கனவுகளை விற்பவன்

சுரேஷ் சுப்பிரமணியன் 

தடாகத்தினுள்
நடக்கிறேன்
தடம் மாறாமல்
தாமரை இலைகள்
சாமரம் வீசுகின்றன
பாதங்களுக்கு!

விண்ணில் பறக்கிறேன்
வானம்படியாய்
மணலில் நீந்துகிறேன்
மீனின் நகலாய்
அனலில் நீராடுகிறேன்
பீனிக்ஸ் பறவையாய்!

நிழல் விழாத இரவு
என் பகல்
நிலவு இல்லாத வானம்
என் பூமி
நித்திரையில் கனவு இல்லை
கனவுக்குள் நான்!

கிரகங்கள்
என் பந்துகள்
வானம்
மைதானம்
நட்சத்திரங்கள்
விளையாட்டு தோழர்கள் !

கடல் மடி
துயில் கொள்ளும்
தாயின் மடி!

மலை
என் கர்வத்தின்
தலை!

காற்று
நான் சொல்லும் திசை
வீசும்!

தென்றல்
தேனிசை
மீட்டும் செவியில்!

சூரியன்
இரவிலும்
ஒளிரும்
என்னுலகில்!

மரங்கள் என்னின்
கரங்கள்
வீசும் காற்றை
வரவேற்கும்!

கரையும் என்னுடல்
மழையில் – பின்
அணியும் புத்தாடை
மணலின் நிறத்தில்!

பூக்கள்
வடிக்கும் தேனை
உண்டு மகிழ்வேன்!

காதல்
நான் விடும்
மூச்சுக்காற்று!

மின்னல்
என் கோபவிழியின்
இமைகள்!

இடி
என் கோபத்தின்
வெளிப்பாடு!

தூறல்
என் கவிதையின்
சாரல்!

அனுபவமே என்
ஆசான்
வெற்றி தோல்விகள்
எனக்கில்லை!

பிறப்பை
பிரதிஷ்டை செய்த
பிரம்மாவும்
பூரிப்படைவான்
எனைப்பார்த்து!

காலச்சக்கரமின்றி
முக்காலமும் செல்வேன்
ஞாலச்சுழற்சி இன்றி
நகர்வேன் தினமும்!

நான் கவி
கற்பனையை விற்பனை
செய்பவனல்ல
கனவுகளை விற்பவன்!

இனி
இப்புவி ஆளும்
என் கவி!

                   –

Series Navigationதக்கயாகப்பரணி [தொடர்ச்சி]இருப்பும் இன்மையும்