நல்ல மனம் வேண்டும்

எஸ்ஸார்சி

 

பெருந்தொற்றுப்பூவுலகை

கட்டிப்போட்டு

வேடிக்கைக்காட்டுகிறது.

இதுகாரும் கொண்ட நம்பிக்கைகள்

மனித இலக்கணங்கள்

ஆட்டம் காண்கின்றன

நூறு ஆண்டுகள் முன்னே

பெருந்தொற்று வந்து

ஒன்றரை கோடி

 மக்களைக் கொன்று போட்டது

உலகப்போர்கள் ஒன்றும் இரண்டும்

கோடி மனித உயிர்களை

கொண்டு போனதுண்மை

பட்டினிச்சாவுகள் எத்தியோப்பியாவில்

எப்படி மடிந்தனர் கோடிகோடியாய்

ஆயிரம் ஆயிரம்  சோதர உயிர்கள்

இலங்கைத்தீவில் மாண்டுதான் போனார்கள்

ரோஹிங்யா முசுலிம்கள்

மியான்மரை விட்டுப்போவெனத்

விரட்டி விரட்டி அடிக்கப்பட்டார்கள்

இருந்துமென்ன ?

போர்த்தளவாடங்கள் வாங்கவே

மானுடச்சாதி ஈட்டியசெல்வாதாரம்

மொத்தமாய் க்கொள்ளைபோகிறது

அணுசக்தி நீர்முழுகிக்கப்பல்

செலவு  ஆயிரம் கோடி

மருத்துவ மனைகள் ஆயிரம்

ஆங்காங்கே எழுப்பலாம்

மனம்தானில்லை

எய்ம்ஸ்  மருத்துவமனை

எங்கே மதுரையில்

ஜப்பானிலிருந்து நிதி வரவேண்டுமாம்

நான்காண்டுகளாய்க்கதை சொல்கிறார்கள்.

அசிங்கமாய் இல்லையா

அறிவு படைத்தோரே

நலமுடன் வாழ

நாம் எல்லோரும் நலமுடன் வாழ

முடியும்தான் மனம்தானில்லை

உலகம் ஒரு குடும்பமென

பட்டை போட்டோரும்

கொட்டை கட்டிகளும்

நாளெலாம் பேசலாம்  பாடலாம்

நல்ல மனத்திற்கு எங்கே போவது ?

Series Navigationபுதிய போர் !உளைச்சல்