்சியின் மாதிரியில் வரைந்துபார்க்கும் ஆசையில் ஓவியத்தைத் தொடங்குகிறான் அவன். இந்த வழிமுறை அவன் பயணம் செய்யவேண்டிய ஒரு பாதையாக அவனுக்கு அமைந்துவிடுகிறது. 14 வயதில் ஒருநாள் கோயில் மண்டத்துத் தூணொன்றில் இருக்கும் குழலூதும் வேணுகோபாலன் சிற்பத்தின் முன் உட்கார்ந்திருந்தபோது, அவன் மனம் கொண்ட எழுச்சியால் அவனுக்குள் கனவுலகம் விரிகிறது. அவன் உடல் தரையிலிருந்து உயர்ந்து மேலெழும்பி மெல்லமெல்ல மிதந்துமிதந்து வான் நோக்கிச் செல்கிறது. வானில் மிதந்தபடி உயர  உயரச் சென்றபடியே இருக்கிறான் அவன். அப்போது வானில் அவனருகில் ஒரு கருடன் தோன்றிக் குழலூதுகிறது. அந்த இசை வான்வெளியெங்கும் பரவி, அவனை ஏந்தியபடி செல்கிறது. மறுநாள் காலை விழித்ததும் கனவில் கருடன் குழலூதிய காட்சிமட்டுமே பளிச்சென அவன் நினைவுக்கு வருகிறது. முன்மண்டபத்துத் தூணில் கண்ட வேணுகோபாலன் சிற்பமாதிரியில் அவன் அக்காட்சியை வரைந்துமுடிக்கிறான். அந்த ஓவியம்தான் கே.எஸ்.பணிக்கர் பணியாற்றிய ஓவியக்கூடத்துக்குள் செல்லவும் ஓவியம் பயிலவும் வழிவகுத்துக்கொடுக்கிறது. இயற்கையாகவே அவனுக்குள் உறையும் கலையாளுமையை அவர்தான் முதலில் கண்டு அவனை ஊக்கப்படுத்துகிறார். 33 வயதில், அவன் தற்கொலை செய்துகொள்ளும் முன்பாக வரைந்துமுடித்த ஓவியமும் இதேபோன்ற ஒரு கனவுக்காட்சிதான். நாய் சுற்றிச்சுற்றி ஓடிவரும் வட்டப்பாதையைப் பார்த்துக்கொண்டே இருந்தவன் நெஞ்சில் கனவாக விரியும் காட்சிதான் பழகிய பாதையைவிட்டு விலகமுடியாமல் அதிலேயே சுழன்றுசுழன்று ஓடிவரும் மனிதன். நாயின் உடலும் மனிதனின் தலையும் அப்படித்தான் உருவாகிறது.

 

கனவுக்காட்சிகளின் தரிசனம்தான் அவன் ஓவிய உலகம். ஓவிய விமர்சகர் ஜோசப் ஜேம்ஸ் அதைத்தான் அவனிடம் சொல்கிறார். ஆனால், அவன் மனம் அதை ஏற்க மறுக்கிறது. தன் சிருஷ்டிமுறையைத் தாண்டிச் செல்ல உள்ளூர அவன் விழைகிறான். கனவுலகின் எல்லா ரகசியங்களையும் புதிர்களையும் அவன் தன் படைப்புகளின் வழியாகக் கண்டறிந்துவிட்டதாக அவன் மனம் எண்ணுகிறது. பழக்கப்பட்ட பயணப்பாதையில் மீண்டும்மீண்டும் செல்வதில் அவன் மனம் சலிப்புறுகிறது. புதியவற்றை முயற்சி செய்யும் ஏக்கம் அவனைப் பிடித்தாட்டுகிறது. அடுத்த கட்டமாக அமையவேண்டிய கலைப்பயணம் புதிய பிரதேசத்தையும் புதிய படிமங்களையும் கண்டடையவேண்டியதாக இருக்கவேண்டும் என அவன் விழைகிறான். புதிய பாய்ச்சல், புதிய படிமம், புதிய படைப்புலகம் என அவன் மனம் சதாகாலமும் அரற்றியபடி உள்ளது. ஆனால் வெளிப்பாட்டுமுறையைக் கண்டறியமுடியாத தோல்வியோ, அவனை  ஒவ்வொரு கணமும் வாட்டியபடி உள்ளது. விருப்பமும் நிராசையுமாக, அவன் மனம் கடிகாரப் பெண்டுலம்போல உழன்றபடியே உள்ளது.  அவனை மிகவும் மதிக்கும் விமர்சகர் ஜோசப் ஜேம்ஸ் அவனுடைய விசித்திர மனப்போக்கைக் கண்டிக்கிறார். ‘கனவுலகமும் அதன் விந்தைப் புனைவும்தான் அவனுடைய படைப்புலகம். படைப்பாக்கத்தில் அவன் அடைந்துவிட்டிருக்கும் அற்புதமான ஞானம் மட்டுமே, வேறொரு படைப்புவெளிக்குள் அவன் பிரவேசிக்க உதவாது. அவனுடைய இயல்பான படைப்புலகிலிருந்து வெளியேற முயற்சி செய்வது சரியான செயலல்ல’ என்று எடுத்துச் சொல்லி அனுப்பிவைக்கிறார். ஆனாலும் அதை அவன் மனம் அந்தச் சொற்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. புதிய உலகைக் கண்டடையும் தீராத விழைவிலிருந்து அவனால் பின்வாங்க முடியவில்லை. திரதிருஷ்டவசமாக, மாதக்கணக்கில் காத்திருந்தும் அந்த உத்வேகம் அவனுக்குக் கைகூடி வரவே இல்லை. அந்த எண்ணமே மெல்லமெல்ல அவனைத் தற்கொலை உணர்வுக்குத் தூண்டிவிடுகிறது. ‘அவர் தன்னை மாய்த்துக்கொள்ளவில்லை, அவர் வந்த வேலை முடிந்துவிட்டது, விடைபெற்றுக்கொண்டார். தற்கொலை என்பது ஒரு அழகிய சாத்தியம் அதை அவர் தேர்ந்தெடுத்தார்’ என அந்த மரணத்தருணத்தை கவித்துவம் கூடிய ஒரு புள்ளியாக மாற்றியுரைக்கிறார், ராமனையே ஆதர்ச ஓவியனாக நினைத்த இன்னொரு ஓவியர்.

 

ராமனால் சரியாகப் பேசமுடிவதில்லை. உதடுகள் கோணலாகி, அவன் உச்சரிக்கும் வார்த்தைகள் திக்கித்திக்கிப் பேசுவதுபோல இருக்கும். ஆங்கிலத்தை உள்வாங்கிக்கொள்ள ஒருபோதும் அவனால் முடிவதில்லை. பல சமயங்களில் அவன் தன் தலைமுடியைப் பராமரிப்பதிலோ, உடைகளைப் பராமரிப்பதிலோ கவனம் செலுத்துவதே இல்லை. அவனுடைய கலையாளுமையை மதிக்கும் பணிக்கர் போன்ற கலைஞர்கள், அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. உள்ளார்ந்த நட்புணர்வோடு பழகி, அவனுக்குரிய கெளரவத்தை வழங்கத் தவறுவதே இல்லை. அவன் வசித்த சோழமண்டலக் கிராமத்தில், அவனிடம் கற்றுக்கொள்ளும் ஆவலுடன் அவனைப் பின் தொடர்ந்த இளம்கலைஞர்களும் இருக்கிறார்கள். அதற்கு நேர்மாறாக, அவனை கேலிப்பொருளாக பார்த்துச் சிரித்து பழிக்கும் கலைஞர்களும் இருக்கிறார்கள். ஒருமுறை, ஒரு சக ஓவியனே, ஒரு பெண் ரசிகர் எழுதியதுபோன்ற ஒரு அஞ்சல் அட்டையை ராமனின் முகவரிக்கு எழுதி அனுப்பிவிட்டு, அந்த அஞ்சலட்டையின் புகழ்மொழியில் மனம் துள்ள புத்தாடையோடும் உற்சாகத்தோடும் நடக்கும்போது ராமனை வழிமறித்து, விஷயத்தைத் தெரிந்துகொண்டு கேலி செய்து பழிக்கிறான். எவ்வளவு குரூரமான மனிதன் அவன் என்று தோன்றுகிறது. பாராட்டுணர்வோடு பார்க்கிற ஒருசில மனிதர்களாலும், கிண்டலுணர்வோடு பார்க்கிற எண்ணற்ற மனிதர்களாலும் அவனுடைய புற உலகம் மாறிவிடுகிறது.

 

ஒருமுறை இல்லற வாழ்க்கையில் ஈடுபடவேண்டும் என்கிற உந்துதல் அவனுக்குள் மூண்டெழுகிறது. நண்பரொருவரின் ஆலோசனையின்படி, நாளிதழ் ஒன்றில் விளம்பரம் செய்துவிட்டு, பரபரப்போடு காத்திருக்கிறான். அந்தப் பரபரப்புக்கெல்லாம் எவ்விதமான பொருளுமில்லை என அவனுக்கு சில நாட்களிலேயே விளங்கிவிடுகிறது. தன் விழைவை ஒதுக்கித் தள்ளிவிட்டு, தன் இயல்பான ஓவியக் கனவுலகில் மூழ்கத் தொடங்குகிறான். எதிர்பாராத கணத்தில் தன் பெண்ணுக்கு வரன் தேடும் ஒரு தந்தை, அவனைத் தேடி அவன் குடிலுக்குள் வந்து பார்த்துவிட்டு, அவனை மனம்கொதிக்க வசைபாடிவிட்டுச் செல்கிறார். சககலைஞர்களாலேயே சரியாகப் புரிந்துகொள்ளப்பட முடியாத அவ்விசித்திரக்கலைஞனை, எளிய லெளகிக மனிதர்கள் புரிந்துகொள்வார்கள் என எப்படி எதிர்பார்க்கமுடியும்?

 

நிலவில் உட்கார்ந்திருப்பதுபோன்ற தோற்றத்துடன் தன்னைத்தானே இளம்வயதில் ராமன் தீட்டிக்கொண்ட ஓர் ஓவியம் மிகமுக்கியமானது. அது ஒரு கனவு. நிலவைத் தொடும் கலைவேட்கை. நிலவைக் கைப்பற்றி வசப்படுத்தும் அந்தக் கனவுடன் அவன் இறுதிக்கணம் வரைக்கும் வாழ்ந்தான் என்பது மகத்தான உண்மை. அவன் கலைவாழ்வின் செய்தியே அதுதான். அய்யங்கார் குடும்பத்தில் பிறந்து, அதற்குரிய எல்லா அடையாளங்களையும் துறந்து, மெல்லமெல்ல ஓவியக்கலைஞனாக அரும்பி வளர்ந்து, இறுதிக்கணம் வரைக்கும் ஓவியத்தைமட்டுமே தன் அடையாளமாக முன்வைத்து வாழ்ந்தவன் ராமன். விசித்திரக்கலைஞன். அவனைப் புரிந்துகொள்ள லாபநஷ்டக் கணக்குடன் வாழும் எளிய  மனிதர்களால் முடியாமல் போகலாம். கலைமனத்துடன் அணுகுகிறவர்களால் மட்டுமே அவனைப் புரிந்துகொள்வது சாத்தியம்.

 

மோகன் கலை ஆர்வம் கொண்டவர். இலக்கியம், ஓவியம், சிற்பம் என எல்லாக் கலைவடிவங்கள்மீதும் ஆர்வம் கொண்டவர். ஓவியர் டக்ளஸின் நட்பின் வழியாக, அவர் ராமனின் ஓவியங்களைப்பற்றியும் மேதைமை பற்றியும் அறிய நேர்கிறது. ராமனைப்பற்றிய எல்லாத் தகவல்களையும் திரட்டி, அவனைப்பற்றிய சுயசரிதையை எழுதும் வேட்கையை அவருக்குள் டக்ளஸ் விதைக்கிறார். அதன் விளைவாக ஓவியனின் வரலாறாக உருப்பெறுகிறது ஒரு புத்தகம். அதுவே இந்த நாவல். இதுவரை விமர்சகராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் அறியப்பட்டு வந்த மோகன் நாவலாசிரியராகவும் உருக்கொண்டு படைத்திருக்கும் முக்கியமான படைப்பு.

 

(விந்தைக்கலைஞனின் உருவச்சித்திரம். நாவல். சி.மோகன். சந்தியா பதிப்பகம். 57, 53 வது தெரு, ஒன்பதாவது அவென்யு, அசோக் நகர், சென்னை-83. விலை. ரூ.100)

 

Series Navigation