சக்ர வியூகம்

மாலதி சிவராமகிருஷ்ணன்

 

 

 

“கிட்டத்தட்ட ஒரு பத்து வருடத்துக்கு முன்னால் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். கங்கை ,மற்றும் அதன்கரை ஓரப் பகுதிகளின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர்களைப்  பற்றின ஆவணப் படம்  என்று ஞாபகம்.கங்கையில் பயணம் செய்து கொண்டிருந்த போது தற்கொலை செய்து கொள்ள முயன்ற ஒரு பெண்ணைக் காப்பாற்றி அவளிடம் விசாரணை செய்து கொண்டிருந்த தருணத்தில்தான் பார்க்க ஆரம்பித்தேன்.அதற்குள்நல்ல உலர்ந்த ஆடைகளைக் கொடுத்து, உணவையும் கொடுத்து ஆசுவாசப்படுத்தி அவளிடம் கனிவாக கேள்வி கேட்டு கொண்டிருந்தார்,ஒரு வயதான காவலர்.உருண்டை முகமும்,வழுக்கைத் தலையும் ,பரிவான கண்களும்,சரிந்த தொப்பையுமாக ஒரு அன்பான அப்பா மாதிரி  இருந்தார் அவர்.  அந்தப் பெண்  நம் தேசத்திற்கே உரிய அழகிய தாமிர நிறமும்  ,வட்ட முகத்தில் பெரிய செந்நிற  குங்கும பொட்டும் , கரிய, பெரிய கண்களுமாக,அழகி என்றே வரையறுக்கலாம் போல இருந்தாள் . தலையை அசைத்து அவள் பேசுகிற விதத்தில் ,கண்ணில்  வரம்புகட்டி  நின்ற கண்ணீரும்,ஒற்றைக்கல்  மூக்குத்தியும்  மாறி மாறி பளிச்சிட்டன.அந்த கங்கைக்கரை ஓரப் பெரு நகரத்திலிருந்து இரண்டு மணி நேர பயண தூரத்தில் இருந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவள் அந்தப் பெண்.

 

“வீட்டில் யார் யார் இருக்காங்கம்மா?”

 

“என கணவர்,இரு குழந்தைகள்,மாமனார் ,மாமியார்”

 

“அவங்களால ஏதாவது பிரச்சனையா?”

 

“இல்ல ,இல்ல,என் கணவர் நல்லவர்,என் மாமனார்,மாமியார் ரொம்ப  அன்பானவங்க. குழந்தைகளும் தங்கம்.இவங்களை பற்றி நான் ஏதாவது தப்பா சொன்னா நரகத்துக்குத்தான் போவேன் ” , புடவைத் தலைப்பால்கண்களை துடைத்துக் கொண்டாள்.

“பின்ன உனக்கு என்னம்மா கஷ்டம் ?” கசந்த சிரிப்போடு சொன்னாள் ” இந்த உலகத்தில,எந்த  தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி,எந்த பொருளாதார வர்க்கத்தைச் சேர்ந்தவங்களா இருந்தாலும்   சரி, நூத்துக்கு,தொண்ணூற்று ஐந்து சதவீதம் பெண்கள் வாழ்க்கையில் கஷ்டம்தான் படறாங்க.நான் மட்டும் எப்படி விதிவிலக்காக  இருக்க முடியும் ?”

 

அவர் பொறுமையாக காத்துக் கொண்டிருந்தார் ,அவள் தன்னைத்தானே ஆயத்தப்படுத்திக் கொள்ளும் வரை.

 

“நான் சமஸ்கிருதத்தில் இளங்கலை பட்டதாரி , என் கணவருடைய படிப்பும் அதேதான். எங்க இரண்டு பேருக்குமே வேலை இல்லை . கிராமத்தில இருக்கற பள்ளிக்கூடத்தில் தாற்காலிக வேலை கொஞ்ச நாள்கிடைச்சுது ,அந்த மூணு நாலு மாசம் வாழ்க்கை பரவாயில்லாம போச்சு .அதுக்கப்பறம், ஒவ்வொருநாளும் போராட்டம்தான். குழந்தைகளுக்கு கூட ஒரு வேளை சாப்பாடு  ஒழுங்கா போட முடியலை . பெரியநகரங்களுக்கு வந்து வேலை தேடலாம்னு நினைச்சா பயமா  இருக்கு.கிராமத்திலாவது ஓட்டையோ,ஒடைசலோ ஒரு வீடு இருக்கு தங்க.யாராவது இரக்கப் பட்டு குழந்தைகளுக்காவது சாப்பாடுபோடுவாங்க.எங்க படிப்புக்கு வாத்யார் வேலையைத் தவிர என்ன வாய்ப்பு இருக்குன்னு  தெரியலை. எத்தனையோ எழுதிப்போட்டாச்சு. ஒண்ணும்கிடைக்கலை. நிகழ்காலம்,எதிர்காலம் எல்லாமே இருட்டாக இருக்கு. வேலைக்கு முயற்சி பண்ணப் போறேன், சாயங்காலம் வந்துடுவேன்னு சொல்லிட்டு வந்தேன். படகில் ஏறி உட்கார்ந்தேன்,மனம் முழுக்க குழப்பம் ,கவலை.நான் போய் சேர்ந்தாலாவது,அவங்களுக்கு ஒருவழி பிறக்குமா, அல்லது ஒரு சுமையாவது குறையுமான்னு நினைச்சேன்,டக்னு கங்கையிலே குதிச்சேன்.”

 

பேச ஆரம்பிக்கும் போது அந்த காவலரின் கண்களை பார்த்து பேசியவள் , முடிக்கிற சமயத்தில்,தலையைக் குனிந்து கொண்டு தன் கைகளை பார்த்து கொண்டு குரல் தழைந்தாள்.

 

“ஏம்மா! நீ செத்துப் போயிட்டா, பிரச்னை தீந்து போயிடுமா?பிரசனையை பார்க்க நீ  இருக்கமாட்டே,அவ்வளவுதான்.பிரச்னை அப்படியே தான் இருக்கும் ,என்னைக கேட்டா இன்னும் கொஞ்சம் ஜாஸ்தியாவே இருக்கும்.உன் குழந்தைகள் கதி என்ன?வயசான ,அன்பான உன் மாமனார்,மாமியாரை இன்னும் பெரிய கஷ்டத்தில ஆழ்த்தற இல்லயா? உன் துணை இல்லாமல் உன் கணவர் இவ்வளவு பெரிய பிரச்னையை எப்படி எதிர் கொள்வார் ?வாழ்க்கை இப்படியே போயிடாது. நிச்சயம் ஏதாவது விதத்தில்,உனக்கு வழி பிறக்கும். இப்போ ஊருக்குப் போ!உன்னோட ஒரு போலீஸ்காரரை அனுப்பறேன்.தைரியமா போ,ஏதாவது உனக்கு பொருத்தமான வேலை பற்றி எனக்கு தெரிய வந்தால் உனக்குத் தகவல் அனுப்பறேன் . ” தலையை வருடிக்கொடுத்து சமாதானம் சொல்கிற ஒரு அப்பாவின் வாத்ஸல்யம் அவர் குரலில்.

 

“சரி! ஒரு வாக்குமூலம்  எழுதிக்கொடுத்தட்டு போ!”

 

அவளிடம் தாளையும் பேனாவையும் கொடுத்தார் .”என்ன எழுதப் போற?”

 

அவள் மெல்லிய குரலில்” இந்த மாதிரி தற்கொலை பண்ண பார்த்தேன் ,காவலர்களால் காப்…..”

 

அவர் அவளை அவசர அவசரமாகத் தடுத்தார் ” இல்லம்மா,அப்படி எழுதாத, *,தற்கொலை முயற்சி தண்டனைக் குரிய குற்றம். ( பத்து வருடங்களுக்கு முன்பு)உனக்கு இருக்கற கஷ்டத்தில, அது வேற தேவையா?இப்படி எழுது ,என் பிரச்னையை பற்றி யோசித்து கொண்டே உட்கார்ந்திருந்தேன்.கங்கை ஜலத்தை கையால் தொடுவதற்காக படகின் ஓரத்துக்கு வந்த போது கால் தடுக்கி, நதியில் விழுந்து  விட்டேன். நல்ல வேளையாக படகில்இருந்தவர்களின் அலறலைக் கேட்டு காவலர்கள் என்னைக் காப்பாற்றினார்கள். இப்படி எழுதிக்கொடு”

 

அதற்கப்புறம் நடந்த எதையும் நான் கவனிக்கவில்லை. அந்தப்பெண்ணையும்,அந்த காவலரையும பற்றி நினைக்க நினைக்க ஒரு புறம் வாழ்க்கையின் மகத்தான தருணங்கள்,எவ்வளவு எளிமையான விஷயங்களில் வெளிப்படுகிறது என்று தோன்றியது, மறுபுறம்  என் வீட்டின் சௌகரியமான சூழ்நிலையில் உட்கார்ந்து கொண்டு, நல்ல மனிதர்கள் எங்கேயும் இருக்கிறார்கள்,நம்மால் ஒன்றும் முடியாவிட்டாலும் இவர்களின் துக்கத்தைப் புரிந்து கொண்டு அனுதாபமாவது பட  முடிகிறதே என்று என் முதுகில் நானே தட்டிக்கொள்வது ஒரு வகையான தப்பித்தல் என்று குற்ற உணர்ச்சி உறுத்தியது.

உலகத்தில் 95% சதவீதம் பெண்கள் வாழ்க்கையில்  சோகத்தைதான்அனுபவிக்கிறார்கள் என் அந்தப்பெண்  சொன்ன கணத்தில் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. எங்கோ ஒரு குக்கிராமத்தில் உட்கார்ந்து கொண்டு இவளால் உலகப்பெண்களின் துக்கத்தை எங்ஙனம் உணர முடிந்தது?

 

வெறும்பேச்சுக்கு சொன்னதா? இல்லை அவளின் நுண்ணுணர்வு,படிப்பறிவு ,பட்டறிவு இவற்றின்வாயிலாக அவற்றை உண்மையாக அறிந்து கொண்டு சொன்னதா? எதுவாக இருந்தாலும், இவ்வளவு தெளிவாக பேசுகிற  பெண்ணுக்கு, குறைந்தபட்சம் வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை மட்டுமாவது  பூர்த்தி செய்யக்கூடிய ஒரு வேலையைக் கூடத் தர முடியாத இந்த சமூகத்தை நினைத்து ஒரு வித அச்சமும், நம்பிக்கையின்மையும் ஏற்பட்டன.”

 

 

பிரபல பெண்கள் மாத இதழுக்காக இந்தக் கட்டுரையை அவள் கணினியில் அடித்துக் கொண்டிருந்த வேளையில் வாசல் கதவு தடாலென்று திறக்கிற சத்தம்,

 

” அறிவு இருக்கா உனக்கு? ஏன் கதவு உள் தாழ்ப்பாள் போடாம இருக்கு? எவனாவது உள்ள புகுந்து இருக்கறத எல்லாம் சுருட்டிண்டு போனாலும் உனக்கு புத்தி வராது, ஏன்னா நஷ்டம் எனக்குத்தானே, உனக்கென்ன போச்சு ? உன் அப்பன் வீட்டு காசா என்ன?” கத்திக்கொண்டே  சோஃபாவில் உட்கார்ந்துகொண்டு   காலணிகளைக் கழற்றினான்.

 

நேற்று கதவு தாழ் போட்டதற்காக கத்தியது நினைவுக்கு வந்தது,

“நான் வர டயம் தெரிந்தும் ஏன் கதவ தாழ்ப்பாள் போட்டு வச்ச? நான்  கதவைத் தட்டி வெயிட் பண்ணி கஷ்டப்படறதைப் பாக்கணும்னு உனக்கு கெட்ட எண்ணம்!”

 

அதைச் சொல்ல முடியாது, சொன்னால் இன்னும் கத்துவான்.

” எது சொன்னாலும் பதிலே பேசாம கழுத்தை  அறு!!  உன்னை என் தலையில கட்டிட்டு உன் அப்பன்  அவன் பாட்டுக்கு ஜாலியா இருக்கான்,இங்க அவஸ்தைபடறது நான்!”

 

அப்பா பாவம்! அவர் என்ன தப்பு பண்ணினார் இந்த கல்யாணம் பண்ணினதைத்தவிர , இந்த கல்யாணம் நடந்ததைப் பற்றி அவரே ஒவ்வோர் நாளும்  வேதனப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

 

“காஃபி கொண்டு வரவா?”

 

“ஏன் அதக் கொண்டு வர ஜோஸியரப் பாக்கணுமா?கொண்டா சீக்கிரம்! சரியான மச மசப்பு கேஸ்!”

 

அவனுக்கு வாழ்க்கையோடும் அவளோடும் என்ன பிரச்னை என்று புரிந்து கொள்ள  அவள் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை. கல்யாணமான புதிதில் ஏற்படுகிற தயக்கமும் ,பழகியபின் ஏற்படுகிற  உரிமையும் இல்லாத ஒரு இடைப் பட்ட காலத்தில் அவனிடம் ஒரு முறை கேட்டாள் , “நமக்குள்ள என்ன பிரச்னை ? நாம் ஏன் ஒத்தரொட ஒத்தர் பேசி புரிஞ்சுக்க முயற்சி செய்யக்கூடாது?”

 

அவள் ஏதோ புரியாத மொழியில் பேசியது போல் ஒரு நிமிடம் மலங்க மலங்க பார்த்தான். பிறகு அது  தனக்கு ஒரு தோல்வி போல உணர்ந்து கத்த ஆரம்பித்தான்.

 

” இத பாரு! ஏதாவது நாலு புஸ்தகத்தைப் படிச்சுட்டு எங்கிட்ட உளர்ற வேலை எல்லாம் வச்சுக்காத!”

அவளுக்கு நிஜமாகவே ரொம்ப ஆச்சரியமாக இருந்தது, இங்கே வீட்டில்  மூச்சு முட்டித்தவிக்கிற மனம், வேலைக்குச் செல்லும்போது  எவ்வளவு விடுதலையாகவும், எவ்வளவு குதூகலமாகவும் உணர்கிறது. அது  தப்பித்துக் கொள்ள ஒரு இடம் கிடைத்த ஆசுவாசம் மட்டுமல்ல, தன்னைத்தானாகவே அறிகிற  சுகம், தனக்குப் பிடித்த முகத்தை, அணிந்து கொள்வதில் உள்ள சௌகர்யம், அவளை எந்த நிபந்தனைகளும் இல்லாமல் அங்கீகரிக்கிற நட்பு. அவள் அங்கு நகைச்சுவை உணர்ச்சியும்  ,குறும்பும், சந்தோஷமும், சகமனிதநேயமும் ,தோழமையும், அனைவருக்கும் பரிந்து உதவுகிற கருணையுமாக இருந்தாள் .இங்கே தன் வீடு என்ற உணர்வே இல்லாத இடத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான் என்ற கேள்வியோடு சமையலறைக்குள் சென்றாள் .

 

 

 

அவன் தொலை பேசியில் பேசிக் கொண்டிருந்தான்.

 

” இல்லை தனஞ்சய்! கவலைப்படாதே ! நீ மட்டும்  செய்த தவறு  என்று  எண்ணாதே! நாம் எல்லாம் ஒரு குழு! நாம் அனைவரும் சேர்ந்து இதற்கு தீர்வு என்ன என்று கண்டு பிடிப்போம் ! என் அருமையான பையா! கவலைப்படாமல் தூங்கு!! ” கட கடவென சிரித்தபடியே திரும்பியவன் அவள் அந்த அறைக்குள்  நுழைந்ததைப் பார்த்து “உச்!! ”  என்ற எரிச்சலுடன் அடுத்த அறைக்குப் போனான்.

 

உண்மையிலேயே இவன் யார்? தன் அலுவலக நண்பர்களிடம் இவ்வளவு தன்மையாகப் பேசும் இவன் தன்னிடம் மட்டும் ஏன் இப்படி?

 

விடை தெரியாத கேள்விகள்!!

 

இந்த இருபது வருட மண வாழ்க்கையில் அவன் தன்னுடன் பேசியதை எழுதினால் இரண்டு பக்கம் கூட வராது என்று எண்ணினாள்.( முட்டாள்,மக்கு, சோம்பேறி போன்ற திட்டுக்கள், சண்டைகள் தவிர சாதரணமாக பேசியவையை கணக்கில் எடுத்துக் கொண்டால் ). அது கூட அருணைப் பற்றின ஏதோ ஒன்றிரண்டு விசாரணைகள்,அவன்  வாழ்வின்  முக்கிய தருணங்களான பள்ளி இறுதி வகுப்பு, கல்லூரி  சேர்க்கை என்பவற்றின் போது மட்டுமே.

 

சில சமயம் அலுவலக விஷயமாகவோ,தனிப்பட்ட முறையிலோ வெளியூர்களுக்குச் சென்று விட்டு திரும்புகிற சமயத்தில் ,அவன் ஹாலில் உட்கார்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருப்பான் ,அல்லது தினசரி படித்துக் கொண்டிருப்பான் .இவள் பெரிய பெட்டியை தூக்க மாட்டாமல் தூக்கிக்கொண்டு பயணக்களைப்பில் உள்ளே நுழைகையில் ஒரு வினாடிக்கும் குறைவான நேரம் யார் வருவது என்று பார்த்துவிட்டு பின்னர் தான் செய்வதைத்தொடர்வான்.ஊர்களுக்குப்  போவதோ ,உறவினர் வீட்டு விசேஷங்களுக்குப் போவதோ,கடைகளுக்கோ,  உ டம்பு சரியில்லாமல் போகும்போது மருத்துவ மனைக்கோ,வங்கி வேலைகளுக்கோ,வீடு சம்பந்தமான வேலைகளுக்கு அரசாங்க அலுவலகங்களுக்கோ எல்லா இடத்துக்கும் தனியாகத்தான் போவாள்.போய்வந்து பிறகும் ஒரு வார்த்தை , ஒரு கேள்வி, ஒரு பார்வை கிடையாது .இப்படித்தான் எல்லார் வாழ்க்கையும் இருக்கிறது என்று அவள் நம்பத் தயாராக இல்லை.

 

அவன் சாப்பிட்டு விட்டு தொலைக் காட்சியைப் பார்க்கப் போய் விட்டான். இவள் சாப்பாட்டு மேஜையை சுத்தம் செய்து கொண்டே யோசித்தாள்,சில வருடங்களுக்கு முன் படித்த ஒரு பெண்மணியின்  வாழ்க்கைச் சம்பவம் நினைவுக்கு வந்தது.

அந்தப்பெண்மணியும் , அவள் கணவரும்  பதினைந்து வருடங்கள்  குடும்பம் நடத்திய பிறகு கணவர் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார் .இருந்த இத்தனை வருடங்களில் அவளுடன் அவர் சுத்தமாக  பேசியதேயில்லை. வீட்டிற்கு சாப்பிடுவதற்கும்,தூங்குவதற்கும் மட்டும் வருவார்.மற்றபடி வேலை, நண்பர்கள்  என்று மட்டுமே வாழ்ந்து இருக்கிறார். அவர் எப்படிப்பட்டவர் என்பதற்கான எந்த அபிப்ராயமும் அவளுக்கு இல்லை.அவர் திடீரென இறந்ததும்,வீட்டுக்குத் திரண்டு வந்த நண்பர்கள்  பேச்சில்  தென்படுகிற அவரின் குணாதிசயத்தைக்  கேட்க  கேட்க , அவளுக்கு சந்தேகம்  வருகிறது ,தான் திருமணம் செய்து கொண்ட  மனிதரும், இவர்கள் தங்கள் நண்பர் என்று சொல்கிற  மனிதரும் ஒருவர்தானா என்று.

 

கடவுள் போட்ட முடிச்சு, பூர்வ ஜென்ம கர்ம பலன்,பெற்றோர்கள் அறியாமல் செய்த பிழையான  முடிவு ,ஏதோ ஒன்றோ , அல்லது எல்லாமோ அவளை இந்த மூச்சுத் திணற வைக்கும் உறவில்  மாட்டி  வைத்தது என்றால் இதிலிருந்து தப்பிக்க அவள் ஏன் எந்த முயற்சியும் செய்யவில்லை ?

 

தான் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு போகிற பொறுமைசாலி என்று உலகுக்கும்,குறிப்பாக தனக்கும்  காட்டிக் கொள்ளும் அசட்டு வீராப்பா?

 

இல்லை ,தன்னைத்தானே வதைப்பதில் சுகம் காணும் சுய வதை இன்ப வாதியா?

 

இல்லை, காலம் காலமாக போற்றி வருகிற குடும்ப பாரம்பரியம்,பண்பாடு இவைகளை மீறுவதில் உள்ள  பயம் கலந்த தயக்கமா?

 

இல்லை ,இந்த விஷயங்களில் ஒரு பத்து சதவீதம் அளவாவது பகிர்ந்து கொண்ட தோழி சங்கீதாவிடம்  சொன்னது மாதிரி ” என்கிட்ட எப்பிடி  இருந்தாலும்  என் குழந்தையிடம் அன்பாக இருக்கிற அப்பா! அந்த குழந்தைக்கு  அப்பாவின் அன்பை வஞ்சனை செய்ய விரும்பவில்லை ”

 

” ஆனா யோசித்துப் பாரு! ஒருவருக்கொருவர் பரஸ்பரம்  அன்போ,நட்போ, குறைந்த பட்ச புரிதலோ  இல்லாத  இந்த உறவைப் பார்க்கையில் ,இதோடு வாழ்கையில்  அவன் புண் பட மாட்டானா?”  சங்கீதா  ஆதங்கத்துடன் கேட்டாள் .

 

” ஒரு உடைந்த வீடு குழந்தையை எவ்வளவு பாதிக்கும் தெரியுமா? என் சுய நலத்துக்காக அந்த  கஷ்டத்தை அவனுக்கு குடுக்கணுமா?”

 

“ரொம்ப  சரி! ஒத்துக்கறேன்!ஆனா ஒரு பக்கம் வெறுப்பு ,துவேஷம், அலட்சியம், அவமரியாதை, இன்னொரு  பக்கம் கழிவிரக்கம்,பயம்,அவமானம்,துக்கம் ,இப்படி இருக்கிற இருவரைப் பார்க்கையில் ஆண் பெண்  உறவு பற்றி எப்படிப்பட்ட கசப்பு உணர்ச்சியும் ,அவநம்பிக்கையும் அவனுக்கு   உண்டாகும் தெரியுமா? நீ அவனுக்குச் செய்கிற மிகப் பெரிய தீங்கு, இந்த உறவு என்பது எவ்வளவு குரூரமானது,நம்பத் தகாதது என்கிற உணர்ச்சியை அவனுக்குத் தருவதுதான் ” சங்கீதா சொன்னாள் .

 

“இருபது,முப்பது வருடங்களுக்கு முன் இந்த உறவு முறிவு எண்ணத்தகாதது. இந்த  காலத்தில்  இப்படி ஒரு மரண வாழ்க்கை வாழத் தேவையில்லை, ஆனா உன் வாழ்க்கை பற்றின முடிவை நீதான் எடுக்கணும்.”

 

குரலில் வருத்தம் தோய சொல்லி முடித்தாள்.

இயந்திர கதியில் சமையலறையைச் சுத்தம் செய்து ,பாத்திரங்களைத் தேய்க்க போட்டு, மறுநாள் , சமையலுக்கு ஏற்பாடாக எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு வெளி வருகையில் ,அவன் அவனுடைய அறைக்குள் போகும் சத்தம் கேட்டது.அவள் தன் அறையை நோக்கி நடந்தாள்.

 

யோசிக்க யோசிக்க மண்டையே வெடித்துவிடும் போல இருந்தது . ஆனால் உண்மையிலேயே சங்கீதாவின்  கேள்விக்கு என்ன பதில்? இந்த நரகத்தை விட்டுப் போக  நான் ஏன் தயங்குகிறேன்? சட்டென்று இந்திரா பார்த்தசாரதியின் ஏதோ கதையின் வரிகள் நினைவுக்கு வந்தன.” சொர்க்கத்தைத் துறந்து நரகத்துக்கு  போவது மட்டும் துறவு அல்ல , நரகத்தை விட்டு சொர்க்கத்திற்குப் போவதும் ஒரு  வகைத் துறவு தான்”

 

கணினியை உயிர்ப்பித்து  பெண்கள் இதழுக்காக எழுதிய கட்டுரையைத் திறந்தாள். அந்த துறவுக்கான  மனத்திண்மை தனக்கு இல்லை,அவ்வளவுதான்  என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

 

அவ்வளவுதானா ? கண்ணீர் திரையிட அந்தக் கட்டுரையை ‘அழி’ என்று ஆணையிட்டாள்.

 

Series Navigationநைல் நதி நாகரீகம், எகிப்தின் கட்டடக் கலை அமைப்புகளில் கணித விதிப்பாடுகள் -8குறிப்பிடத்தக்க சிறுகதைகள்- ஒரு பட்டியல்