தொடுவானம் 214. தங்கைகளுக்கு திருமணம்

Spread the love

டாக்டர் ஜி. ஜான்சன்

214. தங்கைகளுக்கு திருமணம்

கலைமகளிடம் கடிதத்தைத் தந்தேன். படிக்கும்போது முகமாற்றத்தைக் கவனித்தேன். அதில் அதிர்ச்சி இல்லை. மலர்ச்சிதான்.
படித்து முடித்துவிட்டு என்னிடம் தந்தாள்.
” நீ என்ன நினைக்கிறாய்?”
” உனக்கு இதில் சம்மதமா?
” அதனால்தானே உன்னிடம் கேட்கிறேன்? ”
” நான் எப்படி தனியாக அவ்வளவு தூரம் போவது?”
” அதான் நானும் வருவேனே?
” நீ அங்கேயே வேலை செய்வாயா? ”
” அதற்குதான் முயற்சி செய்யப்போகிறேன்.”
” அப்படியென்றால் பரவாயில்லை. நான் தனியாக அங்கு இருக்க மாட்டேன். நீயும் அங்கேயேதான் இருக்கவேண்டும்.”
” அப்போ சரிதானே?
” அவர் எப்படி? உன் நண்பர்தானே அவர்? ”
” நல்லவன்தான். நம்பலாம். ”
” நீ என்னை இங்கே அப்பாவிடம் விட்டு விட்டு போய்விடாதே. எனக்கு அங்கு தெம்மூரில் இருக்க பயமாக உள்ளது. உன்னுடன் கூட்டிப்போ . ”
” அப்போ உனக்கு சம்மதம்தானே? ”
” உனக்கு சம்மதம் என்றால் எனக்கும் சம்மதம். ”
கலைமகளின் சம்மதம் கிடைத்துவிட்டது.இனி ஊர் செல்லவேண்டும்.
அந்த வார இறுதியில் திருவள்ளுவர் துரிதப் பேருந்து மூலம் தஞ்சை சென்றேன். அங்கு சோழன் பேருந்தில் ஏறினேன்.மாலையில் வீடு வந்தடைந்தேன்.
எதிர்பாராமல் வந்த என்னைக் கண்ட அப்பாவுக்கு மகிழ்ச்சியே. சிங்கப்பூரிலிருந்து ஊருக்கு வந்தபின்பு அவர் கிராமத்துச் சூழலுக்கு ஏற்ப வாழ தன்னை பக்குவப்படுத்திக்கொண்டார். சுமார் இருபத்தி ஐந்து வருடங்கள் சிங்கப்பூரில் சிங்காரமாக வாழ்ந்தவர். கேரளத்து காக்கா கடைகளில் வாய்க்கு ருசியாக உணவருத்தியவர். அவருக்கு சுவையாக உணவு உண்பதுதான் மிகவும் பிடிக்கும். அதை கிராமத்தில் அம்மா நிறைவேற்றி வைத்தார். அவருக்குத் தேவையான சுவையான உணவைத் தயாரித்து வழங்குவதுதான் அம்மாவின் முழுநேர வேலையானது. அப்பா வயல் வெளிக்குப் போகமாட்டார். அவரால் வெயிலில் செல்லமுடியாது. அம்மாதான் வயல்களையும் கவனிக்க வேண்டிவந்தது.
என்னைக் கண்டதும் அம்மா ஒரு கோழியைப் பிடித்து அறுத்தார். கலைசுந்தரி சமையலில் உதவினாள் . அப்போது ராஜக்கிளியும் வந்துவிட்டார். நலம் விசாரித்தார். பால்பிள்ளை வந்து நின்றான். அவனுடன் வயல் வெளிக்குச் சென்று வந்தபோது கோழிக் குழம்பு கமகமத்தது.
இரவு உணவுக்குப் பின்பு பால்பிள்ளையை அழைத்துக்கொண்டு பெரிய தெருவுக்குச் சென்றேன். பெரிய குளம் வழியாக ராஜன் வாய்க்கால் பாலத்தைத் தாண்டிச் சென்றோம். அங்கு தெருவின் முதல் வீட்டில் அம்மாவின் தங்கை கோசலாம்பாள் சின்னம்மா வீடு உள்ளது. அவர் என்னைப் பார்த்ததும் ஓடிவந்து என்னைப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டார். அவர் என்மீது மிகவும் பாசம் கொண்டவர்.
அங்கிருந்து சுமார் பத்து வீடுகள் சென்றதும் ஒரு கல் வீடு உள்ளது. அதில் அம்மாவின் இன்னொரு தங்கை அஞ்சலை குடியிருந்தார். அவர் வீட்டு முனையைத் திரும்பி வலது பக்கம் சென்றோம். அங்கு ஒரு சிறு கோவில் இருந்தது. அங்கிருந்து நேராக தெருவில் ஐந்து வீடுகள் தாண்டியதும் செல்லக்கண்ணு மாமா வீடு. அதுவும் கல் வீடுதான்.தெருவிலிருந்து படிக்கட்டுகள் அமைத்து மிக உயரத்தில் வீடு கட்டப்பட்டிருந்தது. அதுதான் அம்மா பிறந்த வீடு. செல்லக்கண்ணு மாமாதான் அம்மாவின் அண்ணன். அம்மாவின் இரண்டு தம்பிகளான வேலுப்பிள்ளையும் பாலமுத்துவும் நெய்வேலியில் பணியில் உள்ளனர். விடுமுறையில் அவர்கள் வருவார்கள். இன்னும் பங்கு பிரிக்கவில்லை. செல்லக்கண்ணு மாமாதான் நிலபலன்களை கவனித்து வந்தார். அவர்தான் அந்த கல் வீட்டில் குடியிருந்தார். அவருடைய மூத்த மகன்தான் செல்வராஜ். அவன் கடலூரில் மத்திய அரசு பணியில் இருந்தான். அது இந்திய உணவு நிறுவனம்.
என்னைக் கண்ட மாமா ,” தம்பி .வாங்க.. ” என்று வரவேற்றார். அவருக்கு என் மீது மிகுந்த பாசம்!
” வணக்கம் மாமா. ‘ என்றவாறு திண்ணையில் அவர் விரித்த கோரைப் பாயில் அமர்ந்தேன். பால்பிள்ளையும் சற்று தொலைவில் ஒரு ஓரமாக அமர்ந்துகொண்டான்.
இருவரும் நலம் விசாரித்துக்கொண்டோம்.உணவு தயார் செய்யச் சொல்லவா என்று கேட்டார். நாங்கள் சாப்பிட்டுவிட்டோம் என்றேன். காப்பி போடச் சொல்லவா என்று கேட்டார். சரி என்றேன்.
செல்வராஜ் பற்றி விசாரித்தேன். கடலூரில் நன்றாக உள்ளதாகக் கூறினார். செல்வராஜூக்கு ஒரு நல்ல வழி காட்டியதற்காக எனக்கு மீண்டும் மீண்டும் நன்றி சொன்னார். அவன் எஸ்.எஸ்.எல்.சி. தேறியதும் எதாவது வேலைக்கு அனுப்பலாம் என்றுதான் இருந்தார். அப்போது நான்தான் தலையிட்டு அவனை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்க்க வலியுறுத்தினேன். அதற்கு தேவையான பொருளாதாரம் வேண்டுமே என்று மாமா தயங்கினார். அதைப் பின்பு பார்த்துக்கொள்வோம் என்று சொல்லி நான்தான் அப்போது வழிகாட்டினேன். அதன்பின்புதான் அவனை பி.ஏ. படிக்க அனுப்பினோம். அவன்தான் பெரிய தெருவிலிருந்து பல்கலைக்கழகம் சென்ற முதல் மாணவன்.தெம்மூரைப் பொறுத்தவரை அண்ணன்தான் பல்கலைக்கழகம் சென்ற முதல் படடதாரி! அதன் சுற்று வட்டாரத்தில் நான்தான் முதல் டாக்டர்!
மாமாவிடம் நான் சிங்கப்பூர் செல்லவிருப்பதாகவும் உடன் கலைமகளையும் கூட்டிச் செல்லப்போவதாகவும் சொன்னேன்.அவர் உடன் கலைமகளை ஏன் அழைத்துச் செல்கிறேன் என்று கேட்டார். நான் அவளின் திருமணம் பற்றிச் சொன்னபோது அவருடைய முகம் வாடியது. நான் அவளை நண்பனுக்கு மணமுடிக்கப்போவதாகக் கூறியபோது அது இன்னும் வாடியது.
” கலைமகளை நான் செல்வராஜுக்குக் கேட்கலாம் என்றிருந்தேன். ” அவர் உள்ளக்கிடக்கையைச் சொன்னார்.
” இருவருக்கும் பொருத்தமாகத்தான் இருக்கும். ஆனால்…. என் நண்பன் அவளைக் கேட்கிறான். அவன் இப்போதுதான் வந்து சென்றான். ” என்றேன்.
அவர் எதோ யோசித்தார்
” கலைமகள் இல்லாவிட்டால் என்ன? கலைசுந்தரி இருக்கிறாள் அல்லவா? அவளை செல்வராஜுக்கு கட்டிவைத்து விடலாமே?”
” கலைசுந்தரியா? ” அவர் மேலும் யோசித்தார்.
” நான் சிங்கப்பூர் சென்றால் அநேகமாக நான் திரும்புவது சந்தேகம். … ‘
” அங்கு வேலை கிடைத்துவிட்டதா? ”
” இன்னும் இல்லை.ஒரு பரீட்சை எழுதப்போகிறேன். பாஸ் பண்ணிவிட்டால் உடன் வேலை கிசடைத்துவிடும். உங்களுக்கு அப்பாவைப் பற்றி தெரியும். நான் கலைசுந்தரியை அவரிடம் விட்டுச் செல்ல விரும்பவில்லை. நான் போகுமுன் அவளுக்கும் திருமணத்தை முடித்துவிட்டுப் போக முடிவு செய்துள்ளேன். நீங்கள் சம்மதம் தெரிவித்தால் செல்வராஜூவுக்கு கலைசுந்தரியை கட்டி வைத்து விடுவோம். ” நான் என்னுடைய அவசரத்தை வெளியிட்டேன்.
” ஆமாம் தம்பி. அத்தானின் முன்கோபம் அப்படியே மாறாமல் உள்ளது. ” என்றார்.
” ஆமாம் மாமா. கலைமகளை ஒரு முறை அப்பா அடித்துவிட்டார்.அப்போதுதான் அவளை அப்போதே திருப்பத்தூருக்குக் கூட்டிச் சென்றேன். கலைசுந்தரிக்கும் அதுபோல் நேர்ந்துவிடக் கூடாது. அதனால்தான் நான் சிங்கப்பூர் போகுமுன் அவளை செல்வராஜூவுக்கு கட்டி வைக்க விரும்புகிறேன். நீங்கள் சம்மதம் தெரிவித்துவிட்டால் அப்பாவிடமும் சொல்லி சம்மதம் வாங்கிவிடுவேன். உடன் திருமணத்தையும் முடித்துவிடலாம். ”
” நீங்கள் சொல்வது புரிகிறது. செல்வராஜூவுக்கு நீங்கள்தான் வழி காட்டினீர்கள். இன்று அவன் நல்ல நிலையில் இருப்பதற்கு நீங்கள்தான் காரணம். இப்போது அவனுக்கு திருமணமும் நீங்களே ஏற்பாடு செய்கிறீர்கள். கலைசுந்தரி மட்டும் யார்? என் தங்கையின் மகள்தான். நீங்கள் சொன்னால் சரிதான்.. ” மாமா சம்மதம் தெரிவித்துவிட்டார்!.
நான் மாமாவுக்கு நன்றி சொல்லிவிட்டு விடைபெற்றேன்.
இனி அப்பாவிடம் இதைக் கூறவேண்டும். அவர் என்ன சொல்வார் என்பது தெரியவில்லை. கலைசுந்தரி வேறு சின்ன பெண். அவள் என்னசொல்வாளோ?
இத்தகைய எண்ணத்ததுடன் வாய்க்கால் ஓரம் நடந்து பாலத்தைக் கடந்தபோது அற்புதநாதர் ஆலயத்தில் விளக்குகள் எரிவது தெரிந்தது. அங்கு சென்றபோது இஸ்ரவேல் உபதேசியார் ஜெபம் செய்துகொண்டிருந்தார். அவருடன் நாங்களும் சேர்ந்துகொண்டோம். தங்கைகளின் இரு திருமணங்களும் சிறப்புடன் நடந்தேற நான் பிரார்த்தனை செய்தேன்.
வீடு சென்றபோது அப்பா வாசலில்தான் அமர்ந்திருந்தார். அப்போதே அவரிடமும் சொல்லிவிட முடிவு செய்தேன். அம்மாவும் கலைசுந்தரியும் திண்ணையில் உட்கார்ந்திருந்தார்கள். நானும் திண்ணையில் அமர்ந்துகொண்டேன். பால்பிள்ளை வீடு சென்றான்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationஇளையராஜாவின் இசை: பிரேம் ரமேஷ் முன்வைத்தவைதைராய்டு ஹார்மோன் குறைபாடு