ஜூலையின் ஞாபகங்கள்

– ப்ரியந்த லியனகே
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

ஜூலை மாதம் குறித்த எனது ஞாபகங்களில் முதலில் பதிவாகியிருப்பது 1980, ஜூலை வேலைநிறுத்தம். அப்பா வேலையை இழந்து வீட்டுக்கு வந்தார்.
‘இனி நாங்கள் வாழ்வது எப்படி?’ என அம்மா கேட்டார்.
‘நாம் எப்படியாவது வாழ்வோம். வேலை இல்லாமல் போனாலும், நான் ஒருபோதும் உங்களை பசியோடிருக்க விட மாட்டேன்.’
‘வேலை நிறுத்தத்தை வென்று விட முடியுமா?’ அம்மா கேட்டார்.
‘முடியாது. எந்தவொரு ஒழுங்குமுறையும் இல்லை. ஒருங்கமைப்பு இல்லை. அவ்வாறிருக்கையில் வேலை நிறுத்தத்தை வென்றுவிட முடியாது.’ என அப்பா சொன்னார்.
‘அவ்வாறெனில், ஏன் வேலைநிறுத்தம் செய்கிறீர்கள்?’
‘மனிதர்கள் போராடுகையில் தொழிலை மட்டும் எண்ணி போராடாமல் இருக்க முடியாது. தலைவர்கள் சர்வாதிகாரிகளாக இருந்தபோதிலும், போரிடும் மக்களை நிலத்தில் விழ விடுவது கூடாது. அதனால்தான் நான் வேலைநிறுத்தம் செய்தேன்.’
அன்று அப்பா, தான் தோற்பது பற்றி தெரிந்தே வேலை நிறுத்தம் செய்திருந்தார். அதன்பிறகு எங்களை வாழ வைப்பதற்காக அப்பா நிறைய கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டார். அத் துயரமான வாழ்வின் பங்குதாரியொருவரான அம்மாவும் ஒரு முணுமுணுப்பு கூட இல்லாது அப்பாவுக்கு ஒத்தாசையாக இருந்தார். இன்று அம்மாவைப் போலவே அப்பாவும் உயிரோடு இல்லை. எனினும் அந்த ஞாபகங்கள் மாத்திரம் என்னோடு உள்ளன.
ஜூலையின் இரண்டாவது ஞாபகமானது 1983 கறுப்பு ஜூலை. தமிழ் சகோதரர்களை அழித்த அம் மோசமான கறுப்பு ஜூலையின் ஞாபகங்களிடையே சிறுவயதில் எங்களுக்கு மருத்துவம் பார்த்த வைத்தியர் கணபதிப் பிள்ளையின் வீடு பற்றியெரிந்ததை நேரில் கண்டமை எனது இதயத்தை நொறுங்கச் செய்த சம்பவமொன்றாகும். எல்லாப் பிள்ளைகளுக்கும் தந்தையொருவரைப் போல ஆதரவளித்த வைத்தியர் கணபதிப் பிள்ளையை, அன்று நல்லிதயம் கொண்ட சில சிங்கள மக்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றினார்கள். எனினும் அன்று இந் நாட்டை விட்டுப் போன வைத்தியர் திரும்பவும் இலங்கைக்கு வரவே இல்லை.
கறுப்பு ஜூலை நடைபெற்று 28 வருடங்கள் ஆகின்றன. எனினும் அந்த 28 வருடங்களில் எமது நாட்டு ஆட்சியாளர்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் எதுவும் இல்லை. நாய்களின் கழுத்துக்களை வெட்டி மக்களின் வீட்டுவேலிகளில் சொருகிச் செல்வது அதனாலேதான். எனவே மனதில் தோன்றிய கவி வரிகள் சிலவற்றோடு இப் பத்திக்கு முற்றுப் புள்ளி வைக்கிறேன்.
கற்றுத் தரும் பாடங்களோடு
பௌர்ணமி நிலவற்ற கறுப்பு ஜூலை
கற்றுக் கொண்ட எவருமற்ற
பௌர்ணமி நிலவற்ற கறுப்பு ஜூலை
– ப்ரியந்த லியனகே
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

Series Navigationஅதிர்ஷ்ட மீன்கதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)