கவிதை கொண்டு வரும் நண்பன்

நண்பா!

என் வாழ்க்கையைத் தனியே

பிரித்துவிட முடியாதபடி

எப்படி நீ

என் ஒவ்வொரு நாளிலும்

பின்னிப் பிணைந்திருக்கிறாய்!

உன்னைச் சேர்த்துச் சொல்லாத

ஒரு நிகழ்வைக்கூட

என்னால் சொல்லிவிட முடியாது.

இப்போது

வெறும் ஞாபகங்களாக

மட்டுமே போய்விட்ட உன்னை

எப்படி மீட்டெடுப்பது?

கல்லால் சிலை வடித்தால்

உடைந்து போகலாம்.

இரும்போ துருப்பிடிக்கும்

மரமோ உலுத்துவிடும்

எல்லாம் எப்படியோ

மறைந்துபோகும்.

எதைக்கொண்டு செய்தால்

நிரந்தரமாய் அதில் நீ உறைவாய்?

என்னிடமோ

வார்த்தைகள் மட்டுமே உள்ளன

கொஞ்சமாய்.

அவைகொண்டு எழுதினால்

கவிதையாய் நீ வருவாயா

எனத் தெரியவில்லை.

இந்த ஆரம்பமே கவிதையாகிவிடும்

என்றில்லாவிடினும்

கவிதை என்பதும்

ஒரு நல்ல ஆரம்பம்தானே?

—- ரமணி

Series Navigationகாமம்சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள் – கருத்தரங்கம்