கால் செண்டரில் ஓரிரவு

Spread the love

 

சேத்தன் பகத் – தமிழில் சிறகு இரவிச்சந்திரன்.

அன்னிய ஆங்கில எழுத்தாளர்களுக்கு நிகராக சேத்தன் பகத் நாவல்கள் போற்றப்படுகின்றன. பகத் வட இந்தியக்காரர். ஆனால் ஆங்கிலத்தில் எழுதுகிறார். எல்லாம் இந்தியாவைப் பற்றி. ஒரு நாட்டின் உள்விசயங்களைத் தெரிந்து கொள்ள, அவரது கதைகளை, அயல்நாட்டினர் அள்ளிக் கொண்டு போகிறார்கள். சுவாரஸ்யம் கூடினால், சுற்றுலா பயணியாக வந்து விட்டு போகிறார்கள். அரசுக்கு லாபம் அன்னிய செலாவணி.

சேத்தன் பகத்தின் ஒரு நாவலைத் தழுவி 3 இடியட்ஸ் எடுத்து நண்பனாகவும் அள்ளினார்கள். இது பகத்தின் இரண்டாவது நாவல். கதைக் களம் புதிது. ஆனாலும் பகத்தின் நாவல்கள் எல்லாம் சினிமா போலத்தான் எழுதப்படுகின்றன. யாராவது உரிமை கேட்டால் இரட்டிப்பு லாபம். இந்தக் கதையையும் சினிமாவாக எடுக்கலாம். ஆனால் கதை நாயகன் தோல்வியையே தழுபுபவன் என்பதால் நம் ஊர் நட்சத்திரங் களின் பிம்பம் பாதிக்கப்படும்.
பகத்துக்குக் கதைகள் யாராலோ சொல்லப்படுகின்றன. சமீபத்தியக் கதையில் பொறியியல் கல்லூரி நடத்துபவன் சொன்ன கதை. இதில் கான்பூரில் இருந்து டெல்லி போகும் ரயிலில் ஒரு இளம்பெண் சொல்லும் கதை.
0
அமெரிக்க பொருட்களை வாங்கும், அந்நாட்டு மக்களின் குறை தீர்க்கும் இடம் தான் கால் செண்டர். ஆனால் அவை இருப்பதோ இந்தியாவில். இங்குதான் குறைந்த கூலியில் ஆட்கள் கிடைப்பார்கள். ஆனால் இவர்களுக்கு இது பெரிய தொகை. இதில் பணியாற்ற முதலில் அமெரிக்க ஆங்கில உச்சரிப்பு அவசியம். கூடவே அமெரிக்க பெயர்கள். அவர்களால் மேத்தாவையும் ஜோஷியையும் உச்சரிக்க முடியாது. அதனால் ஷியாம் மேத்தா சாம் மெர்சி ஆகிறான். அவனுடன் வேலை செய்யும் ராதிகா ஜா ( ரெஜினா ஜோன்ஸ்), இஷா சிங் ( எலிசா சிங்கர் ), வருண் மல்ஹொத்ரா ( விக் டர் மெல் ), பிரியங்கா ஓரிரவு வேலைக்குச் செல்லும் காட்சியுடன் கதை ஆரம்பிக் கிறது. கதை ஊடாக பின்நோக்குப் பார்வையில் கதை பல கட்டங்களைக் கடக்கிறது. இது பகத்தின் பாணி.

கதையில் முக்கிய பாத்திரம் பக்ஷி. அவன் ஒரு முட்டாள். ஆனால் அவன் தான் அந்த பணியிடத்திற்கு மேலாளர். இன்னொரு பாத்திரம் ஓய்வு பெற்ற ராணுவ மாமா. மற்ற பாத்திரங்களை விட அவர் வயதானவர் என்பதால் மாமா! ஒவ்வொருவருக்கும் ஒரு கதை. ஷியாம் – பிரியங்கா காதல், அவளது அம்மாவின் வற்புறுத்தலால் முறிக்கப் படுகிறது. ஷியாமுக்கு இன்னமும் பதவி உயர்வு கிடைக்கவில்லை என்பது காரணம். பிரியங்கா அமெரிக்க மாப்பிள்ளை கணேஷைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறாள். அவளது மேற்படிப்பு ஆசைக்கும் தீ வைக்கப்படுகிறது. அவள் இரவு நேரக் கால் செண்டரில் வேலை செய்வதே, படிப்புக்குப் பணம் சேர்க்கத்தான். மிலிட்டரி மாமா, மருமகளுடன் சண்டை போட்டுக் கொண்டு தனியாக இருக்கிறார். ‘ இந்தப் பக்கம் வந்துவிடாதே ‘ என்று மகன் எச்சரித்தும் இருக்கிறான். அவருக்கு பேரனைப் பார்க்க ஆசை. இஷா எப்படியாவது விளம்பர நங்கையாக மாற வேண்டும் என்று உழைப்பவள். ஆனால் அதற்கான உயரம் அவளுக்கில்லை. வருணின் பெற்றோர்கள் விவாகரத்து செய்து கொண்டவர்கள். அவனுக்கு பணக்காரனாகும் ஆசை இருக்கிறது. அதற்காக வாங்கும் சம்பளம் அனைத்தையும் உடைகளிலும், அழகு சாதனங்களிலும், பைக்குகளிலும் செலவழிப்பவன். உயர்ரக மதுபான விடுதிகளுக்குச் செல்பவன்.
ராதிகா அனுஜைக் கலியாணம் செய்து கொண்டு மாமியாரோடு இருப்பவள். அனுஜ் வேறு இடத்தில் வேலை பார்ப்பவன்.
வருண் இஷாவை விரும்புகிறான். ஆனால் அவள் அவனை மறுதலிக்கிறாள். அவளுடைய கனவுக்குக் காதல் இடையூறு. ஒரு விளம்பரத்தில் பங்கேற்பதற்காக அவள் விளம்பர நிறுவனத்தின் முதலாளியுடனும் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள சம்மதிக்கிறாள். ஆனால் அவளை அனுபவித்தவுடன், மீண்டும் அவளது உயரத்தைக் காரணம் காட்டி, அவன் அவளை ஒதுக்கிறான். படுக்கை சுகத்துக்குப் பணமும் அனுப்புகிறான்.
வெறும் ஒரு வார தொலைபேசி உரையாடலில், கணேஷ் இந்தியா வந்து, பிரியங் காவைக் கலியாணம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறான். அவளது அம்மாவும் ஒப்புக் கொள்கிறான். ஆனால் பிரியங்காவால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முகம் தெரியாத, பழகாத ஒருவனோடு அயல்நாடு போவது அவள் மனதுக்கு ஒப்பவில்லை.
மேலாளர் பக்ஷி, ஷியாமும் வருணும் உருவாக்கிய மென்பொருள் ஒன்றினைத் தனது என்று அமெரிக்க முதலாளியிடம் சொல்லி, வெளிநாடு செல்ல ஏற்பாடும் செய்து விடுகிறான். ஐவரும் அவனைப் பழிவாங்கி, அவனிடம் இருந்து பணத்தைக் கறந்து, வருணும் ஷியாமும் தனியாகத் தொழில் தொடங்க உதவுகிறார்கள்.
அனுஜ் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பது அறிந்த ராதிகா, அவனை விவாகரத்து செய்ய முடிவெடுக்கிறாள். அவள் தனியாக வசிக்கும் இஷாவுடன் குடியேற முடிவெடுத்து விட்டாள்.
ராணுவ மாமா பேரனைப் பார்க்க அமெரிக்கா செல்லப்போகிறார். இனி அவர் மருமகள் விசயத்தில் தலையிடுவதில்லை என்று முடிவெடுத்து விட்டார்.
இஷா விளம்பர நங்கைக் கனவை குழி தோண்டிப் புதைத்து விட்டாள். வருணின் காதலை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திற்கு அவள் வந்து விட்டாள்.
பிரியங்கா, கணேஷ் தன் வழுக்கையை மறைத்து, தனக்கு புகைப்படம் அனுப்பியதை ஒரு பொய்மையாகப் பார்க்கிறாள். இன்னமும் எதையெல்லாம் மறைத்திருப்பானோ என்று சந்தேகப்படுகிறாள். அவள் மனம் அவனை நிராகரிக்கிறது. ஷியாம் மெல்ல அவள் மனதில் மீண்டும் குடியேறுகிறான்.
கதையில் ஒரு விசித்திரப் பாத்திரம் கடவுள். உயரக் கட்டிடத்திற்காக தோண்டப் பட்ட பிரம்மாண்ட பள்ளத்தில், அவர்கள் செல்லும் மகிழுந்து மாட்டிக் கொண்டு விடுகிறது. தொடர்பு துண்டிக்கப்பட்ட செல்பேசியில், கடவுள் அவர்களிடம் பேசுகிறார். அவர்களது ஆசைகளை நிறைவேற்றி வைப்பதாகச் சொல்கிறார். அதன்படி உத்வேகம் பெற்ற அவர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பது கதை.
டெல்லியின் பல உணவுக்கூடங்களில் எப்படி காதலர்கள் சந்திக்கிறார்கள் என்பது நகைச்சுவையுடன் விவரிக்கப்பட்டுள்ளது. அதேபோல காதலிக்கும் வயது வந்த ஆணும் பெண்ணும், உடல் உறவை பாதுகாப்புடன் மேற்கொள்கிறார்கள். இன்றைய இந்திய யுவன் யுவதிகளின் வாழ்வியல் விளக்கப்பட்டிருக்கிறது.
கதை முடிந்து விட்டது. பகத்தை, கதை சொன்ன இளம்பெண் கேட்கிறாள்: ‘ எப்படி இருக்கிறது கதை? நீ இதை நாவலாக எழுதப்போகிறாயா? ‘
‘ எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது அந்த கடவுள் செல் பேசி அழைப்புக் கட்டம் வரை.. வாசகர்கள் கடவுள் பேசினார் என்றால் நம்புவார்களா? ‘
‘ உனக்கு சந்தேகமானால், அதை ராணுவ மாமா சொல்வது போல மாற்றிக் கொள்ளேன். ‘
‘ அது சரி அந்த ஐவரில் நீ யார்? இஷாவா? ‘
‘ ஏன் அப்படி தோன்றுகிறது உனக்கு? ‘
‘ நீ அழகாக இருக்கிறாய்.. அதனால்.. ‘
‘ நான் இஷா இல்லை ‘
‘ பிரியங்கா? ‘
‘ ம்ஹ¥ம் ‘
‘ நான் தான் ராதிகா என்று சொல்லிவிடாதே! ‘
‘ இல்லவே இல்லை ‘
அப்போதுதான் பகத்துக்குப் புரிகிறது. அவள் சொல்லாத பாத்திரம் கடவுள். உடனே மண்டியிட்டு வணங்குகிறார். அவளருகில் ஒரு வேதப்புத்தகம் திறந்த நிலையில் இருக்கிறது. அதிலிருந்த வரிகள்: என்னையே நினை. என்னையே ஆராதி. என் பக்தனாகி விடு. உனக்கு எந்தத் தோல்வியும் வராது. ஏனென்றால் நீ எனது மிகச் சிறந்த நண்பன்.
பகத்திற்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது. இரவெல்லாம் கண் விழித்து கதை கேட்டதால் கூட இருக்கும். அந்தப் பெண் பகத்தின் தலை மீது கைகளை வைத்து அழுத்துகிறாள். நினைவு தப்புகிறது பகத்திற்கு.
கண் விழித்தபோது ரயில் டெல்லி வந்து விட்டது. எல்லோரும் இறங்கிப் போய் விட்டார்கள். அவள் இருக்கையைப் பார்க்கிறார் பகத். அவள் இல்லை.
‘ அய்யா.. நீங்களே இறங்கி விடுவீர்களா? இல்லை உங்களுக்கு உதவி செய்யட்டுமா?’ என்று தோளில் தட்டி ஒரு ரயில்நிலைய சுமை தூக்கி கேட்கிறான்.
0
சேத்தன் பகத்திற்கு இந்தியப் பின்னணியில் சுவையாகக் கதை சொல்லத் தெரிகிறது. ஆனாலும் முக்கோணக்காதலை விட்டு அவர் எப்போது கதை எழுதுவார் என்று கேட்கத் தோன்றுகிறது. இதை யாராவது அவருக்குச் சொன்னால் தேவலை.
இரவுக் கால் செண்டர்களில் நடப்பவைகளைப் படித்தால் நம் பிள்ளைகளை அங்கு அனுப்ப யோசிப்போம். எதற்கும் துணிந்துதான் பல இளைஞர்கள் அங்கே வேலைக்குப் போகிறார்கள்.
நமக்குத் தெரியாத ஒரு களத்தை நமக்குப் புரிகிற மாதிரி சொன்னதிலேயே சேத்தன் பகத்தின் வெற்றி இருக்கிறது.
0

 

Series Navigationதமிழ்ப்பேராய விருதுகள் பெற்றோர் பட்டியல்சிற்றிதழ் பார்வை – கல்வெட்டு பேசுகிறது