துண்டிப்பு

This entry is part 23 of 31 in the series 16 செப்டம்பர் 2012

சத்யானந்தன்

ஞாயிற்றுக் கிழமை எழுந்து வெகு நேரம் ஆனாலும் மொபைலை எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. சில சமயம் இன்னொரு போனிலிருந்து அழைப்பு கொடுத்து அதைக் கண்டுபிடிக்க வேண்டி இருக்கும். இன்று முதல் வேலையாக அதை எடுத்தான். கவனமாக இரவு தலைமாட்டிலேயே வைத்துப் படுத்தது சுளுவாக எடுத்துப் பார்க்க வசதியாக இருந்தது. எதிர்பார்த்தது போலவே குறுஞ்செய்தி இருந்தது. இன்று முதல் வேலையாக அதைச் செய்ய நினைவுட்டல். இன்று எப்படி இருந்தாலும் அதைச் செய்தாக வேண்டும்,

நேற்று புரசைவாக்கத்தில் அலைந்து ஒவ்வொன்றாக வாங்குவதில் இருந்த பெரிய சவால் காரை எங்கே நிறுத்துவது என்பது தான். பல தெருக்களில் அலைந்து ஒரு வழியாக ஒரு இடம் கண்டு நிறுத்திய பிறகு பாத்திரக் கடையில் வாங்க வேண்டியதை வாங்கி முடித்த போது தான் இன்னும் சாமி படம், மளிகை, என இன்னும் இரண்டு பட்டியல் இருப்பது நினைவுக்கு வந்தது. பாத்திரக் கடையில் கால் துடைக்கும் மிதித் தடுக்கு, ப்ளாஸ்டிக் வாளி, மக், கழிப்பறை சுத்தம் செய்யும் ‘ப்ரஷ்’, பாத்திரம் தேய்க்கும் ‘ப்ரஷ்’ , இரு ஆளுக்கு சமைக்க, சாப்பிடத் தேவையான பாத்திரங்கள், ‘இன்டக்ஷன் ஸ்டவ்’ என நிறையவே சேர்ந்து விட்டது. அடுத்த கடைக்குப் போகும் முன் இதைக் காரில் வைத்து விட்டுப் போவதே சரிப்படும். கடைக்காரர் கார் வரை பொருட்களை வைக்க ஒரு பையனை அனுப்பி உதவினார். காரில் பின் ஸீட் முழ்க்க இவையே நிறைந்து விட்டன. இரவு இத்தனையையும் செய்து திரும்ப நேரமானதால் வேறு எங்கும் குடும்பத்தோடு போக வாய்ப்பு எழவில்லை.

அவன் காலைக் கடன்களை முடிப்பதற்குள் ஒரு முறை அழைப்பு வந்து ‘மிஸ்ஸ்ட் காலா’க ‘மொபைலில்’ பதிவாகி இருந்தது. நாசூக்குகள் எப்போது எதற்காகப் பயன் படுத்தப் படுகின்றன? கடைப் பிடிக்கப் படுகின்றன? எப்போது மரிக்கின்றன? கையிலுள்ள நேரம் மிகவும் குறைவு. ஒவ்வொருவராக எழுந்தால் இது தடை படும். பிறகு ‘மொபைலி’ ன் நெருக்கடி உச்ச கட்டத்துக்குப் போய் விடும்.

கார் சாவியைத் தேடும் போதுதான் அது கால் சராய்க்குள் இருப்பது நினைவுக்கு வந்தது. நல்ல வேளை ‘பர்ஸ்’ அதனுடனேயே இருந்தது. ‘செக்யூரிட்டி’ முகப்பு வாயிலில் இல்லை. அடுக்கு மாடி வளாகங்களில் தரும் சம்பளத்துக்கு அவர்கள் அவ்வப்போது கண்ணில் தென்படுவதே பெரியதாக நினைக்க வேண்டும். அவனே கதவைத் திறந்து காரை வெளியே எடுத்துப் பிறகு வாயிலின் கிராதிக் கதவுகளை மூடி விட்டு காரை செலுத்தினான். கொஞ்ச நேரத்திலேயே ‘பெட்ரோல்’ மிகவும் குறைவாக இருக்கிறது என்று ‘பீப்’ ஒலி நினைவு படுத்தியது. நேற்று இரவு வீட்டை நெருங்கும் போதே அது நினைவுட்டியது. அப்போது இருந்த மனச் சோர்விலும் களைப்பிலும் அதைப் புறந்தள்ளுவதே சரியான முடிவாக இருந்தது.

மாதவரத்திலிருந்து கொடுங்கையூர் செல்லும் வழியில் ‘பைபாஸ்’ குறுக்கிட்டது. அதைத் தாண்டி வண்டியைச் செலுத்தி கொடுங்கையூரில் நுழைவதும் எளிதாக இல்லை. பிரதான சாலைக்கு வலப் பக்கம் போக வேண்டும். மனோவேகத்தில் அதற்கான திருப்பத்தைத் தாண்டிப் போய் விட்டான். திரும்ப வந்து குடியிருப்பைத் தேடுவதற்குள் பதட்டம் அதிகமாகி இருந்தது.வளாகத்தில் ‘செக்யூரிட்டி’ இருந்தார். ஆனால் வாயிலிலேயே காத்திருப்பதாகச் சொன்ன ‘புரோக்கர்’ வரவில்லை. நேற்று இரவு பத்து மணிக்கு தன் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பு செய்த ‘டெலிபோன் கால்’ அந்த ‘புரோக்கரு’க்குத்தான். என்ன பயன்? மறுபடி அவனை அழைக்க எண்ணி ‘மொபைலை’த் தேடினான்.காரை ஓரமாக நிறுத்தித் தேடினான். அது உடைக்குள் இல்லை. அவ்வாறெனில் வீட்டில் விட்டு விட்டு வந்து விட்டான். ஒரு கணம் அடி வயிற்றில் கொக்கி போல ஓர் அதிர்ச்சி வந்து போனது. ‘ஸைலன்ட்’டில் தான் இருகிறது. ஆனாலும் அது போதாது. ‘இன் கமிங்’ வரும் போது பளிச்சிடுமே? இரண்டாம் தளத்தில் உள்ள ‘ஸிங்கிள் பெட் ரூம் ப்ளாட்’டை வாடகைக்கு ஒப்பந்தம் செய்தாகி விட்டது ‘புரொக்கர்’ வரும் வரை சாமான்களை எங்கேனும் வைக்க முடியுமா என்று கேட்ட போது அந்த ‘செக்யூரிட்டி’ மறுத்து விட்டார். அவருடன் மன்றாட இயலாத கௌரவம் தவிர்த்து வீட்டில் விட்டு விட்டு வந்த ‘மொபைல்’ விரட்டியது.

பதட்டம் இதயத் துடிப்பு இன்னும் அதிகரிக்க அவன் திரும்ப பிரதான சாலையில் நுழையும் போதுதான் உடனடியாக ‘பெட்ரோல்’ நிரப்ப வேண்டிய கட்டாயம் புரிந்தது. கொடுங்கையூர் வழியே நிறைய போயிருக்கிறான். ஆனால் ‘பெட்ரோல்’ நிரப்பியதில்லை. கொஞ்ச நேரம் அலை பாய்ந்ததில் விசாரித்ததில் வழி சொல்வோரின் வார்த்தைகளில் மனதைக் குவிக்க இயலாத அளவு பதட்டம் அதிகரித்திருப்பது புரிந்தது. பெரம்பூரில் எங்கே உள்ளது என்று தெரியும். காரை விரட்டும் போது ஒரு சைக்கிள் காரர் கிட்டத்தட்ட மோதி விழுந்தார். திரும்பிப் பார்க்காமல் மேலே விரைந்தான். மொபைலில் ‘இன் கமிங்’ வந்திருந்தால் வேறு வினையே வேண்டாம்.

‘பெட்ரோல்’ நிரப்பி வீடு போய்ச் சேரும் அரைமணி நேரமும் இது வரை எடுத்த நடவடிக்கைகள் ஏற்பாடு எல்லாம் நினைவுக்கு வந்து போயின. சிறு வயதில் நிறைய இது போன்ற பதட்டங்களுக்கு இடமிருந்தது. இப்போது ஏனோ நெருடலும் பதட்டமும் பன்மடங்காயும் வலி அதிகமாயுமிருக்கிறது.

வளாகத்துக்குள் காரை நிறுத்தி ‘லிஃப்டி’ல் ஏறும் போது ‘செக்யூரிட்டி’ வெளியேறினார். இந்த வளாகத்திலேயே பின் பக்க ‘மோட்டார்’ அறையில் இதை வைக்கச் சொல்லி ஏற்பாடு செய்யலாம். ஆனால் இப்போது அவகாசமில்லை. வீட்டுக்கதவை சாவி போட்டுத் திறக்க முற்பட்ட போது தான் உள்ளே தாளிட்டிருப்பது புரிந்தது. மணியை அழுத்தியதும் சில நொடிகள் கடந்து மனைவி கதவைத் திறந்தாள். ‘எங்க போயிட்டிங்க காலங்காத்தால?’ என்றாள். ‘பெட்ரோல்’ போடப் போனேன். பெரம்பூர் வரை போகவேண்டிப் போச்சு’ என்றான். கண்களால் துழாவிய போது ‘மொபைல்’ ‘ஸோபா’ மீது தென்பட்டது. ‘புரோக்கரி’ன் ‘மிஸ்ஸுட் கால் ‘ இருந்தது. அவனை இப்போது அழைக்க சூழ்நிலை ஒத்து வராது. அடுத்த அழைப்பைக் கண்டதும் அடிவயிற்றில் கொக்கியாய் மீண்டும் அதே பதட்டம். உடனே துண்டித்தான்.

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 37) பன்மடங்கு பூரிப்பு எனக்குஎகிப்து : சிதைந்த கனவுகள் – திரைப்படம்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *