பாண்டவம் (லாஜிக் அற்ற ஒரு கதை)

This entry is part 11 of 15 in the series 16 மே 2021

ஸிந்துஜா 

 

 

பத்து மணியிலிருந்து ஆரம்பிக்கும் இன்டெர்வியூவை கிருஷ்ணன் மதியம் ஒரு மணிக்குள் முடித்து விடலாம் என்று நினைத்தான். அவன் பெங்களூரில் இருக்கும்  மிகப் பெரிய மதுபானத் தொழிற்சாலைகளில் ஒன்றில்  மனித வள மேம்பாட்டுப் பிரிவில் உயரதிகாரி. கம்பனியில் சூப்பர்வைசராகச் சேர்ந்து கடந்த பத்து வருஷத்தில் அவன் இந்த இடத்தை அடைந்திருந்தான். இன்று நடக்கப்  போகும் நேர்காணலில் ஐந்து இடங்களுக்கு ஆட்களை நியமிக்க வேண்டும். வெளியே ஏழு பேர் காத்திருந்தார்கள்.

 

அவன் தேர்வுக் குறிப்புகள் அடங்கிய முதல் கோப்பை எடுத்துப் பிரித்தான். பெயர் ரவி என்று இருந்தது. கூப்பிட்டான்.

 

உள்ளே நுழைந்த இளைஞன் கிருஷ்ணனைப் பார்த்து “குட்மார்னிங் சார்” என்று உடம்பை லேசாகத் தாழ்த்தி வணக்கம் தெரிவித்தான்.  உயரமானவனாக இருந்தான். கறுப்பு நிறக்  கால்சட்டையும் வெள்ளை நிற முழுக்கைச் சட்டையும் அணிந்திருந்தான். உயரத்துக்கேற்ற பருமன். 

            

கிருஷ்ணன் அவனை எதிரே இருந்த நாற்காலியில் உட்காரச் சொன்னான். அவன் நாற்காலி முனையில் உட்கார்ந்தான். பணிவைத் 

தெரிவிக்கும் முகத்தைக் கொண்டவனாக இருந்தான்.

 

கிருஷ்ணன் கோப்பிலிருந்த ரவி பற்றிய குறிப்புகளைப்  பார்த்தான். வயது இருபத்தி ஆறு. உயரம் ஐந்து அடி பத்து அங்குலம். எடை அறுபத்தி ஐந்து கிலோ. படிப்பு  எஸ்எஸ்எல்சி. இதுவரை மூன்று நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கிறான்.

 

“ஏம்ப்பா பி.ஏ. படிப்பை பாதிலே நிறுத்திட்டே? இப்ப தடுக்கி விழுந்த இடமெல்லாம் பியூன் வேலைக்கே பி.ஏ., எம்.ஏ.ன்னு நிக்கறாங்களே” என்று கேட்டான் கிருஷ்ணன்.

 

“பி.ஏ. செகண்ட் இயர் படிக்கறப்போ  படிப்பை நிறுத்திட்டு உடனேயே  வேலைக்குப் போக வேண்டியதா ஆயிடுச்சு சார்” என்றான் ரவி.

 

“ஏன்? என்ன ஆச்சு?”

 

“எங்கப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆகி திடீர்னு இறந்திட்டாரு.  குடும்பச் செலவுக்கு வந்துட்டிருந்த பணம் நின்னு போச்சு. அதனாலே  நா வேலைக்குப் போனேன்” என்றான்.

 

“அஞ்சு வருஷத்துல மூணு இடம் மாறியிருக்கியே” என்றான் கிருஷ்ணன்.

 

“முதல் வேலையிலே மூணு வருஷம் இருந்தேன் சார். திடீர்னு நாக்பூர்லே புது பாக்டரி  வாங்கி இருக்கோம், அங்கே போன்னாங்க. சம்பளமும்  ஜாஸ்தி கொடுக்கலே. ரெண்டு இடத்திலே குடும்பம் நடத்த அந்த சம்பளம் பத்தாதுன்னு போகலே. அவங்க வேலையிலேர்ந்து நிப்பாட்டிட்டாங்க. ரெண்டாவது வேலை கிடைக்க ஆறுமாசம் ஆச்சு. அங்கே  ரெண்டரை வருஷம் வேலை பாத்தேன். திடீர்னு ஒரு நாள் ரொம்ப நஷ்டத்துலே கம்பனியை ஓட்ட முடியலைன்னு மூடிட்டாங்க. ஆனா கடவுள் புண்ணியத்திலே உடனே வேறே வேலை கிடைச்சிடுச்சு. பங்கஜ் ஷான்னு பேமஸ் குஜராத்தி குரூப் பம்பாயில் இருக்காங்கல்லே, அவங்க காடுகொண்டனஹள்ளிலே ஒரு லெதர் யூனிட் போட்டாங்க. அங்க வேலை கிடைச்சிச்சு. ஆனா ரெண்டு வருஷமா வேலை பாத்துகிட்டு இருக்கிற  அங்க, இப்ப போன மாசத்திலேர்ந்து யூனியன் ஸ்டிரைக்கு. என்னை மாதிரி வேற ஸ்டேட்லே இருந்து வந்தவங்களுக்கு  இங்கே வேலை குடுக்கக் கூடாதுன்னு…” என்றான் அவன்.

 

“பங்கஜ் ஷா இந்த ஸ்டேட்டா?” என்று கேட்டான் கிருஷ்ணன். ரவி பதிலளிக்கவில்லை.

 

“மூணு கம்பனியிலும் ஸ்டோர்ஸ்லேதான் வேலை பாத்தியா?”

 

 “ஆமா சார். எனக்குப் பின் கார்டு போடுறது, கம்பியூட்டரிலே என்ட்ரி பண்ணுறது, மாசா மாசமோ, இல்லே மூணு மாசத்துக்கு ஒரு தடவையோ ஸ்டாக் வெரிஃபிகேஷன் பண்ணுறது எல்லாம் நல்லாத் தெரியும் சார்” என்றான்.

   

“இப்ப நாங்களும் வேலை குடுத்துட்டு அப்புறமா வேறே எடத்துக்குப் போன்னா  மாட்டேன்னு சொல்லுவியா?” என்று கேட்டான் கிருஷ்ணன்.

 

 “இல்லே சார். சொல்ல மாட்டேன்” என்றான் ரவி. 

 

“அதெப்படி?”

 

அவன் உடனே பதில் சொல்லத் தயங்கினான். பிறகு “இனிமே ஒரு நா கூட வேலை இல்லாம இருக்க முடியாது சார்.  எனக்குக்  கலியாணம் பேசிகிட்டு இருக்காங்க” என்றான். 

 

கிருஷ்ணன் புன்னகை செய்தான். 

 

“சரி, நீ கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு” என்று அவனை அனுப்பி விட்டு சிவா என்னும் அடுத்த நபரைக் கூப்பிட்டான்.

 

சில வினாடிகள் கழித்து சிவா உள்ளே வந்தான். நின்று கொண்டே ” “குட்மார்னிங் சார்” என்றான். 

 

கிருஷ்ணன் கண் கொட்டாமல் அவனையே பார்த்தான்.வந்தவன் உயரமானவனாக இருந்தான். கறுப்பு நிறக்  கால்சட்டையும் வெள்ளை நிற முழுக்கைச் சட்டையும் அணிந்திருந்தான். இரு இமைகளுக்கு நடுவில் நெற்றியில் பொட்டு வைத்தாற் போன்று ஒரு கறுப்பு மச்சம்.  

            

கிருஷ்ணன் அவனுக்கு எதிரே இருந்த நாற்காலியில் சிவாவை  உட்காரச் சொன்னான்.

 

அவன் நாற்காலியில்  உட்கார்ந்து கொண்டான். பணிவைத் தெரிவிக்கும்  முகத்தைக் கொண்டவனாக இருந்தான்.

 

கிருஷ்ணன் கோப்பிலிருந்த சிவா பற்றிய குறிப்புகளைப்  பார்த்தான். வயது இருபத்தி நான்கு. உயரம் ஐந்து அடி, ஒன்பது அங்குலம். எடை அறுபத்தி மூன்று  கிலோ. படிப்பு  பியூசி  இதுவரை இரண்டு நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கிறான்.

 

“பியூசி படிச்சிட்டு எதுக்கு செக்யூரிட்டி வேலைக்கு வந்தே?”

 

சிவா “எங்க அப்பா திடீர்னு இறந்துட்டாரு. அவரு வேலை பாத்த கம்பனியிலே எனக்கு வேலை கிடைச்சிது. அங்க செக்கூரிட்டிலே வேலை காலியா இருந்திச்சு. அதனால படிப்பை விட்டுட்டு வேலைக்கிப் போயிட்டேன்” என்றான்.

 

“அந்த வேலையை ஏன் விட்டே?” 

 

“அந்தக் கம்பனியை யாரோ வடக்குத்திக்காரங்க வாங்கிட்டாங்க. அவங்க ஊர்லேந்தே நம்பிக்கையா ஆளு வேணும்னு வரவழைச்சு செக்கூரிட்டிலே ரொப்பிட்டாங்க. அதனால எனக்கு வேலை போயிருச்சு” என்றான்.

 

“அதுக்கப்புறம்?”

 

“இப்ப இருக்கற கவர்மெண்டு கம்பனியிலே சேந்தேன். காண்ட்ராக்ட் வேலை.”

 

“இப்பல்லாம் கவர்மெண்டு கம்பனிலே செக்யூரிட்டி வேலைக்கு ரிட்டயரான ஆர்மி ஆளைத்தானே ஏஜென்சிலேந்து 

எடுக்கறாங்க?  நீ எங்க ஆர்மிலே வேலை பாத்தே?” என்று கேட்டான்  கிருஷ்ணன்.

 

“நானும் ஏஜென்சி மூலமாதான் சார் வேலைக்குச் சேர்ந்தேன். யாரு சார் இப்ப  காண்ட்ராக்ட் வேலை சம்பளத்துக்கு ஆர்மிக்காரங்க வராங்க? அதனாலே இப்ப ஏஜென்சியிலேயே ஆர்மிலே வேலை பாத்தவங்களோட  சொந்தக்காரங்களையும் வேலைக்கு எடுத்து அனுப்ப ஆரமிச்சிட்டாங்க. எங்க சித்தப்பா ஆர்மிலே  இருந்தாருன்னு எனக்கு வேலை கெடச்சிது!” என்றான் அவன்.   

 

“இப்ப இருக்கற கம்பனியை ஏன் விடணுங்கறே? நல்ல சம்பளம் கொடுக்கறாங்களே!” என்றான் கிருஷ்ணன்.

 

“மாசத்திலே ஏழெட்டு நாள் மூணு ஷிப்டு என் மேலே விழுந்திருது. எச்சா சம்பளம் கொடுத்தாலும் எப்பிடி சார் இருபத்தி நாலு மணி நேரம் ஒரேயடியா வேலை பாத்துட்டு மறு நா ஷிப்டுக்கும் வர்றது? ரெஸ்ட்  தாங்கன்னு சூப்பர்வைசர் கிட்டே கேட்டா ஒரேயடியா வேலையை விட்டுட்டு வீட்டுலே  போய்த்  தூங்குடான்னு ஏசறாரு.”

 

“சரி, இப்ப இருக்கற வேலையை விடறதுக்கு நீ ஏஜென்சிக்கு நோட்டீஸ் கொடுக்கணுமா?” 

 

“ஆமா. ஏழு நாள் சார்” என்றான்.

 

அவனை வெளியில் போய்க் காத்திருக்கச் சொல்லி விட்டு கிருஷ்ணன் அடுத்து இருந்த நமச்சிவாயம் என்பவனை வரவழைத்தான். நமச்சிவாயம் கட்டை குட்டையாக  இருந்தான்.முப்பது வயது என்று அவன் கோப்பு தெரிவித்தது. அவன் கிருஷ்ணன் கேட்ட கேள்விகளுக்குச்  சரியான பதில்களைத் தெரிவிக்கவில்லை. தவிரவும் அவனுக்கு அனுபவம் குறைவாக இருந்தது. அதனால் கிருஷ்ணனுக்கு நமச்சிவாயம் சிவாவைப்போல ஸ்டோர்ஸ் வேலைக்கு லாயக்கானவனாகத்  தோன்றவில்லை. அவன் போன பின்பு கிருஷ்ணன் கணேசன் என்பவனை அழைத்தான். 

 

உள்ளே நுழைந்தவன்  உயரமானவனாக இருந்தான். கறுப்பு நிறக்  கால்சட்டையும் வெள்ளை நிற முழுக்கைச் சட்டையும் அணிந்திருந்தான்.  இரு இமைகளுக்கு நடுவில் நெற்றியில் பொட்டு வைத்தாற் போன்று ஒரு கறுப்பு மச்சம். பணிவைத் தெரிவிக்கும் முகம். 

 

கிருஷ்ணன் சிவாவின் கோப்பையும் கணேசனின் கோப்பையும் எடுத்து அவர்களின் விண்ணப்பங்களைப் பார்த்தான். இருவருக்கும் ஒரே பிறந்த தினம். 

 

கிருஷ்ணன் கோப்பிலிருந்த சிவா பற்றிய குறிப்புகளைப்  பார்த்தான். வயது இருபத்தி நான்கு   உயரம் ஐந்து அடி, ஒன்பது அங்குலம். எடை அறுபத்தி மூன்று  கிலோ. 

 

“கணேசன்,  இப்ப நீ வேலை பாக்கறதும் ஒரு லிக்கர் கம்பனியிலேதான். எதுக்காக அதை விட்டுட்டு இங்கே வரணும்னு ஆசைப்படறே?”

 

“நான் மூணு வருஷமா அங்கே வேலை பாக்குறேன் சார். மேலே வரதுக்கு சான்ஸே இல்லே சார். எனக்கு சீனியரா இருக்கறவங்க எல்லாம் அவங்களுக்கு வயசாயிட்டதாலே வேறே இடத்துக்குப் போகப் போறதில்லே. என்னை விட்டா அடுத்தாப்பில அங்க இருக்கற ஜூனியர் மோஸ்ட் சேல்ஸ்மேனோட வயசு நாப்பது. அதுக்குத்தான் வெளிலே வந்திடலாம்னு…” என்றான்.

 

“நீ சேல்ஸ்மேனா இருக்கே. உனக்கு நல்ல சர்டிபிகேட்லாம் கொடுத்திருக்காங்க. இங்கே வந்தாலும் நீ சேல்ஸ்மேனாதான் சேரணும்” என்றான் கிருஷ்ணன்.

 

“ஆனா இங்கே அலவன்ஸ் எல்லாம் நல்லா இருக்குன்னு எனக்குத் தெரியும் சார்” என்று புன்னகை செய்தான் அவன்.

 

“உனக்குப் போஸ்டிங் வெளியூர்லேதான். பெங்களூர்லே  இல்லே. மாசத்திலே இருபது இருபத்தி அஞ்சு நாள் டூர் இருக்கும். ஓக்கேவா?” 

 

“சேல்ஸ்மேனுக்கு டூர்தானே சார் ஆக்சிஜன்?” என்றான் கணேசன்.

 

அடுத்தபடியாக வந்தவனின் பெயர் சிவராஜ். அவனுடைய கோப்பைப் பார்த்தபோது அவனை வேலைக்குச் சிபாரிசு செய்து அவர்கள் கம்பனியின் ஆடிட்டரிடமிருந்து கடிதம் வந்திருந்ததைக் கிருஷ்ணன் கவனித்தான். சிவராஜ் உள்ளே வந்ததும் கிருஷ்ணன் சொல்வதற்கு முன்பே  நாற்காலியில் உட்கார்ந்து விட்டான். பச்சை நிறக் கால் சட்டையும் நீல நிற சட்டையும் அணிந்திருந்தான். சட்டையின் முதல் இரண்டு பொத்தான்களைப் பொருத்திக் கொள்ளாமல் திறந்து வைத்திருந்ததில் மார்பின் முடி தெரிந்தது. ஒரு  வித அலட்சியம் அவனது உடல் பாஷையாக   இருந்தது. ஆடிட்டரின் செல்வாக்கு? அவன் இன்டெர்வியூவுக்கு வந்திருந்தது ஒரு அக்கவுண்ட்ஸ் கிளார்க் வேலைக்கு. ஆனால் அடிப்படையான அறிவு கூட அவனுக்கு அக்கவுண்ட்ஸில் இல்லாமல் இருந்தது. அதனால் அவனை வந்த சுருக்கில் கிருஷ்ணன் திருப்பி அனுப்பி விட்டான்.

 

அடுத்தாற் போல வந்தவன் பெயர் குரு. உயரமானவனாக இருந்தான். கறுப்பு நிறக்  கால்சட்டையும் வெள்ளை நிற முழுக்கைச் சட்டையும் அணிந்திருந்தான். முகம் பணிவைத் தெரிவித்தது. 

 

உயரம் ஐந்தரை அடி. எடை அறுபத்திரெண்டு கிலோ,வயது இருபத்தி இரண்டு என்று கோப்பு தெரிவித்தது. 

 

கிருஷ்ணன் கேட்ட கேள்விகளுக்குக் குருவின் பதில்கள் தெளிவாக இருந்தன. அவன் வேலை பார்த்துக் கொண்டிருந்த கம்பனியின் இன்கம்டாக்ஸ், ஜிஎஸ்டி  ஆகியவற்றை அந்தந்த அலுவலகங்களில்அவனே கவனிப்பவனாக இருந்தான். ஆடிட் பற்றிக் கேட்ட போது “நிறையத் தெரியாது; ஆனால் தெரிந்து கொள்கிறேன்” என்று பதிலளித்தான்.

 

“ஏன் வெறும் கிராஜுவேஷனோட படிப்பை நிறுத்திட்டே?” என்று கேட்டான் கிருஷ்ணன். 

 

“எங்கப்பா திடீர்னு இறந்திட்டாரு. எங்க அண்ணங்கதான் என்னைக் காலேஜிலே படிக்க வச்சாங்க. இப்ப நான் இருக்கற  கம்பனியிலே வேலைக்கு சேந்ததுக்கப்புறமா ஆறு மாசத்துக்கு முன்னே கம்பனி செக்ரெட்டரி கோர்ஸிலே ஜாயின் பண்ணியிருக்கேன். இன்னொரு புரஃபஷனல் குவாலிபிகேஷன் இல்லேன்னா  மேலே முன்னுக்கு வரது ரொம்ப கஷ்டம் இல்லியா சார்!” என்றான். 

 

கிருஷ்ணன் பதில் எதுவும் சொல்லாது அவனைப் பார்த்தபடி இருந்தான். ஒரு நிமிஷம் மௌனத்தில் சென்றது. ஏதேனும் தவறாகச் சொல்லி விட்டோமோ என்னும் குழப்ப உணர்வு குருவின் முகத்தில் தோன்றியது. அவன் பேசுவதற்கு வாயைத் திறந்த போது கிருஷ்ணன் அவனைப் பார்த்து “இங்கே வேலைக்குச் சேர்ந்தா நீ பாண்ட் கொடுக்கத் தயாரா?” என்று கேட்டான்.

 

இம்மாதிரிக் கேள்வியை எதிர்பாராத குரு கிருஷ்ணனை அதிர்ச்சியுடன் நோக்கினான்.

 

“உன் சி.எஸ். கோர்ஸ் செலவை நாங்க ஏத்துக்கிறோம். இதுவரை கோர்ஸுக்கு செலவானதையும் உனக்குக் கொடுக்கிறோம். இன்னும் ரெண்டு ரெண்டரை வருஷத்திலே நீ கோர்ஸை முடிச்சு பாஸ் பண்ணிடுவே. அதனாலே இப்ப வேலைக்கு சேர்றப்போ அஞ்சு வருஷம் பாண்ட் கொடுக்கத் தயாரா நீ?” என்று கேட்டான் கிருஷ்ணன்.

 

அவன் உடனே சரி என்று சொல்வதைப் போலத் தலையை அசைத்தான்.

 

“சரி, வெளியிலே போய் உக்கார்ந்து யோசி. மறுபடியும் கூப்பிடறேன்” என்று புன்னகை செய்தான் கிருஷ்ணன்.

 

அவன் சென்ற பின் கிருஷ்ணன் கைக் கடிகாரத்தைப் பார்த்தான். பனிரெண்டரை. ஒரு மணிக்குள் முடித்து விடலாம். கடைசி ஆள் யாரென்று பார்த்தான். சகாதேவன் என்றிருந்தது. கூப்பிட்டான். 

 

உள்ளே நுழைந்த இளைஞன்  உயரமாயிருந்தான். கறுப்பு  நிறக்  கால்சட்டையும் வெள்ளை நிற முழுக்கைச் சட்டையும் அணிந்திருந்தான். பணிவைத் தெரிவிக்கும் முகம்.

 

உயரம் ஐந்தரை அடி. எடை அறுபது கிலோ,வயது இருபத்தியொன்று என்று கோப்பு தெரிவித்தது. 

 

கிருஷ்ணன் அவனைப் பார்த்து “நேரே காலேஜிலேர்ந்து இன்டெர்வியூவுக்கு வந்துட்டியா?” என்று சிரித்தான். இன்னும் முற்றாத முகம் துறுதுறுவென்று இருந்தது. கண்கள் அலை பாய்ந்த வண்ணம் இருந்தன.

 

“இதுதான் உனக்கு முதல் இன்டெர்வியூவா?” என்று கிருஷ்ணன் கேட்டான்.

 

“எஸ் சார்” என்றான். “நீங்க என்ன வேலை கொடுத்தாலும் செய்வேன் சார்”

 

“நீ எதுக்கு ஹெச். ஆர் வேலைக்கு அப்ளை பண்ணியிருக்கே?” 

 

அவன் கிருஷ்ணனை நேருக்கு நேராகப் பார்த்து “இப்போ அக்கவுண்ட்ஸ் அல்லது ஹெச் ஆர்.லே தான் சார் வேலைக்கு டிமாண்ட் இருக்கு. சம்பளமும் அனுபவம் அதிகமாக ஆக நிறையக் கிடைக்கும். அதனாலேதான்”” என்றான்.

 

“அப்படீன்னு யார் சொன்னாங்க உனக்கு?”

 

“எங்க காலேஜிலே கேம்பஸ் இன்டெர்வியூலே இதுக்குதான் போட்டி ஜாஸ்தி சார். எல்லாக் காலேஜிலேயும் கூட இது மாதிரிதான்னு பிரெண்ட்ஸ் எல்லாரும் சொன்னாங்க.”

 

“உனக்குக் கேம்பஸ் செலெக்ஷன் ஆகலையா?”

 

“இல்லே சார். மூணு மார்க்குலே தவறிப் போச்சு” என்றான் சகாதேவன்.

 

அவன் ஒளிவு மறைவு இன்றிப் பேசியது கிருஷ்ணனுக்குப் பிடித்திருந்தது. அவனாகக் கேம்பஸ் தேர்வு பற்றிச் சொல்லவில்லை

யென்றால் அதைப் பற்றிய பேச்சு வந்திருக்காது.

 

“இந்தக் கம்பனியோட ஹெச். ஆர். பத்தி உனக்கு என்ன தெரியும்?”

 

“பத்து வருஷமா இங்கே வேலை நிறுத்தம், தொழிலாளர் போராட்டம், உண்ணாவிரதம்னு ஒண்ணுமே நடக்கலே.”

 

கிருஷ்ணன் அவனை உற்றுப் பார்த்தான். பத்து வருஷம் என்று குறிப்பிட்டுச் சொல்லுவது…

 

“அப்படீன்னு யார் சொன்னா உனக்கு?”

 

“இங்கே உங்க பேக்டரியிலே ஜி.எம்.மா இருக்கார்லே கண்ணன் சார், அவரோட மகனும் நானும் காலேஜிலே க்ளாஸ்மேட்ஸ், பிரெண்ட்ஸ் சார்” என்றான்.

 

“ம். அப்புறம் வேறென்னல்லாம் தெரியும்?”

 

சகாதேவன் அரை நிமிஷம் சொல்லலாமா, கூடாதா என்று யோசிப்பவன் போல இருந்து விட்டு கிருஷ்ணனைப் பார்த்துச் சொன்னான்.”என்னோட பிறந்த தேதியும் மாசமும் உங்களோடதும் ஒண்ணு. உங்க  மாஸ்டர்ஸ் டிகிரிலே நீங்க கோல்டு மெடலிஸ்ட். உங்களுக்குப் பிடிச்ச விளையாட்டு செஸ்.”

 

கிருஷ்ணன் ஆச்சரியத்துடன் அவனை நோக்கினான்.      

 

“ஃபேஸ்புக்லே…” என்றான் சகாதேவன். கிருஷ்ணனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

 

கிருஷ்ணன் அவனது கோப்பை மீண்டும் நோக்கிய போது பள்ளியிலும் கல்லூரியிலும் சிறந்த மாணவனாக இருந்திருக்கிறான் என்று தேர்வு மதிப்பெண்கள் சான்று கூறின. இன்டெர்காலேஜியேட் போட்டியில் ஒரு வருஷம் செஸ் சேம்பியனாகப் பரிசு பெற்றிருக்கிறான்.

 

“உனக்கு வேலை கிடைச்சா முதல் ஆறு மாசம் நீ ட்ரெய்னியா வேலை பார்க்கணும். உன் வேலை எங்களுக்குப் பிடிச்சிருந்தா ரெகுலர் கேடர்லே வேலைக்கு எடுத்துப்போம். ட்ரெய்னிங் பீரியட்லே உனக்கு மாசம் மூவாயிரம்  ஸ்டைபண்டா கிடைக்கும். சரியா?”

 

அவன் மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டினான்.

 

“சரி, நீ போகலாம்” என்று கிருஷ்ணன் எழுந்தான்.

 

ஒரு வாரம் கழித்து கிருஷ்ணன் ஒரு நாள் மத்தியானம் அவனுடைய எம்.டி.யின் அறையில் இருந்தான்.

 

“சார், போன வாரம் நடந்த இன்டெர்வியுலே அஞ்சு போஸ்டுக்கு ஆள்களைத் தேர்ந்தெடுத்தாச்சு. அவங்களோட பேக்-ரவுண்ட் பத்தியும் விசாரிச்சிட்டோம். எல்லாரைப் பத்திய ரிப்போர்ட்டும் திருப்தியா இருக்கு” என்றான். 

 

“சரி, அப்ப ஆர்டர்களை எனக்கு அனுப்புங்க. சைன் பண்ணிடறேன்” என்றார் எம்.டி.

 

“சார், முக்கியமா ஒரு விஷயத்தை உங்க கிட்டே சொல்லணும்” என்றான் கிருஷ்ணன்.

 

அவர் அவனைப் பார்த்தார்.

 

“இந்த அஞ்சு பேரும் ஒரே குடும்பத்திலேர்ந்து வராங்க.”

 

அவர் திடுக்கிட்டு “என்ன சொல்றீங்க?” என்றார்.

 

“அஞ்சு பேரும் அண்ணன் தம்பிங்க. அவங்க குடும்பத்திலே திடீர்னு அவங்கப்பா இறந்து போயிட்டார். அதனாலே அண்ணன்கள் குடும்பத்தைக் காப்பாத்தி, தம்பிகளையும் படிக்க வச்சி…. எல்லாரும் யங்ஸ்டர்ஸ். ஆனா வாழ்க்கையிலே முன்னேறணும்னு துடிப்போட இருக்கிறவங்களா அவங்களை நான் பார்த்தேன்.”

 

எம்.டி. அவரது இருக்கையில் சாய்ந்து கொண்டார். சில வினாடிகள் கழித்து “டாட்டா குடும்பம், அம்பானி குடும்பம், டி.வி.எஸ். குடும்பம்னு பிசினஸ் நடத்தற குடும்பங்களைத் தான் நாம பாத்திருக்கோம்.. இப்போ ஒரே இடத்திலே வேலை செய்யற குடும்பம்னு  ஒரு க்ரூப்பை நாம ஆரம்பிக்கப் போறோமா?” என்றவர் கிருஷ்ணனைப் பார்த்து “வெல். இட்ஸ் ஓகே. வீ வில் டூ இட்” என்று சிரித்தார்.  

 

அவர்களை வேலைக்கு அமர்த்தும் போது ஐந்து பேர்களும் வெவ்வேறு இடங்களில் வேலை பார்க்கிறபடி கிருஷ்ணன் உத்தரவுகளைப் பிறப்பித்தான். ரவியை நிலமங்களாவில் உள்ள அவர்களது இரண்டாவது பேக்டரியில் ஸ்டோர்ஸ் இன் சார்ஜாகப் போட்டான். சிவாவிற்குப் பீன்யாவில் உள்ள அவர்களுடைய பீர் ஸ்டாக் கோடவுனில் வேலை கிடைத்தது. கணேசனை  விற்பனைப் பிரதியாக நியமித்துத் தெற்குக் கர்நாடகா பிராந்தியத்தின் வட்டார அலுவலகம் உள்ள மங்களூரில் வேலைக்கு அமர்த்தினான். குரு அவர்களுடைய பெங்களூர்க் கிளையில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் சேர்ந்தான். அவனுடைய அலுவலகம் ஓசூர் ரோடில் இருந்தது. சகாதேவன் கிருஷ்ணனின் அலுவலகப் பிரிவில் நியமிக்கப்பட்டான்.  

     

 

ரு வருடம் சென்றது.  

 

ஒரு நாள் கிருஷ்ணன் அலுவலகத்துக்குள் வந்து தனது இருக்கையில் அமர்ந்த போது கதவைத் தட்டி விட்டு ரவி உள்ளே வந்தான்.

 

“ரவி, எப்படிப்பா இருக்கே?  இங்கே எதாவது மீட்டிங்கா?” என்று கேட்டான். 

 

“இல்லே சார். பெர்சனலா வேலைன்னு ஒரு நாள் லீவு போட்டு உங்களைப் பாக்கதான் வந்தேன் சார்” என்றவன் அவனிடம் ஒரு கவரை நீட்டினான். கல்யாணப் பத்திரிக்கை.

 

“அடடே, குட் நியூஸா? எப்போ கல்யாணம்?” என்று பத்திரிக்கையை வாங்கிக் கொண்டு கேட்டான்.

 

“இருபத்தி அஞ்சாம் தேதி சார். நீங்க அவசியம் குடும்பத்தோட வரணும்” என்றான்.

 

“நிச்சயமா. கல்யாணம் இந்த ஊர்லேதானே?”

 

“ஆமாம் சார். வெங்கடேஸ்வராலே.”

 

“எந்த வெங்கடேஸ்வராப்பா? இந்த ஊர்லதான் பஜ்ஜி, போளி கடையிலேர்ந்து பெரிய தங்க மாளிகை வரை வெங்கடேஸ்வரா பேர்தானே  வச்சிருக்காங்க!”

 

“சேஷாத்திரிபுரத்திலே இருக்கிற கலியாண மண்டபத்திலே சார்.”

 

“ஓ அங்கேயா? நம்ம ஜாகீர்தார் ஷேர் புரோக்கர் ஆபீஸ் பக்கத்திலேதான்” என்றான் கிருஷ்ணன்.

 

ரவி விடை பெற்றுக் கொண்டு போனான். பத்திரிக்கையைப் பிரிக்கலாம் என்று கிருஷ்ணன் கையில் எடுத்தான். அப்போது எம்.டி. போனில் கூப்பிட்டார். அவர் கேட்ட கோப்பை எடுத்துக் கொண்டு கிருஷ்ணன் அவர் அறைக்குப் போனான்.

 

அங்கு வேலை முடிந்து அவன் தன்னறைக்கு வரும் போது வாசலில் சிவா நிற்பதைப் பார்த்தான். கிருஷ்ணனைப் பார்த்தவன் வணங்கி விட்டு உள்ளே வரலாமா என்று கேட்டான். இருவரும் எதிரெதிரே உட்கார்ந்து கொண்டதும் சிவா “சார், எனக்குக் கலியாணம் நிச்சயமாயிருக்கு. அவசியம் நீங்க வரணும்” என்று பத்திரிக்கையை நீட்டினான். அவனாகவே “இருபத்தி அஞ்சாம் தேதி கலியாணம் சார். இங்க சேஷாத்திரிபுரத்திலே வெங்கடேஸ்வரா கலியாண மண்டபத்திலேதான் சார்” என்றான்.

 

அப்போது விற்பனைப் பிரிவின் ஜி.எம். கிருஷ்ணனின் அறைக்குள்  நுழைந்தார்.  கிருஷ்ணன் பத்திரிக்கையை வாங்கிக் கொண்டு சிவாவை வாழ்த்திவிட்டு அனுப்பினான்.

 

“கிருஷ்ணா, நான் போன வாரமே உன்கிட்டே சொல்லியிருந்தேனே, இன்னிக்கி சேல்ஸ் கான்பரன்ஸ் இருக்குன்னு. சேல்ஸ் ரெப்ஸ் சேல்ஸ் ஆபீஸர்ஸ் எல்லோரையும் கூப்பிட்டு இப்ப மீட்டிங் நடந்துண்டு இருக்கு. எங்களோட லஞ்ச்லே நீயும் வந்து சேந்துக்கணும். பைனான்ஸ் சீப் ராஜாராமும் வரேன்னார். ஹெச்.ஆர்.பத்தி நீ ரெண்டு வார்த்தை நம்ம பசங்க கிட்டே சொல்லணும். என்கூட இப்ப வரியா?” என்று அழைத்துக் கொண்டு போனார். மீட்டிங் முடிய இரண்டரை மணி ஆகி விட்டது.

 

லஞ்ச் ஹாலில் “குட் மார்னிங் சார்” என்று அவனுக்குப் பின்னால் குரல் கேட்டது. கிருஷ்ணன் திரும்பிப் பார்த்தான். கணேசன்.

 

“ஓ, கான்பரென்ஸ்ன்னு வந்தியா? எப்போ நேத்திக்கா இல்லே இன்னிக்கு காலம்பறவா?” என்று கேட்டான். 

 

“ஆமா சார்.காலேலேதான் வந்தேன். ரெண்டு நாள் லீவும் போட்டிருக்கேன். எனக்குக் கலியாணம் சார். பத்திரிக்கையெல்லாம் கொடுக்கணும்னு லீவு போட்டேன். மீட்டிங் முடிஞ்சதும் உங்க கிட்டே வந்து  கொடுக்கிறேன் சார். இருபத்தி அஞ்சாம் தேதி. வேறே எந்த அப்பாயிண்ட்மெண்டும் அன்னிக்கி வச்சுக்காதீங்க சார்” என்றான்.

 

“ஓ, கங்கிராட்ஸ்.” “

 

“பக்கத்திலே சேஷாத்திரிபுரத்திலேதான் சார். பெரிய மண்டபம். நீங்க கூடப் பாத்திருப்பீங்க. வெங்கடேஸ்வரா கலியாண மண்டபம்னு.”

 

“ஆமாமா. பாத்திருக்கேன். நிச்சயம் வரேன்” என்றான் கிருஷ்ணன். 

 

லஞ்ச் முடிந்ததும் கிருஷ்ணன் ராஜாராமுடன் பேசிக் கொண்டே அவரது அறைக்குச் சென்றான். ஆபீஸ் பாலிடிக்ஸ் பற்றி இருவரும் பேச ஆரம்பித்து அது ஒரு மணிக்கும் மேலான நேரத்தை எடுத்துக் கொண்டது. அவன் தனது அறைக்குத் திரும்பினான்.

 

பத்து நிமிஷம் போயிருக்கும். இன்டெர்காமில் அவனுடைய பி.ஏ. “சார், ஒசூர் ரோடு ஆபீஸ்லேர்ந்து குரு வந்திருக்காரு. நீங்க அவரை வரச் சொல்லியிருந்தீங்களாம்” என்றாள்.

 

பி.ஃஎப். ஆபிசிலிருந்து வந்திருந்த நோட்டீசுக்குப் பதில்களை எடுத்துக் கொண்டு வருமாறு கிருஷ்ணன் ஒரு வாரத்துக்கு முன்னே குருவிடம் சொல்லியிருந்தான். உள்ளே வந்த குரு அவனிடம் தான் கொண்டு வந்திருந்த ஃபைலைக் கொடுத்தான். பிரித்துப் படித்த கிருஷ்ணன் அதில் தனக்கிருந்த சந்தேகங்களைக் கேட்டான். குரு விவரங்களைச் சொன்னான். 

 

“பி.ஃஎப் இன்ஸ்பெக்டர்கிட்டே இந்த விவரங்களைக் கொடுக்கணும். நீ நாள்னிக்கி இங்கே வந்தா பி ஏ. ரெடி பண்ணி வச்சிருப்பா. அதை வாங்கிண்டு போயி அந்த இன்ஸ்பெக்டரைப் பாத்துப் பேசிக் கொடுத்துட்டு வரியா?” என்றான் கிருஷ்ணன். 

 

குரு தலையசைத்து விட்டு எழுந்தான். பிறகு அவன் கையிலிருந்த பையைப் பிரித்து “சார், என் கலியாணம் இந்த மாசம் இருபத்தி அஞ்சாந்தேதி. நீங்க அவசியம் வரணும் சார். சேஷாத்திரிபுரம் வெங்கடேஸ்வரா கலியாண மண்டபத்திலே” என்று சொல்லிப் பத்திரிக்கையை நீட்டினான்.

 

“வெரி குட். கங்கிராட்ஸ்” என்று சொல்லி விட்டு கிருஷ்ணன் பத்திரிக்கையை வாங்கிக் கொண்டான். குரு கதவைத் திரந்து கொண்டு வெளியே சென்றான்.

 

அப்போது அவனது கைபேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தான். சுசீலா. வாட்ச்சைப் பார்த்தான். ஐந்தரை.அவன் மனைவி நான்கு மணிக்கு அவளது சினேகிதியின் வீட்டுக்குப் போய் விட்டுத் திரும்பும் வழியில் அவனை ஆபிசிலிருந்து கூட்டிக் கொண்டு போவதாகக் காலையில் சொல்லியிருந்தாள்.

 

“சொல்லு சுசீ” என்றான். “நீ கிளம்பிட்டியா?”

 

“இன்னும் கால் மணியிலே அங்கே இருப்பேன். எனக்கு ரொம்பப் பசிக்கிறது. ஃபில்டர் காபிலேர்ந்து ஸ்பெஷல் போண்டா வாங்கி வையுங்களேன்” என்று அவள் சிரிக்கும் குரல் கேட்டது.

 

“சரி. வா. இப்ப ஆளை அனுப்பறேன்” என்றான் கிருஷ்ணனும் சிரித்தபடி. பியூனைக் கூப்பிட்டு ஓட்டலிலிருந்து போண்டாவும் காப்பியும் வாங்கிக் கொண்டு வரச் சொன்னான்.

 

ஐந்தரை மணிக்கு ஆபீஸ் முடிந்து திடீரென்று வெளி உலக இரைச்சல் அடங்கி வெளிப்பட்ட மௌனம் அறையில் கவிந்திருந்தது. அப்போது கதவைத் தட்டி விட்டு மெல்லத் திறந்து கொண்டு சகாதேவன் வந்தான். அவன் கையில் வெள்ளை உறைகள்.  

 

“இன்னும் வீட்டுக்குக்  கிளம்பலியா நீ?” 

 

“சார், கணேசண்ணன் இதை உங்ககிட்டே கொடுக்கச் சொன்னாரு. அவங்க மீட்டிங் இன்னிக்கி ஏழு மணி வரைக்கும் போகுமாம். மத்தியானம் உங்ககிட்டே இதைப் பத்திப் பேசிட்டேன்னு சொல்லி இதைக் கொடுக்கச் சொன்னாரு” என்று கல்யாணப் பத்திரிக்கைக் கவரை நீட்டினான்.

 

“ஆமாமா” என்றபடி அதை வாங்கிக் கொண்டான் கிருஷ்ணன். 

 

பிறகு அவனிடம் “இன்டெர் ரிசல்ட் எப்போ வருது?” என்று கேட்டான்.

 

“அடுத்த வாரம் சார்” என்றான் சகாதேவன்.

 

“வெரி குட். மார்க்ஸ் எப்படி வரதுன்னு பாக்கலாம். சரி, இப்ப நேரே வீட்டுக்குத்தானா?”

 

“இல்லே சார். கொஞ்சம் வெளி வேலை இருக்கு” என்றவன் “இந்தாங்க சார்” என்று ஒரு கவரை நீட்டினான்.

 

அதை வாங்கிக் கவரைப் பார்த்து விட்டு “என்னது? உனக்கு அதுக்குள்ளே கல்யாணமா?” என்று கேட்டான்.

 

“ஆமா சார். அம்மா தொந்திரவு தாங்க முடியலே. அதான்” என்று புன்னகை செய்தான் சகாதேவன்.  “இருபத்தி அஞ்சாம் தேதி சார். வெங்கடேஸ்வரா கலியாண மண்டபம். மறக்காம நீங்க வந்துடுங்க சார்” என்றான்.

 

“கங்கிராட்ஸ். ஃபுல் ஸ்பீடுலே போறே. ஆல் தி பெஸ்ட்” என்று சிரித்தான் கிருஷ்ணன். பத்திரிக்கையை டேபிள் மீது வைத்தான்.

 

டிபன் வரவும் சுசீலா வரவும் சரியாக இருந்தது. சுசீலா அவனுக்கு எதிரே உட்கார்ந்து கொண்டாள். போண்டா சூடாகவும் சுவையாகவும் இருந்தது. அதைப் பிய்த்துத் தின்றார்கள்.சுசீலாவின் பார்வை மேஜை மீது படிந்தது.

 

“என்ன இது, ஒரே கல்யாணப் பத்திரிக்கையா மேஜை பூரா வழியறது!” என்றாள் அவள்.

 

“இந்த மாசம் இருபத்தி அஞ்சாந் தேதியன்னிக்கி நீ வேறே அப்பாயிண்ட்மெண்ட் எதுவும் வச்சுக்காதே. அன்னிக்கி அஞ்சு கல்யாணம் இருக்கு” என்றான் கிருஷ்ணன்.

 

“என்னது, ஒரே நாள்லே அஞ்சு கல்யாணம் அட்டென்ட் பண்ணனுமா?”

 

“ஆமா. அஞ்சு பேரும் பிரதர்ஸ். ஒரே தேதிலே ஒரே மண்டபத்திலே கல்யாணம்!”

 

“அஞ்சு பேரா! பஞ்ச பாண்டவா மாதிரின்னா இருக்கு!. பொண்லாம் யாராம்? ஒரு கவரைக் கூடப் பிரிக்கலையே நீங்க!”  என்று கேட்டபடி கவர்களைத் தன் பக்கம் இழுத்தாள்.

 

“ஒரு பயத்திலேதான் எதையும் பிரிச்சுப் பாக்காம வச்சிருக்கேன்” என்றான் கிருஷ்ணன். 

 

—————————————

T R Natarajan (ஸிந்துஜா) 

A 701, Carnation Apartments

K Narayanapura Cross

Hennur Main Road,

Bangalore 560077

Mob: 9844101135

 

       

 

      

 

 

 

.

 

 

  

 

Series Navigationவராலுக்கு வெண்ணெல்குற்றமற்றும் குறுகுறுக்கும்!
author

ஸிந்துஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *