கனவு நனவென்று வாழ்பவன்

Spread the love

கனவு நனவென்று வாழ்பவன்

 கு.அழகர்சாமி

கவிழ்ந்து கிடக்கும்

கரப்பான் பூச்சியாய்த் தன்னை உணர்வான்

கட்டிலில் அவன்.

 

கைகால்களைக்

குடைமுடக்கிப் போட்டிருக்கும்

‘மஸ்குலர் டிஸ்டிராபி’யின் மர்ம நிழல்.

*****

கனவு காணத்தான் முடியும்

அவனால்.

 

நனவு

கனவில்லையென்று சொல்ல முடியாததால்

கனவு

நனவில்லையென்று சொல்ல முடியாதென்று

நம்புகிறான் அவன்.

 

அவன்

கனவுகளில்

பட்டாம் பூச்சிகள் படையெடுக்கும்

 

கருங்கல் மலைகளெனும் யானைகள்

கூட்டங்கூட்டமாய் வந்து போகும்.

 

ஊரெல்லை ஐயனார் குதிரை மேலேறி

ஊரெல்லாம் சுற்றி வருவான்.

 

வாசலில் தெரியும்

வசப்படாத வானத்தை உள்ளே இழுத்து

குகையாக்கிக் கொள்வான்.

 

குகையிருளில்

தன்னை மறந்து போன பள்ளித் தோழி

ஒளிந்திருப்பது போல்

ஒரு மின்மினிப் பூச்சியாய் நட்பில் தேடுவான்.

 

சூரியன் அவனுக்குள்

சின்னப்புள்ளியாய்ச் சுருங்கிக் கொண்டே இருப்பான்

 

ஒரு நட்சத்திரம்

பறவையொன்றை அழைத்துக் கொண்டே இருக்கும்.

 

வீறு கொண்டு பறந்து பறந்தும்

நெருங்க முடியாது

முறிந்து இறக்கைகளுடன் விழும் அது.

 

மயானத்தில் எரியும் அதன் சவத்திலிருந்து

எழுந்து நடக்கும்

ஒளியுருவம் ஒன்று.

 

விடுதலையான

அவன்

வீர்யமாய் இருக்கும் அது.

 

****

கவனிக்கும் தந்தை

கழிவறைக்குத் தூக்கிச் செல்வார் அவனை.

 

ஓடும் கரப்பான் பூச்சியொன்று

வெறித்துப் பார்க்கும் நின்று

அவனையே.

குறிப்பு:

மஸ்குலர் டிஸ்டிராபி(Muscular dystrophy) என்பது தசைச் செல்கள் மறும் திசுக்களின் அழிவால் நேரும் ஒரு தசைச்சிதைவு நோய். இது மரபணு வழியான சீர்குலைவு(genetic disorder). பாதிக்கப்பட்டவர்கள் நோயின் தீவிரம் கூடக் கூட படுத்த படுக்கையாகி விடுவார்கள். இந்த நோய்க்கு இன்னும் முற்றிலும் குணம் தரும் சிகிச்சை இல்லை. இந்நோய் பெரும்பாலும் ஆண் பிள்ளைகளைப் பாதிக்கிறது. இளைய வயதில் மரணம் நேர்கிறது. ஐதராபாத்தில் ஒரு தாய் இந்த நோயால் பாதிக்கப்பட்ட மகனின் நிலை கண்டு தாளாது கருணைக் கொலைக்கு நீதி மன்றத்தை அணுகியது நினைவாய் இருக்கிறது. இந்தக் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு நெருங்கிய உறவொன்றின் துயரும் பிரிவும் நினைவாய் இருக்கிறது.

திருத்தம்

 

’தண்ணி,

தண்ணி’

 

கடலைச் சுட்டும்

குழந்தை..

 

’கடல்

கடல்’

 

திருத்துவார்

அப்பா.

 

சட்டெனக்

கடல் தெறிக்கும்

அப்பாவின் மேல்.

 

கன்னத்தில்

நீர்த் துளிகளைத் துடைப்பார்

அப்பா.

 

‘தண்ணி

தண்ணி’

 

திருத்தும்

குழந்தை

கைதட்டி.

 

Series Navigationகடைசிப் பக்கம்ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – அத்தியாயம் 7 ஜராசந்தன்